86
86. நாட்டில் மக்கள் இனப்பெருக்கத்துக்கு
மிகுதியாகப் பொருட் பெருக்கமும், நாளும் புதிய புதிய அறிவியல் முயற்சிகளால் தோன்றி வரும்
வாழ்க்கை வசதிகளால் உண்டாகும் தேவைக்கேற்ற செல்வப் பெருக்கமும் உண்டானால் தான் மக்கள்
மனத்தே ஓரளவு அமைதி நிலவும். உறுப்புக்குறையால் உழைக்கும் திறமின்றியிருப்போரையும் உடல்வளம்
உணர்வு வளங்களின் குறைபாட்டால் மெலிவோரையும் கண்டு, அவர்கட்கு வேண்டுவன உதவி
வாழ்வளிக்கும் மனப்பான்மை மக்களிடையே மலர்ந்து, இன்பம் செய்யும் செல்வர்களின் செல்வம்
கண்டு, அதற்கேதுவாகிய அவரது உழைப்பை வியந்து பாராட்டும் மேதக்க பண்பாடும் நாட்டில் தோன்றி
நாட்டை நலக்குறைவில்லாத நாடாகத் திகழ்விக்கும்; மக்கட் சமுதாயம் ஞானமும் செல்வமும் நயப்பாடும்
சிறந்து மேன்மை கொண்டு மிளிரும். அந்நிலையில் மக்களில் ஒவ்வொருவர்க்கும் உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்யும் உள்ளமும், வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்யும் நினைவும் நிலவி,
மண்ணக வாழ்வை மாண்புமிகச் செய்யும். இந்த நலங்கள் அமையாவிடில், வீணே உண்டு களித்திருப்பதை
நன்கு மதித்துப் பாராட்டும் தீமையும், உழவோரையும் உழைப்போரையும் அவர்களுடைய உழவையும் தொழிலையும்
இகழ்ந்து நோக்கும் கொடுமையும், மக்களுடைய பண்பும் செயலுமாக இருக்குமானால், நாடு பொருள்செய்யும்
திறம் இழந்து வறுமைக்கும் நோய்க்கும் அறியாமைக்கும் அடிமை யொழுக்கத்துக்கும் வற்றாத ஊற்றாய்
விடும். இதற்கு ஏற்ற எடுத்துக்காட்டாகும் நிலை சென்ற நூற்றாண்டிலேயே நம் நாட்டில் உருவாகி நிலைபேறு
கொண்டது. கற்றவர் தொகை சுருங்கியது; கல்லாதவர் தொகை பெருகிற்று; கயவரினம் பெருகியது;
நயவரினம் அருகியது. உழுதொழிலும், பொருள்செய்யும் பிறதொழிலும் சிறப்பிழந்து மதிப்பிழந்து
பிறர்க்கு அடிமையாய் அஞ்சி வாழும் கீழ்மை நிலையை உண்டாக்கின. இந் நிலைமையைப் பாத்திகட்டி
வளர்ப்பதுபோல
உழவிலும் தொழிலிலும் உண்மை வாணிகத்திலும் மக்கள் உள்ளம் செல்லாதபடி, நம்பிக்கையுண்டாகாத
வகையில் போலி அறிவுரைகள் தோன்றி, வாழ்ந்தார் வாழ்வும், தாழ்ந்தார் தாழ்வும் தலையெழுத்தென
வுரைத்து, மக்களை மாக்கள் கூட்டமாக மயக்கி அழுத்தின. கல்வியும் செல்வமும் மேலோர்க்குரியன;
அறியாமையும் வறுமையும் கீழோர்க்கு அமைவன என்பார் கூட்டம் சமுதாயத்தின் மேனிலையில் மிதந்து
விளங்கிற்று. அவர்களின் கொடுமை கண்டு வயிறெரிந்த பாரதியார், எவரையும் வாழ்த்துரைத்து மகிழ்விக்கும்
தமது வாயால், வீணில் உண்டு களித்திருக்கும் கூட்டம் என்றும், அவரை நிந்திப்பது அறம் என்றும்
பாடினார்; அவரை வறுமைக்குழியில் வீழ்த்தி வாடி வருந்திச் சாகச் செய்தது, அறியாமையும்
அடிமையுணர்வும் அணியாகக் கொண்டொழுகிய சமுதாயம், அடக்கி அடிமையாக்கிய அயலார் வாழ்வுக்கு
அரண் செய்யும் அரும்பணி புரிந்து அவரது அடிவருடி வாழ்வது மேன்மை; அல்லும் பகலும் மெய்வருந்த
உழைத்து உழவும் தொழிலும் செய்வது மதிப்பில்லாத கீழ்மை என்று நாட்டவர் நினைக்கும் அளவுக்கு
“வீணில் உண்டு களித்திருப்போர்” மக்கள் மனத்தை மாற்றிவிட்டனர். அதனால், உழவையும் உழைப்பையும்
கைவிட்டு இரந்துண்டு வாழ்வது நின்று, செல்வர் திருமனையடைந்து அவரது திருவடியைப் புகழ்ந்து அவர்
வீசியெறியும் சிறுபொருள் பெற்று வாழ்வது சிறப்பு என்று கருதும் கருத்து மக்களிடையே ஊறிவிட்டது.
செல்வரைக் காணின், தமக்கும் அவர்க்கும் ஒரு தொடர்பும் இல்லை யாயினும் அவர்முன் தாழ்ந்து
வாய்புதைத்துக் கைகட்டி நிற்பது இயற்கையாயிற்று. இவ்வாற்றால் செல்வர் மனைகளில் நெய்க்குடத்தை
மொய்க்கும் எறும்புபோலக் கற்றவர் கல்லாதவர் என்ற வேறுபாடின்றிப் பலரும் திரிவது நாட்டின்
பண்பென்னுமாறு தோன்றுவதாயிற்று. இத்தோற்றம் வடலூர் வள்ளலின் உள்ளத்தைப் புண்படுத்திற்று.
செல்வரை ஒருபாலும், அவர் சேவடி காணச் செல்பவரை ஒருபாலும் நிறுத்தி நோக்குகின்றார். செல்வரிடம்
சினமும் காமமும் சிறந்து விளங்கின. காமம் என்பது பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை என்ற மூன்றையும்
குறிப்பது. பொருட் குறைவும் வறுமையுமே சமுதாயத்தில் ஆட்சி நடத்தினமையால் செல்வரிடத்தேயன்றி
அவரது பொருள்வேண்டிச் செல்பவரிடத்தும் சினமும் காமமும் சேர்ந்து நின்றன. செல்வர்க்கேயன்றி
எல்லார்க்கும் எல்லாம் தரும் இறைவன் அருள்பெறும் சிவநினைவு மறைந்தது. சிவ நினைவு உழவுக்கும்
தொழிலுக்கும் இன்றியமையாத அறிவொளி நல்கும் நலமுடையதெனப் பன்னூறு ஆண்டுகட்கு முன்னே அருளாளர்
உரைத்த அருளுரை மறக்கப்பட்டொழிந்தது. பொருளுக்கும் பொருளியல் வாழ்வுக்கும் சிவனருளேதுணை என்று
எண்ணி, “ஆடவல்லான்” மரக்கால், “வயிரத்தூண்” வாய்க்கால், “ஞானநாயகப் பேரேரி”, “பெண்ணொருபாகம்”
புன்செய் என்றெல்லாம் பெயரிட்டு, உரிமையொடு நிலவிய வாழ்வு மறைந்ததையும் கண்ட வடலூர்
வள்ளல், இத் தீங்கெல்லாம் ஒழியவேண்டுமெனச் சிவன்பால் முறையிடுகின்றார்.
2256. வனம்போய் வருவது போலேவன்
செல்வர் மனையிடத்தே
தினம்போய் வருமிச் சிறியேன்
சிறுமைச் செயலதுபோய்ச்
சினம்போய்க் கொடும்பகைக் காமமும்
போய்நின் திறநிகழ்த்தா
இனம்போய்க் கொடிய மனம்போய்
இருப்பதென் றென்னரசே.
உரை: எனக்கு அரசே, வன்மனச் செல்வர் மனைசென்று திரியும் சிறியேனுடைய சிறுமைச் செயல் கெடுமாறு, கொடும் பகையாகிய சினமும் காமமும் நின் திருவடி நினையார் இனமும் கொடிய மனமும் இன்றி இருப்பது எந்நாளோ? எ.று.
மரக்கண்போலக் கண்ணோட்டமில்லாத செல்வரை “வன்செல்வர்” எனக் கூறுகின்றாராதலால், அவர் மனைகளை “வன”ம் எனக் குறிக்கின்றார். வன் கண்ணராயினும் அவர்பாலுள்ள செல்வம் கருதி நாடோறும் சென்று வருவது கீழ்மக்கள் செயலாவது கண்டு, செல்வர் மனையிடத்தே தினம் போய்வரும் சிறுமையுடையேன்; என் செயலும் பெருமையுடையதன்று என்றற்குச் “சிறியேன் சிறுமைச் செயல்” என இழித்துரைக்கின்றார். உழைப்பில் உவப்பின்றி மானமின்றி இரப்பது ஒருவர்க்குச் சிறுமை யுண்டுபண்ணுவது பற்றிச் “சிறுமைச் செயல்” எனல் வேண்டிற்று. உழைத்துப் பொருள் பெறுவதில் உள்ள இன்பமும் பெருமையும் இரப்பதில் இல்லையாதலால் அச்செயல் மனத்தில் இடம் பெறலாகாது என்றற்குச் “செயலது போய்” என வுரைக்கின்றார். இரந்தது பெறாத போது இரப்போன் உள்ளம் செல்லாச் சினமுற்று வருந்தும்; களவும் கொலையும் புரிதற்கேற்ற தீய எண்ணத்தையும் தோற்றுவிக்கும். அது செல்வர்க்கேயன்றி மக்களினத்துக்கே பகையாய்க் கேடுவிளைவிப்பது பற்றிக் “கொடும் பகைச் சினம்” என்றும், அது ஒழிதல் வேண்டும் என்றற்குக் கொடும் பகைச் சினம் போய் எனவும் உரைக்கின்றார். கொடும்பகை என்பது சினத்துக்கும் கூட்டப்படுகிறது. அணியிலக்கணம் இதனை நடுநிலை விளக்கு எனக் குறிக்கிறது. ஆசைவகை அனைத்தும் காமம் என்ற சொல்லுக்குள் அடங்கும். பெண்ணாசை ஏனை ஆசை வகை அனைத்துக்கும் முதற் காரணமாதல் பற்றி, பெண்ணாசையைக் காமம் எனப் பொதுவாக உலகம் வழங்குகிறது. பதவியாசை பற்றியே வேள்விகளைப் பண்டை நாளில் வேதியரும் வேந்தரும் செய்தமையால் அவற்றைக் காமம் என்றனர். வேள்வியை முன்னின்று நடத்துவோர்க்கு வேந்தரும் செல்வரும் நிலம் தந்து “காமக் காணி” என்ற சிறப்பும் தந்தார்கள். சினமும் காமமும் பெருகியவழி மனத்தில் கடவுட்கொள்கை இடம்பெறாது. அத்தகையோர் கூட்டத்தை “இறைவன் திறம் நிகழ்த்தா இனம்” எனவுரைக்கின்றார். அவர்கள் பிறர்க்கேயன்றித் தமக்கும் நலம் நினையாது கெடுவது கண்டு, அந்த இனமும் சமுதாயத்தில் இருத்தலாகாது என்பாராய், “நின் திறம் நிகழ்த்தா இனம் போய்” என இசைக்கின்றார். “ஈசனுக்கு அன்பில்லார் அடியவர்க் கன்பில்லார், எவ்வுயிர்க்கும் அன்பில்லார் தமக்கும் அன்பில்லார்” (12 : 2) என்று சிவஞான சித்தியார் தெரிவிக்கிறது. இங்ஙனம் அன்பில்லாது ஒழிதற்குக் காரணம் நேர்வழியிற் செல்லாமல் தீயவழியில் வளைந்து போகும் மனம்; அதனைக் “கொடிய மனம்” என்று குறிக்கின்றார். கொடுமை - வளைவு; கொடுமை நினையும் மனம் கெட்டாலன்றி வாழ்வில்லை. அம் மனம் எங்கும் பரந்து நிற்கக் கண்டு அஞ்சி இம் மனம் கெடும் நாள் எப்பொழுது வரும் என வினவலுற்றுக் “கொடிய மனம் போய் இருப்பது என்று” என முறையிடுகின்றார். மண்ணக அரசு மனத்தின் கொடுமை வாயாலும் மெய்யாலும் வினையாய் வெளிப்பட்டாலன்றி ஒன்றும் செய்யமாட்டாத குறையுடையது; மனத்து நிகழும் நினைவுகளை வினையாதல் கண்டு முறை செய்வது எல்லாம் வல்ல இறைவனது அருளரசு; அதனால் “என் அரசே” என இறைவன்பால் முறையிடுகின்றார்.
இதனால் சமுதாயத்தில் நிலவும் சிறு செயலும் சினமும் காமமும் சிற்றினமும் கொடுமை மனமும் ஒழிதல் வேண்டுமென முறையிடுவது இப் பாட்டின் கருத்தென அறிக. (86)
|