80

      80. பல பாட்டுக்களால் பன்னாள் இறைவன் திருவருளை வேண்டிப் பாடுகின்றார் வடலூர் வள்ளல். இறைவனை அருள் வேண்டி இங்ஙனம் முறையிடுகின்றீர்களே; திருவருட்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பென்னை? அவனிடமிருந்து அதனை எங்ஙனம் பெறுவது? என்பன போலும் வினாக்கள் எழுகின்றன. வள்ளலார் புன்னகை புரிந்து; “இறைவன் தாய் போல்பவன்; அவனது அருள் அத்தாயிடம் சுரந்துவரும் பால் போல்வது. தன் கன்று அழக்காணின் தாய்மடியில் பால் சுரந்து வெளிப்படும்; பாவை போன்ற இளம்பெண்ணுக்கும் தன் குழவியைக் கண்டதும் பால் சுரக்கும். அதுபோல இறைவனுக்கு நம்மைக் காணின் அருள் பெருகும் என அறிவிக்கின்றார். இறைவன் திருவருள் வடிவமே அவன் திருவடி. திருவருள் ஞானத்தைச் சைவர்கள் ‘திருவடி ஞானம்’ என்பது வழக்கம். மேலும், இறைவன் ஞான வடிவினனாதலின் அவன் திருவருளும் திருவடியும் யாவும் ஞானமாகும். அருட்பேறு இன்றி ஒருகணமும் வாழ இயலாத என் சிறுமை நிலையைக் கண்டால் இறைவன் வருதற்கு ஒருபோதும் தாழமாட்டான்; அவன் தாழ்த்தாலும் ஞானமயமாகிய திருவருள் திருவடி தானாகவே முற்பட்டு வரும்; அதுதானே அதற்கு இயல்பு என வள்ளற் பெருமான் பாடியருளுகின்றார்.

 

2250.

     சேல்வரும் ஏர்விழி மங்கைபங்
          காஎன் சிறுமைகண்டால்
     மேல்வரு நீவரத் தாழ்த்தாலும்
          உன்றன் வியன்அருட்பொற்
     கால்வரு மேஇளங் கன்றழத்
          தாய்பசுக் காணின்மடிப்
     பால்வரு மேமுலைப் பால்வரு
          மேபெற்ற பாவைக்குமே.

உரை:

     சேல்மீனைப் போலும் அழகிய விழியையுடைய உமாதேவியைத் தன் பங்கிலேயுடைய சிவபெருமானே, என் சிறுமை நிலையைக் கண்களால் கண்டால், நீ உடனே எழுந்து வர முற்படுவாய்; ஒருகால் நீ வரத் தாழ்க்கினும் உனது பெரிய அருளுருவாகிய திருவடி போந்து என் முன் நிற்குமே; வாராமை என்னையோ? இளங்கன்று அழுவது கண்டால் தாய்ப்பசுவின் மடியில் பால் சுரக்குமன்றோ? எழுதிய பாவைபோன்ற இளம்பெண் ஒருத்திக்குத் தான் பெற்ற குழவியைக் கண்ட மாத்திரையே பால் சுரந்து வருமே? தாயும் பாலும்போல் நீயும் திருவருளும் தொடர்புற்றிருப்பது உலகறிந்த உண்மை யாயிற்றே எ.று.

     இரங்கத்தக்க பொருளிடத்தே துன்பத்தைத் தாங்கும் பெருமையும் வன்மையும் இருப்பக் காணின் அருளிச் செய்து உதவுதற்குக் காலம் தாழ்ப்பது குற்றமாகவோ குறையாகவோ கொள்ளப்படாது. சிறுமையும் மென்மையும் உடைய தாயின் அருளாளர் சிறிதும் பொறார்; பேரருளாளனாகிய நீ என் சிறுமை காண்பாயாயின் ஒரு சிறுகணமும் பொறாய் என்றற்காக, “என் சிறுமை கண்டால் மேல் வரும் நீ” என இயம்புகின்றார். சிறுமை கண்டு ஆற்றாத் தன்மையனாக இறைவன் இருக்க, அவனது திருவருள் அவனினும் மிக்க மென்மையும் விரைவும் உடையது என்பது விளங்க, “நீ வரத் தாழ்த்தாலும் உன்றன் வியன் அருள் பொற்கால் வருமே” என வுரைக்கின்றார். உருவநிலை திருவடி; அருவநிலை திருவருள்; இந்த இயைபு விளக்குதற்காக, “வியன் அருட் பொற்கால்” என விளம்புகின்றார்.

     இளங்கன்று அழுதல் என்பது, இளங்கன்று தாயை நோக்கி அம்மே எனக் கதறுதல். கன்றின் குரல் காதில் வீழ்ந்த மாத்திரத்தே அன்புருவாய தாதலால் தாய்ப்பசுவின் மடி சுரந்து பால் துளிக்கும்; அதனை, “இளங்கன்றழத் தாய்ப்பசுக் காணின் மடிப்பால் வருமே” என உரைக்கின்றார். மகப்பெற்ற பாவைபோல் அழகிய இளம்பெண் என்றற்குப் “பெற்ற பாவை” எனப் பேசுகின்றார். அவள் மார்பு இளநலம் கனிந்த தாயினும் தன் குழவியைக் காணும்போது தானாகவே பால் சுரந்து பீறிட்டுத் துளித்தலை முலைப்பால் வருமே” என மொழிகின்றார். இங்ஙனம் மக்களுக்கும் மாக்களுக்கும் தாய்மைப் பண்பு ஒத்திருப்பது காட்டித் தமக்கு விரைந்து அருள் செய்தல் வேண்டுமென இதனால் அறிவிக்கின்றார்.

     (80)