72
72. திருவருள் பெறாமைக்குக் காரணம் அதனைப் பெற்றவழி இன்புறும் தகுதியின்மை யாகலாம் என்று
எண்ணிய வள்ளற் பெருமான், நெஞ்சுவிடுக்கும் வினாவொன்றிற்கு விடை தருகின்றார். தகுதியுண்மையின்மைகளை
நினைக்கின்ற நீ திருவருளைப்பெற விழைந்தது எங்ஙனம்? நினக்கு விழைவு எங்ஙனம் உண்டாயிற்று?
என நெஞ்சு கேட்கின்றது. அதற்கு விடையிறுக்கின்ற அறிவு, இறைவன் முடிமேல் விளங்கும் பிறைமதி
கண்டேன்; கழுத்தில் விளங்கும் கறைகண்டேன்; இவை அவனுடைய திருவருட் பெருமையையும் எளிமையையும்
உணர்த்தின; நாம் அத்திருவருளைப் பெறலாம் என்ற துணிவுப் பெற்றேன்; அச்சம் ஒழிந்தேன் என்று
தெளிவுடைய விடையளித்தது. அதனைச் சொல்லித் தான் தொண்டனானதையும் எடுத்துரைக்கின்றார்.
2242. அண்டங்கண் டானும் அளந்தானும்
காண்டற் கரியவநின்
கண்டங்கண் டார்க்குஞ் சடைமேல்
குறைந்த கலைமதியின்
துன்பங்கண் டார்க்கும் பயமுள
தோஎனச் சூழ்ந்தடைந்தேன்
தொண்டன்கண் டாள்பல தெண்டன்கண்
டாய்நின் துணையடிக்கே.
உரை: பிரமனும் திருமாலும் காண்டற்கரிய சிவபெருமானே, நின் திருக்கழுத்தைக் கண்டவர்க்கும் பிறைத்திங்களைக் கண்டவர்க்கும் அச்சமில்லை என்று கருதியே நின்னை அடைந்தேன்; நின் தொண்டனாகிய என்னைக் கண்டு ஆட்கொள்க; நின் திருவடிக்குப் பல வணக்கங்கள் செய்கின்றேன். எ.று.
அண்டங்களைப் படைப்பவன் பிரமன் என்பது புராண வரலாறு; அதனால் பிரமனை “அண்டங் கண்டான்” என்றும், மூவுலகையும் ஈரடியால் அளந்தான் திருமால் என்றும் புராணம் கூறுவது கொண்டு “அண்டம் அளந்தான்” என்றும் கூறுவர். திருமால் உலகையளந்தான் என்று கூறும் மரபு திருவள்ளுவர்க்கும் முற்பட்ட செய்தி; அவரே திருக்குறளில் “மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாயது எல்லாம் ஒருங்கு” என்று உரைக்கின்றார். இத்தகைய பிரமனும் திருமாலும் ஒருகால் சிவனுடைய அடியும் முடியும் காணமுயன்று மாட்டாராயினர் என்ற புராண அடிப்படையில் “அண்டம் கண்டானும் அளந்தானும் காண்டற்கரிய” என வள்ளலார் பாராட்டுகின்றார். கண்டம் - நஞ்சுண்டு கறுத்த கழுத்து. “கலைமதியின் துண்டம்” என்றது பிறைத் திங்களை, இவற்றைக் காண்பது புறக்கண்களால் காண்பது மாத்திரமன்று; புறக் கண்களால் கண்டதோடு நில்லாது, கண்டமும் துண்டமும் இவ்வாறு ஏன் உண்டாயின என அகக்கண்ணாலும் ஆராய்ந்து காண்பது. “முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள், அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்” எனத் திருமூலர் கூறுவர். மேனிமுற்றும் பொன்னிறங் கொண்டு பொலியும் சிவனுக்குக் கண்டம் கறுத்திருக்கக் காரணம் யாது என்று காணும் ஆராய்ச்சி தோன்றியவழித் தேவர்கள் கடல்கடைந்த வரலாறும் நஞ்சு பிறந்த செய்தியும் அதனைச் சிவன் உண்டருளிய திறமும் தோன்றி அப் பெருமானுடைய அருள் நிலையை விளக்கிக் காட்டும். அதுபோலவே பிறைத் திங்கள் சிவபிரான் திருமுடியிற் சூடப்பட்ட காரணம் புலப்படும். இக் காட்சியால் சிவனது அருட் பெருந்தன்மையும் அதனைப் பெருக அருளும் பெருந்தன்மையும் நெஞ்சின்கண் தோன்றிச் சிவன்பால் முறையிடற்கு இடைநிற்கும் அச்சத்தைப்போக்கி ஊக்கம் எய்துவிக்கும்; இது பற்றியே, “பயமுளதோ எனச் சூழ்ந்தடைந்தேன்” என்று வள்ளலார் உரைக்கின்றார். சூழ்தல் - அகக்கண்ணால் ஆராய்தல்; கண்டதைக் கண்டாங்கு மேற்கொள்ளாது ஆழ்ந்து சிந்தித்து ஆய்ந்து தெளிந்து செயல்பட வேண்டும் என்றற்கே, “சூழ்ந்தடைந்தேன்” என வள்ளலார் உரைத்தருள்கின்றார். அவர் காலத்தே பொய்ப்புராண வரலாறுகள் பெருகி மக்களை மூடக்கொள்கைகட்கு இரையாக்கிக் கொண்டிருந்தன; எதனை யாவர் கூறினும் அதன் பொய்ம்மை மெய்ம்மை தேர்ந்தறியும் நல்லறிவு மக்களிடையே தொழிற் படவில்லை. மக்கட்குத் தெரியாத மொழியில் சொல்லுவன அனைத்தும் மெய்யெனக் கொண்டு மருண்டவர் பலர். அறிவறியும் திறம் குன்றினமையால் அச்சமே மக்கள் ஆசாரமாக விளங்கிற்று. இதனால் தான் வள்ளலார் சூழ்தல் இன்றியமையாதது எனத் தெரிவிக்கின்றார். தொண்டு செய்பவன் தொண்டன். தொண்டு செய்யும் அடியேனுடைய தொண்டுகளைக் கண்டு அருள்புரிக என்றற்குத் “தொண்டன் கண்டு ஆள்” என வேண்டுகிறார். தெண்டன் - வணக்கம்; மரத்தண்டு போல் வீழ்ந்து வணங்குவது; தண்டன் என்றும் தெண்டன் என்றும் வழங்கும்.
இதனால், தொண்டரது தொண்டு கண்டும் அவர் செய்யும் தெண்டன் கண்டும் அருள் பண்ணுதல் வேண்டும் என இறைவனிடம் வள்ளலார் முறையிடுமாறு காணலாம். (72)
|