77
77. உடையார்பால் ஒன்று வேண்டி அடைவதும், அடையாத வழி நெஞ்சம் உடைந்து கெடுவதும் மக்களினத்தில்
பொதுவாக எங்கும் காணப்படுகிறது. அடைவதும் நெஞ்சு உடைவதும் நன்மக்கள்பால் இருக்கவேண்டிய நற்பண்புகளாகா.
எல்லாம் உடையராக இருப்பவர் பலர் அல்லர்; சிலரே, பலர் சில குறையுடையராக இருத்தலால் அது நிறைத்தல்
வேண்டி உடையாரை அடைவதும் பெறுவதும் இயல்பாக வுள்ளன. உடையார் பிறர் வேண்டுவது தம்பால் உளதாயின்
ஈத்துவப்பதும், பெற்றவர் குறை நிரம்பினமையாலும் நன்றியுணர்வாலும் மனவமைதியும் மகிழ்ச்சியும்
எய்துவதும் கண்கூடு. இந்நிகழ்ச்சிகள் உலகியலுக்கு ஒத்த நடையாகவே மக்களால் மதிக்கப்படுகின்றன.
உடையவரை நாடும்போது அவர் இல்லையென்றது கொண்டு வருந்துவதும், அதனால் ஊக்கமிழந்து உலைதலும்
உயர்ந்த பண்பாவதில்லை. நாம் வேண்டுவது உடையார் ஒருவர்பால் இல்லாவிடத்து, இல்லாமை குற்றமாகாது;
இல்லாததை இல்லையென்றல் பொய்யுமாகாது. நற்பண்பில்லாதார் அவர் கூறுவதை உண்மையெனக் கருதி வேறுவகையில்
முயன்று அடைவது முறை; அதனைக் கைவிட்டு நெஞ்சுடைந்து செயலற்றொழிவது நல்லாண்மையாகாது; அதுகொண்டு
கொடாதாரைப்பழிப்பதும் நன்னெறியாகாது; இவற்றைச் சான்றோர் நன்னடைக்கு ஆகாத சிறு நடை என
இகழ்வர். இச்சிறுமை நடையால் பிறரை அடைந்து, அவர் பால் இல்லாதது கேட்டு மனம் வருந்தி, அவ்வளவில்
நில்லாது, இகழ்ந்து பேசிக் கெடுவதும் செய்கின்றனர். இத்தகைய குறுகிய பான்மையும் இழிந்த
நடையும் தனக்கு உண்டாதல் கூடாதென வள்ளலார் மக்கள் பொருட்டு இறைவன்பால் முறையிடுகின்றார்.
பிறரை அடையவேண்டிய இடுக்கண் தோன்றினும் அதனைப் பொறுத்தலும் நெஞ்சு ஊக்கம் உடையாமையும் திருவருள்
துணையால் கைவருவன என்பது உணர்ந்தே வள்ளற் பெருமான் வேண்டுகின்றார்.
2247. உடையாய்என் விண்ணப்பம் ஒன்றுண்டு
கேட்டருள் உன்னடிச்சீர்
தடையாதும் இன்றிப் புகல்வதல்
லால்இச் சகத்திடைநான்
நடையால் சிறுமைகொண் டந்தோ
பிறரை நவின்றவர்பால்
அடையா மையுநெஞ் சுடையாமை
யுந்தந் தருளுகவே.
உரை: எல்லாம் உடைய பெருமானே, அடியேன் செய்யும் விண்ணப்பம் ஒன்று உண்டு; கேட்டருள்: உன் திருவடியின் பெருமையைத் தடை சிறிதுமின்றி யான் புகலுதல் வேண்டும்: அதுவன்றி அடியேன் இவ்வுலகில் நடையிற் சிறுமையுற்றுப் பிறரை ஒன்று வேண்டி அடைவதும், அவர்பால் அது பெறாதவழி ஊக்கமிழந்து நெஞ்சு உடைந்து வருந்துவதும் எய்துதலாகாது; அதற்குரிய வரம் தந்தருள்க. எ.று.
இவ்வரம் இல்லையாயின் எல்லாம் உடைய நின் அருள் உடன் எய்தா வழி நெஞ்சுடைந்து கெட்டொழிவேன் என்பது கருத்து.
அருவப் பொருளாகிய மாயையிலிருந்து அண்டபிண்டங்கள் அத்தனையும் படைத்து, அவற்றின் வாழ்ந்து உய்ந்து பெறவேண்டி உயிர்கட்கு உடம்பையும் ஏனைக் கருவி கரணங்களையும் படைத்தளித்த வகையில், இறைவன் உடையவனும், பிற அனைத்தும் அவற்கு உடைமையுமாதலால், இறைவனை “உடையாய்” என உரைக்கின்றார். தமக்கு நன்னடையமைதல் வேண்டுவதுபற்றி, “விண்ணப்பம் ஒன்றுண்டு கேட்டருள்” என வேண்டுகின்றார். நாவுக்கரசரும், “பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்” என வேண்டுவர். பணிவன்பு தோன்றக் கூறுமாறு விளங்க, “கேட்டருள்” என மிகைபட மொழிகின்றார். இறைவன் திருவடியைப் புகழ்வது யாரும் எக்காலத்தும் செய்தற்குரியது; புகழ்தல் நன்னடையும் நல்லொழுக்கமுமாகும்; யாவராலும் தீதென்று விலக்கப்படும் குற்றமன்று; இதனால் “உன்னடிச் சீர் தடையாதும் இன்றிப் புகல்வது” என உரைக்கின்றார். சீர் புகலும் திருப்பணிக்குத் தடை செய்வதும் குற்றமாம் என்பர்; சீர் புகல்வது வேண்டுவார் வேண்டுவது வேண்டியாங்குப் பெறும் விழுமிய செயலுமாம்; இக்கருத்தெல்லாம் விளங்கவே, “தடையாதும் இன்றிப் புகல்வது” எனக் கூறுகின்றார். புகல்வது என்னும் சொல், மனத்தால் விரும்புவதையும் வாயாற் சொல்வதையும் குறிக்கும் இனிய தூய தமிழ்ச் சொல். விரும்பப்படுவதும் பேசப்படுவதுமாகிய பொருள்கள் பல பலரிடத்தும் உள்ளன. அவற்றைக் கண்டு தமக்கென வேண்டுவோரும் வேண்டிக்கேட்போரும் உண்டு; அவற்றை யுடையராகும் உரிமை அவர்பால் இருத்தலின், வேண்டுவோர் அவரை அடைந்து கேட்கின்றனர். பிறர்க்குரியதாய பொருளைத் தாம் பெற்றுப் பயனடையக் கருதுவது நேரிதன்று; அவரைப் போலத் தாமும் நன்முறையில் உழைத்துப் பெறுவது நேரிது; நன்னடையுமாகும். உழைப்பவர்க்குரிய பொருளை அவர் பெற்று நுகர்தற்குரியர். அதனைப் பிறர் தடுத்து விலக்காதபடி காப்பதுதான் அரசவேலி. வேண்டுவோர் தமக்கு வேண்டும் பொருள் குறித்து நேரிய முறையில் உழைத்துப் பெறல் வேண்டும் என்பதுதான் உலகியலறம். வாழ்வுக்குரிய நன்னடை; அதனைக் கெடாது காப்பவன் அரசன். அது பற்றியே, “நன்னடை நல்கல் வேந்தற்குக் கடன்” எனப் பொன்முடியார் மொழிகின்றார். உழைப்பின்றி, அதனை யுடையவர்பாற் சென்று இரந்து கேட்பது நன்னடையன்று; சிறுநடையாம் என்று விளக்குதற்கு “நடையால் சிறுமைகொண்டு” என்றும்; அச்சிறுமை பிறர் பொருள்பால் ஆசை தோற்றுவித்து அவர்பால் பன்முறையும் நாணமும் மானமுமின்றிச் செல்வித்தல்பற்றி, “அந்தோ பிறரை நவின்று” அடைதல் என வள்ளலார் உரைக்கின்றார். பன்முறையும் நினைந்து செல்லுமாறு தோன்ற “நவின்று” என்பது குறிக்கத்தக்கது. ஒருமுறைக் கிருமுறை கேட்கும்போதே அதனையுடையவர் அதனைத் தான் பயன் கொள்வதன் இயல்பையுரைப்பினும், செவியினும் மனத்தினும் கொள்ளாது தன்னலம் ஒன்றிற்கே மனத்தின்கண் தலைமையிடம் தந்து நவின்று கேட்பது தீய செயல்; அது தன்பால் மேவக்கூடாது என்பதற்காக, “பிறரை நவின்று அவர்பால் உடையாமையும்” என்றும், வேண்டுதல் மறுக்கப்பட்ட விடத்து, வேறு தாமே நினைந்து செய்துகொள்ளும் ஆற்றலையிழந்து மனவலி கெடுவதுபற்றி, “நெஞ்சு உடையாமையும் தந்தருளுக” எனவும் வேண்டுகின்றார். பிறர் பொருளை விரும்பிய நெஞ்சம் அதனைப் பெறற்குரிய சூழ்ச்சிதனையே நினைவதும், பெற்றால் நுகர்தற்குரிய நெறிகளையே நினைப்பதும் செய்வதால், பெறலாகாவிடத்து வேறு பிறிதொன்றைச் செய்து கோடற்குரிய செயல்முறைகளை நினையாது மடங்கி விரும்பிய பொருளின் கண்ணேயே ஒன்றிக்கிடந்தமையின், உடையவர் மறுத்த வழி நெஞ்சுவன்மை உடைகின்றனர்; அதுபற்றியே நெஞ்சு உடையாத திண்மையை அடியேனுக்குத் தந்தருள்க என வேண்டுகிறார்.
இதனால், மனத்திண்மை அருளால் எய்தவேண்டும் என்பது குறிப்பாம். (77)
|