73

      73. பெரியவர் பெருமைக்கும் சிறியவர் சிறுமைக்கும் காரணம் அவரவர் செய்யும் செயல்வகையே என்பதைப் “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்” என்றார் திருவள்ளுவர். அப் பெருமகனே நீத்தார் பெருமையை உரைக்குமிடத்துச் “செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலாதார்” என வுரைத்தார். இவ்வாற்றால் இரண்டு உண்மைகள் புலனாகின்றன. ஒன்று, ஒருவர் பெருமையோ சிறுமையோ எய்துதற்கு அடிப்படை அவரது செயல்வகை என்பது; அச் செயல், செய்யப்படும் அருமைபற்றிப் பெருமைதரும் என்பது மற்றொன்றாகும். ஆகவே, செயற்கு அருமையானவற்றைச் செய்பவர் பெருமை எய்துவர், செய்ய மாட்டாதார் சிறுமை எய்துவர் என்று தெளிகின்றோம். செயற்கு அரியவை யாவை என்று சிந்தித்த பரிமேலழகர், மனத்தின் வழிச் செல்வது எளிது; மனத்தைத் தன்வழி நிறுத்திச் செயல்புரிவது அரிது என்று துணிந்து, மனத்தை அடக்கித் தன் வழிச் செலுத்திச் செயல்புரிபவரே பெரியர் என விளக்கம் தந்தார். இதனால் மனம்போன போக்கிற் செல்பவர்பலர்; அவர் அனைவரும் சிறியர் என்பது கருத்தன்று. அவர்களைப் பொதுமக்கள் எனல் வேண்டும். மனத்தை அடக்கித் தன்வழி நிறுத்திச் செயல்புரியும் திறமில்லாதவர் வேறு; மனம் சென்ற நெறியில் செல்பவர் வேறு. பொறிபுலன்கள் மேற்செல்வது மனத்துக்கு எளிது; புலன்களின்மேல் படர்ந்து ஒன்றைவிட்டு ஒன்று பற்றித் தாவிச் சுழல்வது அதன் இயல்பு. அதனை மடக்கிச் சுழற்சியைப் போக்கிக் குறித்த தொன்றின்கண் ஒன்றி ஊன்றி நிற்கச் செய்வது அரியதொன்றாகும். தன்னியல்பில் இயங்குவதொன்றை ஒரு நெறிக்கண் நிறுத்துமிடத்து அதன் இயக்கஆற்றல் தடைப்படுதலால், அணையகப்பட்ட நீர்போல, பையிடை அடைக்கப்பட்ட காற்றுப்போல, வெளிப்படும் செயல் விஞ்சிநிற்கும் தன்மையது மனம். நீரையும் காற்றையும் தடைகடவாமல் நின்று திறக்கப்படும் வாயிலொன்றில் செலுத்துவது போலும் அருமை, மனத்தை ஒரு நெறிக்கண் நிறுத்திச் செலுத்துவதில் உளது. இதனால், இதனைச் செயற்கரிய செயலென்றும், இதனைச் செய்பவரே பெரியர் என்றும் திருவள்ளுவர் கூறுகின்றார் எனப் பரிமேலழகர் பகர்கின்றார். 

      இச் செயல் எங்ஙனம் பெருமை விளைவிக்கும்? என்றொரு கேள்வி எழுகிறது. மேட்டினின்று பள்ளம் நோக்கி ஓடும் இயல்புடையது நீர்; அதுபோல்வது காற்று; அதனையொப்பது மின்சத்தி. பள்ளம் நோக்கிப் பலதலையாக ஓடும் நீரை, “நிலம் நெளி மருங்கின் நீர் நிலை பெருக” அணையும் சிறையும் அமைத்துத் தடுத்து நிறுத்தித் தேக்கிச் சிறுகால்களின் வழியாக நெறிப்படுத்தும் நாடு விளைபொருள் பெருகிச் சிறப்பெய்துகிறது. இவ்வாறே காற்றையும் மின்னாற்றலையும் தொகுத்துப் பயன்படுத்தும் நாடு தொழில்வளம் பெருகி மேன்மை எய்துகிறது. இதுபோல், மனத்தின் சுழன்றோடும் ஆற்றலைத் தடுத்து நிறுத்தி ஒரு நெறிப்படுத்துவோர் அறிவுவளம் சிறந்து உயர்வு பெறுவது ஒருதலை. நாம் வாழும் நிலவுருண்டையின் ஈர்ப்பாற்றல் திங்கள் மண்டிலத்தைத் தன்கண் ஈர்த்துத் தன்னைச் சுழன்று ஒளிதந்து இயலுமாறு செய்கிறது; அளப்பரிய அடியகலமும் உயரமும் உடைய மலைகளையும் ஆழ்ந்த கடல்களையும் தன்னின் நீங்காமல் ஈர்த்துப் பிணித்திருக்கும் நிலவீர்ப்பு எத்துணை வன்மையுடையது! அதனையும் கடந்து செல்லக்கூடிய கருவிகளைப் படைக்கும் ஆற்றல் பெற்று விளங்குகிறது இந்நாளைய விஞ்ஞானமென்பது மக்கள் திங்கள் மண்டிலத்துக்குச் சென்று மீண்ட செயலால் வலியுறுகிறது. இந்த விஞ்ஞானத்துக்கு இவ்வினிய பெரிய ஆற்றல், விஞ்ஞானி தன் மனத்தை வேறுபரந்து செல்லவிடாமல் ஒருமைப்படுத்து விஞ்ஞானநெறியிற் செலுத்தியதன் விளைவன்றோ! இதற்கெல்லாம் மூலம் மனமென்னும் அளப்பருந் திண்மையும் ஆற்றலும் உடைய மாண்புடைக் கருவி என்பது சொல்லாமலே விளங்கும்.

      இத்தகைய மனத்தின் ஆற்றலை அடக்கிப் பயன்கொள்ளாமல் வெறிதே அலைந்து கெடவிடுவது பெருமை தாராது என்றற்கே, “செயற்கரிய செய்வார் பெரியர்” என்றதனோடு நில்லாமல், “செயற்கரிய செய்கலாதார் சிறியர்” எனத் திருவள்ளுவப் பெருமான் தெளியவுரைத்தார்.

      இம் மனத்தின் தாவி திரியும் தன்மை கண்ட தமிழ்ச்சான்றோர் மனத்தைக் குரங்கிற்கு ஒப்பாக வுரைப்பர். குரங்கினத்தில் பெரிய பெரிய இனங்கள் பிற நாடுகளில் உள; நம் நாட்டில் உள்ளன சிறுவடிவினவே. இவற்றின் ஆற்றலே பெரிது. இராமன் பொருட்டு கடல் கடந்து இலங்கையுட் புகுந்து சீதையைக் கண்டறிந்து இராவணனுக்கும் தன் ஆற்றலளவைக் காட்டிப் போந்த அனுமன் ஒரு குரங்கு என்பதன் கருத்தை நோக்குதல் வேண்டும். பின்பு, இராமன் தன் பெரும்படையுடன் செல்லும் பொருட்டுக் கடலிடை அணையிட்டதும் குரங்கினமே என்பதையும் நினைத்தல் வேண்டும். இக் குரங்கினத்தின் ஆற்றலை நெறிப்படுத்தி ஆண்டதால் இராமன் புகழ் அன்றேயன்றி இன்றும் என்றும் நிலைபெறும் இயல்பு பெற்றுளது. குரங்கின் வழி ஓடியிருந்தால் இராமன் கதையே வேறுபட்டிருக்கும். மனக்குரங்கினை என்வழிப்படுத்தும் திறனின்றி யான் அதன்வழி நின்று வருந்துகிறேனே! குரங்கை ஆட்டுவோர் போலின்றி அக் குரங்கால் ஆட்டப்படுவார் உளரானால், அவர் போலும் கடையனாய்ப் புல்லியனாய் உழல்கின்றேன். என் இனத்து மக்கள் மனக்குரங்கை அடக்கி அறிவு வழிச் செலுத்தி ஆண்மையும் ஆற்றலும் மிகவுடைய பெரியராய்ப் பெருமைகொளல் வேண்டும் என வள்ளற் பெருமான் இறைவன்பால் முறையிடுகின்றார்.

2243.

     தேட்டக்கண் டேர்மொழிப் பாகா
          உலகில் சிலர்குரங்கை
     ஆட்டக்கண் டேன்அன்றி அக்குரங்
          கால்அவர் ஆடச்சற்றும்
     கேட்டுக்கண் டேனிலை நானேழை
          நெஞ்சக் கிழக்குரங்கால்
     வேட்டுக்கொண் டாடுகின் றேன்இது
          சான்ற வியப்புடைத்தே.

உரை:

     கற்கண்டுபோல் இனிய மொழிகளைப் பேசும் உமாதேவியைப் பாகத்தே உடைய பெருமானே! நாட்டிற் சிலர் குரங்கை ஆட்டக் கண்டதுண்டேயன்றிக் குரங்கு அவரை ஆட்டக் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை; நான் என் நெஞ்சமென்னும் கிழக்குரங்குக்கு ஆடுகின்றேன்; இஃதென்ன வியப்பு? (எ-று)

     தேட்டக்கண்டு - தேடிக்கொள்ளப்படும் கற்கண்டு. தேட்டம் - தன்னாற் செய்யப்படும் பொருளாகாது தேடிவாங்கப்படும் பொருள். உலகம் - நாட்டின் மேற்று; மலையுலகம், காடுலகம் என்றாற்போல; கேட்டேனுமில்லை, கண்டேனுமில்லை என்பது கேட்டுக் கண்டேனுமில்லை என வந்தது. ஏழை - அறிவில்லாதவன்; அதனால் பிறர் ஏவின செய்வதல்லது தானே தெளிந்து ஒன்றனைச் செய்தாற்றும் நிறமில்லேன் என்பது புலப்பட, “நான் ஏழை” என உரைக்கின்றார். முதுமையுடைமை தோன்ற நெஞ்சினைக் கிழக்குரங்கு என்கின்றார். என் நெஞ்சக்குரங்கு பன்னாளும் என்னோடிருந்து என் குறை நிறைவுகளை நன்கறிந்துகொண்டு தன்னடிப் படுத்தித் தன்வழியே என்னைச் செலுத்தி அலைக்கின்றது; நிலையின்றிச் சுழலும் இயல்பிற்றாதலின், அதன் சுழற்சிக்கொப்ப நான் ஆடுகின்றேன் என்பாராய், “நெஞ்சக் கிழக்குரங்கால் வேட்டுக்கொண்டு ஆடுகின்றேன்” என உரைக்கின்றார். வேட்டல் - விரும்புதல். நெஞ்சம் வேட்டதே யானும் வேட்டு ஒழுகுகிறேன் என்பதை, “வேட்டுக் கொண்டு ஆடுகிறேன்” என முறையிடுகின்றார். கிழக்குரங்கு - அனுபவத்தால் அறிவு நிறைந்த குரங்கு. எத்துணை யறிவுடையதாயினும், குரங்கு என்னினும் தாழ்ந்ததேயாக, யான் அதற்குத் தாழ்ந்து அடிமைப்பட்டது நினைக்கின் எனக்கே வியப்புத் தருகிறது; இது உலகில் நடவாத ஒன்று என்பார், “இது சான்ற வியப்புடைத்து” என இயம்புகிறார்.

     நெஞ்சென்னும் கிழக்குரங்குக்கு அடிப்பட்டொழுகும் இந்நிலையினின்றும் நீக்கி அறிவு வன்மையருள வேண்டும் என்பது இப் பாட்டின் பயனாதல் காண்க.

     (73)