95
95. மதுரையில்
வாழ்ந்த ஒரு வேதிய இளைஞன் மணம் புரிந்து கொள்ளும் ஆர்வத்தனாய்ச் சொக்கநாதனைப் பொருள்வேண்டி
நின்றான். அந் நாளில் பாண்டிவேந்தன் தன் மனத்தில் தோன்றிய ஐயப் பொருளாகப் பாடி வரும்
புலவர்க்குப் பொன் தருவதாகப் பறையறைந்து தெரிவித்திருந்தான். அவன் மனக்கருத்தறிந்து பாடுவதென்பது
மக்களினத்துக்கு ஆகாத ஒன்று; அவரவர் மனத்தின்கண் இருந்தறியும் இறைவனையல்லது பிறர் எத்துணைப்
புலமையுடையார்க்கும் இயல்வதன்றென எண்ணிய சொக்கநாதன் பாட்டொன்றருளித் தந்து பொன் பெறுமாறு
வேதிய மாணியை ஏவினான். அப் பாட்டின் பொருள் தன் மனக்கருத்துக் கொத்தமை கண்ட வேந்தன்
அவனுக்குப் பொற்கிழி தருமாறு சங்கத்தார்க்கு உரைத்தான். சங்கத்தவர் தலைவரான நக்கீரர் அப்பாட்டின்
பொருள் பொருத்தமின்மை கண்டு மறுக்கவும், சொக்கநாதனே புலவனாய்த் தோன்றி வாதிட்டு வென்று
பொன் பெற்று மாணிக்கு தந்து மணம் செய்துகொண்டு வாழச் செய்தான். மாணி மணமாகாத மாணவன்.
இவன் பெயரைத் தருமியெனத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. மாணியொருவன் மணஞ்செய்து கொள்ளுதற்காகக்
கவிபாடிப் புலவர்களுடன் வாதாடிப் பொன் பெற்று மகிழ்வித்த சொக்கநாதன் திருவருளை நினைந்து
வடலூர் வள்ளல் அதிற் சிறிதளவாய திருவருள் புரிதல் வேண்டுமென முறையிடுகின்றார்.
2265. வேணிக்கு மேலொரு வேணிவைத்
தோய்முன் விரும்பிஒரு
மாணிக்கு வேதம் வகுத்தே
கிழிஒன்று வாங்கித்தந்த
காணிக்குத் தானரைக் காணிமட்
டாயினும் காட்டுகண்டாய்
பாணிக்குமோ தரும் பாணிவந்
தேற்றவர் பான்மைகண்டே.
உரை: வேணிக்குமேல் ஒரு வேணி வைத்த சிவபெருமானே, மாணி ஒருவற்குக் கிழிவாங்கித் தந்த காணிக்கு அரைக்காணியளவேனும் அடியேனுக்கு அருளுக; ஏற்பவர் தன்மைகண்ட கொடையாளர் கை பாணிப்ப தில்லையன்றோ? (எ-று)
'வேணி' என்னும் சொல் முடிமேற்சடைக்கும் நீர்ப்பெருக்கும் உரியதாகும். சடைமுடிவில் கங்கையாற்றை உடையனாவது பற்றிச் சிவனை, வேணிக்கு மேல் ஒரு வேணி வைத்தோய் என்று புகழ்கின்றார். கங்கை யமுனை சரசுவதி என்ற ஆறுகள் மூன்றையும் வடபுலத்தார் திரிவேணி என்றும், அவை கூடுமிடத்தைத் திரிவேணி சங்கமம் என்றும் வழங்குகின்றனர். இதனால் ஆற்றுக்கு வேணி என்ற பெயருண்மை அறியலாம். மாணி - மதுரையில் வாழ்ந்த வேதியரினத்து மாணவ இளைஞன். பாண்டிவேந்தன் மனத்தில் மறைந்து கிடந்த ஐயப் பொருளைப் பாட்டிடை வைத்துப் பாடித் தந்த அருட்செயலை, “வேதம் வகுத்து” என வுரைக்கின்றார். வேதம் - மறை பொருள். வேந்தன் தன் தேவி கூந்தலில் எழுந்த நறுமணம் எப்பூவினது என ஐயுற்று, அவனையன்றிப் பிறர் அறியவாராததாகலின் வெளிப்பட மொழியாது என் கருத்துப்படப் பாடுவோர்க்கு கிழிதருவேன் என்றான்; அவன் கருத்து விளங்க இறைவன் பாடித்தந்து கிழிபெறச் செய்ததுபற்றி “கிழியொன்று வாங்கித் தந்த” எனவுரைக்கின்றார். காதலன் ஒருவன் தன் காதலியின் கூந்தலில் ஒரு திப்பிய மணம் எழக்கண்டு பூநாடித் திரியும் வண்டினத்தை நோக்கி, “தும்பியே, நீ அறியும் பூக்களில் இவள் கூந்தல் போல நறுமணம் கமழும் பூவைக் கண்டதுண்டோ” என வினவும் கருத்துடைய பாட்டைப் பாடி இறைவன் தருகின்றான். பாட்டின் அமைதிகண்ட சங்கப்புலவர் மகிழ்ந்தாராயினும், மகளிர் கூந்தற்கு இயற்கையில் மணம் கிடையாதே, இப் பாட்டு அங்ஙனமிருப்பதுபடக் கூறுகிறதே என வாதிடப் புலவனாய் வந்த சிவபிரான் உமை நங்கை கூந்தலில் ஞான மணம் உண்டெனக் காட்டி நிறுவி, பொற்கிழியை வாங்கி மாணியிடம் தந்த வரலாற்றை நினைந்து, “கிழியொன்று வாங்கித் தந்த காணிக்கு” எனவுரைக்கின்றார். பொருட்குற்றமென மறுத்த நக்கீரன் முதலிய புலவர்களை உண்மையுணர்ந்து தலைவணங்கிப் பொற்கிழி தரச் செய்தமை தோன்ற, “வாங்கித் தந்த” எனக் குறிக்கின்றார். இதனை,
“கற்ற கீரனும் கலைஞரும் கழகமண் டபத்தில் உற்ற ஆடகக் கிழியறுத் தந்தணற் குதவிக் கொற்ற வேந்தனும் வரிசைகள் சிலசெயக் கொடுப்பித்து அற்றம் நீங்கிய கல்வியின் செல்வராய் அமர்ந்தார்”
எனப் பரஞ்சோதியார் பாடுகின்றார். வேந்தன் பிராமணனுக்குச் செய்த வரிசை பிராமணக்காணி எனப்படுவதைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. அதனைக் கருத்திற்கொண்டே வள்ளலார் “கிழியொன்று வாங்கித் தந்த காணி” எனவுரைக்கின்றார். அந்த வரிசையில் அரையளவேனும் அடியேனுக்குக் காட்டவேண்டும் என்றற்கு “அரைக்காணி மட்டாயினும் காட்டு கண்டாய்” என வேண்டுகிறார். கொடுக்கிறவர் கை ஏற்பவர் இயல்பு காணும்போது சிறிதும் தாமதிக்காது என்ற பழமொழிக் கருத்தைப் “பாணிக்குமோ தரும் பாணி வந்து ஏற்றவர் பான்மை கண்டு” என வுரைக்கின்றார். பாணித்தல் - தாமதித்தல். தரும் பாணி - தருகிற கை. தாமதம் செய்யாது அருளல் வேண்டும் என்பது கருத்து. இப் பாட்டிற்கண்ட நிகழ்ச்சியைத் திருநாவுக்கரசர், திருப்புத்தூர்த் தாண்டகத்தில் “நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்ககைக் கிழி தருமிக் கருளினோன் காண்” என்று பாடுகின்றார்.
இதனால், தருமிக்கு அருளியதுபோல அடியேனுக்கும் இரங்கி அருள் செய்தல் வேண்டும் என்புது பயனாம். (95)
|