79
79. காதலுறவு கொண்ட ஆடவரும் மகளிருமாகிய இருவர் எத்துணைத் தடைகள் உண்டாயினும்
ஒருவரையொருவர் விடாது பிரிவை விரும்பாது தொடர்ந்த வண்ணம் இருப்பர். உடலைப்பற்றிப் பின்
உயிரைப்பற்றும் காமக் காதலுறவு போல்வது நட்புறவு. அதனால் உண்மை நட்பால் பிணிப்புண்பவர்
பிரியாது உடனுறைதலையே பெரிதும் விரும்புகின்றனர். அத்தகைய நண்பர் இருவரையும் வேற்றவர்
பிரிக்க முயலினும் பிரிவு நேர்விக்கினும் அவர்கள் பிரியாமையையே பேணுகின்றனர். ஆணுக்குப் பெண்ணிடத்தும்
பெண்ணுக்கு ஆணிடத்தும் உளதாகும் காதற்காமப் புணர்வு போல்வதன்று ஒத்த பாலவரிடத்து உண்டாகும்
புணர்வு. உள்ளத்து உணர்ச்சியொப்பே இன்பம் பயந்து பிரியாப் பெருநிலையை உண்டாக்குகின்றது.
இவ்வாறே சமயவுணர்வு தோன்றி அச்சமயக் கடவுளிடத்து உருக்கொண்டு பெருகும் அன்புறவு எய்துவிக்கின்றது.
சமயப் போரும் பூசலும் பொறையின்மையும் மக்களிடைத் தோன்றி வாழ்வுக்குக் கேடுதருதற்குக் காரணமும்
இதுவேயாகும். சமய ஞானமும் ஒழுக்கமும் மிகுமாயின் சமயப்பொறை தோன்றி நலம் பயக்கும்; சமயவொழுக்கம்
கணவன்பால் மனைவிக்கும் மனைவிபால் கணவற்கும் பிரியாப் பெருநட்புப்போலும் இடரினும் தளரினும்
எத்துணை ஏமாற்றம் அடுக்கி எய்தினும், சமயவாழ் முதலாகிய இறைப் பொருளின்பால் அசையாத பற்றும்
ஆர்வமும் கொள்விக்கிறது. அதற்குத் தமது உணர்வை இழந்தவர், இறைவேட்கையால் மனவுணர்வு விழுங்கப்பட்டோர்
உடலினின்றும் உணர்வு வடிவிற்றாகிய உயிர் நீங்குங்காறும் அந் நிலையிற் சிறிதும் மாறுதல் இலர்.
அவ்வாறு இறையுணர்வால் அறிவு விழுங்கப்பட்டவராதலால் வடலூர் அடிகள், தமக்கு முடிந்த முடிவாய்ச் சேர்விடமாவது
இறைவன் திருவருள்; அதுபற்றி அவரை உலகவர் வெறுப்பினும், வெகுண்டு உடலைத் துண்டுதுண்டாக அறுக்கினும்
அஞ்சார்; ஆதலால் இவ்விரண்டு செயல்களையும் இறைவனே செய்தாலும் - அவன் செய்யமாட்டான் -
அவனது திருவருளாகிய இடத்தையன்றி நாடேன் என வெளியிடுகின்றார். இதனைத் தெரிவிக்கும் அருள்
வள்ளல், “அருட்கு முதல்வன் இறைவன்; அதனை நாடியடைதற்கு அவனது ஆதரவு இன்றியமையாதது; அஃது இன்றேல்
அருள்நிலையத்தை தாம் அடைந்து இன்புறல் இயலாது. ஒருவன்பால் அன்பில்லாதபோது, அவ்வன்பின்மை
யறியது அவன் அடைவனாயின் அவன்பால் குற்றம் கண்டு பொறாது வெறுத்தொதுக்குவது மக்கள் இயல்பு.
குற்றம் பொறுக்கத் தக்கதாயின் பொறுத்துக்கொள்ளினும் அன்பு காட்டி ஆதரவு செய்யாமை உண்டு.
அதனால் தன்னை நயந்து அவன் நண்ணமாட்டான் என்பது அவர்க்கு கருத்து. அதுபோலும் மனப்பான்மை தோன்றினும்,
நீ என்னைக் கைவிடாதே” என வள்ளலார் உள்ளம் உருக வுரைக்கின்றார்.
2249. பொறுத்தாலும் நான்செயும் குற்றங்கள்
யாவும் பொறாதெனைநீ
ஒறுத்தாலும் நன்றினிக் கைவிட்டி
டேல்என் னுடையவன்நீ
வெறுத்தாலும் வேறிலை வேற்றோர்
இடத்தை விரும்பிஎன்னை
அறுத்தாலுஞ் சென்றிட மாட்டேன்
எனக்குன் அருளிடமே.
உரை: இறைவனே, நீ என்னை உடையவனாதலால் என் குற்றங்களைப் பொறுத்தாலும், பொறாது ஒறுத்தாலும் என்னைக் கைவிடாதே; எனக்கு முடிவிடம் உன் அருளே; ஆதலால், நீ வெறுத்தாலும் எனக்கு வேறே இடமில்லை; வேறும் ஓர் இடத்தை விரும்பி என்னைத் துண்டாய் அறுத்தாலும் போகமாட்டேன் எ.று.
இறைவனது திருவருட்பெருக்கில் தோய்ந்து ஞானமும் இன்பமும் நிறைந்த பேரின்ப வாழ்வே தமக்கு முடிவிடம்; உலகில் வாழ்வாங்கு வாழ்ந்து பெறுவதும் அதுவே; ஆதலால் வடலூர் வள்ளல் எனக்கு உன் அருளே இடம் என வற்புறுத்துகின்றார்; இடமே என்ற ஈற்றேகாரம் பிரித்து அருள் என்பதன் ஈற்றில் கூட்டப்பட்டது. அதனிற்பிரிது வேறு எவ்வுலகத்தும் இன்மையால் வேற்றோரிடத்தை விரும்பிச் சென்றிடமாட்டேன் என்கிறார். வேறு ஓர் இடம் என்பது வேற்றோர் இடம் என வந்தது. விரும்பிய இடத்தை விடுத்து வேறு இடத்திற்குச் செல்வதாயின் அதற்கு உரியவர் நம்மை வெறுத்து ஒதுக்கவேண்டும். அதனால் அவ்விடத்தை வெறுத்து நீங்க வேண்டி வரும். அதுபற்றியே நீ வெறுத்தாலும் வேறிலை என்று வள்ளல் பெருமான் உரைக்கின்றார். இருக்கும் இடத்தை விடாது பற்றியிருக்க விரும்பினால் அதற்கு உரியவர் கத்தியால் வெட்டிக் கொல்வேன் என்று அச்சுறுத்தினாலும், இவ்விடத்தைவிட்டு நீ விரும்புகின்ற இடத்திற்கும் போவாயானால் உன்னை அறுத்துக் கொல்வேன் என்று அச்சுறுத்தினாலும் வேறொரு இடம் செல்ல விரும்புவதை மக்கள் கைவிடுவர். அதற்கும் நான் அஞ்ச மாட்டேன் என்று உறுதியாக உரைக்கின்றார். ஆதலின் என்னை அறுத்தாலும் வேறொரு இடத்தை விரும்பிச் சென்றிட மாட்டேன் என்று விளம்புகின்றார். தாம் கருதும் அருள் நிலையத்தை உடையவன் இறைவன், அவனுடைய அருள் பெற்றாலன்றி அவ்விடத்தைப் பெறமுடியாது. அவனுடைய அருளைப் பெற வேண்டுவது இன்றியமையாத தாகிறது. ஆனால் பெறுகின்ற நானோ குற்றங்கள் உடையவன். ஒன்று அவற்றைப் பொறுத்தல் வேண்டும். இன்றேல் குற்றத்திற்காக என்னை ஒறுத்துத் தூய்மை செய்தல் வேண்டும். செய்யாது கைவிடுவாயாயின் என் வாழ்வுக்கு வேண்டுவது அளித்து என்னை அடிமையாக்கிக் கொண்டு உதவாதிருந்தல் உனக்கு அறம் அன்று என வற்புறுத்துகின்ற வள்ளலார் யாம் செய்யும் குற்றங்கள் யாவையும் பொறுத்தாலும் பொறாது என்னை வெறுத்தாலும் இரண்டும் நன்றே; அதனால் என்னைக் கைவிடுதல் கூடாது என்றற்கு “பொறுத்தாலும் நான் செய்யும் குற்றங்கள் யாவும் பொறாதெனை நீ ஒறுத்தாலும் நன்றினிக் கைவிட்டிடேல்” என்று வேண்டுகின்றார். ஏன் விடல் கூடாது எனின், விடப்படுகின்றவனுக்கும் இறைவனுக்கும் உள்ள சம்பந்தம் அடிமை ஆனவனுக்கும் உடையவனுக்கும் உள்ள தொடர்பாகும் என விளக்குதற்கு 'என் உடையவன் நீ எனக் காரணம் காட்டி யாப்புறுக்கின்றார். இதனால் இறைவன் திருவருட்பேற்றின்கண் வள்ளலார்க்கு உள்ள உறுதிப்பாடு நாம் உணரத் தோன்றுவது காண்க. (79)
|