89
89. சிவத்தொண்டர்கட்கு என வேடம் புனையும் மரபு பன்னூறு ஆண்டுகட்கு முன்னே தோன்றியது.
புத்தரும் சமணரும் பாசுபதரும் காபாலிகளும் என்று சமயத் தொண்டர்கள் தோன்றி, மக்களிடையே
சமயத்தின்பால் பற்றும், சமயத் தொண்டர்கட்கு ஆதரவும் உண்டாகத் தக்க வகையில் நாடுமுழுதும்
பரந்து திரிந்தனர். அவர்கள் தத்தம் சமயத்துக்கேற்ப உடையும் நடையும் வேடமும் உடையராய் ஊர்தொறும்
காணப்பட்டனர். ஊரவரும் அவரவர்கட்கு ஊணும் உடையும் தந்து ஓம்பினர். சமயத்தொண்டர்கட்கு
உதவுவது சமய முதற்பொருட்குச் செய்யும் நல்வினை என்றே மக்கள் நயந்து போற்றினர். இவ்வகையில்
பல்லவர் சோழர் பாண்டியர் ஆட்சிக்காலங்களில் சமயத்தொண்டர்களும் துறவிகளும் நம் தமிழ்நாட்டில்
பெருகி வாழ்ந்தனர். சமயத் தொண்டர்களையும் அவர்களது உடையையும் அணிவகைகளையும் நாட்டுமக்கள்
நன்மதிப்பளித்து போற்றினர். சிவத்தொண்டர்கள் சடை முடிப்பதும், மேனியில் திருநீறு
பூசுவதும், கழுத்திலும் மார்பிலும் கையிலும் அக்குமணி மாலை அணிவதும் தம் வேடமும் சாதனமுமாகக்
கருதினர். இவற்றை விரும்பி அணிந்து விரத ஒழுக்கங்களை மேற்கொண்டொழுகும் சைவரைச் சிவனெனக்
கருதிப் போற்றுவது சைவத்தின் தலையாய ஒழுக்கம். சிவநெறிக்குரிய வேடம் பூண்டு சிவ நல்வினைகளைச்
செய்வது சைவர்க்குரிய அறமாகும். வேடம் பூண்டும் வேட நெறிநில்லாத தீயன செய்வது காணின், சிவஞானத்
திருத்தொண்டர் வருந்துவர். தீய செயலை மேற்கொண்டு தீநெறிப்பட்டோரைக் காணநேரினும்,
சிவாராதனம் பூண்டு சிவனையே நினைந்து வழிபடும் தொண்டர்கள் “இப் பாதகரைக் காண நேர்ந்ததே
என்று கையறவு படுவதும், அதற்காகச் சிவனை நினைந்து புலம்பி வருந்துவதும் இயல்பு. இப் பெருமக்கள்
மனம் புண்படுமாறு, அவமானச் செயல்களைப் புரிவோர் உலகில் வாழ்வது தீது என்று வடலூர் வள்ளல்
வருந்திக் கூறுகின்றார்.
2259. பவசாத னம்பெறும் பாதகர்
மேவும்இப் பாரிடைநல்
சிவசாத னத்தரை ஏன்படைத்
தாய்அத் திருவிலிகள்
அவசாத னங்களைக் கண்டிவ
ருள்ளம் அழுங்கஎன்றோ
கவசா தனமெனக் கைம்மா
னுரியைக் களித்தவனே.
உரை: பாதகர் மேவும் இப் பாருலகில் அவசாதனரைக் கண்டு மனம் அழுங்குமாறு நல்ல சிவசாதனத்தரைப் படைத்தனையோ, கூறுக. எ.று.
குளிர்மிக்க கயிலையில் உரையும் சிவன் யானைத்தோலைப் போர்வைக் கவசமாக அணிந்திருக்கின்ற குறிப்பை, “கவச ஆதனமெனக் கைம்மான் உரியைக் களித்தவனே” என வுரைக்கின்றார். கவசம் - காப்பு. ஆதனம் - இருக்கை. யானைத்தோல் போர்வையாகவும் இருக்கையாகவும் பயன்படுமாறு புலப்பட, “கவச ஆதனம்” என்கிறார். ஆசனம் - ஆதனம் எனவும் வரும். புலி, மான் முதலியவற்றின் தோலைத்தான் தவ வேடத்தாரும் வேட்டுவரும் விரும்புவர்; சிவன் யானையினது தோலையும் விரும்பி மேற்கொள்வது தோன்ற, 'கைமான் உரியைக் களித்தவனே' எனக் கூறுகின்றார். கைம்மான்-யானை. உரி, தோல்; உரிக்கப்படுவது பற்றி “உரி” எனப்பட்டது, உரியென்னும் முதனிலைத் தொழிற் பெயர் செயப்படு பொருருளுக்காய்த் தோலுக்காயிற்று எனவுணர்க.
பல சாதனம் - பிறவிக்கு ஏதுவாகிய கருவி கரணங்களும் செயல்களுமாகும். பெருமை தரும் கருவிகளாக அமைந்த மெய் வாய் மனம் என்ற கரணங்களையும், கண் காது முதலிய அறிகருவிகளையும், கை கால் முதலிய செயற் கருவிகளையும், உலகியல் நுகர்ச்சிக்கே உரிமை செய்து அதனைப் பெறுதற்கே முயன்று தொழில் செய்பவரைப் “பவசாதனத்தர்” என்று பகர்கின்றார். பவத்திற்குரிய நினைவு செயல்களில் கொலை களவு முதலிய பாதகச் செயல்களே முன்னிற்பனவாதலின், அவற்றை மேற்கொண்டு உழல்வோரைப் “பாதகர்” என மொழிகின்றார். கொலை முதலிய ஐந்தையும் பாதகம் என்பது வழக்காதலால், அவற்றைச் செய்பவரைப் “பாதகர்” என்கின்றார்.
உலகில் வாழும் மக்களில் பலர் பாதகத்துக்குரிய செயல்களில் ஈடுபட்டுப் பொய்யும் வழுவும் புரிந்து தீமை விளைவிப்பது கண்டு மனம் வருந்துகின்றாராதலால், அடிகளார் “பவசாதனம் பெறும் பதகர் மேவும் இப்பார்” என நொந்து கூறுகிறார். தன்னல மறுப்பும் பிறவுயிர் நலம் பேணும் சிவநெறித் திருத்தொண்டாகும். அதனைப் புலப்படுத்தும் குறிகளாக அமைந்தவை சிவசாதனம். அவற்றை மெய்யின்கண் பிறர் காண அணிவது சிவத்தொண்டருடையுள்ளமும் செயலும் உரையும் பிறவுயிர்கட்கு இன்பப் பணிபுரியும் இயல்பின என்பதை வெளிப்படுத்தற்கே யாகும். அப் பெருமக்கள் இப் பவசாதனத்தரைக் காணின் பரிபவப்பட்டுப் பெரிதும் வருந்துவது கண்டு இரக்கம் மிகுகின்றார் வடலூரடிகள். இறைவனையே நேர்முகப்படுத்தி, சிவனே, பவசாதனத்தரைக் கண்டு மனம்வருந்தித் துன்புறுகின்ற இம் மேலோரை, சிவசாதனம் பூண்ட செம்மையோரை ஏன் படைத்தாய் என வினாவுவார் போல, “இப் பாரிடை நல் சிவசாதனத்தரை ஏன் படைத்தாய்?” எனக் கேட்கின்றார். அதனை நினைந்து அடிகளாரே ஒரு விடை காண்கின்றார். சிவசாதனத்துச் செம்மையோர், சிவஞானத்தால் சிவபோகமே நினைந்து செம்மாந்திருப்பர்; அவர்கட்குப் பவம் நினைக்கும் சாதனத்தின் நேர்மையின்மையும், துன்பவினையின் நுகர்ச்சியும் அறிந்துகோடற்கு வாய்ப்பு இல்லை; கண்ட விடத்து சிவசாதனச் செல்வர்கள் மனம் கலங்கிச் செயலற்று இரக்கத்தால் பரிவு கூர்ந்து கண்ணீர் சொரிந்து கவல்வர்; அவர்கள் அந் நிலையை எய்துதல் வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டே, சிவநெறிச் செல்வர்களை இப் பாரில் பாதகர் சூழலில் இருந்துகொண்டு வாழச் செய்கின்றாய் என்பதற்காக, “அத் திருவிலிகள் அவசாதனங்களைக் கண்டு இவர் உள்ளம் அழுங்க” என அறிவிக்கின்றார். பவசாதனத்தால் மெய்ம்மை வாழ்வின் இன்பப் பயன்களை இழந்திருப்பதுபற்றி, அவர்களை, “அத் திருவிலிகள்” எனப் பழிக்கின்றார். துன்பம் விளைக்கும் சாதனங்கள் அவசாதனங்கள்; கொலைகளவு முதலியவற்றிற்குரிய கருவியும் கரணமும் அவசாதனமாகும். சிவசாதகர்கள் அவற்றைக் கண்ட மாத்திரத்தே மனம் பதறி வருந்துவராதலின், “அத் திருவிலிகளின் அவசாதனங்களைக் கண்டு இவருள்ளம் அழுங்க என்றோ” என்று வடலூர் அடிகள் வணங்கிய நடையில் எடுத்துரைக்கின்றார்.
பொல்லாதவர் வாழும் உலகில் நல்லவர் வாழ்வது பொல்லாதவரது பொல்லாங்கு கண்டு வருந்துதற்கென்றே என்ற அருட்கருத்து இப் பாட்டின் பயனாதல் காண்க. (89)
|