78
78. இரவும் பகலும் இடையறவின்றி மக்கள் அருள் செய்க என இறைவன்பால் வேண்டுவதையே இயல்பாகக்
கொண்டுள்ளனர். அவ்வியல்பே தாமும் கொண்டு அருள் முறையீடு செய்கின்ற வள்ளற் பெருமான், அதுபற்றி
நினைவைச் செல்லவிடுகின்றார். வரையறை சிறிதுமின்றி அருள் வழங்குவதை மேற்கொண்டால், அருள்
செல்வம் குன்றிக் குறைபடுமோ என அஞ்சுகின்றார். “வளவனாயினும் அளவறிந்தீக” என உலகம் உரைத்தலை
நினைக்கின்றார். இறைவன் திருவருள் தமக்கு வருவது தாழ்ப்பது அவர்க்கு நினைவிலுறுத்துகிறது.
அருளாகிய செல்வம் இடையறாத கொடையால் குறைவுறலாம்; அருட்குப் பஞ்சமே எய்தலாம் என்றெல்லாம்
எண்ணிப் பரிவுறுகின்றார், தெளிவு நல்கும் செவ்விய நினைவொன்று எழுகிறது. இறைவனுடைய உடைமைத்
தன்மையும், உலகெலாம் அவரது உடைமையாம் நிலையையும் எண்ணி ஊக்கமுறுகின்றார். இறைவன்பால்
அருட்செல்வம் குன்றிக் குறைதலில்லை. அவன் குறைவிலா நிறைவானவன். குன்றலும் குறைதலும் மக்கட்கே
இயற்கை என உணர்கின்றார். குறைவுண்டாயவிடத்து உடையவரை அடைந்து உளதாய குறையைப் போக்கி நிறைவுற
அருளும் வண்மை இறைவன் ஒருவருக்கே உரிய செயல்; பிறர் எவருக்கும் இல்லை என்பதையும் வள்ளலார்
உள்ளத்தே உன்னுகின்றார். எண்ணிய எண்ணத்தில் பழுதின்மை ஓர்ந்து முறையிடுகின்றார்.
2248. தஞ்சமேன் றேநின்ற நாயேன்
குறையைத் தவிர்உனக்கோர்
பஞ்சமின் றேஉல கெல்லாநின்
சீரருட் பாங்குகண்டாய்
எஞ்சநின் றேற்குன்னை யல்லால்
துணைபிறி தில்லைஇது
வஞ்சமன் றேநின் பதங்காண்க
முக்கண் மணிச்சுடரே.
உரை: மூன்று கண்களையுடைய ஞானச் சுடராய் விளங்கும் பெருமானே, நாயினேனுடைய குறைகளைத் தவிர்த்தருளுக; அதனால் உனக்கு ஒரு குறையும் உண்டாகாது; அதற்குக் காரணம் உலக மனைத்தும் உனது பேரருளால் உனக்கே உடைமையாகிய பாங்கில் உள்ளன; எல்லா நலங்களும் குன்றிக் கெட நிற்கும் எனக்கு உன்னை யொழியத் துணையாவார் பிறர் ஒருவரும் இல்லை; நின் திருவடியாணையாகச் சொல்கிறேன், இது வஞ்சமன்று; முக்காலும் மெய். எ.று.
ஞாயிறு, திங்கள், தீ என்ற மூன்றையும் மூன்று கண்மணியாகக் கொண்டவன் என்பதுபற்றிச் சிவபெருமானை “முக்கண்மணிச் சுடரே” என மொழிகின்றார். எல்லாவுயிரினும் கடைப்பட்டவன் என்பது புலப்பட “நாயேன்” என்பது சான்றோர் வழக்கு. கடைப்பட்டது, எளிமைப் பட்டது என்ற பொருளில் வருவது தஞ்சம் என்பது. “தஞ்சக்கிளவி எளிமைப் பொருட்டு” என்பர் தொல்காப்பியர். வேறு வகையால் போக்கிக் கொள்ளும் திறம் யாதும் இல்லாதவன் என்பது விளங்கத் “தஞ்சமென்றே நின்ற நாயேன்” என்ற பொருள் தெளிவுறத் “தஞ்சமென்றே நின்ற நாயேன்” என்றும், எனது குறையைப் போக்குவது விரைவில் செய்ய வேண்டுவது என்று குறிப்பதற்காக “நாயேன் குறையைத் தவிர்” என ஏவல்வினையாலும் வேண்டுகின்றார். “தவிர்க, தவிர்த்தருள்க” என முறையிடத் தக்க வகையிருக்கத் தவிர் என முன்னிலை பொருமை ஏவல் வாய்பட்டால் உரைத்தலின் இங்ஙனம் பொருள் காண்பது நெறியாகிறது. பஞ்சம் - இல்லாமை, குறை. குறையைத் தவிர்ப்பதற்கு வேண்டியன நின்பால் இல்லாமல் இல்லை, எல்லாம் நிரம்பவுள்ளன என்பாராய், “உனக்கு ஓர் பஞ்சம் இன்றே” என வுரைத்து, அதற்குக் காரணம் இது என விளக்குதற்காக, “உலகெல்லாம் நின்சீர் அருட்பாங்கு கண்டாய்” என உரைக்கின்றார். உலகங்களும் அவற்றின் கண் உள்ள பொருள்களும் யாவும் நின் திருவருளால் ஆகியமைந்தவை; அவ்வுண்மை எவ்வுயிரும் நன்கு அறிந்தது, அதனை மறைக்கவோ மறுக்கவோ இயலாது என்றற்கு, அருட்பாங்கு என்பதோடு நில்லாமல் “கண்டாய்” என்ற சொல்லால் வற்புறுத்துகின்றார். எஞ்சுதல் - குறைபட நிற்றல். இச்சொல் எச்சம் என்றும் வரும். குறைகள் பல நீங்காமல் நிற்றற்குத் தாம் இடமாயின நிலைமை விளங்க “வஞ்ச மன்றே” என்று வள்ளலார் உரைக்கின்றார். இந்நிலையில் எனக்கு உன் துணையல்லது பிரிது யாதும் வேண்டப்படாது; யான் சொல்லும் இது பொய்யன்று, நின் திருவடி ஆணையாகச் சொல்லுகிறேன் என முறையிடுவது கருத்தாகலின் “இது வஞ்சமன்று, நின்பதம் காண்க” எனப் பரிந்து கூறுகின்றார்.
இதனால், துணை வேறின்மை கூறித் திருவருள் செய்க என முறையிடுவது பயனாதல் அறியலாம். (78)
|