97
97. “அரசு அன்று கொல்லும் தெய்வம்
நின்று கொல்லும்” என்பது மண்ணுலகம் பண்டுதொட்டே சொல்லிவரும் பழமொழி.. பழமொழியென வருவன
அனைத்தும் உலகியல் உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட உண்மை மொழிகளாகும். ஆகவே,
தெய்வம் நின்று கொல்லும் என்பதற்கேற்பத் தனது அருளைச் செய்யுமிடத்தும் விரைந்து செய்யாது
காலம் தாழ்த்தே செய்யும்; தெய்வங்கள் யாவற்றாலும் தொழப்படும் தெய்வமாகிய சிவபெருமானும்
தெய்வ வியல்பால் உடனே வந்து அருள்புரிதல் செய்யான்; விரைந்தருள் வேண்டி முறையிடல் வேண்டா
என உலகியலறிவு வள்ளற்பெருமானுக்கு அறிவிக்கிறது. பிணங்கிய நிலை உள்ளத்தில் உண்டாகிறது. வேண்டும்
பருவத்துப் பெய்யாமல் வெயில் மிக்குக் கெட்டபின் மழை பெய்வதாற் பயனில்லை; அது போல்
பூரணமாய் நின்ற பெருமானே, மழைபோன்ற நினது அருள் இப்போது இன்றி, மூப்பு நெருங்கி மிக்கவழிப்
பொன்மழையாய்ப் பெய்யினும் கன்மழையாய்ப் பொழியினும் பயன் இல்லையாம் என்று
பாடுகின்றார்.
2267. முன்மழை வேண்டும் பருவப்
பயிர்வெயில் மூடிக்கெட்ட
பின்மழை பேய்ந்தென்ன பேறுகண்
டாய்அந்தப் பெற்றியைப்போல்
நின்மழை போற்கொடை இன்றன்றி
மூப்பு நெருங்கியக்கால்
பொன்மழை பேய்ந்தென்ன கன்மழை
பேய்ந்தென்ன பூரணனே.
உரை: பூரணனே, பருவப் பயிர்க்கு அது கழியு முன்னே மழை வேண்டும்; அஃதின்றிப் பருவம் கடந்து வெயில் மிகக் காய்ந்து விளைவுத்தகுதி கெட்டபின் மழைபெய்வதால் என்ன பயன் பெறமுடியும்; அவ் வியல்பே போல், காலத்திற் பெய்யும் நன்மழை போன்ற நின் திருவருள் இனிது பெற்றுச் சிவகதியை விளைவிக்கும் செவ்வியாகிய இப்போது இன்றி மூப்பு நெருங்கிச் செயல்புரியாத நிலைமையடைந்த வழி, அது பொன் மழையாகவோ கன்மழையாகவே பெய்தாலும் ஒரு பயனும் இல்லை காண் எ.று.
பருவப் பயிர் - பருவத்தில் பயன் விளைவிக்கும் நெற்பயிர். அப் பயிர் பலன் விளைவிக்க வேண்டுமாயின், பருவத்தே மழை பெய்யவேண்டும். மழை, விளைவுக்குரிய வளம் பெறும் காலம் கழிதற்கு முன்னே பொழியும் பருவ மழை; அதனால் அதனை “முன் மழை” யென்றும், காலம் கருதாது மழைபெய்தபோதெல்லாம் விளையும் பயிர் அன்று என்றற்காகவே, “பருவப் பயிர்” என்றும் வள்ளலார் விளங்க வுரைக்கின்றார். வெயில் மிக்குக் காய்வதால் ஈரம் இன்றி வளம்கெட்ட காலத்தை, “வெயில் மூடிக்கெட்ட பின்” என எடுத்துரைத்து, கெட்டபின் பெய்யும் மழை பயன் விளைவியாது என்றற்கு “பின்மழை பேய்ந்தென்ன பேறு கண்டாய்” என்று இயம்புகின்றார். இது “பருவத்தே பயிர் செய்” என்ற அறவுரையை அகத்திற் கொண்டு பேசுகிறது. 'பெய்தென்ன' என்பது பேய்ந்தென்ன என மருவியது. பேய்ந்தென்ன என்ற இத் தொடர் உலகியலில் நாட்டவர் பேச்சில் நன்கு பயின்று வருவது. முதுமை தோன்றிச் செயல் வன்மையைச் சிதைக்குமுன் திருவருள் கிடைக்கப் பெறின், அது நல்கும் ஞானவொளியால் சிவஞானமும் சிவ நல்வினை வாய்ப்பும் கொண்டு வளமும் வலியும் பெறும் மனம் மொழி மெய் என்ற கருவிகளால் சிவம் பெருக்கிச் சீர் பெறுதல் எளிது கைகூடும்; அந்நிலைமை கடந்து மெய்யின்கண் தளர்வும் மொழியின்கண் சோர்வும் உளவாகும். முதுமைக்கண் பொன்னினும் சிறந்த நின் திருவருள் எய்தினும் எய்தாமையால் உண்டாகும் பயனே விளையும் என்பது விளங்க, “மூப்பு நெருங்கியக் கால் பொன்மழை பேய்ந்தென்ன கன்மழை பேய்ந்தென்ன” என்றும், இதனை எண்ணிப்பார்க்க முடியாத ஞானக் குறையுடையனலன் நீ என்றற்குப் “பூரணனே” என்றும் புகல்கின்றார்.
இதனால், நீ காலம் கடந்த பூரணனாயினும், காலச் சூழலில் அகப்பட்ட எம்போல்வாரக்குக் காலம் கடந்த பின் செய்யும் அருள் பயன்படா தொழியும் என முறையிடுவது பயனாம். (97)
|