71

       71. பொருளில்லார்க்கு இவ்வுலகில் வாழ்வில்லை என்பது தனியொருவர்க்கேயன்றி சமுதாயத்துக்கும் ஒத்த கொள்கையாகும். பொருள் விளையுமிடம் இவ்வுலகமே யாதலின் இவ்வுலகத்தைப் பலவகையாலும் ஆராய்ந்து பொருள் மிக விளைவிக்கும் நெறியையே மக்கட் சமுதாயம் நினைந்து முயன்றவண்ணம் இருக்கிறது. கை கால்களின் துணை கொண்டு விளைவிப்பதைவிடப் பொறிகளின் வாயிலாகச் சுருங்கிய காலத்தில் பெருகிய பொருளைத் தோற்றுவிப்பது மக்களறிவு வாழ்க்கைக்கு உதவும் பயன் என்று, இக்கால அரசும் சமுதாயமும் கொண்டு, புதிய புதிய பொறிகளையும் எந்திரங்களையும் படைத்தவண்ணம் இருக்கின்றன. இவ்வகையிற் பொருட்செல்வம் மிகவுடைய நாடுகளே பொலிவு பெறுகின்றன: அந்நாட்டரசு வல்லரசு எனப் போற்றப்படுகிறது; அந்நாட்டு மக்களினம் பிற நாட்டவரால் நன்கு மதிக்கப் பெறுகின்றனர். அவர்களைக் காணும் ஏனை உலக நாடுகள் தாமும் அவர் மேற்கொண்ட பொருள் நெறியையும் வாழ்க்கை முறையையும் ஏற்றுப் பேணிப் பின்பற்றுகின்றன. இவ்வகையில் பொருட்பேறே இவ்வுலகின் சமயமும், அதனைப் பெறற்கு முயலும் கொள்கையே ஒழுக்கமும், உடலுழைப்பைக் குறைத்து ஐம்புலன்களாலும் நுகர்வன நுகர்ந்து மகிழ்வதே பேரின்பப் பெருவாழ்வாகவும் பிறங்குகின்றன. ஐவகைப் புலனுகர்ச்சிக்கும் உரிய பொருள் பலவாகாமல், ஒன்றாய்ப் பெண்ணுக்கு ஆணுருவிலும், ஆணுக்குப் பெண்ணுருவிலும் அமைந்திருப்பதால், ஆணும் பெண்ணும் கூடி மகிழ்வதே இவ்வுலக வாழ்வின் முடிந்த பயன் என்ற கருத்துச் சமுதாய முழுதும் ஊடுருவி நிற்கிறது.

            மகிழ்தல் என்ற சொல்லின் முதனிலையான ‘மகிழ்’ என்பது கள்ளுண்டார் எய்தும் களிமயக்குக்குப் பெயராகத் தமிழ்ச்சான்றோர் கொண்டனர்: “மகிழ்ந்ததன் தலையும் நறவுண்டாங்கு” ( குறுந். 165 ) எனக் குறுந்தொகை கூறுகிறது. “களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்று” ( 1145 ) என்று திருக்குள் வழங்குகிறது. மகிழ்வதும் களிப்பதும் மயக்கமே; மயங்குதலாவது அறிவு மறைப்புண்டல். உயிரறிவு இயல்பிலேயே குறைபாடுடையது. “Souls are by nature embecile” என மேனாட்டறிஞரும் கண்டு வியந்து விளம்புகின்றனர். உயிர் சிற்றிவுடைய தென்பது எல்லா நாட்டவர்க்கும் ஒத்த உண்மையாவது இதனால் தெற்றெனத் தெரிகிறது. இயல்பிலேயே சிறுமையுடைய உயிரறிவு இம் மகிழ்ச்சியில், களிப்பில், உலகப் பொருள்வாழ்வு நல்கும் மயக்கத்தில் வீழுமாயின், அறிவு சிறுமைநீங்கி முற்றறிவுடைய முழுமை எய்துவது உயிர்க்கு ஆகாத செயலாய்விடும் என நல்லறிஞர், ஞானிகள், அஞ்சுகின்றனர். பொருள்வாழ்வு தரும் இன்பமயக்கத்துக்கு மூலமுதற் காரணம் மாயை; அஃது உயிரறிவு மலவிருளின் நீங்குதற்குத் துணையாய் ஒளியும் உதவும்; தன்னை முழுதும் உயிர் பயன் கோடல் வேண்டி இருளும் நல்கும்; அதனால் அது தரும் இன்பம் சிற்றின்பமாகவுளது. அதன் இருளில் ஆழ்ந்து மடியாமல், அது நல்கும் இன்பத்தின் சிறுமை கண்டு உவர்த்து, அதனூடிருந்து ஒளிரும் அருளொளியைப் பெற முயல்க என அறிவுறுத்துகின்றனர். மக்களினம், அதனை ஏலாது மாயவிருளிலே மனத்தைப் புதைத்தும் மனத்தினுள் அவ்விருளைச் செறித்தும் இறுமாப்பில் திளைக்கின்றது. “இருளிடத்துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே” என்று இறைவன்பால் உரைக்கும் எழுச்சியின்றி இடர்ப்படுகின்றேன்; நீதான் அருள் தந்து ஆட்கொள்ள வேண்டும் என வடலூர் வள்ளல் முறையிடுகின்றார்.

2241.

     அருட்கட லேஅக் கடலமு
          தேஅவ் வமுதத்துற்ற
     தெருட்சுவை யேஅச் சுவைப்பய
          னேமறைச் சென்னிநின்ற
     பொருட்பத மேஅப் பதத்தர
          சேயுன் புகழ்நினையா
     இருட்குண மாயை மனத்தே
          னையும்உவந் தேன்றுகொள்ளே.

உரை:

     அருட்கடலே, அமுதே, சுவையே, சுவைப் பயனே, மறை முடியில் உள்ள பதமே, அரசே, நின் புகழை நினையாத மாயையின் குணமான இருள்பொருந்திய மனத்தையுடையேன்; என்னையும் உவகையுடன் ஏற்று அருள் ஒளி தந்து உய்விக்க வேண்டும். எ.று.

     எல்லையிறந்த பொருளாய் அருளே நிறைந்ததாய் உள்ள இறைவனை “அருட்கடல்” என்றும், கடலிடத்தே அமுதம் பிறந்ததென்னும் பௌராணிக நெறிபற்றி “அக்கடலமுதே” என்றும், அமுதம் மிக்க பெருஞ்சுவை யுடையதென்பதனால் “அவ்வமுதச் சுவையே” என்றும், சுவைத்துண்டவழிப் பிறக்கும் இன்பத்தை “அச்சுவைப் பயனே” என்றும் முறைசெய்து கூறுகின்றார். அமுதின் சுவை அதனுள் எப்பாலும் கலந்திருப்பதுபற்றி, “அமுதத்துற்ற சுவையே” எனவும், ஏனையவற்றைச் சுவைப்பார் அறிவை மகிழ்ச்சியில் ஆழ்த்தி அயர்ப்பிப்பது போலின்றி அறிவுக்கு ஒளியும் விளக்கமும் தருவது நினைந்து, அமுதத்துற்ற சுவையைத் “தெருட்சுவை” எனவும் சிறப்பிக்கின்றார். மறைச் சென்னி - வேதங்களின் முடிபொருள் எனக் கூறும் வேதாந்தமாகிய உபநிடதம். அவற்றின்கண் வெறும் கற்பனைப் பொருளாகாமல், மெய்ப்பொருளான சிவபதத்தைப் பொருட்பதம் என்று மொழிகின்றார். பதம் அடைந்தாரை மீளப் பிரியாவாறு பிணித்து நிறுத்திப் பெருவாழ்வில் திளைக்கச் செய்வது தோன்றப் “பதத்து அரசே” என்று பாடுகின்றார். தன் நாட்டில் வாழ்வாரை வேறுநாடு விழைந்து குடியெழாவாறு ஆட்சிபுரிவது சிறப்புடைய அரசு; “பதியெழுவறியாப் பழங்குடி” என்று இளங்கோ கூறுவதன் கருத்து இது; அதுபற்றியே இறைவனை அரசு என்று இயம்புகின்றார். மேலும், கல்லாரைப் பிணிக்கும் கடுங்கோல்போலக் கற்றறிந்த நல்லோரைப் பிணிப்பது செங்கோலரசு; செம்மையேயாய சிவபதத்தரசு என்பது விளங்க இவ்வாறு கூறுகின்றார். அரசனாகிய சிவபெருமானை “மேவினார் பிரியமாட்டா விமலனார்” எனச் சேக்கிழார் பெருமான் தெரிவிப்பது இங்கே சிந்தித்தற் குரியதாகும். சிவனையும் அவனது திருவருட் புகழையும் நினைக்குமவர் சிவஞானத் தெளிவும் விளக்கமு முடையோராவர்; யானோ மாயையின் குணங்களில் ஒன்றான இருட்குணத்தால் மறைப்பு நிறைந்த மனமுடையேன் என்றற்கு “இருட்குண மாயை மனத்தேன்” என்றும், அதனால் நின் புகழை நினைக்கமாட்டாத மனமுடையவனாயினேன் என்பாராய், “நின் புகழ் நினையா இருட்குண மாயை மனத்தேன்” என்றும் விளங்கவுரைக்கின்றார். “உயிர்க்காய் வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யும்” எனவும், “மாயையே ஆன்மஞானக் கிரியையை மறைத்து நிற்கும், தூய அப் பிரிதி தன்னைச் சுடர்முகில் மறைந்தாற்போல” எனவும் சான்றோர் உரைப்பது காண்க. இவ்விருட்குண மாயையின் தொடர்பு எனக்கெய்தியது திருவருளால்; ஆதலால், அத்தொடர்பு காரணமாக வந்து நிறைந்துள்ள இருளைப் பொருளாகக் கொள்ளாது, இருட்செறிவிலும் நின்னை நினைந்து முறையிடுதற்குத் திருவுள்ளம் உவகையுற்று என்னை ஏற்று அருளல் வேண்டும் என்பார், “உவந்து ஏன்று கொள்” என வேண்டுகின்றார்.

     இதனால் நின் புகழ் நினையாமைக்கு ஏதுவாகிய இருள் நிறைந்த மனமுடையேனாயினும் என்னை ஏன்று கொண்டு அருள் புரிய வேண்டும் என்பது பயனாம்.

     (71)