83
83. சிவத்தொண்டர்களின் மனம் எவ்வாற்றாலும் குறையுடையதாக
இருப்பதில்லை என்று வடலூர் வள்ளல் காண்கின்றார். குறையுடைய உள்ளங்கள் பலவேறு ஆசைகளால் நிறைந்துவிடுகின்றன.
ஆசைகள் கூடி உள்ளத்தைத் துன்பத்துக்கு உறைவிடமாக்குகின்றன. திருமூலரும் அது கண்டே, “ஆசை படப்பட
ஆய்வரும் துன்பங்கள்” என்று சொல்லுகின்றார். துன்பமின்றி அமைதி சான்ற உள்ளம் வேண்டுமாயின்,
அது குறைபடாத நிறைந்த தன்மையுடையதாக வேண்டும். தொண்டர்களின் திருவுள்ளம் சிவத்தொண்டும்
சிவத்தின் திருமேனி நினைவும் காட்சியும் நிறைந்துவிடுதலின், குறைவிலா நிறைவுடையராய்த் தொண்டர்கள்
விளக்கமுறுகின்றனர். அந்நிறைவு இல்லாமையால், எளியேன் உள்ளம் குறைகள் மிகுந்து ஆசையும் அது
காரணமாக வரும் துன்பமும் தங்கும் இடமாகவுளது என முறையிடுகின்றார்.
2253. கொடிகொண்ட ஏற்றின் நடையும்
சடையும் குளிர்முகமும்
துடிகொண்ட கையும் பொடிகொண்ட
மேனியும் தோலுடையும்
பிடிகொண்ட பாகமும் பேரருள்
நோக்கமும் பெய்கழலும்
குடிகொண்ட நன்மனம் என்மனம்
போற்குறை கொள்வதின்றே.
உரை: ஏற்றின் நடையும் திருமுடியிற் சடையும் குளிர்ச்சி தழையும் திருமுகமும், துடியேந்திய கையும், திருநீறு அணிந்த செய்ய மேனியும், தோலால் இயன்ற ஆடையும், பெண் யானை போன்ற உமாதேவியுறையும் இடப்பாகமும், மிக்க அருள் நிறைந்தொழுகும் கண்களும், வீறு கண்டையணிந்த தாளும் உடைய சிவத் திருமேனி தொண்டர்களின் நல்ல மனத்தின்கண் நீங்காமல் நிறைந்து நிலை பெற்றுள்ளன; அதனால் அவர்கள் திருவுள்ளம் என் மனம்போல் குறை பொருந்தி வருந்துவதில்லை. எ.று.
நடையும் சடையும் முகமும் கையும் பிறவும் உடைய திருமேனி சிவனது சகளத் திருமேனி என்று சிவசாத்திரங்கள் செப்புகின்றன. இதனை உருவத் திருமேனி யென்பதும் வழக்கு. இவை யாவுமின்றி அருவமாய் ஞானமாய்க் கொள்ளப்படும் மேனி ஒன்று உண்டு. இதனை சகளத் திருமேனி என்பர். உருவமாகிய சகளம் போல், அருவமாகிய அகளவடிவம் நுண்ணறிவுடையோர்க்கன்றி நினைவுக்ககப் படுவதில்லை. நுண்ணறிவுடையோரினும் மற்றையோர் தொகை மிகுதியாதலின், அவர் பொருட்டு இறைவன் மேற்கொள்வது சகளத் திருமேனி. இதனைச் சான்றோர்,
“அகளமாய் யாரும் அறிவரி தப்பொருள் சகளமாய் வந்ததென் றுந்தீபற தானாகத் தந்ததென் றுந்தீபற”
எனவுரைக்கின்றனர். இறைவன் பிறவுயிர்கட்கு உருவமாகிய உடம்பருளுவனே யன்றி தனக்குப் பிறர் உடம்பு படைத்துத்தரப் பெறுபவனல்லன்; அவன் கொள்ளும் சகளத் திருமேனி அவன் தானாகவே படைத்துக் கொள்வது; அதனால்தான், அதனை, “தானாகத் தந்தது என்று உந்தீபற” எனச் சான்றோர் தெளிவுபடுத்துகின்றார்கள்.
சிவனுடைய சகளத் திருமேனி, காண்பவர் கண், செவி முதலிய கருவிகளின் அளவுகாறும் பரந்து சென்று உள்ளத்திற் படிவதால், அவ்வுள்ளம் வேறு நினைவுகட்கு இடனாகும் குறையுடையதாவதில்லை. நடையைக் காணும்போது ஏற்றின் பீடு நடை தோன்றிக் காண்பவர் கருத்தில் பெருமித வுணர்வை நிரப்புகிறது. சடையும் குளிர்முகமும் திருமுகத் தோற்றத்தைச் சிறப்பித்து மனத்தை அன்பினால் நிறைத்து விடுகிறது. இவ்வாறே துடியேந்திய கையும் பொடியணிந்த பொன் மேனியும் தோலாடையும் உமைதங்கிய கூறும் கண்டு பரவும் கருத்தையும் கருவிகளையும் ஆசையால் அலமரல் இன்றி ஆரவமர்ந்து அழகு நுகரும் செவ்விதந்து சிறப்பிப்பதுபற்றி, அந்நுகர்ச்சிக்கண் ஈடுபடும் தொண்டர் மனத்தை “நன்மனம்” எனப் பாராட்டுகின்றார். முழுதும் கண்டு இன்புறும் அறிவும் ஆற்றலும் இல்லாமையால் என் மனம் குறைபட்டுத் துன்பத்துக் குரியதாகிறது என்ற கருத்தால்தான், “என் மனம்போல் குறை கொள்வதின்று” என அடிகள் அறிவிக்கின்றார்.
இதனால் மனம் குறைபட்டுப் பல்வேறு ஆசைகட்கு இடனாகித் துன்புறாதவாறு இறைவன் சகளத் திருமேனி கொள்கிறான் என்றும், அதனைக் கண்டு ஆரநுகர்ந்து இன்புறும் தொண்டர் திருவுள்ளம் குறைபட்டுத் துன்புறுவதில்லை யென்றும் காரணம் காட்டுதல் இப் பாட்டின் பயனாதல் காண்க. (83)
|