92

       92. ஈருடல் ஓருயிர் என்னுமாறு காதலால் ஒன்றிய ஆணும் பெண்ணுமாகிய இருவரிடையே, காலக்கழிவால் உடல் முதுமை எய்துமிடத்துக் காதலுறவின் திண்மை குறைகிறது. கணவற்கும் மனைவிக்கும் அன்புகுறைந்து கருத்துவேற்றுமையும் உண்டாகிறது. சிலர் அவ்வுறவு இடையறவுபட்டுப் பிரிந்தே விடுகின்றனர். ஆண் வேறொரு பெண்ணையும், பெண் வேறோர் ஆணையும் மணந்துகொள்வதை உலகிற் காண்கிறோம். இதனால், உயிரொன்றிய கேண்மையும் காலவோட்டத்தில் தன்மை திரியும் என்பது தெளிவாகிறது. அதனை எண்ணும்போது மக்களிடையே ஒருகாலத்து மாண்புமிக்கிருக்கும் அன்பும் அருளும் திரிந்து வேறுபடுவது காணப்படுகிறது. அன்பும் அருட்பண்பும் மாறுதல் தெளிவாதலால், சிலகாலங்களில் நாம் நினைந்து இறைவனை வழிபட்டு வேண்டியதற்கு மாறாகச் சில செயல்கள் நிகழ்ந்து விடுகின்றன; சிலர் இறக்கின்றனர்; சிலர் வேறுபட்டுப் பிரிந்து போகின்றனர். இவ்வாறு எய்தும் ஏமாற்றத்தால் மனம் உடைந்து, விரும்பி வழிபட்ட பரம் பொருளையே மருண்டு, அதற்கும் அருட்பண்பு போய்விட்டதோ, அன்பு மாறிவிட்டதோ எனச் சொல்லி வருந்துகிறோம். ‘கண் மூன்றுடையாய், உனக்கு கண்ணில்லையா? கருணையில்லையா? உன் கோயில் இடியாதா?’ என முனிந்து பேசுகிறோம். நம்மைப்போல வடலூர் வள்ளலும் மனம் குமைந்து பாண்டியன்பொருட்டுச் சொக்கநாதப் பெருமான் கான்மாறியாடிய செயலை நினைந்து, “இத்துணைக் கருணையுடைய உனக்கு என்பால் கருணை மாறலாகாது” என உரைக்கின்றார். மாறுவது பொருள்கட்கு இயல்புதானே எனின், மாறாமை தனக்கு இயல்பு என்று உரைத்து அருள் புரியுமாறு வேண்டுகிறார்.

2262.

     வான்மா றினுமொழி மாறாத
          மாறன் மனங்களிக்கக்
     கான்மாறி யாடிய கற்பக
          மேநின் கருணையென்மேல்
     தான்மா றினும்விட்டு நான்மாறி
          டேன்பெற்ற தாய்க்குமுலைப்
     பான்மாறி னும்பிள்ளை பான்மாறு
          மோஅதில் பல்லிடுமே.

உரை:

     மாறாத சொல்லினனாகிய பாண்டிய மன்னன் மனம் மாகிழுமாறு கால்மாறி ஆடிய கற்பகமே, நின் கருணை மாறினும் நான் மாறிடேன்; பெற்ற தாய்க்கு முலையிடந்துப் பால்மாறினும், பிள்ளை மறவாது அதன்கண் வாய்வைத்துக் கடித்துப் பார்க்குமன்றோ. எ.று.

     மாறன் - மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த பாண்டி வேந்தன். பாண்டியர் ஐவகைக் குடியினர்; அதனால் அவரைப் பஞ்சவர் என்றும் பிற்காலத்தார் உரைப்பர். ஐவகையோரும், செழியர், வழுதியர், மாறர், தென்னவர், கவிரியர் என வழங்குவர். பாண்டியர் என்ற பொதுப் பெயர், பண்டையோர் என்ற சொல்லடியாக வந்தது. இங்குக் காணப்படும் மாறனை இராசசேகரன் என்ற பரஞ்சோதி முனிவர் பெயரிட்டுரைக்கின்றார். உண்மை வரலாற்றில் இவ்வாறு பெயரிடும் முறை பாண்டியற்கில்லை; தலபுராணம் எழுதுவோர் இவ்வாறு புனைந்து எழுதுவது மரபு. கோயில் தானத்தார் என்ற கூட்டத்தார், பிற்காலத்தே உண்மை வரலாற்றை மறைக்கும் முயற்சி மேற்கொண்டு, தலங்களின் பெயர், இறைவன் இறைவி ஆகியோர் பெயர் முதலிய பெயர்களை வடமொழிப்படுத்தினர். அச் செயலால், கல்வெட்டுக்களிற் காணப்படும் அரசர், அரசியற் செல்வர், செல்வியர் முதலியோர் பெயரும் திருப்பணிகளும் மறைந் தொழிந்தன. இப்பாண்டியன் தானும் பரதம் ஆடற்குப் பயின்று, மெய்யில் தோன்றிய வலியை யுணர்ந்து அதுவே வலக்காலை ஊன்றி ஆடும் சிவனுக்கும் உண்டாம் என நினைந்து, காலை மாற்றி ஆடவேண்டும் என வேண்டினன்; சொக்கநாதப் பெருமானும் அவ்வாறே கால்மாறி இடக்காலையூன்றி ஆடி வேந்தனை மகிழ்வித்தார். அச் செய்தியைத்தான் வடலூர் வள்ளல், “மாறன் மனம் களிக்கக் கால்மாறி ஆடிய கற்பகமே” என்று குறிக்கின்றார். மாறன் பொருட்டு இறைவன் ஆடியதற்குக் காரணமாயிருந்தது இன்னது என்றற்கு “வான்மாறினும் மொழிமாறாத மாறன்” என உரைக்கின்றார். வானம் மழை பெய்வது தவறும்; பாண்டிவேந்தன் சொன்ன சொல்லை மாறான் என்பது வள்ளலார் கருத்து. கற்பகம் - இந்திரன் நாட்டில் உள்ள தெய்வமரம்; அதனடியிற் சென்று யாவர் யாது கேட்பினும் அவர்க்கு அதனை அது நல்கும் என்பது புராணச் செய்தி. அக் கற்பகம் போல் மாறன் வேண்டியதை மதுரைக் கடவுள் செய்தானாதலால் அவனை வள்ளார் “கால்மாறி ஆடிய கற்பகமே” எனக் குறித்துரைக்கின்றார். மாறாத தன் மனவியல்பைத் தெரிவித்தற்கு “நான் மாறிடேன்” என்ற வள்ளலார், தமது குற்றமில்லாத மனப்பான்மையை ஒரு குழவியின் இயல்பில் வைத்து விளக்கியருளுகிறார். பிள்ளை பெற்ற தாய்க்கு சில திங்கள் வரைதான் பால் சுரக்கும்; பின்னர் வற்றிவிடும்; ஆனால் குடித்துப் பயின்ற குழவி தாய்முலையில் வாய்வைத்துண்ண முயன்று, பால் இல்லாதவிடத்து முலைக்காம்பைக் கடிப்பதுண்டு என விளக்கலுற்றுப் “பெற்ற தாய்க்கு முலைப்பால் மாறினும் பிள்ளை பால் மாறுமோ அதில் பல்லிடுமே” என உரைக்கின்றார். பல்லிடுவது குற்றமாய்த் தாய்க்கு நோய் விளைப்பதறியாத குழவிபோல யானும் நின் புகழுக்கு மாசு தருவது போன்ற சில சொற்களைச் சொல்லினும், பொறை பூண்டு அருள்புரிதல் வேண்டும் என்பது புலப்பட “பல்லிடுமே” எனப் பகர்கின்றார்.

     இதனால் இறைவன் அருளிடத்துத் தமது மனம் மாறாத இயல்பினைப் புலப்படுத்துவது பயன் எனவுணர்க.

     (92)