75

      75. சமுதாயத்தைப் பார்க்கும் போதெல்லாம் துன்பமே காட்சி தருவதைக் காணும் வள்ளலார், இத் துன்பம் எவ்வளவு காலமாக இருந்து வருகிறது என்று எண்ணுகிறார். தமது வாழ்வை நோக்குகிறார். தமக்கு அறிவறியும் காலமுதல் துன்பமே எங்கும் எவர்பாலும் நிலவுவதை நினைவு கூர்ந்தார்; தம்மைத் தாக்கிய துன்பங்களையும் உடன் நினைந்தார். அவரது இளமையில் வாழ்ந்த முதியவர் பலரும் தாமுற்ற துன்பம் பன்னாளாக இருப்பதைக் கூறக் கேட்டதும் அவர் நெஞ்சில் நினைவு எழுந்தது. நினைவுக் கெட்டாத காலமுதலே மக்களினம் உலக வாழ்வில் துன்பமுற்றது புலனாயிற்று. இக் காலங்களில் அரசியல், சமயம், சமுதாயம் ஆகியவற்றின் இடையில் எத்தனையோ மாறுதல்கள் தோன்றின; அவற்றால் துன்பங்களும் வேறுவேறு வகையில் வந்து வருத்தின. அவற்றின் எண்ணிக்கையும் எண்ணுமுறைக்கு அடங்காது மிக்குத் தோன்றிற்று. இவற்றை எதிர்த்துத் தடுப்பதற்கும் மக்களினம் முயன்றதுண்டு. நோய்கட்கு மருந்து கண்டது; பகைகட்கு எதிராகப் படைபல கண்டறிந்தது; நண்பர்களையும் உறவினர்களையும் துணை கொண்டு துன்பத்துக்கு எதிராவனவற்றைத் தேடி அரண் செய்தது; சில துன்பங்களை மக்கள் மன்றத்தில் முறையிட்டுக் கழுவாய் கண்டது; சிலவற்றிற்குச் சிறு தெய்வங்களை வழிபட்டது. சிலவற்றைப் போக்குதற்கு அரசமன்றங்களை அணுகி முயன்றது. காற்றும் மழையும் இடியும் மின்னலும் ஆகியவற்றின் மிகையாலும் குறையாலும் உண்டாகிய துன்பங்கட்குத் தெய்வத் திருவருளை நினைந்து விழாவயர்ந்தும் வேள்வி செய்தும் மக்களினம் செய்த முயற்சிகட்கு அளவில்லை. துன்பமில்லாத வாழ்வு காணச் செய்த முயற்சிகள் பலவும் துன்பமாயினவே யன்றிக் கருதிய பயன் கிடைக்கவில்லை. இத் தின்பங்களைப் போக்குதற்கு மக்களுக்கோ, அரசுகட்கோ, தெய்வங்களுக்கோ ஆற்றலில்லை என்பது வள்ளலார் உள்ளத்தில் இடம் பெறுகிறது. இம் மக்களினத்தின் தோற்றம் மறைவுகட்கு முதல், எல்லாம் வல்ல பரம்பொருள். அதனைச் சிவன் எனத் தேறுகின்றார். அவன் ஞானமன்றுள் நின்றாடுவதை நினைக்கின்றார்; அம் மன்றம் நினைந்து துன்பநீக்கம் வேண்டி முறையிடுகின்றார்.

2245.

     இன்றல வேநெடு நாளாக
          ஏழைக் கெதிர்த்ததுன்பம்
     ஒன்றல வேபல எண்ணில
          வேஉற் றுரைத்ததயல்
     மன்றல வேபிறர் நன்றல
          வேயென வந்தகயக்
     கன்றல வேபசுங் கன்றடி
          யேன்றனைக் காத்தருளே.

உரை:

     ஏழையாகிய என்னை எதிர்த்துத் தாக்கி வருத்திய துன்பங்கள் இன்று வந்தனவல்ல; நெடுநாளாக உள்ளவை; அவை தாமும் ஒன்றல்ல, பலவாய் எண்ணுக்கடங்காதனவாகும்; துன்பம் உற்று முறையிட்ட மன்றங்கள் யாவும் நீயில்லாத அயல் மன்றங்களல்ல; முறையிடும் யான் பெரிய யானைக் கன்றல்ல; உயிராகிய பசு ஈன்ற இளங்கன்று; நின் திருவடியை நெஞ்சிற் கொண்ட என்னை இவற்றினின்றும் காத்து, மீள இவற்றால் துன்புறாவாறு அருள் புரிய வேண்டும். எ.று.

     ஏழை - பொருளும் அறிவும் இல்லாதவன். அந்நாளைய சமுதாயத்தின் நிலை இந்த ஏழைமையில் இருந்தமை யுணர்த்துதற்கு “ஏழை” என இயம்புகிறார்; தன்னைப் பிறன்போற் கூறியதுமாம். துன்பம் அறிவும் பொருளும் நிறைந்த இன்பவாழ்வு எய்தாவாறு தாக்கித் தடுத்தல்பற்றி, “எதிர்த்த துன்பம்” என்றும், அவை பலவாய் எண்ணிற்ந்தனவாய்த் தொடர்ந்து தாக்கினமையின் ஏழையாகிய யான் வெற்றிகாண மாட்டாது அவற்றிற்கே இரையானேன் என்பார், “ஒன்றலவே பல எண்ணிலவே” என்றும் உரைக்கின்றார். துன்பத்தால் புண்பட்ட நெஞ்சம் பிறர்க்கு எடுத்துரைப்பதால் ஒருவாறு ஆறுதல் பெறும். அத்துன்பத்தை மாற்றும் ஆற்றலுடையார்பால் முறையிடுவது, அவர் கூடிய மன்றங்களில் முறையிடுவதும் உலகியல் வழக்கு. நான் முறையிட்டுரைப்பது நீயிருந்து ஆடல் புரியும் ஞானமன்று என்பார் “உற்றுரைத்தது அயல் மன்றல்ல” என்கின்றார். மன்றிற் புகுந்து முறையிடுகின்ற தன்னைப் பசுவின் கன்று என்றது, பசுக்களைப் பகைவர் கவர்ந்தபோதும் அவற்றை நிழல் காண்தோறும் நிறுத்தியும், புனல் காண்தோறும் நீர் பருகுவித்தும் ஓம்பும் இயல்பினது என்ற குறிப்புப்படப் “பசுங்கன்று” எனப் பாடுகின்றார். “வேற்றுப் புலக்களவின் ஆதந்து ஓம்பல் மேவற்றாகும்” எனத் தொல்காப்பியரும், “தங்கும் அகில யோனிகட்கும் மேலாம் பெருமைத் தகைமையான” என்று சேக்கிழாரும் கூறுவர். கயக்கன்று - யானைக் கன்று; பெரிய தலையுடைமை பற்றிக் கன்று கயக்கன்று என்கின்றார். கய, பெருமை; “தடவும் கயவும் நளியும் பெருமை” என்பது தொல்காப்பியம். “முழந்தாள் இரும்பிடிக் கயந்தலைக் குழவி” (குறுந். 394) எனச் சான்றோர் வழங்குவது காண்க. துன்பத்தின் நீக்கலும், வாராமல் முன்காக்கும் அறிவும் வேண்டுதலின் “காத்தருள்” என ஒரு சொல்லாக் கொள்ளாமல் காத்து அருள் எனப் பிரித்துரைத்தல் வேண்டிற்று.

     (75)