87
87. நாட்டில் வேலை செய்பவர்களில் நாட்கூலி செய்பவர், கிழமைக்கூலி செய்பவர், திங்கட் கூலி
செய்பவர் எனப் பலர் உண்டு. இவருள் திங்கட்கூலி பெறுபவர் கூலி, கூலி எனப்படுவதில்லை. வடமொழியில்
இவர்கள் உத்தியோகம் செய்பவர் எனப்படுவர். திங்கட் கூலிக்காரர் என்ற இவ்வகையில் நாட்டுக்குத்
தலைவர் ஆளுநர் எனப்படுவோர் முதல் தெருத்தூய்மை செய்பவர் ஈறாக அனைவரும் அடங்குவர். ஆலைகளிற்
சிலர் கிழமைக் கூலிகளாக உள்ளனர்: அவர்களைத் தொழிலாளர் என்பர். திங்கட்கூலிக்காரரும் தொழிலாளரே;
அவர்களில் அரசின்கீழ் உள்ள அலுவலகங்களில் பணிபுரிவோரும், அல்லாத தனியார் நிறுவனங்களில்
பணிபுரிவோரும் திங்கட்கூலி பெறும் தொழிலாளரே யாவர். இவர்களிடையே வேற்றுமை தெரிவித்தற்கு
அரசியல் அலுவலர், பணியாளர் என்றும், அல்லாரை அரசுத் தொழிலாளர், தனியார் தொழிலாளர் என்றும்
பிரித்து வழங்குகின்றனர். இவ்வாறே நாட்கூலி பெறுவோர் உண்டு; அவரைக் கூலிக்காரர் என்பது
பெருவழக்கு. சில நாடுகளில் எத்தகைய தொழில் புரிபவர்க்கும் மணிக்கு இவ்வளவு கூலி எனக்
கொடுக்கின்றனர். அவர்கட்கு அளிக்கப்படும் தொழில் எத்தகையதாயினும் அதுபற்றி ஒரு சிறிதும்
கவலையுறார். அண்ணன் சமையல் தொழில் செய்வான்; தம்பி நீதிமன்றத் தலைமைப் பணி செய்வான்;
இருவரிடையிலும் தொழில் வகை வேற்றுமையுண்டேயன்றி உணவு, உடை, இருக்கை, ஒழுகலாறு இவற்றில் வேற்றுமை
காணப்படுவதில்லை. தொழில்வகை வேற்றுமை காணாமையும் காட்டாமையும் அந்நாட்டவரைச் செல்வ
வாழ்வில் திளைக்கச் செய்துள்ளன. நம் நாட்டில் தொழில்செய்யாமல் பிறர் தொழில் வருவாயை
உறிஞ்சியுண்போர் கூட்டத்துக்கு உயர்வும், தொழில் செய்து உண்போர் கூட்டத்துக்குத் தாழ்வும்
கற்பித்து ஒழுகிய காரணத்தால், “வறியர்” என்றோர் இனமே தோன்றி நிலைபெறுகிறது.
இவ்வாறு செய்தொழிலில் உயர்வு தாழ்வு
கற்பித்துத் தொழில் வளமும் பொருள்வளமும் கெட்டு வறுமைக் குரிமை பூண்ட நம் நாட்டு வாழ்வு கூலியாட்களை
இருதிறமாகப் பிரித்து, அவருள் வயதிற் சிறியராயினாரைச் “சிற்றாள்” எனப் பிரித்துப்
பேசுகிறது; சில தொழிலாளருள் ஆண் பெண் வேறுபாடும் கண்டு கூலி கொடுப்பதும் செய்கிறது. செய் தொழிற்குரிய
அறிவில்லாதானையும் சிலர் “சிற்றா”ள் எனப் பிரித்து வேலை வாங்குகின்றார்கள்.
இங்ஙனம் பொருளியல் துறை சீர்குலைந்து
செம்மையிழந்து நின்ற காலத்து வாழ்ந்ததோடு அதனைத் தலைவிதி எனப் பொய்மை கூறிப்
பொழுதுபோக்கும் நெறியையும் கண்டிருந்தவர் வடலூர் வள்ளல். அவர் சிற்றாள்களைக் காண்கின்றார்.
அவருள் இளமையாற் சிறுமையுடையவரும் செய்வினைத் திறமும் வன்மையும் இல்லாமையாற்
சிறுமையுடையவரும் இருதிறத்திற் காணப்பட்டனர்; இன்றும் காணப்படுகின்றனர். முழுமை யுடையனாய்த்
திறமையும் வன்மையும் இல்லானை முற்றாள் என்றனர்; கற்றறிவில்லானை முழுமகன் என்பது போலச் செயற்றிறமில்லானை
முற்றாள் என்றனர்; அச்சொல் முட்டாள் என மருவி வழங்குகிறது. அவனும் சிற்றாளாதலால் அவனை வாழத்
தெரியாதவன் எனக் கற்ற மக்களும், பிழைக்க அறியாதவன் எனப் பொது மக்களும் கூறுவர்.
இவர்கள் பிழைப்பதற்கேற்ப - வாழ்தற்குரிய
- அறிவு நலமும் செயல் வன்மையும் எங்ஙனம் உண்டானது? அவர்களது அறிவுன்கண் தெளிவும் ஒளியும் எய்தும்
திறம் யாது? என வள்ளலார் எண்ணுகின்றார். ஒருவன் கல்லாதவனாயினும், அவன் சொல்லை அறிவுடையார்
கொள்ளாராயினும் அவனுக்கு ஒட்பம் ஓரொருகால் எய்துதல் உண்டெனத் திருவள்ளுவர் உரைக்கின்றார்.
உயிர் உணரும் தன்மைத்தாகலின், உயிருடையார் அனைவரும் உணர்ச்சி யுடையரென்பது உண்மை. ஆயினும்,
உணரும் திறம் அதனையுடையாரது வலிமையைச் சார்ந்தது என்பாராய்த் தொல் காப்பியர்,
“உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே” எனச் சொல்லுகின்றார். இவ்வகையில் வலியிலார்
உளராயின் அவர்க்குத் துணை புரிந்து வாழச் செய்வது யாவர்? “வாழச் செய்த நல்வினையல்லது, ஆழுங்காலைப்
புணை பிரிதில்லை” (புறம். 367) என்பர் ஒளவையார். செய்வோரின்றி வினையின்மையால், ஒருவர்
செய்த நல்வினை அவர் வாழ்தற்கு ஏதுவாமேயன்றி, வாழச் செய்தற்கு வினை முதலாகாது. வினைக்கு
உணர்வில்லை; அது உணர்வுடைய உயிரன்று. உணர்வு வன்மையில்லார்க்கு, ஓரளவு அதனைத் தந்து வாழச்
செய்வது உயிர்களின் வாழ் முதலாகிய பரம்பொருளாகும். அவ்வுணர்வுவன்மை, உலகில் வாழ்தற்கு வேண்டும்
உணர்வு நலம் அருளவல்லது அப் பெரும் பெயர்க் கடவுளாதலை அறிந்து, அதன்பால் முறையிடுவது நேரிது
எனக் கண்ட வள்ளலார், அச்சிற்றாள் இனத்தின்கண் தம்மை வைத்து வேண்டுகின்றார்.
2257. பெற்றா ளனையநின் குற்றேவல்
செய்து பிழைக்கறியாச்
சிற்றாள் பலரினும் சிற்றா
ளெனுமென் சிறுமைதவிர்த்
துற்றாள் கிலைஎனின் மற்றார்
துணைஎனக் குன்கமலப்
பொற்றாள் அருட்புகழ்க் கற்றாய்ந்து
பாடப் புரிந்தருளே.
உரை: இறைவனே, நின் குற்றேவல் செய்து பிழைக்க அறியாத சிற்றாட்களில் சிற்றாளாகிய என் சிறுமையைப் போக்கி, என்பால் உற்று ஆள்கின்றாய் இல்லை; அவ்வாறாயின் எனக்குத் துணை யாவர்? அருட்புகழ் கற்று ஆய்ந்து பாடற்கு அருள்புரிக. எ.று.
பெற்றாள் - ஈன்ற தாய், உயிர்களின் வாழ்வையே கருதிச் செய்வன செய்தொழுகுபவன் இறைவனாதலின், அவனைப் “பெற்றாளனையன்” என வள்ளலார் குறிக்கின்றார். அவனை “யாவர்க்கும் தந்தை தாய் தம்பிரான்” (திருவா. சதகம். 47) எனவும், “தாயிலாகிய இன்னருள் புரிந்த தலைவன்” (சதகம்48) எனவும், மணிவாசகர் உரைக்கின்றார். குற்றவேல் - சிறுபணி; சிற்றாட்கள் செய்வன பெரிதும் குற்றேவல்களாதலால், “குற்றேவல் செய்து பிழைக்கறியாச் சிற்றாள்” எனக் கூறுகின்றார். பிழைத்தல் என்பது பிழைசெய்தல் என்னும் பொருட்டாயினும், வழக்கில் வாழ்தல் என்ற பொருளில் வழங்குகிறது. பிழைக்க அறியா என்பது பிழைக்கறியா என வந்தது. சிற்றாள் - வாழ்தற்குரிய செய்வினைத் திறமையும் வன்மையும் இல்லாத ஆள் சிற்றாள். ஆள்வினைக்குரிய ஒருவன் அதற்குரிய அறிவும் ஆற்றலும் இலனானால், வெற்றாளாவன் எனக் கொள்க. சிறு பணிகளையே செய்தற்குரிய திறமும் வன்மையு முடையனாயின், அவன் சிற்றாளாவன்; நாளடைவில் அறிவும் ஆற்றலும் மிகுந்து பெரிய ஆளாகும் பண்புடையவரும் உண்டு; அவ்வறிவும் திறமையும் பெறாது மானமின்றி இரந்துண்டு வாழ்பவரும் உண்டு. அவர் பலரும் அடங்கவே, “சிற்றாள் பலர்” என்றும், பின்னோராய் இரந்துண்டு திரியும் கீழ் மக்களைக் கருத்திற் கொண்டு தம்மை, “பிழைக்கறியாச் சிற்றாள் பலரினும் சிற்றாள்” எனவும் உலகவர் பொருட்டுத் தம்மை இழித்துப் பேசுகின்றார். குற்றேவல் செய்தலும் வாழ்தற்கு வழியாம் என்றற்குக் “குற்றேவல் செய்து பிழைக்கறியாச் சிற்றாள்” எனத் தெரிவிக்கின்றார்: செய்வினை யறிவும் திறமையும் நிறைந்து மானவுணர்வு குன்றாது எப்பணியும் செய்வது ஆள்வினை; இந்த உரிய ஆள்வினைச் சிறப்பு அறிவும் திறமையும் இல்லாமையால் சிறுமை எய்துதலின், “சிறுமை தவிர்த்து ஆளுதல் வேண்டும்” என வேண்டுகின்றார். வினை செய்யுமிடத்து அறியாமை திறமின்மை முதலிய குறைகள் தோன்றி இடர்ப்படுத்துங்கால் நீக்கித் தெளிவும் ஒளியும் நல்க வேண்டுதலால் “சிறுமை தவிர்த்து” என்பதோடு, “உற்று ஆளுக” என முறையீடு செய்கின்றார். இடமும் காலமும் அறிந்து உற்று ஆளுதல் மக்களினத்தவர்க்கு இயலாத ஒன்றாகலின், “உற்று ஆள்கிலை எனின் மற்று ஆர் துணை” என உரைக்கின்றார். இவ்வருளைப் பெறுதற்குத் தாம் செய்யவேண்டுவது இறைவன் திருவடிப் புகழைப் பாடுவதல்லது பிறிதில்லை என்பாராய், “எனக்கு உன் கமலப் பொற்றாள் அருட்புகழ்க் கற்றாய்ந்து பாடப் புரிந்தருள்” என வள்ளலார் வேண்டுகின்றார். பொற்றாமரை போல்வது திருவடி என்றற்குக் “கமலப் பொற்றாள்” என்கின்றார். புகழ் பாடுவோர்க்கு உள்ளது கூறலோடு நில்லாது, அதனை உயர்த்திப் புனைந்து பாடற்கு மனம் செல்வது இயல்பு. கலைமகளின் மெய்ந்நிறம் பொன்மையும் வெண்மையும் கலந்ததெனக் கண்ட கம்பர், “அருக்கோதயத்தினும் சந்திரோதயம் ஒத்து அழகெறிக்கும் திருக்கோல நாயகி” எனப் புனைந்துரைப்பது காணலாம். இவ்வாறு வருவன பலவற்றையும் நன்கு தேர்ந்து பொருந்துவனவற்றை ஆய்ந்து பாடவேண்டும் என வற்புறுத்தற்கு “அருட்புகழ் கற்று ஆய்ந்து பாடப் புரிந்தருள்” எனப் பரவுகின்றார்.
இதனால், தன்னைச் சிற்றாள் எனத் தெரிவித்து அச் சிறுமை நீங்க அறிவும் திறமையும் உற்றவிடத்து உதவியருள்க என வடலூர் வள்ளல் இறைவனை வேண்டுவது காணலாம். (87)
|