98
98. சிவன்பால் இடைவிடாமல் முறையிடுகின்ற ஆன்மாக்களுக்கும் அச் சிவனுக்கும் உள்ள தொடர்பினை
எண்ணுகின்றார். மலத் தொடக்கால் செயலற்றுக் கிடக்கும் உயிர்க்கு உலகு படைத்து அதன்கண்
வாழ்ந்து உய்திபெறற்கு உடம்பும் கருவியும் பொருளும் போகமும் தந்து வாழச் செய்கிறவகையில் சிவனுக்கு
உயிர்கள்பால் பேரன்புத் தொடர்பு இருப்பது தெரிகிறது. இத்தகைய உதவி பெற்றும் உயிர்கள்
வாழ்வாங்கு வாழாது கெடுகின்றன; கெட்ட வழியும் சிவபெருமான் மீளமீள வாழ்வு தந்து வாழச் செய்வதை
நினைக்கும்போது சிவனுக்கு உயிர்கள்பால் உள்ள கேண்மை பெரிது என்பது பிறங்குகிறது. இக் கேண்மையை
உணரும்போது ஆன்மவுணர்வு அயர்ச்சியுறாது மேன்மேலும் பெருமானை நினைந்து குறையிரந்து முறையிடுவதன்றி,
வேறு செயலின்மை விளங்குகிறது. எத்துணைக் காலம் முறையிடினும் ஆன்மாவின் தகுதிப்பாடு முற்றும் காறும்
இறைவன் அருள்செய்யத் தாழ்க்கின்றான். தகுதி நிறைவு ஆன்மாவுக்குத் தெரியாமையின் அது
வருந்துகிறது. அதன்பால் பரிவு கொண்டு வள்ளற் பெருமானும் வருந்துகிறார்.
2268. நீளா தரவுகொண் டென்குறை
யாவும் நிகழ்த்தவும்நீ
கேளா தவன்என வாளா
இருக்கின்ற கேண்மைஎன்னோ
சூளாத முக்கண் மணியே
விடேல்உனைச் சூழ்ந்தஎன்னை
ஆளாகக் கொள்ளினும் மீளா
நரகத் தழுத்தினுமே.
உரை: மூன்று கண்களையுடைய மணிபோன்ற பெருமானே, மிக்க ஆதரவு கொண்டு என் குறையனைத்தையும் எடுத்துரைக்கவும் நீ செவியிற் கேளாதவன்போல நீ வாளா இருக்கின்றாய்; இது என்ன கேண்மையாகும்? என்னைக் கைவிட்டாயென்றன்றோ இது நினைக்கப் பண்ணுகிறது? என்னை நின் அருணிழலில் இருந்து மகிழச் செய்வதாயினும், நரகத்தில் கிடந்து வருந்தச் செய்வதாயினும், என்னைக் கைவிடலாகாது எ.று.
சூளாத மணி - சூடாதமணி. உலகத்துமணி வகை அனைத்தும் மக்களாற் சூடப்படுவன; அவற்றின் வேறு என்றற்கு “முக்கண்மணி” என்றும், மணிக்குள்ள இயைபு நீக்கற்குச் சூளாதமணி என்றும் உரைக்கின்றார். ஆதரவு - அன்பு. மிக்க அன்பினை நீளாதரவு என்று உரைக்கின்றார். எத்துணை முறையாயினும் அயர்வுறாது முறையிடுவது பற்றி, நீளாதரவு எனல் வேண்டிற்று குறையிரந்து நிற்போர் தமது குறை முற்றும் சிறிதும் ஒழியாது தெரிவித்தல் வேண்டும். சிறிது முன்னர்க்கூறி, சிறிது பிற்கூறுவது வணிகமுறையீடாவது கண்டு, அறிவுடையோர் காலமும் இடமும் வாய்த்தவிடத்துக் குறைகள் அனைத்தையும் கூறுவராதலின், “குறையாவும் நிகழ்த்தவும்” என மொழிகின்றார். குறை நீக்கும் பெரியோரும் சிறிதுசிறிதாய் வேறுவேறு கூறியவழி மறுத்தற்கும் இடமாம் என்பதுபற்றி யாவும் நிகழ்த்துவது முறையாயிற்று. இரந்துரைத்த குறைகள் பல நீங்காமை கண்டு மனம் வருந்துதலால், “நீ கேளாதவன் என வாளா இருக்கின்றனை” எனக் கூறுகின்ற வள்ளற் பெருமான், நண்பரது குறையறிந்து போக்கும் தன்மை பற்றியன்றோ நண்பர் தொடர்பு கேண்மை எனப்படுகிறது; பன்முறையும் குறையனைத்தையும் எடுத்துரைத்து முறையிட்டும் நீ வாளாதிருப்பது கேளாமையாக வுளது; இது கேண்மையாகாதே என்பார், “கேண்மை என்னோ” என உரைக்கின்றார். இந் நிலைமை நீடிக்குமாயின், மனத்தின்கண் சுரந்து நின்று ஊக்கும் அன்பு வற்றிவிடும்; கேண்மை தொடர்பு அற்றுக் கெடும்; முடிவில் நீ என்னைக் கைவிட்டது போலும் சூழ்நிலை தோன்றி என் வாழ்வைச் சீர்குலைத்துவிடும். உன்னையே நினைந்து சுற்றித் தொடரும் என்னைக் கைவிடலாகாது என்பார், “உன்னைச் சூழ்ந்த என்னை விடேல்” என வேண்டுகிறார். என்னையறியாமல் என் மனமொழி மெய்களால் விளைந்த வினைகட்கேற்ப யான் ஆட்கொள்ளப்படுபவனாயினும், நரகத்து அழுத்தப்படும் கெடுவினையனாயினும் என்னைக் கைவிடேல்; வேறு கதியிலேன் என்று விலக்கிக் கூறுகின்றாராதலால், “ஆளாகக் கொள்ளினும் மீளா நரகத் தழுத்தினும் கைவிடேல்” என மொழிகின்றார். மீளா நரகம் என்பது சமயக் கருத்தன்று; சமய வொழுக்கம் தவறலாகாதென மக்கட்கு அச்சுறுத்தற்கென்று பௌராணிகம் படைத்து மொழியும் ஒன்று. எல்லாம் வல்ல பரமன் பேரருளாளனாதலால் எவ்வுயிரும் மீளா நரகத்திற்கு கிடந்து அழியவிடான்; அத் துணிவு பற்றியே வள்ளற் பெருமான் “மீளா நரகத் தழுத்தினுமே” எனக் கூறுகின்றார். சமய தத்துவ நூல்களில் உயிர்கட்குத் திருவடிப்பேறுதான் கூறப்படுமேயன்றி, நரகம் கூறுவது இல்லை. உயிர்கட்கு இலக்கணம் கூறுமிடத்தும், ஆன்மாக்கள் மாசு நீங்கி இறைவன் திருவடியின்பத்துக் குரியவேயன்றி என்றும் நீங்காத துன்பத்துக்குரியவையல்ல என்றுதான் கூறுகின்றன.
இதனால், பௌராணிக நெறிபற்றித் துறக்கத் துறினும் நரகத்து வீழினும் கைவிடலாகாது என வேண்டுவது கருத்தாதல் காண்க. (98)
|