90
90. இதுகாறும் திருவைந்தெழுத்தைத் தனித்தனியாகச் சிறந்தெடுத் தோதாமல் பொதுநிலையில்
மொழிந்து வந்த வள்ளற்பெருமான் ‘சிவயநம’ என்னும் அவற்றை வெளிப்பட விளங்க உரைக்கின்றார்.
எழுத்தைந்தையும் பொதுப்படவுரைத்துப் பரவுதலும் பண்டையோர் முறையாகும்; நாவுக்கரசர், “மாற்றேன்
எழுத்தஞ்சும் என்றன் நாவில்” (தாண். ஆவடு.) எனவும், “ஆலைப்படு கரும்பின் சாறுபோல அண்ணிக்கும்
அஞ்செழுத்தின் நாமத்தான் காண்” (தாண். வீழி) எனவும், “அஞ்செழுத்தும் நினைவார்க்கு என்றும்
மருந்தவன் காண்” (தாண். ஏகம்) எனவும், “அஞ்செழுத்தும் வாய் நவில வல்லோர்க் கென்றும் சிறந்தானை”
(தாண். நாகேச்) எனவும் பலகாலும் எடுத்தோதிப் பரவுதலைக் காணலாம். சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தைச்
சிறந்தோதுங்கால் “சிவாய நம வென்னும் சிந்தைச் சுருதி” என்று நாவுக்கரசர் புகழ்ந்துரைக்கின்றார்.
அப் பெருமக்களின் அடியொற்றிவரும் வள்ளற்கோமான், தானும் சிவாய நம என்னும் அச்சுருதியை
ஓதுகின்றார். அதனை நெஞ்சால் நினைந்து வாயால் ஓதுவதே ஒரு தனி வாய்ப்பு; அஃது எல்லார்க்கும்
கிடைப்பதன்று; தேவ தேவர்கட்கும் ஆகாத ஒன்று என முதற்கண் அதன் சிறப்பை எடுத்துரைக்கின்றார்.
2260. நான்செய்த புண்ணிய மியாதோ
சிவாய நமஎனவே
ஊன்செய்த நாவைக்கொண் டோதப்பெற்
றேன்எனை ஒப்பவரார்
வான்செய்த நான்முகத் தோனும்
திருநெடு மாலுமற்றைத்
தேன்செய்த கற்பகத் தேவனும்
தேவருஞ் செய்யரிதே.
உரை: சிவாய நம எனும் திருவைந்தெழுத்தை, ஊனாலாகிய என் நாவால் ஓதும் வாய்ப்புடையேன்; இதற்கு யான் செய்த புண்ணியம் யாதாம்? எளியேனை இனி ஒப்பவர் யார்? திருமாலும் பிரமனும் இந்திரனும் அவ்வுலகத்துத் தேவர்கட்கும் இதனைச் செய்வது அரிதாகலான் எ.று.
சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தின்பால் தீராக் காதல் கொண்டு தமது உள்ளம் செழிப்பதுபற்றி “யான் செய்த புண்ணியம் யாதோ” என வியந்து மகிழ்ந்துரைக்கின்றார். திருவைந்தெழுத்தை ஓதும் நிலையை, “சிவாயநம எனவே ஓதப் பெற்றேன்” எனவும், தமது நாவின் உண்மையியல்பை, “ஊன் செய்த நாவைக்கொண்டு ஓதப் பெற்றேன்” எனவும் உரைக்கின்றார். ஓதுதற்குரிய வாய்ப்பு எளிதில் கிடைத்தல் இன்மைபற்றி, “ஓதப் பெற்றேன்” என்கின்றார். இதனால் தாம் எய்திய பெருமகிழ்ச்சியை நினைந்து, “எனை ஒப்பவரார்” எனப் பெருமிதம் எய்துகின்றார். தேவரும் தேவர்கட்குத் தேவரான பிரமவிட்டுணு இந்திரர் முதலிய தேவர்களும் எய்தற்கரியது இவ் வாய்ப்பு என்ற கருத்தினராதலால், அவர்களை நினைந்து அவர்கட்கு இதனை ஓதும் செயல் கைகூடுவதில்லை என்று உணர்ந்து கூறுகின்றார். வான் முதல் பாதலம் ஈறாகவுள்ள அனைத்துலகும் படைத்த பிரமன் என்றற்கு, “வான் செய்த நான் முகத்தோன்” என வுரைக்கின்றார். திருநெடுமால், திருமகள் கணவனும் நெடிதோங்கும் நீர்மையனுமாகிய மூர்த்தி. கற்பகம், இந்திரனுலகத்துச் சிறப்புடைய பூமாம்; நிறைந்த தேன் துளிக்கும் இயல்பினதாதலால் “தேன் செய்த கற்பகம்” எனச் சிறப்பிக்கின்றார். கற்பகச் சோலையை யுடையவனாதலால் இந்திரனை, “கற்பகத் தேவன்” எனக் குறிக்கின்றார். அவன் நிழலில்வாழ்பவர் தேவர். இவர் அனைவரும் வேண்டுவனவற்றை வேண்டியாங்கு உழைப்புச் சிறிதுமின்றி நுகர்பவர்; உழைப்பின்றி உணர்வுக்கு ஒளியும் தெளிவும் தருவது பிறிது யாதும் இல்லை; உழைப்பின்மையின் தேவர்கட்கு ஒளியும் தெளிவும் எய்துவது அரிதாகிறது; அதனால் சிவாயநம என்ற திருவைந்தெழுத்தைச் சிந்தித்து ஓதும் வாய்ப்பு இல்லையாகிறது. அதனால்தான், “நான் முகத்தோன் முதல் தேவனும் தேவரும் செய்யரிது” எனத் தெரிவிக்கின்றார்.
இதனால் சிவாய நம என்ற திருவைந்தெழுத்தை ஓதும் வாய்ப்பு பண்டைப் புண்ணியப் பயன்; தேவர்கட்கும் அது கிடைத்தலரிது என்பதாம். (90)
|