82
82. உலகவரை நோக்குகின்ற வடலூர் வள்ளல் “நன்முறையில் தொழில்புரிந்து வேண்டுவன பெற்று வாழ்தற்கு
வாய்ப்பில்லாமல் உடற் குறைபட்டுச் சிறுமையுறுவோர் மிகவும் சிலர்; பலர் உறுப்புக் குறையின்றி
இனிது உழைத்தற்குரிய உடம்பும் வலிமையும் ஒருங்கு பெற்றும் துன்பத்தால் வருந்துவதைப்
பார்க்கின்றார். காரணம் யாதாகலாம் என எண்ணுகின்றார். செய்தொழில் உயர்வு தாழ்வு தோன்றாத
காலம் அவர் வாழ்ந்த காலம். உடலுழைப்பின்றி ஓரிடத்தேயிருந்து உடுத்த உடை மடிப்புக் கெடாது
அழுக்குறாது செய்தொழில் உயர்ந்ததென்றும் மெய்வருந்த வியர்வை சிந்த உழைப்பது தாழ்வென்றும்
கருதும் கருத்துத் தோன்றி இந்நாளைய மக்கள் வாழ்வை மிக்க துன்பத்துக்குள்ளாக்கி விட்டது. செய்தொழில்
யாவும் வாழ்க்கைக்கு ஆக்கமாதலின், அவற்றின் கண் உயர்வு தாழ்வு இல்லை. செய்தொழிலின் சீர்மையும்
செயப்படு பொருளின் சிறப்புமே உயர்வு தருவன என்ற திருக்குறட் கருத்து இந்நாளில் ஓரளவு உணரப்பட்டு
வருகிறது. உயர்தொழில் எனக் கருதப்படும் செய்தொழிலுடையவரை நோக்கின், அவருள்ளும் துன்பத்தால்
சுடப்பட்டுத் தீய்ந்த தோற்றமுடையார் பலர் காணப்படுகின்றனர். வள்ளலார் காலத்தே செய்தொழிலில்
உயர்வு தாழ்வு நோக்கும் இயல்பு மக்களிடையே பையப் பரவியிருந்தது; அரைக் காசு வருவாயுடையதாயினும்
அரசு ஊழியமே உயர்ந்ததென்று எண்ணம் அந்நாளையச் சமுதாயத்தில் கற்றவர் சூழலில் வேர்விட்டிருந்தது.
வாணிகமும் வேளாண்மையும் பிற தொழில்களும் சிறுமையுடையனவாக நினைக்கப்பட்டன. அதனால் நாட்டின்
பொருள்வளம் அறிவுக்கண்ணுக்குப் புலப்படாமல் மறைமுகமாகக் குறைந்தவண்ண மிருந்தது. பொருட் குறை
தலைகாட்டும் போதெல்லாம் அக்காலப் பேரரசு தன் பரப்பில் அடங்கிய பிற நாடுகளிலிருந்து
பொருள்களைக் கொணர்ந்து நிறைத்துக் கொண்டிருந்தது. கற்ற கல்வியும் பெற்ற அறிவும் அரசவூழியத்துக்கும்
அதைச் சார்ந்த தொழிலுக்குமே பயன்பட்டன. நாடாளும் பேரரசு பெருமை குன்றி நீங்குமாயின், அதன்
பிடிப்பிலிருந்த பிற நாடுகள் தனித்தனியாக நீங்குமாயின், நாட்டின் பொருள்வளமும் மக்கள் நல்வாழ்வும்
என்னாகும் என்று கருதும் நல்லறிவு, தனிக்குடும்ப வாழ்விலும் சமுதாய வாழ்விலும் பெரும்பாலும் தோன்றவே
யில்லை. பேரரசு ஊழியமே பெறற்கரிய பிறவிப் பெரும்பயன் என்ற உணர்வு அந்த நல்லறிவை இருளிற்
கிடத்திப் புதைந்தொழிந்தது. பண்டை நாளைத் தமிழரசும் பின்வந்த பல்லவ சோழ பாண்டிய விசயநகரப்
பேரரசுகளும் வீழ்ந்த வரலாறு அறியாத பேதைமை வேறு மக்களறிவு வீழ்ச்சிக்குத் துணை புரிந்தது. இச்
சூழ்நிலையில் சமுதாயம் கிடந்த நாளில் வடலூர் வள்ளல் வாழ்ந்தவராதலால், அவர்க்கு மக்களின்
வாழ்வைப் பெரும் பொருளாகக் கொண்டு நோக்கும் அருட்பார்வை திருவருளால் தோன்றுகிறது. அரச
வூழியத்தில் உயர்மதிப்பு வைத்து வாழ்ந்தோருள்ளும் துன்பம் தோன்றி வருத்துவது காண்கிறார்.
அவர்களின் புறத்தையும் அகத்தையும் நோக்குகிறார். புறத்தே கண்களில் நீர் ஒழுகுகிறது; அகத்தே
நெஞ்சம் வேண்டும் பொருள் நினைந்து நிலையின்றி அலைகிறது; புத்தியும் ஒளியின்றிக் கூர்மை
இழந்து மழுங்கி யிருக்கிறது. வள்ளலார் உள்ளம் வருந்துகிறது. சிவன்பால் முறையிடுகின்றார்.
2252. நீர்சிந்தும் கண்ணும் நிலைசிந்தும்
நெஞ்சமும் நீணடையில்
சீர்சிந்து வாழ்க்கையும் தேன்சிந்தி
வாடிய செம்மலர்போல்
கூர்சிந்து புந்தியும் கொண்டுநின்
றேன்உட் குறைசிந்தும்வா
றோர்சிந்து போலருள் நேர்சிந்தன்
ஏத்தும் உடையவனே.
உரை: சிந்தன் நேர்நின்று ஏத்தும் உடையவனே! நீர் பொழியும் கண்ணும் நிலையின்றி அலையும் நெஞ்சமும், சீரற்ற வாழ்க்கையும், கூர்மை குன்றிய புத்தியும் கொண்டு நிற்கின்றேன்; உட்குறையாவும் கெடும் வகை கருதும் சிந்தாமணிபோல் அடியேனுக்கு அருள் செய்க. எ.று.
நேர்சிந்தன் - நேர்மை யுடைய அகத்தியன்; வாமனனாய் வந்த திருமாலை விலக்குதற்கு சிந்தன் என்றார். உயிர்க்கு வேண்டும் பொருளும் அறிவும் எல்லாவற்றிற்கும் உடையவனாதலால் சிவனை “உடையவன்” என்கிறார். நிலை சிந்தும் நெஞ்சம் - நிலையின்றி அலையும் மனம். நீள் நடை - நெடிய உலக நடை, உலகவாழ்க்கை. மலர்கட்குத் தேன் உள்ள அளவும் மணமும் ஒளியும் இருக்கும்; தேன் குறைந்ததும் வாடிவிடும்; அதுபோலப் புத்திதத்துவமும் காண்பன கேட்பனவற்றைக் கூர்ந்தறியும் திறமிலதாயின், மிகப்பல தவறுகட்குள்ளாகித் துன்பமுறும் என்பது பற்றியே, “தேன் சிந்தி வாடிய செம்மலர் போல” என உவமம் செய்கின்றார். ஒருமை கொள்ளாது மனம் அலைதலால், உலகவர் நம்புதலின்றிக் கைவிடுதலால், வாழ்வு சீர்குலைவது கண்டு “நீண்டையிற் சீர் சிந்து வாழ்க்கை” எனச் சொல்லி வருந்துகிறார். புத்திக்குக் கூர்மை, பெருமையும் விளக்கமுமாகும். புத்தி என்பது, மனத்தின் நால்வகை வட்டங்களில் ஒன்று. மனம், சித்தம், அகங்காரம், புத்தி என்பவை வட்டங்கள். புத்தி, புந்தி எனத் தமிழில் வழங்கும். திருவருளால் உடற்குள் மிகவும் நுணுக்கமாய் ஆற்றல் வடிவிலிருக்கும் வித்தியாதத்துவத்தின் உள்ளே, வித்தை, கலை, அராகம் என்ற கூறுகளால் உயிர் முறையே அறிவு செயல் விழைவு என்ற மூவகை ஆற்றலும் கிளரப்படும்; அதேநிலையில் அவ்வித்தியாதத்துவம் தன்னைப் புறத்தே அருவமாய்ச் சூழ்ந்திருக்கும் மானத தத்துவத்தையும், அதனைப் புறத்தே உருவமாய்ச் சூழ்ந்திருக்கும் பௌதிக தத்துவத்தையும் (Physical & Physiological Chemistry) இயக்கிவிடும். மானதம் மனம் சித்தம் அகங்காரம் புத்தி என்ற நான்காய் ஒன்றினுள் ஒன்று நுண்மையாய் இருப்பது. மனத்தினும் நுண்ணிது சித்தம்; அதனினும் நுண்ணிது அகங்காரம், அதனினும் நுண்ணிது புத்தி. இப் புத்தி வட்டத்துள் நுண்ணிதாய் முக்கூறாய் இருப்பது வித்தியாதத்துவம்; அதற்குள் நுண்ணிதாய் ஆற்றலே யுருவாயது உயிர். இவ்வாறு உடற்குள் அருவமாகிய மானதச்சூழல், வித்தியாதத்துவம் ஆகியவற்றால் உள்ளுக்குள்ளாய் இருப்பது கொண்டே மெய்கண்ட தேவரும் திருவள்ளுவரும் உயிர்க்கு உள்ளம் என்று பெயர் குறித்து வழங்கியுள்ளனர். மனம், மெய், வாய் முதலிய பொறிகளின் வாயிலாகிய புலன்களைப் பொருந்தித் தன்னின் வேறாய் உருவமாயுள்ள நில முதலிய புறப்பொருள்களையும், பசிவேட்கை, காதல் வேட்கை, உள்ளுறுப்புக்களின் நலந்தீங்குகள் ஆகிய உள்ளுடற் பொருள் நிலைகளையும் பற்றிப் பரவுகிறது; சித்தம், அவற்றின் பண்பு செயல்களைப் பொது சிறப்பு என்ற வகையிலும்,. காலம், இடம், ஒப்பு, உறழ்வு என்ற நிலையிலும் வைத்து எண்ணுகிறது. அகங்காரம் இவற்றைத் தனக்கு உடைமையாக்கி மேலும் கீழுமாக இயக்குகிறது. புத்தி தொகுத்தும், வகுத்தும், விரித்தும், கூட்டியும், கழித்தும், ஒப்பு நோக்கியும் வெறுபடுத்தியும் தெளிவு கொள்கிறது. இவற்றுள், சித்தம் புத்தி என்ற இரண்டிற்கும் இடையே இருந்து அதன்கண் உள்ள கருத்துக்களை வேண்டுநிலைக்கொப்ப மேலும்கீழும் செலுத்தவதொழிய வேறு ஒன்றும் செய்யாமைபற்றி அதனை விலக்கி, மனம் சித்தம் புத்தி என்ற மூன்றையும் சிறப்பாகக் கொண்டு, மனம் பொருளைப் பற்றும், சித்தம் சிந்திக்கும், புத்தி தெளிவு கண்டு தனக்கு உரியதாக்கும் என்று உரைப்பர். இஃது எல்லா நாட்டு உளநூலறிவுக்கும் ஒத்த கருத்து. புத்திக்குக் கூர்மையாவது மேலே கண்ட கருத்துக்கள் உணர்வுகள் ஆகியவை மிக்கிருத்தல்; விரைந்து தெளிதல் என அறிக. இவை உடலைச் சார்ந்தவையாதலால் உடல்நிலைக் கேற்பத் தெளிவு, கிளர்ச்சி, தளர்ச்சி என மூன்று நிலை இம்மன முதலியவற்றிற்கும் உண்டு. தெளிவு நிலையில் இன்பமும், கிளர்ச்சி நிலையில் விதுப்பும், தளர்ச்சி நிலையில் மயக்கமும் உணரப்படும். விதுப்பில் நினைவும், மயக்கத்தில் மறதியும் மிக்கு விளங்கும். துன்பம் மயக்கத்தில் முளைத்து விதுப்பில் அரும்பித் தெளிவில் மலரும், மூன்று நிலையிலும் இடம்பெறுவதால், ஒரே அளவினதாயினும், இன்பத்தில் காலம் சுருங்கியும் துன்பத்தில் நீண்டும் காணப்படுகிறது. இந்நாளைய கல்வி, இளமையிலேயே கல்வி கேள்விகட்கு உடன் கருவிகளான கண் எங்ஙனம் காணுகிறது, காது எவ்வாறு கேட்கிறது என்பவற்றை அறிவிக்கும் இயல்பில் இல்லை; இவற்றால் அறிவு எங்ஙனம் மலர்கிறது, வளம் பெறுகிறது என்பவற்றைக் கற்பிப்பதில்லை. இக் குறைபாட்டால் மக்களிடையே பருப்பொரு ளறிவைவிட அருவப்பொருள் நுண் பொருளாகியவற்றைச் சிந்திக்கும் எண்ணம் குன்றியிருக்கிறது. இவற்றை அறிந்த தமிழ் மொழியில் கற்பிக்க என்றால், உட்பகை எழுந்து விளங்காத வேறுமொழியை வற்புறுத்தி, மக்களை மடமைக்கே இடமாக்கி, அடிமைச் செயற்கு இரையாக்குகிறது. உட்குறை - அறிவு நினைவுகளில் உள்ள குறைபாடுகள். வாறு - வகை; வலிமையுமாம். சொற்குறையும் செயற்குறையும் புறக்குறை; இவற்றிற்கும் உட்குறை காரணமாதலின், காரணத்தை எடுத்து மொழிந்து புறக்குறையை உய்த்துணர வைத்தார். மாணாக்கருக்கு உணர்வு பெருகுதல் வேண்டி இவ்வறு உய்த்துணர வைப்பது நூலாசிரியர் மரபு எனச் சேனாவரையர் செப்புவது காண்க. உட்குறை சிந்தும் வாறு ஓர் சிந்துபோல் அருள் நேர் என இயைத்துரைப்பினும் அமையும். இங்கே சிந்து என்றது கற்பக நாட்டுச் சிந்தாமணியை கடலையும் சிந்து என்பதுபற்றிச் சிந்துபோல் அருள் என்பதும் உண்டு. ஆயினும் அருள்கடல் போன்ற பரப்பும் பெருமையுமுடையதாகும்; உயிரின் சிறுமையை நோக்க, கடல்போற் பெருகிவரும் அருளை ஏற்கும் ஆற்றலும் பெருமையும் உயிர்க்கு இல்லாமையால் சிந்துபோல் அருள்க என்பதற்கு இவ்வாறு பொருள்கோடல் பொருந்தாமை அறிந்துகொள்க. நினைப்பவர் நினைந்தவற்றை நினைந்த அளவு உதவுவது சிந்தாமணி என்பர். (82)
|