91
91. சிவபரம்பொருளின் திருவருளைப் பெறுவதில் அளவிறந்த ஆர்வம் உறுகின்றார் வடலூர் வள்ளல்.
திருவருள் பெறுவதாயின் ஒருவன் தன்னை விற்றாயினும் அது பெறற்குரிய தகவுடைத்து என அறிஞர் உரைக்கின்றனர்.
மணிவாசகப்பெருமான் தன்னைக் கைவிடாதருள் செய்க எனச் சிவனை வேண்டுபவர், “இருந்தென்னை ஆண்டுகொள்
விற்றுக் கொள், ஒற்றிவை” என உரைக்கின்றார். இதனை நினைக்கின்ற வள்ளற் பெருமான், திருவருட்காகத்
தன்னை விற்கவும் ஒருப்படுகின்றார். திருவள்ளுவர் முதலிய சான்றோர் ஒப்புரவு முதலிய நல்லறங்கட்காக
ஒருவன் தன்னை விற்றலும் தகவுடைத் தென்பதனால், இறைவன் திருவருளின் பொருட்டு வள்ளலார் தன்னை
விற்க விரும்புகின்றார். இறைவனே, நின் நல்லருளை நீ நல்குவதாயின் அதனைப் பெறர்க்குரிய தகுதிக்காக
என்னை விற்கவும் விரும்புகின்றேன். இத்துணை விருப்பம் என்பால் பெருகியிருத்தலைக் கண்டு நின்
சித்தம் இரங்குதல் வேண்டும் என முறையிடுகின்றார்.
2261. உற்றா யினுமறைக் கோர்வரி
யோய்எனை உற்றுப்பெற்ற
நற்றா யினும்இனி யானேநின்
நல்லருள் நல்கில்என்னை
விற்றா யினுங்கொள வேண்டுகின்
றேன்என் விருப்பறிந்தும்
சற்றா யினும் இரங் காதோநின்
சித்தம் தயாநிதியே.
உரை: வேதம் வல்லோர்க்கும் அறவரிய பெருமானே, என்னைக் கருவுற்றுப் பெற்ற தாயினும் இனிமையானவனே, தயையாகிய நிதி வடிவானவனே, நீ நின் நல்லருளை நல்குவதாயின், அதற்கு மாற்றாக என்னையே நீ விற்றுக்கொள்ள வேண்டுகிறேன். இதனால் நின் திருவருள்பால் எனக்குள்ள விருப்ப மிகுதி தெரிந்திருக்கும்; இது தெரிந்தும் நின் சித்தம் என்பால் இரங்காதோ; இரங்கி அருளுக. எ.று.
மறைகட்குரிய பொருள் சிவமாதலால் “உற்றாயினும்” என்றும், மறைவல்லுநர் சிவனது அருள்வழியல்லது வாழவழியில்லாச் சிறுமை யுடையவராகலின் அவரால் முழுதும் அறியமாட்டாமையின், “மறைக்கு ஓர்வரியோய்” என்றும் இயம்புகின்றார். “தாயினும் நல்ல சங்கரன்” என்று நாவுக்கரசரும், “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிவுடையன்” என மணிவாசகரும் அருளுதலின், “உற்றுப்பெற்ற நற்றாயினும் இனியான்” எனப் புகல்கின்றார். பெற்ற தாயை நற்றாய் என்பதும், வளர்ப்புத் தாயைச் செவிலித்தாய் என்பதும் நூல் வழக்கு. நின் நல்லருளினும் எனது உடல்பொருள் ஆவி அனைத்தும் கூட்டினும் ஒப்பாகாமை காண்கின்றேன்; ஒப்பதாயின் அவ்வருளைப் பெறுதற்காக என்னை விற்றுத் தர விரும்புகிறேன் என்பாராய், “என்னை விற்றாயினும் நல்லருளைக் கொள்ள வேண்டுகின்றேன்” என இசைக்கின்றார். தன்னை விற்றேனும் அருளைப் பெறவேண்டும் என்றோர் ஆர்வம் எழுமாயின், அது கண்டு இரக்கம் உறுவது நல்லறம் என்பது புலப்பட, “சற்றாயினும் இரங்காதோ நின் சித்தம்” என வுரைத்தனர். அருளைச் செல்வம் எனத் திருவள்ளுவர் முதலாயினார் கூறுவதுபற்றி வடலூராரும் அருட்செல்வனாகிய சிவனைத் தயாநிதி என மொழிகின்றார். வடமொழியிற் பழமையான நூல்கள் பத்திநெறி கொண்டவையல்ல; பத்தி நெறியின் பாங்கினை அறிந்த பின்பே அவை பரமனைத் “தயாநிதி” என வழங்கத் தலைப் பட்டன. வடமொழியாளர் 'சகுணோபாசனை' மேற்கொண்டு பத்தி பண்ணிய காலத்திற்குப் பின்பவந்தவராதலின் வடலூர் வள்ளல், அருட் செல்வத்தைத் தயாநிதி என்று கூறுகின்றார். செல்வம் பெற்றார் பெறும் இன்பமும் நலமும் அருள்பெற்றார் மிகப் பெறுவதுகண்டு திருவள்ளுவர் “அருட்செல்வம் செல்வத்துட் செல்வம்” எனச் சிறப்பித்தார். அதுவே பின்பு வடமொழியில் “தயாநிதி” என மொழிபெயர்க்கப்பட்டது.
இதனால் ஒருவன் தன்னை விற்றேனும் இறைவன் திருவருட் செல்வத்தைப் பெறற்பாலன் என்பது வற்புறுத்தப்பட்டமை அறியலாம். (91)
|