85

85. இங்ஙனம் தங்கட்கும் பிறர்க்கும் சிவத்துக்கும் உள்ள தொடர் புணர்ந்து, அதனால் பிறர் அனைவரையும் தம்மோடு ஒப்பக்கருதி அன்பு செய்து இன்புறும் தொண்டர் தமது வாழ்வில் வந்து தாக்கும் துன்பங்களையும் நன்கு சிந்திக்கின்றார்கள். அவரவர் அடையும் துன்ப இன்பங்கட்கு அவரவர் செய்யும் வினைகளே காரணம். ஆணும் பெண்ணுமாகிய மக்கள் உலகியல் வாழ்வில் நினைப்பனவும் பேசுவனவும் செய்வனவும் ஆகிய அனைத்தும் வினைகளாகும். இவற்றைச் செய்யாத மக்களே இல்லையாதலின், வினைசெய்வது மக்கள் இயற்கையென்றும், வினைப் பயனை நுகர்வது அவர்கட்கு உரிமையும் கடமையுமாம் என்றும் தொண்டர் அறிந்திருக்கின்றனர். வினையும் வினைப் பயனும் அறிவில் பொருளாதலின், அவை தாமே செய்தவனை அடைவதில்லை; வினை செய்தவனை அவை அடையுமாறு கூட்டி வினைப் பயனை நுகர்விப்பவன் இறைவன் என்றும் சிவத்தொண்டர் செம்மையாக அறிந்துள்ளனர். வினைகள் தனப்பட்ட படைப்புக்களல்ல; மக்களால் செய்யப் படுவனவாதலால், அவற்றை நுகரவும் மாற்றவும் கூடிய ஆற்றல் மக்கட்குண்டு; மக்களால் செய்யப்படுவனவாகிய வினைகள் இறைவனாலும் விலக்கப்படாத வன்மையுடையவை; அவற்றை வெல்லலாகாது என நினைப்பதும் பேசுவதும் அறியாமை என்று சிவத்தொண்டர் கருதி வினைக்கு அஞ்சுவது இலர். வினை விளைவாக வந்து துன்பம் தாக்குகிறபோது, அதற்காக அஞ்சி அலமந்து நெஞ்சுடைந்து வருந்துவாரல்லர். அதனைப் போக்க நினைந்து தம்மைப் போலும் மக்களை அடைந்து உய்தி நாடுவதிலர்; இந்த நல்லியல்பு சிவத் தொண்டர்பால் சிறந்து விளங்கக் காண்கின்ற வடலூர் வள்ளல், இதனை இறைவன்பால் எடுத்தியம்பி முறையிடுகின்றார்.

2255.

     எனையடைந் தாழ்த்திய துன்பச்
          சுமையை இறக்கெனவே
     நினையடைந் தேன்அடி நாயேற்
          கருள நினைதிகண்டாய்
     வினையடைந் தேமன வீறுடைந்
          தேநின்று வேற்றவர்தம்
     மனையடைந் தேமனம் வாடல்உன்
          தொண்டர் மரபல்லவே.

உரை:

     இறைவனே, துன்பச் சுமையை இறக்குக என்று உன்னை அடைகின்றேன். கீழ்ப்பட்ட நாயனைய எனக்கு வேண்டும் அருளைப் புரியத் திருவுள்ளத்தே நினைத்தருள வேண்டுகிறேன். தாம் செய்தனவாகிய வினையின் நுகர்ச்சி எய்துகிறபோது, மனத்தின் உறுதியுடைந்து கெடாமல் ஏற்று நுகர்வது தொண்டர் மரபேயன்றி, தம்மின் வேறாயவர் வீட்டையடைந்து வினையை நினைந்து மனம் வாடுவது மரபன்று காண். எ.று.

     தன்னுடைய மனம், மொழி, மெய் என்று கருவிகளால் செய்யப்படத் தோன்றுவது அவரவர் செய்வினை; அதனால் செய்வினைப் பயன் அனைத்தும் செய்பவரை அடைவது இயல்பு. இறையருளால் வினைப்பயன் இன்பவடிவிலும் துன்பவடிவிலும் வினைமுதலை வந்தடைகிறது இன்பத்திலும் துன்பம் வேறாய் அறிவுக் கண்ணுக்குப் பெரிதாய் நன்கு புலனாவது பற்றித் துன்பப் பயனையே பலரும் வினைப்பயன் என்பது வழக்கம். வினைகள் இடையறவின்றிச் செய்யப்படுதலால், அவற்றின் பயனும் வெள்ளம்போல் ஒன்றன்மேல் ஒன்றாய்த் தொடர்ந்து வருகின்றன. இதனையே, “எனை அடைந்து ஆழ்த்திய துன்பச் சுமை” எனவுரைக்கின்றார். துன்பம் வந்து தாக்குகிறபோது அறிவு மருட்சியுறுவதும் செய்வதறியாது திணறுவதும், மன முதலிய கருவி சோர்வதும் எய்துவது பற்றி, “ஆழ்த்திய துன்பச் சுமை” என்று சொல்லி, அதனினின்று உய்தி பெறுவதற்கு வழியாவன அருளுக எனவேண்டுகின்றா ராதலால் “இதற்கு எனவே நினையடைந்தோம்” என்று உரைக்கின்றார். வினைப் பயனைச் செய்த வினை முதலாகிய உயிரை நுகரச் செய்பவன் இறைவனாகலின், அது செய்யும் நீ அருள்கூர்ந்து வினைப்பயனை மாற்றவும் செய்யலாம்; என்னை வந்தடையாவாறு போக்கலாமே என்று மொழிபவர், “அடி நாயேற்கருள நினைதி கண்டாய்” என வேண்டுகிறார்.

     தொண்டராகிய தமது இயல்பு இது என எடுத்துரைக்கின்றார். தொண்டராகிய எம்போல்வாரை வினைநுகர்ச்சி வந்து தாக்கும்போது, வினை வரலாறு அறிந்திருத்தலின், அதற்காக அஞ்சி மனம் உடைந்து கெடுவதில்லை என்பதுதோன்ற “வினையடைந்தே மன வீறுடைந்தே” வருந்துவது செய்யார் என எடுத்துரைக்கின்றார். தொண்டுள்ளம் கொண்ட தொண்டரல்லாத பிறரே அறிவறியாமையால் அயலவரை அடைந்து துன்பத்துக்குத் துணைசெய்ய வேண்டுவர்; தொண்டர் மரபு அதுவன்று என்பதற்காக, “வேற்றவர் தம் மனையடைந்தே மனம் வாடல் உன் தொண்டர் மரபல்ல” என மொழிகின்றார்.

     இதனால் சிவத்தொண்டர் தத்தம் வினைப்பயனை நுகர்ந்து கழிப்பதும், இறைவனை நினைந்து பரவிக் குறைத்துக் கோடலும் செய்வது மரபேயன்றி ஏனைப் பிறராகிய மக்களை அடைந்து அவரது மாட்டாமை நினைந்து மனம் வாடி வருந்துவது மரபன்று என்பது பயனால் காண்க.

     (85)