88
88. உலக
வாழ்வில் நாணமாகிய நலம் இழந்து கெடுபவர்களை நோக்குகின்றார் நம் வடலூர் வள்ளல். அவர்கள்
அந்நிலையராவதற்குக் காரணம் யாதாகலாம் என எண்ணுகின்றார். கொலைக்குற்றம் செய்பவன் பிறர்
காணப்படின் நாணித் தலைகவிழ்கிறான்; அவனைக் காண்பவர் அனைவரும் வெறுத்துப் பழிக்கின்றார்கள்.
பிறர் பொருளைக் களவு செய்பவன் அது வெளிப்பட்டவிடத்து நாணிக் கோணுகிறான். தன் காதலனுடைய
மகன் தெருவில் விளையாடக் கண்ட பரத்தை, மனையவர் அறியாத நிலையில் அவனை எடுத்து மார்பிலணைத்து
முத்தமிட, அக்காலை மகனைப் பெற்ற தாய் கண்டனளாகப் பரத்தை நாணத்தால் முகம் விளர்த்துத்
தலைகுனிந்தாள். அப்போது, அவள் நிலையைக் கூற வந்த தாய், “களவுடம்படுநரின் கவிழ்ந்து நிலம்
கிளையா, நாணி நின்றோள் நிலைகண்டு யானும் பேணினென் அல்லனோ” (அகம். 16) என்பதனால்,
களவுநெறி பெண்மனத்தையும் நாணத்தால் வருத்துவது காணலாம். கட்குடியும் நாணிழந்து வருந்தச் செய்கிறது.
“நாண் என்னும் நல்லாள் புறம் கொடுக்கும் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத்தார்க்கு” என்று
பேசுவர் திருவள்ளுவர். காமவயப்பட்டார் பெண்வழிச்சென்றும் பிறர்மனை விழைந்தும் பரத்தையரைக்
கூடியும் நாணிழந்து துயருறுகின்றனர். மனைவியிடத்து மிக்க காமத்தால் அவள் காட்டும் வழிச் செல்பவர்
உலகிற் பலர்; ஆயினும், அது ஆடவர்கட்கு இயல்பாகாது என்று அறிவுறுத்துகின்ற திருவள்ளுவர்
“இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை” என எடுத்துரைக்கின்றார். இந்த இயல்பின்மை ஆண்மைக்கு வேலியாகிய
நாணத்தை அழிந்துவிடும்; நாணமில்லாத ஆண்மகனை நோக்க நாணமேயுருவாகிய பெண்மகளே பெருமைக்குரியவளாகிறாள்.
அவனால் ஆணுலகமே நாணத்தால் வருத்தம் உறும், “பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக
நாணுத்தரும்” என்று திருக்குறள் எடுத்துரைக்கிறது. பிறர்மனை விழைபவர் கொலைஞராகவும் கொலைக்கு
இரையாகுபவராகவும் மாறுவதை நாளும் காண்கின்றோம். திருக்குறளும் அவர்களை “விளிந்தாரின் வேறல்லர்”
என்றே கூறுகிறது. செல்வ வலியாலும் பிறவலிவகையாலும் பிறன் மனைவியை ஈர்த்துக்கொண்டவன் பலராலும்
பழிக்கப்படுகின்றான்; ஈர்க்கப்பட்டவளும் வாழ்விழந்து வருந்துகிறாள். பரத்தையரைக் கூடியவர்
கோவலன்போலக் குலம் தரும் வான் பொருட்குன்றம் தொலைத்து, இலம்பாடுற்று ஏதம் எய்துகின்றனர்;
வையாவிக் கோப்பெரும் பேகன்போல, “எம் போல் ஒருத்தி நலம் நயந்து என்றும் வரூஉம் என்ப
வயங்குபுகழ்ப் பேகன் ஒல்லென ஒலிக்கும் தேரொடு, முல்லை வேலி நல்லூரானே” என மனையவள் மனம்
கசந்து ஏசும் நிலையையும் அதுகண்டு சான்றோர் வருந்தும் தாழ் நிலையையும் அடைகின்றார்கள். இறுதியாகப்
பொய் கூறுவதாகிய குற்றம் நாணமாகிய நல்லியல்பைச் சிதைக்கும். உள்ளீடில்லாத பொருள்
காற்றில் பரந்து வெளிப்படுவதுபோல, உள்ளொன்றும் இல்லாத பொய்ச்சொல்லும் வெளிப் பட்டுச்
சொல்பவனை நாணித் தலைகவிழச் செய்கிறது.
இங்கே கூறிய கொலை களவுகள் காமம்
பொய் என்ற குற்றங்களின் வேறாகச் செய்வினையைக் குறைபடச் செய்தலும், அதனால் வறுமை எய்தி
உண்ண உணவுக்கும் உடுக்க உடைக்கும் பிறர்மனை சென்று இரத்தலும் நாணமாகிய நல்லியல்பைச் சீர்குலைக்கின்றன.
கொலை முதலிய பெருங்குற்றமின்றி அறிவுக் குறையாலும் செய்வினைக் குறை பாட்டாலும் குற்றம் புரிந்து
வறுமைவாய் வீழ்ந்து நாணமிழந்து பிறரிடம் இரந்துண்பது வடலூர் வள்ளலின் அருள் உள்ளத்தை வாட்டுகிறது.
பிறர் மனையின் முற்றத்தே நின்று நாணத்தால் எண்சாண் உடம்பும் முக்காற் சாணாய்ச் சுருங்கி
இரந்துண்ணாமையே பெருஞ்செல்வம் என்று பொருள்பட, “என்றும் பிறன் கடைச் செலாஅச் செல்வம்” (அகம்.
155) என்று பெருங்கடுங்கோ பேசுவது, ஓதாதுணரும் ஒள்ளியராகிய வள்ளலார் மனத்தில் காட்சி
தருகிறது. தனக்காகவன்றி நீர் வேட்கை மிக்கு வருந்தும் ஒரு பசுவின் பொருட்டு ஒருவர் மனையடைந்து
நீர் தருமாறு இரப்பதும் நல்லோர்க்கு நாணம் பயந்து, அவரது நாவிற்கு இழிவு தருவதாம் எனத் திருவள்ளுவர்
செப்புவது ஒருபால் வள்ளலார் மனத்தை வருத்துகிறது. இரத்தற்கு நாணாமல் இளிவுதருவது என அஞ்சாமல்
தெருத்தோறும் திரியும் கூட்டத்தையே மனக் கண்ணிற் கண்டு மாழ்குகின்றார். இரந்தூண் வாழ்க்கை
யுடையனன்றோ சிவபெருமான் என்பார்க்கு “மனமுலாம் அடியார்க் கருள் புரிகின்ற வகையலால் பலிதிரிந்து
உண்பிலான்” என ஞானசம்பந்தப் பெருமான் விளக்கி யருளுவதை நன்குணர்ந்தவராதலால், வள்ளற்
பெருமான் இறைவனை நோக்குகின்றார். இரந்தூண் வாழ்க்கையரை அது மேற்கொள்ளாவாறு தடுத்து நிறுத்தும்
நாண்வேலி கெட்டமையே அச்செயலுக்குக் காரணம்; அது கெடாவாறு அருள் புரிந்து காத்தல் வேண்டுமெனச்
சிவபரம் பொருளின்பால் முறையிடுகின்றார். அவனது அருளாணையன்றி நமக்குப் புகல் வேறில்லை.
2258. அந்நாணை யாதுநஞ் சேற்றயன்
மால்மனை யாதியர்தம்
பொன்னாணைக் காத்த அருட்கட
லேபிறர் புன்மனைபோய்
இந்நாணை யாவகை என்னாணைக்
காத்தருள் ஏழைக்குநின்
தன்னாணை ஐயநின் தாளாணை
வேறு சரணில்லையே
உரை: நஞ்சையேற்று அயன்மால் முதலிய தேவர்களின் மனைவிமாரின் மங்கல நாணைக் காத்த அருட்கடலே, பிறர் மனைக்குச் சென்று இரக்குமிடத்து நைந்து கெடும் நாணமாகிய நல்வேலி என்பாற் கெட்டழியாவாறு காத்தருள்க; காத்தற்கு வேண்டும் ஆற்றலில்லாத ஏழையாகிய எனக்கு நினது ஆணை, நின் திருவடி ஆணையாம்; அத் திருவடியல்லது எனக்குப் புகலிடம் வேறே இல்லை எ.று.
அந்நாள் நையாது நஞ்சேற்றது, கடல் கடைந்த நாளில் நஞ்செழக் கண்டு தேவர்கள் அஞ்சி மனம் நைந்து வருந்தக்கண்டு அருள் சிறந்து அந் நஞ்சினைச் சிவபிரான் ஏற்றுண்டது. “நஞ்சம் அஞ்சி ஆவ எந்தாய் என்று அவிதா” இட்டனர் தேவர்கள் என மணிவாசகர் உரைக்கின்றார். நஞ்சினை யேலாது மறுத்திருப்பின், அயன் மால் முதலிய தேவர்கள் இறந்து போயிருப்பர்; அவர் மனைவியர் மங்கலமிழந்து கைம்பெண்களாகிக் கையறவு பட்டிருப்பர். அந்தப் பேரின்னல் தோன்றாதவாறு நஞ்சுண்டு அருளிய அருட்சிறப்பை, “அந்நாள் நையாது நஞ்சு ஏற்று அயன்மால் ஆதியர் மனையவர் தம் பொன் நாணைக் காத்த அருட் கடலே” எனப் புகழ்கின்றார். இத் தொடரில் நையாது என்றற்கு நையாதவாறு என்று பொருள் கொள்ளவேண்டும். நஞ்சுண்டற்குச் சிவன் நைபவனல்லன் என அறிக. “விண்ணோர் அமுதுண்டும் சாவ, ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டு இருந்து அருள் செய்குவாய்” என இளங்கோவடிகள் இசைக்கின்றாரன்றோ? பொன்னாண் - பொற்கயிற்றாலான மங்கலத் தாலி. பிறர் மனை என்னாமல் 'பிறர் புன்மனை' என்றது, பிறருடைய புன்மை குறித்து வந்தது, புன்மை - பொருட்குறைவுடைமை; இரப்போர்க் கீயாத சிறுமையுமாகும். என் நாண் - என் உயிர்க்கு அரணமாகிய நாணம். “நாணால் உயிரைத் துறப்பவர்” என்பதனால், நாண் நீங்க உயிர் நீங்கும் என அறிக. நாணைக் காத்தற்கு வேண்டும் மனத் திட்பம் திருவருளால் அமைய வேண்டுதலால், தனது மாட்டாமை புலப்பட “ஏழை” எனக் கூறுகின்றார். பொருளில்லாமை வறுமை; அறிவாற்றல் இல்லாமை ஏழைமை. தாள் - திருவடி, திருவருள்.
இதனால் நாண் போனபோது இரத்தற்கு அஞ்சும் அச்சம் போய் மக்களை உயிர் வாழ்வு ஒன்றையே கருதும் விலங்கின மாக்குவதுபற்றி நாணமாகிய நற்பண்பு நிலைபெற அருளவேண்டி முறையிடுவது இப்பாட்டின் பயன் என அறிக. (88)
|