94
94. மக்களுலகு வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே தெய்வ நம்பிக்கை கொண்டு வாழ்ந்து
வருகிறது. நாகரிகமில்லாத காட்டு மக்களும் இக் கொள்கையுடையராய் அதற்கொருவகையான வழிபாடு செய்கின்றார்கள்.
மக்களையே கொன்று தின்னும் மாக்களும் அந்நாள் இருந்துள்ளனர். இந் நாளில் அவரது இனம் ஒழிந்துவிட்டது;
எஞ்சிய கூட்டங்கள் திருந்தி ஏனை மக்களோடு கலந்துகொண்டனர். நரபலியிடுகின்றவர் மக்களைத்
தின்னும் கூட்டத்தின் எச்சமாய் வைதிக சமய வொழுக்கமென வஞ்சித் துண்ணும் இனத்தவராவர். இந்
நாளில் அத்தகைய மக்கள் வடநாட்டில் மிகவும் அருகிக் காணப்படுகின்றனர். மக்களுருவில் வாழும்
இந்த மாக்கள் முதல் நாகரிகம் படைத்த மக்கள் ஈறாக அனைவரும் தெய்வநம்பிக்கையும் தெய்வ வழிபாடும்
உடையவர். கற்றவர் கூட்டத்தில்தான் கடவுட் கொள்கையில்லாதவர் கடவுட் கொள்கைக்கு மாறுபட்டொழுகுவர்.
அவரையொத்த அனைவரும் கடவுட் கொள்கை கொண்டு வழிபட்டு வாழ்பவராவர். வழிபடுவது எற்றுக்கெனின்,
மக்கள் தமக்கு வேண்டுவனவற்றை யெல்லாம் வேண்டியவாறு பெறுவதில்லை. இவ்வாறு வேண்டியவற்றைத் தாமே
செய்து கொள்ள முடிவதில்லை. முடியாதவற்றை வேறு சிலர் முடிப்பது கண்டு அவர் துணையை நாடுவர். பலர்
கூடிமுடியாதபோது தம்மினும் மிக்க வன்மையுடையது தெய்வம் எனக் கருதி அதனை வேண்டிச் செய்வர். செய்வது
வெற்றியுற முடியுங்கால் அது தெய்வத்தால் ஆயது என்று மகிழ்ந்து, அத் தெய்வத்தைப் பாராட்டுவர்.
இவ்வகையில் ஒரு சில தெய்வ வழிபாடு வெற்றி பெறுதற்கு முன்னணியாய் நடந்து இன்புறுத்துமாயின்,
அது தெய்வத் திருவருள் எனக் கருதி அத் தெய்வத்தைக் “கண்கண்ட தெய்வம்” என்று சொல்லிப்
புகழ்வர். வழிபாட்டில் பயன் என்று திண்ணமாய் உரைக்கத்தக்க வகையில் அமைந்த தெய்வங்களில்
இந்நாளில் வடக்கில் திருவேங்கடம், திருக்காளத்தி, சென்னையில் திருவொற்றியூர், மயிலாப்பூர்,
திருவல்லிக்கேனி, வடபழனி, திருப்போரூர், திருக்கழுக்குன்றம் முதல் தெற்கிற் திருச்செந்தூர்
ஈறாகப் பல இடங்களில் கோயில் கொண்டிருக்கும் திருமால், சிவன், முருகன் என நிலவும் தெய்வங்கள்
“கண்கண்ட தெய்வம்” என்று குறிக்கப்படுகின்றன. இவற்றுள் பழனி செந்தூர் ஆகிய இடத்தில் எழுந்தருளும்
முருகனையும், மதுரையில் மீனாட்சியம்மையையும் கண்கண்ட தெய்வங்களிற் சிறப்புடையன என்று மக்கள்
பெருந்திரளாகச் சென்று கண்டு வழிபடுகின்றார்கள்; இவ்வகையில் வள்ளற்பெருமான் சிவபெருமானைக்
கண்கண்ட கடவுளாகப் பாராட்டியுரைக்கின்றார். ஒன்றைக் கண்கண்ட தெய்வமாகக் கருதுபவர்கள் பிற
தெய்வங்கள்பால் அத்துணை அன்பு செய்வதில்லை. வேறு உளவோ என்ற கருத்துடன் பலவாகக் கூறப்படும்
தெய்வங்களை முறைப்பட எண்ணி நோக்கிய வள்ளற்பெருமான் சிவபெருமானே கண்கண்ட தெய்வம் எனத்
தெளிகின்றார். சிவபெருமானுக்குத் தமது கருத்தை விளங்க வுரைக்கின்றார்.
2264. மைகண்ட கண்டமும் மான்க ண்ட
வாமமும் வைத்தருளில்
கைகண்ட நீஎங்கும் கண்கண்ட
தெய்வம் கருதிலென்றே
மெய்கண்ட நான்மற்றைப் பொய்கண்ட
தெய்வங்கள் மேவுவனோ
நெய்கண்ட ஊண்விட்டு நீர்கண்ட
கூழுக்கென் நேடுவதே.
உரை: மையின் நிறம் பொருந்திய கழுத்தையும், மான்போன்ற கண்களையுடைய உமாதேவி தங்கிய இடப்பாகத்தையும் கொண்டு, உயிர்கட்கு அருள் செய்வதில் கைகண்ட பெருமான் நீ; வேறு வன்மை மிக்க தெய்வம் யாதெனக் கருதி நோக்கியவிடத்து எவ்வுலகத்தும் கண்கண்ட தெய்வம் நீயே என்பதை மெய்யாக யான் கண்டுணர்ந்துள்ளேன்; அதனால் நான் மற்றைப் பொய்த் தெய்வங்களை நினைய மாட்டேன்; நெய் கலந்த இனிய உணவு இருக்கும்போது, நீர் கலந்த கரைத்த கூழைத் தேடுவதில்லை எ.று.
மைகண்ட கண்டம் - நீலகண்டம்; கண்டம் - கழுத்து. மான் - உவமையால் உமாதேவி நினைப்பிக்கிறது. வாமம் - இடப்பாகம். செயல் வல்லாரைக் கைகண்டவரென்றும், உள்ளதன் உண்மையைக் கண்கண்ட தென்றும் கூறுவது உலகியல் வழக்கு. இலக்கிய ஆக்கத்துக்கு வழக்கும் செய்யுளும் முதல் என்பர் பனம்பாரனார். “வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே, நிகழ்ச்சியவர் கட்டாகலான்” என்பது தொல்காப்பியம். ஆகவே கைகண்ட, கண்கண்ட என்ற வழக்குகள் கொள்ளப்பட்டன. இத் திருப்பாட்டில் 'கருதில்' என்பது இலேசு; இதனால், ஆசிரியர் கருத்தொன்று குறிக்கப்படுகிறது. வேதகால முதற்கொண்டு நம் நாட்டில் தெய்வங்கள் எண்ணிறந்தன பேசப்படுகின்றன. இவற்றுள் இடத்தாலும் காலத்தாலும் பல்கியவை கணக்கிலடங்கா; இவற்றை நம்பி வாழ்பவரும் பலர். இவை அனைத்தையும் கருதிக் கண்கண்ட தெய்வம் இதவெனத் துணிய வேண்டியிருத்தலின் “கருதில்” என வள்ளலார் குறித்தருளுகின்றார். மெய்யாகக் கண்டதை “மெய்கண்ட” என்கின்றார். காலவெள்ளத்தில் தோன்றிப் பெருகிய உணர்வுகள், கடவுள் ஒன்றே என்றும், அதனையொப்பத் தெய்வங்கள் பல உள்ளன என்றும் உரைக்கலுற்றன. ஆயினும் உண்மை ஆராய்ச்சி நெறி, “ஒன்றே கடவுள்; அதற்குப் பன்மை இல்லை” என உணர்த்திற்று. கடவுள் ஆணைவழிச் சிறந்து நிற்கும் உயிர்களே தெய்வங்கள்; அவை செத்துப் பிறக்கும் இயல்பின என்றும், தீது செய்து துன்புறுவதும், நன்று செய்து இன்புறுவதும் தெய்வங்கட்கு இயல்பு என்றும் புராணங்கள் தோன்றிப் புகலுற்றன. வயிறு வளர்க்கவேண்டிக் கற்றோர் சிலர் கல்லா மாக்கட்குத் தெய்வங்கள் பலவற்றைப் படைத்து மொழிந்தனர். இவ்வாற்றால் பொய்த் தெய்வங்கள் மக்களிடையே பெருகின. அவற்றை, “மற்றைப் பொய்த் தெய்வங்கள்” என்றும், அவற்றை நினைப்பதும் வழிபடுவதும் தீமையாகலின் “மேவுவனோ” எனவும் உரைக்கின்றார். கடவுள் என்றும் இயவுள் என்றும் தெய்வங்களை நூல்கள் உரைப்பது ஒரு கருத்துப்பற்றி, பரம்பொருளாகிய செம்பொருள், மக்கள் அறிவெல்லைக்கு அப்பாற்பட்டிருப்பது பற்றிக் கடவுள் என்றும், உயிர்கள் வாழ்தல் வேண்டி அவற்றிற்கு உடல் தந்து இயக்குவது பற்றி இயவுள் என்றும் சங்ககாலத் தமிழறிஞர் குறித்தனர். இச் செம்பொருள் இன்னவுரு இன்னநிறம் என்று அறிய வொண்ணாதது; உயிர்கள் உடல் பெற்று உருவுடன் வாழ்வன. உயிர்கட்கு உடல் வாயிலாக உணர்வு வளர்தற்கு உதவும் வகையில் செம்பொருளோடு உயிர்ப் பொருளைத் தொடர்பு படுத்துவது தெய்வம்; அது மக்களுருவில் தோன்றும் இயவுள்நிலை. உருவில்லாத கடவுள் உயிர்ப்பொருட்டு இயவுளாகுமிடத்து தலை, முகம், கை, கால் என்ற உறுப்புக்கொண்ட உருவாகுங்கால் தெய்வமாகிறது. இது பற்றியே கடவுள் நிலையிற் சிவம் எனப்படுவது தெய்வ நிலையில் சிவன், சிவபெருமான், மாதொருபாகன் எனத் தெரித்துரைக்கப்படுகிறது. மெய்ம்மை நெறியில் அது தெய்வமாயினும்; சிவமாகிய செம்பொருளாதல்பற்றி மெய்த்தெய்வம், மெய்த்தேவர் என்றும் விளம்பப்படுகிறது. ஏனைய யாவும் பொய்த்தெய்வம் என்று இகழ்ந்துரைக்கப்படுகின்றன. பொய்த் தெய்வம், பொய்யாகப் புனைந்துரைக்கப்பட்டவை என்றற்குப் “பொய் கண்ட தெய்வங்கள்” எனக் கூறப்படுகின்றன. மெய்கண்ட சிவனை 'நெய்கண்ட ஊண்' எனவும், பொய்த் தெய்வங்களை 'நீர்கண்ட கூழ்' எனவும், காட்டுகின்றார். இதனால், கண்கண்ட தெய்வம் சிவனாதலால், அவன் நம் சிந்தையால் சிந்தித்து வழிபடத் தக்கவன் எனச் செப்புகின்றமை தெரிகிறது. (94)
|