76
76. மாயையின் இருட்குணம் கண்ட வடலூர் வள்ளல் அதன் காரியமாய்ப் பரந்து தோன்றும் உலகை நோக்குகின்றார்;
பார்க்குமிடம் எங்கும் இனிய காட்சி தந்து மக்களுயிரை மயக்கித் தன்னையே காதலிக்கச் செய்யும்
அதன் தன்மையையும் எண்ணுகின்றார். நீல வானமும் அதன்கண் நித்திலம் பதித்தாற்போல் விண்மீன்
தோன்றி மினுக்குவதும் அவற்றின் நடுவே தண்மதி தோன்றி வெண்ணிவுல பொழிவதும், பகற் போதில்
செஞ்ஞாயிறு தோன்றிச் செங்கதிர் பரப்பி இரவுப்போது பரப்பிய இருளை அகற்றி எல்லாப்
பொருளும் இனிது விளங்க மக்களுயிர் உழைப்பால் உறுவன நுகர்ந்து உயர்ச்சி பெறச் செய்வதும், வெயிலொளியையும்
நிலவொளியையும் இடையே முகிற்குலம் படர்ந்து மறைப்பதும் நீங்குவதும் காண்பார் கருத்தில், பல்வேறு
எண்ணங்கள் எழுகின்றன. இவ்வாறே நிலவுலகும் கடற்பரப்பும் காற்றின் இயக்கமும் தீயின் இயல்பும்
வள்ளலார் உள்ளத்தைச் சிந்தையிற் செலுத்துகின்றன. இவற்றிடையே வாழும் உயிர்க்குப்
பொருள்களின் தோற்றமும் கேடும், வளர்ச்சியும் தேய்வும், உயிர்களின் பிறப்பும் இறப்பும்,
புணர்வும் பிரிவும் வாழ்க்கையில் நிறைவு தருவனவாய் இல்லாமை புலனாகிறது. குறைவிலாப் பேறு எவர்பாலும்
இல்லை. யாதாயினும் ஒன்று இல்லாமை எல்லாரிடத்தும் பரவியிருக்கிறது. எல்லாம் உடையார் யாரும்
இல்லை, உயர்ந்தோர் தாழ்ந்தோர், இளையர் முதியர், கற்றவர் கல்லாதவர், ஆடவர் பெண்டிர்
அனைவரது வாழ்வும் குறையுடையதாகவே இருக்கிறது. குறைவிலா நிறைவு எப்பெற்றியோர் மனத்தும் இல்லை.
நிறையுடையதுபோல், ஒளியுடையதுபோல், வலியுடையதுபோல், நிலையுடையதுபோல் தோன்றுவது முற்றும்
பொய்த் தோற்றமாவதை உணர்கின்றார்; மெய்போலத் தோன்றுவது வெறும் சாலம் எனக்
கருதுகிறார்.
இனி இந்தச் சாலப்பரப்பில், இருந்து மகிழும் மக்கட் சமுதாயத்தை நினைக்கின்றார். இல்லாதது
பெறக்கருதும் எண்ணமும், குறைபடுவதை நிறைவு செய்யும் ஆர்வமும், நில்லாத்தை நிலைபெறுவிக்கும் நினைவும்,
நீங்குவதைப் புணர்ப்பிக்கும் முயற்சியும், இவற்றிற்கு எதிராக உள்ளதை இலதாக்குவதும், நிறைந்ததைக்
குறைப்பதும்,. நிலைபெறுவதை நில்லாவாறு செய்வதும் முதலிய எண்ணங்கள் எழுந்து அலைக்கின்றன. இன்னோரன்னவற்றையே
நினைந்து நினைந்து மக்கள் படுந் துயரம் எங்கும் காட்சிப்படுகிறது.
இச்
சூழலுக்கிடையே, “இத்துயரவாழ்வுக்கு முடிவில்லையா? இஃது ஏன் வந்தது? எப்படி எய்திற்று? இவ்வாழ்க்கையோடு
என்னைத் தொடர்புபடுத்தியது யாது? ஏன் அஃது இத்தொடர்பை உண்டாக்கிற்று?” என எழும் எண்ணங்களால்
பலகாலும் அலைப்புண்டு, இறைவனது உண்மையுணர்ந்து, அவனன்றி உறுதுணை வேறு இல்லையெனத் தெளிந்து,
அவனுக்கு ஆட்பட்டு வெற்றிகண்ட பெருமக்களை உன்னுகின்றார்; அவரைப்போல் தானும் இறைவனுக்கு
ஆளாகின்றார். ஆயினும் மனவலைவு நின்றபாடில்லை. அதற்கு அருள் புரியுமாறு ஆண்டவன்பால் முறையிடுகின்றார்.
உயிர்கட்கு அருள் புரிதற் பொருட்டு இறைவன் பெண்ணொரு பாகனாய்ப் பிறங்குவதை நினைந்து
பாடுகின்றார
2246. படிபட்ட மாயையின் பாற்பட்ட
சாலப் பரப்பிற்பட்டே
மிடிபட்ட வாழ்க்கையின் மேற்பட்ட
துன்ப விசாரத்தினால்
அடிபட்ட நானுனக் காட்பட்டும்
இன்னும் அலைதல் நன்றோ
பிடிபட்ட நேரிடைப் பெண்பட்ட
பாகப் பெருந்தகையே.
உரை: பெண்ணொரு பாகனாகிய பெருந்தகையே! மாயையினின்று தோற்றுவிக்கப்பட்ட இவ்வுலகின்கண் பரந்துபட்ட இந்திரசாலம் போலும் காட்சி நிறைந்து, எல்லாவகையாலும் குறையே பொருந்திய வாழ்க்கை தரும் துன்பத்தைக் கண்டு உய்தி நாடி உழந்து, உனது உண்மை யுணர்ந்து உனக்கு ஆட்பட்ட பின்னரும், உனது அருள் பெறாது வருந்துதல் நலமன்று; அருள் செய்க. எ.று.
படிபட்ட மாயை - உலகம் தோன்றுதற்கு முதற்காரணமாகவுள்ள மாயை. படுதல் - தோன்றுதல், பொய்யை மெய்போலவும், நிலையில்லதை நிலையுடையது போலவும் காட்சி தந்து உயிர்களை மயக்கும் திறம் உலகிற்கு எங்ஙனம் அமைந்தது என்றெழும் ஐயத்துக்குத் தெளிவு கூறுவாராய், இத்திறம் மாயையின் பாற்பட்டது என்பார், “மாயையின் பாற்பட்ட சாலப்பரப்பு” என்று கூறுகின்றார். சாலப்பரப்பு - இந்திரசாலம் போலத் தோன்றும் பலகியற் பரப்பு. இந்திரசாலம் என்பதை மணிவாசகப் பெருமான் “இந்திர ஞாலம்” எனக் குறித்து, “இந்திர ஞால இடர்ப் பிறவித்துயர் ஏறுவதாகாதே” என உரைப்பர். இந்திர சாலம் என்ற்பாலது இந்திர ஞாலம் என ஏடேழுதினோரால் மாற்றி எழுதப்பட்டிருக்கலாம். மிடிபட்ட வாழ்க்கை குறையே நிறைந்த வாழ்வு. குறையை நிறைப்பதே நினைவாய் அதுபற்றிச் செய்வன யாவை தவிர்வன யாவையென நினைந்து நினைந்து துன்புறும் மனநிலையைத் “துன்பவிசாரம்” எனச் சுட்டியுரைக்கின்றார். விசாரம் - ஆராய்ச்சி. இதனால் குறைநிறைவுறாது மேன்மேலும் பெருகினதே யன்றிப் பயன் பெற்றேனில்லை என்பார். “அடிபட்ட நான்” என்று கூறுகிறார். இன்னோரன்ன நினைவுகள், ஒன்றை விட்டு ஒன்றைத் தாவி, ஆண்டவனாகிய உன்னை நினைந்து ஆட்படும் நெறியினின்றும்விலக்கி, வேறுவேறு பொருள் மேலும் செயல்மேலும் செலுத்தி என்னை அலைத்தலைத்து அலைக்கழித்தன; பின்னர் யான் உன்னைத் தேறி உனக்கு ஆட்பட்டேன் என்பாராய், “அடிபட்ட நான் உனக்கு ஆட்பட்டும்” என்று சொல்லி, இனியும் என்னை அலையவிடாது ஆட்கொள்ள வேண்டும் என்றற்கு “இன்னும் அலைதல் நன்றோ” என முறையிடுகின்றார்.
இதனால் வாழ்க்கை காரணமாகப் பலவகையால் துன்புற்று உன்னைத் தெளிந்து உனக்கு ஆட்பட்டேனாதலால், எனக்கு அருள் புரிக என்பது பயனாம். (76)
|