93
93. மக்களினம் சமுதாயமாக வாழப் பிறந்ததேயன்றிக்
கொடிய விலங்குபோலத் தனித்து வாழ்தற்கன்று; நாடு வாழ்ந்தால் நமக்கு வாழ்வு; இன்றேல் இடுகாடோ
சுடுகாடோ நமக்கு இடம் என்பது ஊர் வழக்கு. “தான் வாழ ஏனோர் தனக்கு அடிமையாக” எனக் கருதுவது
விலங்கு வாழ்வு. இத்தகையோர் இருப்பதுகண்டே, பொருணூலறிஞர் ஒருவர், “மக்களினத்தில் கொடிய
விலங்குகள் தோன்றிவிட்டன; இனி மக்கட் சமுதாயம் வறுமைக்கும் நோய்க்கும் இரையாகி மடிவதன்றி
மண்ணுலகில் வாழ வழியில்லை” என்று வரைந்தார். வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருளுணர்வு வேறு;
விலங்குணர்வு வேறு. பொருளுணர்வு; பொருள் உண்மை காண்பதும், அதனைப் பெருக்குவதும், பெறுவதும், பெறாதாரைப்
பெறச்செய்வதுமாகிய செயல்களால் சிறப்பெய்தும். விலங்குணர்வு பொருளுண்மை கண்டவழி அதனைத் தானே
பெறக் கருதுவதும், பிறர் பெறாவாறு இடையூறுகள் இடையீடுகள் ஆகியவற்றைச் செய்வதுமாகிய செயல்களால்
இழிவுபயக்கும். பொருளுணர்வு அன்பின் அடிப்படையில் அமைவது; விலங்குணர்வு அன்பின்மையை அடிப்படையாகக்
கொண்டது. விலங்குணர்வு தன்னலமே நோக்கியது; பொருளுணர்வு பிறர் நலத்தை முன்வைத்துப் பின்னே
தன்னலத்தை நோக்கியது. தன்னலத்தைப் பின்வைத்தது பிறர் நலம் பெறப் பேணி வாழ்வதற்காக;
அதுபற்றியே சங்க காலச் சான்றோர் பொருளுடைய செல்வரை வாழ்த்தும்போது “நீ வாழியர் இவ்வுலகத்தோர்க்கே”
என வாழ்த்தினர். இடைக்காலத்தே பொருளுணர்வுடையார்பால் விலங்குணர்வு முளைத்தது; அதனால்
பொருள் செய்யும் சூழலில் முதலாளி தொழிலாளி என்ற இனப் பாகுபாடு தோன்றி இரு திறத்தாரையும்
பிணித்து நின்ற அன்புக் கயிற்றை அறுத்துப் பொருந்தா நிலைமையைத் தோற்றுவித்தது; சில நாடுகளில்
பொருந்தா நிலைமை பகைமையாய் உருக்கொண்டது. சில நாடுகளில் விலங்குணர்வுடைய பொருளாளர் அரச
வேலியைத் தமக்கு வேலியாகக் கொண்டனர்; அதனால் அரசர் இனமே மறைந்தொழிய வேண்டியதாயிற்று;
அரசராட்சி நிலப்பரப்பினின்றும் அகலுவதாயிற்று. அதனிடத்தே மக்களாட்சி தோன்றி மலரத்
தலைப்பட்டது. மக்களாட்சி நிலவும் நாடுகளிலும், விலங்குணர்வு ஆட்சியைக் கைப்பற்றியதால் சில
நாடுகள் அரசாட்சியுமின்றி மக்களாட்சியுமின்றி ஆள்வலியுடையோர் ஆட்சியில் வாழ்க்கை நடத்துகின்றன.
இவ்வாற்றால் அன்பின் வழிவந்த பொருள் வாழ்வு சமுதாயத்துக்கு ஆக்கமும் அரணுமாம்; அஃது இல்லாத
பொருள் வாழ்வு அரசவேலியை அழித்து மக்களாட்சியை மடிவித்து அரக்கராட்சி வாய்ப்பட்டு அறைபட்டு
அல்லலுறும் என்பதை எண்ணியே, திருவள்ளுவர் “அருளொடும்
அன்பொடும் வாராப் பொருளாக்கம், புல்லார் புரளவிடல்” என்று அறிவுறுத்தினார். பொருளை
விளைப்போரும் அவர்களையும் அவற்றையும் ஆள்வோருமாகிய இருதிறத்தாரும் வாழ்தல் வேண்டி
அருளையும் அன்பையும் இத் திருக்குறள் ஒருங்குசேர்த்துக் கூறுகிறது. இவற்றை யெல்லாம் எண்ணியே
வடலூர் வள்ளலார் சமுதாய உறுப்பினராகிய மக்கள் அன்புடைய மனத்தினராதல் வேண்டும்; அன்பாற்
பிணிப்புண்ட சமுதாயம் நல்லரசும் நல்லாட்சியும் நல்வாழ்வும் பெற்று இன்பமெய்தும். என் மனத்தே
அன்பில்லை; அதனால் யான் பொருளுணர்வும் பொருளும் இல்லாத ஏழையானேன்; என்னால் இயன்ற சமுதாயம்
இரண்டுமில்லாது ஏழைமையால் வறுமையும் சிறுமையும் உற்று வருந்துகிறது; அதன் நடையைச் சிறியன சிந்தித்தலும்,
சிறு சொல் வழங்குதலும் சிறு செயல் புரிதலும் முளைத்துச் சிறுமைப்படுத்திவிட்டன. இனிச் செய்வதறியாது
ஏங்குகின்றேன்; எனது இந்த இழிநிலை கண்டும் நீ இரங்கி அருளொளி வழங்குகின்றாயில்லை; எனக்கு
என்ன வாழ்வு வேண்டியுளது என் மனம் நொந்து இறைவனிடம் முறையிடுகின்றார்.
2263. அன்பரி தாமனத் தேழையன்
யான்துய ரால்மெலிந்தே
இன்பரி தாமிச் சிறுநடை
வாழ்க்கையில் ஏங்குகின்றேன்
என்பரி தாப நிலைநீ
அறிந்தும் இரங்கிலையேல்
வன்பரி தாந்தண் அருட்கட
லேஎன்ன வாழ்வெனக்கே.
உரை: தண்ணிய அருட்கடலாகிய பெருமானே அன்பின்மையால் ஏழையாகிய யான் துயரால் மெலிந்து சிறுநடை வாழ்வில் இடர்ப்பட்டுச் செய்வதறியாமல் ஏங்குகிறேன்; என் பரிதாப நிலையைக் கண்டும் நீ அருள் செய்கிலை; நின்பால் வன்பு தோன்றின் யாங்கள் வாழ்தல் பயன்ற்றதாகும். எ.று.
அரிது என்றவிடத்து அருமை இல்லாமை உணர்த்தி நின்றது. குடும்ப வாழ்வு அன்பாலும் சமுதாய வாழ்வு அருளாலும் இயலுவன. அன்பின் முதிர்ச்சி அருள்; “அருள் என்னும் அன்பீன் குழவி” என்பர் திருவள்ளுவர். அன்பு, மனைவி மக்கள் ஒக்கல் என்னும் தொடர்பு காரணமாகத் தோன்றி மனத்தின்கண் நின்று தொடர்புறுத்தும் ஒரு வகை ஈர்ப்பாற்றல். அஃது அருளாக மாறும்போது தம் போன்ற மக்கள் மேலும் பிறவுயிர்கள் மேலும் சென்று தொடர்புறுத்துவது. அன்பில்வழி அறிவும் பொருளும் இல்லையாம். அவையில்லாதவன் ஏழை. பொருளுடையனாகியும் அன்பில்லானாயின் ஒருவன் ஏழை யெனப்படுவன். அன்புடையான் பொருளிலனாயின் அவன் வறியன் என்று கருதப்படுவான். ஏழைமைக்கும் வறுமைக்கும் இதுவே வேறுபாடு. அன்புடையான் அருளுடையனாயின் நல்லவன் எனவும் செல்வன் எனவும் சிறப்பிக்கப் பெறுகின்றான். அருளே அவற்குச் செல்வம். அருளுடைமை, செல்வத்துட் செல்வம் என்று கூறுகிறது அறநூல். இச் செல்வமுடைமைக்கு முதனிலையாகிய அன்பு இல்லாத மனமுடையனாதலால் யான் ஏழையாயினேன் என்பாராய், வள்ளலார், “அன்பரிதாம் மனத்து ஏழையன் யான்” என்று கூறுகின்றார். அன்பில்லார்க்குக் குடும்ப வாழ்க்கை சமுதாய வாழ்க்கை இரண்டிலும் இனியதொடர்பும் பிறர் ஆதரவும் ஒத்துழைப்பும் எய்தாமையால் துன்பமன்றி வரக்கடவது வேறு யாதும் இல்லையாம். ஆதலால்தான் “துயரால் மெலிந்தேன்” என்று உரைக்கின்றார். செய்யப்படும் செயலெல்லாம் மனத்தால் நினைத்தலும் வாயாற் பேசுதலும் மெய்யால் செய்வன செய்தலுமாம்; இவற்றால் விளையும் பயன் இன்பமே; துன்பம் விளையுமாயின் அது தீவினையாய்ப் பயனில் செயலாகும். நினைத்தல் முதலிய மூன்றும் அன்பு கலந்தாலன்றி இன்பம் கனியா. அதனால்தான் “அன்பரிதாம் மனத்தால் ஏழையனாகிய யான் துயரால் மெலிந்தேன்” என்று காரண காரிய முறையில் வைத்துத் தெளிவாகக் கூறுகின்றார்.
சமுதாய வாழ்வின் இயக்கம் உலகநடை எனப்படும்; நினைவு சொல் செயல் என்ற மூன்றாலும் அஃது இயலுகிறது. இம் மூன்றிலும் சிறுமை தோன்றின் வாழ்வு சிறுநடை வாழ்க்கையாகும். சிறுமை துன்பம் தருகிறது. சிறு புரிகளால் திரிக்கப்பட்ட கயிறு எளிதில் அறாது; சிறிய நினைவும் சிறு சொல்லும் சிறு செயலுமாகிய கயிற்றால் கட்டப்பட்ட சிறு நடை வாழ்விற் சிக்கினோர், அறுத்துக்கொண்டு வெளியேறுதல் எளிதில் ஆகுவதன்று; அது நினைந்தே “இன்பு அரிதாம் சிறு நடை வாழ்க்கையில் ஏங்குகின்றேன்” என்று வள்ளலார் மொழிகின்றார்.
இந்த நிலை, கண்டார் இரங்கத்தக்கது. இது புறத்தார்க்குப் புலனாவதன்று; புறத்தைக் கடந்து அகத்துறு கருவிகளுள் நுழைந்து அவற்றின் வேறாய் உள்ளீடாய் இருக்கும் மனத்தைக் கண்டு, அதனுள் துருவி நோக்கும் நுண்ணுணர் வுடையார்க்கன்றி என் நிலை தெரியாது; நுண்ணுணர்வுடையோர்க்கு உணர்வருளும் நுண்ணியன் நீ ஆதலால் இனிது எளிதில் அறிவாய்; அறிந்தும் என் மெலிவு நீக்கி ஏக்கம் நீங்க அருள்புரிகின்றிலை; அதற்குக் காரணம் இரக்கம் இல்லாமை என்பார் “என் பரதாப நிலை அறிந்தும் நீ இரங்கிலை” என முறையிடுகின்றார்.
இரக்கம் இலனாயின் என் செய்வது என்றொரு நினைவு எழுகிறது; இரக்கம் இல்லையெனின் வன்கண்மை புகுந்து கொண்டது என்பது பொருள். இறைவன் எல்லாம் வல்ல பரம்பொருளாதலால், அவனது வன்கண்மைக் கெதிராக அவன் படைப்பின்கண் அடங்கிய ஒன்றும் ஒரு செயலும் செய்யமாட்டாது; அவன் படைப்பில் அடங்காதது அவனையன்றி ஒன்றும் கிடையாது. ஆகவே, வன்கண்மை தாங்கரிது என்பாராய், “வன்பு அரிதாம்” என்று கூறி, மண்ணில் வாழ்வதே அவனது அருள் பெறுதற்கு; இப் பேறு இல்லையாயின் வாழ்வு என்ன பயனுடைத்தாம் என்ற சலிப்புத்தோன்ற “என்ன வாழ்வு எனக்கே” என்று சொல்லுகின்றார். இவ்வாறே மணிவாசகனார், இறைவன் அருளில்லையேல் வாழ்வு பயனற்றதாம் என்று தெரிந்து, “யாரொடு நோகேன் யார்க்கெடுத் துரைப்பேன்? ஆண்ட நீ அருளிலையானால், வார் கடலுலகில் வாழ்கிலேன் கண்டாய்” என்றும், “மண்ணகத்தே வந்து வாழச் செய்தவன் நீ யாதலால்” வருக என்று “அருள் புரிவாயே” என்றும் உருகி உரைக்கின்றார்.
இதனால், இறைவன்பால் அருளில்லை யாயின் வாழ்தலிற் பயனில்லை என்பது இப் பாட்டின் பயன் என உணர்க. (93)
|