96

       96. இறைவன் தான் படைத்த இவ்வுலகில் இருந்து ஆளும் திறம் எங்ஙனம் என எண்ணிய சான்றோர், அவன் இவ்வுலகின் வேறாய், ஒன்றாய், உடனாய் இருக்கின்றான் என்றனர். “ஒன்றாய் வேறாய் உடனானான் இடம் வீழிம் மிழலையே” என்று ஞானசம்பந்தப் பெருமான் கூறினார்; மணிவாசகரும் “பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பெருமான்” என்றனர். உலகின்றோங்கவும் ஒன்றாகவும் இருப்பதால் நாம் அவனைக் காண்பது அரிது; உடனாக இருக்கின்றான் எனின் நாம் அவனைக் காணலாமே என்று வினாவுவோர் உண்டு. நம் தேகத்தை இயக்குவது உயிர் என்பது நாம் அறிந்தது; ஆனால் அவ்வுயிர் நமக்குப் புலனாவதில்லை; அங்ஙனமிருக்க, அவ்வுயிரோடு உடனாய் இருக்கும் கடவுட் பொருளைக் காண்பது அரிதாதல் இனிது தெரிகிறது. உருவும் அருவுமாகிய பொருளைப் படைத்தளிக்கும் இறைவன் விரும்பினால் நாம் காண வெளிப்படலாமே எனின், படலாம்; அங்ஙனம் அவன் செய்யாமைபற்றி, அவன்பால் அன்புடைய பெரியோர் அவன் ஒளித்திருக்கின்றான் என்பர். உலகின் மக்கள் பலரும் கள்ளத்தனமாகப் பல நினைவு செயல்களை மேற்கொண்டு தன்னலத்தால் சூழப்பட்டு வாழ்வு நடத்துகின்றனர். அவர்கள் செயல்களை அறிதல் வேண்டியே முதல்வன் மறைந்திருக்கின்றான் என்ற கருத்துப்பட, “கள்ளப் பெருமக்கள் காண்பர் கோலோ என்றென், உள்ளத்தினுள்ளே ஒளிந்திருந்து ஆளும்” ( திருமந். ) என்று திருமூலர் தெரிவிக்கின்றார். வள்ளற் பெருமான் கள்ளர்க்கேயன்றிச் சான்றோர் உள்ளத்திலும் ஒளித்திருப்பது அவர்க்கு இயல்பு; அதுவேயன்றி, பழங்காலச் சான்றோர்க்கென முதற்கண் உரைத்த வேதத்திற்கும் அறியாதபடி ஒளித்துள்ளான்; தேவர்கட்குத் தலைமைத் தேவர்கள் எனப் போற்றப்படும் திருமாலுக்கும் பிரமனுக்கும் ஒளித்துறைகின்றான் என அறிவுறுத்துகின்றார். தேவர் முதலியோர்க்கும் கள்ள மனமுடைய கீழ்மக்களுக்கும் இறைவன் ஒளித்திருப்பது முறையாக இருக்கலாம்; அறநெறி மேற்கொண்டு அன்புடன் போற்றி வணங்கி வழிபடுவோர்க்குப் புலனாகாமல் இருப்பது முறையன்றே என்றொரு கேள்வி அவரிடையே எழுந்துளது; அது முறையன்று என்று பலர் நினைக்கின்றார்கள். வடலூர் வள்ளற்பெருமானும் அவரோடு ஒத்த நினைவினராய் இறைவன்பால் முறையிடுகின்றார்.

2266.

     மறைக்கொளித் தாய்நெடு மாற்கொளித்
          தாய்திசை மாமுகங்கொள்
     இறைக்கொளித் தாய்இங் கதிலோர்
          பழி்நிலை என்றன்மனக்
     குறைக்கொளித் தாலும் குறைதீர்த்
          தருளெனக் கூவிடும்என்
     முறைக்கொளித் தாலும் அரசேநின்
          பால்பழி மூடிடுமே.

உரை:

     அரசே, வேதத்துக்குத் தெரியாதபடி உன்னை நீ மறைத்துக்கொண்டாய்; அதுவேயன்றி, மறையோதும் நெடுமாலுக்கும், அவனைப் பெற்ற திசைமுகனாகிய பிரமனுக்கும் தெரியாவாறு உன்னை ஒளித்துக் கொண்டாய்; இவ்வுலகில் அதுபற்றி உன்னைப் பழித்து இகழ்பவர் இல்லை. மனம் கருவியாகக் காணப்படும் அப் பெருமானை என் மனத்தின்கண் படியும் குறைகளால் காணமுடியாமற் போகலாம்; அதனைப் போக்கி அடியேன் காண நின்றருள் எனக் கூவியழைக்கும் முறையீட்டுக்கு ஒளிப்பாயாயின், நின்னைப் பழி சூழ்ந்துவிடும் எ.று.

     “வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே” என மணிவாசகப் பெருமான் கூறுவதனால், இறைவன் மறைகளால் அறியப்படாமல் மறைந்து விளங்குவது தெரிகிறது; அது பற்றியே, வள்ளலார், “மறைக்கொளித்தாய்” என எடுத்துரைக்கின்றார். அயன் படைத்த அண்டங்கள் அத்தனையும் இரண்டு அடியால் அளந்தமைபற்றித் திருமாலை “நெடுமால்” என்றும், திருவடி காண முயன்றும் திருமாற்கு எட்டாமையின் “நெடுமாற்கு ஒளித்தாய்” என்றும் கூறுகின்றார். பிரமனை, திசைமா முகம்கொள் இறை எனப் பாராட்டுகின்றார். திசை நான்கு போல முகம் நான்குடையனாதலும், உலகங்கள் அத்தனையும் படைப்பவனாதலும்பற்றி, பிரமனைத் “திசைமாமுகம் கொள் இறை” எனப் புகழ்ந்துரைக்கின்றார். அன்றியும், பிரமன் எப்பதோம் வேதத்தை ஓதுபவன்; எனினும் வேதப்பொருளை அறியாது குட்டுப்படவன் என்றும் குறை கூறப்படுதலால் மால் பிரமன் முதலியோர்க்கு நீ காணப்படாமை பழியன்று என்று புகல்கின்றார். இறைவன் முதன்மையை முற்றவும் உணாரத பிறரால் செய்யப்பட்டவையாதலால் வேதத்துக்குப் பொருளாகாமல் மறைந்து இறைவனுக்குப் பழியன்று; திருமால் பிரமன் இருவரும் முறையே சிவனுடைய அடிமுடி காணாதயர்ந்தமை புராணங்களால் விளங்கக் கூறுப்படுதலால், அவர்கட்குத் தெரியாது மறைந்ததனால் சிவபெருமானுக்குக் குறையில்லையாம். அடியேன் மனம் அறிவில்லா மாயை என்ற சடப்பொருளால் ஆயதாகலின், அதனைக் கருவியாகக் கொண்டு உயிர் காண முயல்கிறது. குறையுடைய மனம் தவிர வேறு கருவியின்மையின், அதற்குப் புலனாகாமை நின் பெருமைக்குப் பழியாம் என்று இசைக்கின்றார். குறையிருப்பின் பெரியோர் அக் குறை நீக்கிச் செம்மை செய்து அதன் வழியாகத் தமது பெருந்தன்மையை உணரச் செய்வர்; அடியேன் என் மனக் குறையைத் தீர்த்து அருள் செய்க எனக் கூவி முறையிடுகின்றேன்; அதற்கு இரங்கி எளிவந்து காட்சிதந்து இன்புறுத்துவது நினக்குப் பெருந்தன்மையாகும்; அதனைக் கருத்திற் கொள்ளாது ஒளிந்துநின்று ஒழுகுவது உனக்கே பழியாம் என்பாராய், குறை தீர்த்தருள் எனக் கூவிடும் என் முறைக்கு ஒளித்தாலும் நின்பால் பழி மூடிடுமே” என மொழிகின்றார்.

     இதனால், மக்கள்பால் உள்ள குறை தீர்த்து ஞானவொளி தந்து தன்னைக் காணச்செய்வது இறைவனுக்கு அறம் என முறையிடுவது பயனாம் என அறிக.

     (96)