74

       74. உடலின் புறத்தும் அணுத்தோறும் தோய்ந்து அவற்றின் நலமும் நலமின்மையும் அறிந்து உயிரறிவுக்கு உணர்த்துவதும், அறிகருவி செயற்கருவிகளோடு கலந்து புறத்தேயுள்ள உருவும் அருவுமாகிய பொருணிகழ்ச்சிகளை அறிவதும், செயற்கருவிகளோடு கலந்து செயலுறுவதும், அறிவு செயல்களிடை வெளிப்படும் உணர்வுகளை உயிர்க்கு உணர்த்துவதும், பிறவுமாகிய செயல்களால், ஓய்வின்றிச் சுழன்று திரியும் மனம் உணர்வுப்பேற்றிலும் பொருட்பேற்றிலும் அவா மிக்கவழி வேகம் மிகுந்து அலைகிறது. இளமையில் உடலளவாய் நின்ற வேகம், உயிரறிவு வளரவளர இரண்டு தலைவர் கீழ்ப் பணிபுரியும் ஒரு தொண்டர்போல உலையாத அலைவுகொண்டு உலமரலும் தெருமரலும் எய்தி ஓடுபந்து போல உருண்டோடிய வண்ணம் உளது; ஓடும் வேகமும் உடலும் உயிரும் வளர வளரப் பெருகி இயலுவதை வள்ளற்பெருமான் தமது அருட் கண்ணாற் காண்கின்றார். அதன்பால் அவர் பரிவும் இரக்கமும் கொள்கின்றார். அதன் ஓய்வின்மையும் வேகமிகுதியும் பல கோடி எண்ணங்களை எழுப்பி அவலமும் கவலையும் அழுங்கலும் புழுங்கலும் உற்று அயராத் துயர மெய்துவிக்கின்றன. இன்பவுணர்வுக்கும் நுகர்ச்சிக்கும் இமைப்போதும் இடம் இல்லை. இதற்கொரு வாயில் கண்டாலன்றி உய்தியில்லை என்ற துணிவுக்கு வருகிறார். மனத்தை இவ்வாறு சுழலச்செய்வது இறைவன் திருவருளே என்பதை அவரது திருவுள்ளம் நினைக்கிறது. உயிர்கள் உலகில் வாழ்வாங்கு வாழ்ந்து உய்தற்கென அமைந்த உடலினுள் உருவில்லாத அருவுருவாய் நுண்மாண் கருவியை ஆக்கித் தந்த இறைவனது திருவருளே இம் மனத்தின் வேகத்தைக் குறைத்து ஆண்டாலன்றிப் பிறர் பிறவழியால் ஒன்றும் செய்தற்கில்லாமை தேர்ந்து, “அப் பெருமான் ஒருவனே வேகம் கெடுத்தாளும் மேலோன்” என மணிவாசகப்பெருமான் செய்தருளும் அருளுரையை நினைவிற்கொண்டு முறையிடுகின்றார்.

2244.

     போகங்கொண் டார்த்த அருளார்
          அமுதப் புணர்முலையைப்
     பாகங்கொண் டார்த்த பரம்பொரு
          ளேநின் பதநினையா
     வேகங்கொண் டார்த்த மனத்தால்இவ்
          வேழை மெலிந்துமிகச்
     சோகங்கொண் டார்த்துநிற் கிறேன்
          அருளத் தொடங்குவே.

உரை:

     போகம் கனிந்து, அருளாகிய அமுதம் நிறைந்து இரண்டாகிய மார்பையுடைய உமாதேவியை உடலில் ஒருபாகத்தே கொண்டு, தேவதேவர்கள் அனைவருக்கும் மேலாகிய பெருமானே. வேகமிகுதியால் உன் திருவடிகளை நினையமாட்டாத மனத்தால் சோகமே எய்தி வருந்தும் எனக்கு அருள்புரிக. எ.று.

     “போகமார்த்த பூண்முலையாள் தன்னொடும் பொன்னகலம், பாகமார்த்த பைங்கண் வெள்ளேற்ற பரமேட்டி யண்ணல்” என ஞானசம்பந்தர் குறித்தது நினைவில் நிலைபெறுதலால், “போகம் கொண்டு ஆர்த்த அருளார் அமுதப் புணர் முலையைப் பாகம் கொண்டு ஆர்த்த பரம் பொருள்” என அத் தொடரின் பொருளை விளக்குகிறார். உலகியற் போகமும் சிவபோகமும் என்ற போகவகை இரண்டும் உடையாளாதலால் சிவசத்தியாகிய உமை நங்கையைப் “போகமார்த்த பூண்முலையாள்” என ஞானசம்பந்தர் உரைத்தாராக, போகம் பெரிதும் உலகியற் போகமாய் நிற்குமாறும், துன்பமும் போகமாம் எனப் போககாரிகையுடையார் கூறுமாறும் கண்ட வள்ளற் பெருமான், உலகியற் பொன்னும் பொருளும் தரும் இன்பப் போகமும் திருவருட் போகமும் என்ற இரண்டும் நிறைந்தவை என்பது குறித்தற்குப் போகம் கொண்டு அருளாரமுதம் நிறைத்த புணர்முலை என விளங்குமாறு “போகம் கொண்டு அருளார் அமுதம் ஆர்த்த புணர்முலையாள்” என விரித்த ஞானமொழியைத் தொகை நிலைத் தொடராக்கி உணர்க்கின்றார். புணர்முலை என்பது, உரைமரபு. தொகுமொழியை விரித்தலும், விரிந்தது தொகுத்துக் காட்டலும் பண்டைய உரைகாரர் மரபு. போகமாகிய கச்சினால் அருளமுதம் நிறைத்துக் கட்டப்பட்ட இரண்டாகிய முலைகள் என இத் தொடர்க்குப் பொருள் கூறுவது பொதுவியல்பு. பொன்னும் மெய்ப்பொருளும் தந்து போகமும் திருவும் புணர்ப்பவனாதலின், இவ்வாறு கூறுதல் சான்றோர்க்குச் சால்பாயிற்று. உலகியற் பொருள்களும் அவற்றின் பயன்களும் உயிரறிவைப் பிணித்துக் கொள்வதால், அது அவற்றைத் தன் பொருட்டுப் படைத்தளிக்கும் பரம்பொருளாகிய சிவத்தை மறந்து மனத்தை இயக்குவதால், அம் மனம் அவ்வழியில் விரைந்து சுழலுவது தோன்ற, “பதம் நினையா வேகம் கொண்டார்த்த மனம்” என விளக்குகின்றார். மனமும் பொருட்பயன்களின் பிணிப்பில் தோய்ந்து சுழலுகிறது என்றற்குப் பதம் நினையாமையால் வேகம் மிகுகிறது எனவுரைக்கின்றார்; நினைந்தவழி வேகம் குறைந்து கெடும்; திருவடிக்கண் ஒன்றி நிற்கும் என்பது கருத்து. இக் கருத்து விளக்கமாதற்கு, “வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன்” என்ற சிவபுராணம் துணைசெய்வது காண்மின். நிலையாது அலமரல் அறிவின்மையாதலால், ஏழை எனத் தம்மை நொந்து இரங்கி மொழிகின்றார். மனத்தைப் பற்றி உயிரறிவைப் பிணித்து மயக்கும் உலகியற் பொருட்பயன் நிலையா வியல்பினால் நோயும் மெலிவும் பயந்து சோகத்தில் ஆழ்த்துவது இயல்பாதலையும் வள்ளற்பெருமான் நினைந்தருள்கின்றார்; சிவபெருமான் அருள்புரியாமல் இருப்பதாக எண்ணி அதனைத் தொடங்குக; தொடங்கினால், உலகியற் போக மயக்கம் நீங்கத் தலைப்படும்; எனது உயிர் நின்பதம் நினைந்து மெய்ந்நெறிபற்றி மேன்மை எய்தும் என்பார், “ஏழை மெலிந்து மிகச் சோகம் கொண்டு ஆர்த்து நிற்கின்றேன் அருளத் தொடங்குகவே” என வுரைக்கின்றார்.

     இதனால் இறைவன் திருவடி நினைதற் பொருட்டு அருள் செய்க என வேண்டுவது பயனாதல் காண்க.

     (74)