84

      84. உலகில் வாழும் உயிர்களைப் பசு என்றும், இறைவனை அப் பசுக்களைப் புரந்தருளும் பதி என்றும் கொண்டு, பசுபதி எனக் கூறுவது பண்டையோர் வழக்கம். இவ்வாறுதான் கிரேக்க யவனர்களும் இறைவனை இறவா மக்கட்குத் தலைவன் என்றனர். சருவஞானோத்தரம் முதலிய சிவாகமங்கள் சிவனைப் பதிநிலையில் வைத்துப் பேசுவது சமய ஆராய்ச்சிக்கு விளக்கம் தருகிறது. இவ் வழக்குகளைக் காண்கின்ற வள்ளற்பெருமான் தத்துவச் சூழ்நிலையினின்றும் இறங்கிப் புராணச் சூழ்நிலையில் சிவபெருமான் பிரமன் திருமால் இந்திரன் முதலிய தேவதேவர்கட்கும் பதியாய் விளங்குவதை அழகிய பாட்டொன்றில் வைத்துப் பாடி மகிழ்கின்றார்.

 

2254.

     விதிக்கும் பதிக்கும் பதிநதி
          ஆர்மதி வேணிப்பதி
     திதிக்கும் பதிக்கும் பதிமேற்
          கதிக்குந் திகழ்பதிவான்
     துதிக்கும் பதிக்கும் பதிஓங்கு
          மாபதி சொற்கடந்த
     பதிக்கும் பதிசிற் பதியெம்
          பதிநம் பசுபதியே.

உரை:

     உலகுகளைப் படைக்கும் பிரமனுக்கும் அவன் உறையும் பதியாகிய சத்தியலோகத்துக்கும் பதியும், வளர்ந்தும் தேய்ந்தும் நிலவும் திங்கள் தங்குகிற சடையையுடைய பதியும், காக்கும் தேவனாகிய திருமாலுக்கும் அவனுரையும் வைகுந்தத்துக்கும் பதியும், அதற்கு மேலும் உலகிற்கும் விளங்கும் பதியும், வானத்தவர் துதிக்கும் தலைவனாகிய இந்திரனுக்குப் பதியும், சொல்லுலகமாகிய ஞானச் சூழ் நிலைக்கும் பதியும், சிற்பதியும், எங்கள் பதியும் எல்லாம் நம் பசுபதியாகும். எ.று.

     விதி - படைப்பவனான பிரமன்; இவனை விதியென்றே நூலோர் வழங்குவர். இவ்விதியுறையும் உலகைச் சத்தியபதி எனப் புராணங்கள் கூறுதலின், “விதிக்கும் பதிக்கும் பதி” என வகுத்துரைக்கின்றார்; இது போலவே திருமாலுக்கும் அவனுறையும் வைகுந்தத்துக்கும் சிவன் பதிப்பொருளாதலைக் காட்டற்குத் “திதிக்கும் பதிக்கும் பதி” எனவுரைக்கின்றார். திதி - திதிக் கடவுளாகிய திருமால். சந்திரன், நாளும் கலை வளர்வதும், தேய்வதுமாகிய செயலுடையனாவதுபற்றி “கலையார் மதி” என்றும், அவனைச் சடையில் வைத்து அருளுவது தோன்ற “மதி வேணிப் பதி” என்றும் குறிக்கின்றார். வைகுந்தத்துக்கு மேலும் பலவுலகங்கள் உண்டெனப் பௌராணிகர் கூறுதலால், அவையும் எஞ்சாமைப் பொருட்டு “மேற் கதிக்கும் திகழ்பதி” எனவுரைக்கின்றார். மேற் கதி-மேற்பிறப்புக்கும் மேல் உலகிற்கும் பொதுவாய் வழங்கும் பெயர். 'வான் துதிக்கும் பதி' என்றது, வானவர்க்குத் தலைவனாகிய இந்திரனை. எல்லா வுலகிற்கும் மேலாய் உயர்ந்த கயிலையில் வீற்றிருக்கும் உமையம்மையை “ஓங்கு உமா” எனவும், அவட்குக் கணவனாம் பதி என்றற்கு “ஓங்கு உமா பதி” எனவும் உரைத்து மகிழ்கின்றார். சொல்லுலகம் பொருளுலகம் என வழங்கும் இரண்டனுள் பொருளுலகு ஓர் அளவுக்கும் எல்லைக்கும் அகப்பட்டது; சொல்லுலகம் கற்பனை வழிநின்று எல்லை கடந்து செல்வது; அதனையும் கடந்து நிற்பது பரம்பொருள். அதனால், “சொல் கடந்த பதிக்கும் பதி” என்று குறிக்கின்றார். சிற்பதி - ஞானத் தலைவன். உயிர்களாகிய எங்கள் தலைவன் என்றும் பொருள்பட “எம்பதி” என்பது, தமக்கும் பதிப் பொருளாகிய சிவனுக்கும் உள்ள தனித்தொடர்பும் தோன்ற நிற்கிறது; எனினும், தம்மையும் பிறரையும் என உயிர்களைப் பிரித்துரை ஆன்மநேயமே யுரிமைக்கு ஏதம் பயப்பது போலத் தோன்றுதலால், அதனை விலக்கி, எல்லாவுயிர்களையும் தழுவிக் கோடற்கு “நம் பசுபதி” என முடிக்கின்றார்.

     இதனால் பதிப் பொருளாகிய சிவபெருமானது பதியாந் தன்மையைப் பௌராணிக தத்துவச் சூழ்நிலையில் வைத்து விளக்குவது கருத்ததாதல் அறிக.

     (84)