81

      81. நால்வர் தமிழின் நயம் கண்டு இன்புற்றும், பிறர்க்குரைத்து இன்புறுவித்தும் ஏற்றமுறும் வடலூர் அடிகள், அவர் ஒவ்வொருவர் வரலாற்றினும், அவ்வக் காலத்து நிகழ்ந்த அருள் நிகழ்ச்சிகளிலும், தம்மை மறந்து ஈடுபடுவது இயல்பு. மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகத்தைப் படித்தவர் அனைவரும், அவரது திருவுள்ளத்தின் மென்மையை நன்கு அறிவர்; ஒவ்வொரு பாட்டும் படிப்பவர் கேட்பவர் அனைவருடைய மனத்தையும் நீராய் உருக்கும் இயல்புடைய தாவதைத் தெளிவாகத் தெரிந்துரைப்பர். அதுபற்றியே, பட்டினத்தார் முதலிய பெருமக்கள் அவரைத் “திருந்திய அன்பின் பெருந்துறைப் பிள்ளை” எனப் பாராட்டினர். இவ்வியல்பினால் மணிவாசகரது வரலாறும் எல்லாருடைய மனத்தையும் உருக்கும் இயல்புடையதாகும். இத்துறையில் கருத்தைச் செலுத்துகிறார் வடலூர் அடிகள். மணிவாசகர் காலத்தில் வையையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வரக்கண்ட வேந்தன், நீர் நகர்க்குட் புகுந்து கேடு விளைவியா திருத்தற் பொருட்டு ஆற்றின்கரைக்கு மண் கொட்டி வன்மையூட்டுமாறு பணிக்கின்றான். முதியவள் ஒருத்தி பொருட்டு மதுரைச் சொக்கநாதனே கூலியாளாய் வந்து மண் கொட்டும் வேலையைச் செய்கிறான். ஒழுங்காகச் செய்யாமை கண்ட வேந்தன் அந்தக் கூலியாளைத் தன் கைப்பிரம்பினால் ஓங்கி அடிக்கிறான். அந்த அடி எல்லா மக்கள்மேலும் பட்டு அடிபட்டவன் இறைவன் என்ற உண்மையைப் புலப்படுத்திவிடுகிறது. வரலாறு கூறிய பரஞ்சோதி முனிவர்,

2251.

     வன்பட்ட கூடலில் வான்பட்ட
          வையை வரம்பிட்டநின்
     பொன்பட்ட மேனியில் புண்பட்ட
          போதில் புவிநடையாம்
     துன்பட்ட வீரர்அந் தோவாத
          வூரர்தம் தூயநெஞ்சம்
     என்பட்ட தோஇன்று கேட்டஎன்
          நெஞ்சம் இடிபட்டதே.

உரை:

     பெருமானே, அன்று கூடல் நகர்க்கண் வையையாற்றுக்கு வரம்பிட்டபோது, வேந்தன் சினந்து அடிக்கப் பொன் போன்ற நின் திருமேனியிற் புண்பட்டபோது, அந்நிகழ்ச்சி முற்றும் காரண காரிய முறையில் வைத்து எண்ணிய வாதவூரடிகள் நெஞ்சம் என்ன பாடுபட்டிருக்கும்! இன்று வரலாறு சொல்லக் கேட்கும் என் நெஞ்சமே இடிபட்டதுபோல நடுங்குகிறதே. எ.று.

     வன்பட்ட கூடல் - வன்னிலமாகிய மதுரை நகர்; வையையின் பெருக்கால் எளிதில் கரைந்து கெடாத வன்மைமிக்க கூடல்நகர் என்பது குறிப்பு. வான் - பெருமை. ஆற்றின் கரை, வரம்பு எனப்படுகிறது. நீர்ப்பெருக்கால் கரைந்து கெடாமற் பொருட்டு கரைக்கண் மண்கொட்டி உறுதிப்படுத்தப்பட்ட செயலை “வரம்பிட்ட” என்று புகல்கின்றார். இறைவன் பொன்னிற மேனியனாதலால், அவன் கூலியாளாய் வந்த மேனியை, “பொன்பட்ட மேனி” என்றும், வேந்தன் அடித்து அடித்தழும்பு சிவந்து இனிது தோன்ற விளங்கிற்றென நினைந்து “புண்பட்டபோது” எனவும் உரைக்கின்றார்.

     புவிநடை - உலகநடை. தன்கண் பிறந்து வளரும் மக்களை மேன்மேலும் தனது நடையையே நச்சி இன்பமும் துன்பமும் எய்துமாறு வருத்துவதாகலின் உலக நடையைப் “புவிநடையாம் துன்பு” என்றும், அதன் சிக்கலில் அகப்படாது வென்றுயர்ந்த விறலுடைமைபற்றி, வாதவூரர் பெருமானை, “புவிநடையாம் துன்பட்ட வீரர், வாதவூரர்” என்றும் வியந்து விளம்புகின்றார்; எளிதில் வெல்லலாகாமல் மனத்தை மயக்கும் ஆசை வடிவினதாய் உயிரறிவை இறுகப் பிணிக்கும் ஆற்றல் மயமானதாதலின், புவிநடையை வென்ற வாதவூரர் பெருமானை “புவி நடையாம் துன்பட்ட வீரர்” எனப் புகழ்ந்துரைக்கின்றார்.

     அப்பெருமான் சிவன்பால் பேரன்புடைய பெருந்தகை; அவரைப் பற்றிப் பேசுகின்ற பெரியவர் அனைவரும் சிவன்பால் உளதாய “பேரன்புப் பிழம்பு மணிவாசகர்” எனப் பேசுவது வழக்கம். சிவபெருமான் மேற் புண்ணுண்டாக அடிபட்டார் என்றவிடத்து, அச்சொல் அவர் காதில் விழுந்தபோது அவரது தூயமனம் என்ன பாடுபட்டிருக்குமெனக் கற்பனை செய்து காண்கின்றார் வடலூரடிகள். அடிபட்ட நிகழ்ச்சி நடந்து பன்னெடுங் காலமாயினும், இன்று கேட்பினும் என் நெஞ்சு பெருந் துயரெய்தி வருந்துகிறது; உடனிருந்தவராதலின் வாதவூரர் திருவுள்ளம் எத்துணைத் துன்பம் உற்றிருக்கும் என எண்ணியே, “வாதவூரர் தம் தூய நெஞ்சம் என்பட்டதோ, இன்று கேட்ட என் நெஞ்சம் இடிபட்டதே” என வுரைக்கின்றார்.

     இதனால், தொண்டர் பொருட்டுச் சிவன் அடிபடற் கொருப்பட்ட பேரருள் நினைந்து மகிழ்கின்ற வடலூர் வள்ளல், திருவாதவூரரின் திருவுள்ளம் அப்பெருமான் திருவருளில் தோய்ந்திருந்த நலத்தையும், சிவன் அடிபட்டபோது அது தான் கொண்ட துயர் மிகுதியையும் வியந்து, கனிந்த சொற்களால் திருவருளை நினைந்து பரவுவது பயனாதல் காணலாம்.

     (81)