99
99. அன்றாட வாழ்வில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நம்மிடையே தோன்றுகின்றன; அவற்றால் இன்பமோ
துன்பமோ உண்டாகின்றன. இன்பத்தின் மகிழ்ச்சியால் மைந்துறுகின்ற அதற்குரிய காரணத்தை நினைப்பதில்லை;
நினைந்தால் அதன் காரணமாகிய நற்செயல் புலப்படும்; அதுபோலவே, துன்பம் வரும்போது அதற்காகக்
கையறவுபட்டு வருந்துகின்றோம். காரணம் காண்டற்கு அறிவு முற்படுகிறது. காரணத்தைத் தெளிவாக அறிந்துகொண்டு
இனி அதனைச் செய்தலாகாது என முடிவு செய்தற்கும் அறிவு துணை செய்கிறது. அதே நிலையில் துன்பத்துக்குக்
காரணமாகிய குற்றத்தைக் கண்டு பொறுத்து வேண்டுவன உதவுவார் உளராயின், மனத்திற் கலக்கமும் அறிவின்கண்
துன்பமும் இடங்கொண்டு அலைப்பது இல்லையாம். தன் பிழை பொறுத்து ஆதரிப்பவர் உண்டென்ற துணிவு,
மனத்தில் எழுச்சியும் செய்வினைக்கண் ஊக்கமும் அறிவின்கண் தெளிவும் எய்துவிக்கின்றது. அறிவின்
இயல்பினை எண்ணுவோமாயின் அதன் ஆற்றல் ஓர் அளவுக்குட்பட்டே இருப்பது காண்கிறோம்; ஒருசில நிகழ்ச்சிகட்கு
உரிய காரணகாரியங்களை அறியும் அறிவு, அவற்றை நிகழ்ந்த பின்பு ஆராய்ந்து தெளிவதுபோல நிகழும்
முன் அறியும் திறமின்றிக் குறைபடுகிறது. காரணகாரியக் காட்சிக்கு இலக்காகிச் செய்வதோ செய்யாமையோ
மேற்கொள்ளுதற்கு அமைவன சிலவே, பல நிகழ்ச்சிகளை நிகழும் முன்பே காண இயலுவதில்லை; அறிவுக்கும்
அவை தோன்றுவதில்லை; நிகழ்ந்ததையும் நிகழ்கின்றதையும் காரண காரிய நெறியில் அறியும் ஆற்றல்,
பின்னர் நிகழவிருக்கும் பலவற்றை அறிவதில்லை; அறிவுக்கு அவை புலப்படுவதும் இல்லை. நாளை நடப்பதை
யார் அறிவார் என்று சொல்லி நமது அறிவின் சிறுமையை நினைந்து அமைகின்றோம். காரண காரியங்களின்
தொடர்பும் இயல்பும் அறிந்திருக்கும் பான்மையால் சிலவற்றை முன்கூட்டி அறிகின்றோம்; புகை தோன்றக்
கண்டு நெருப்புண்டென்பதும், கருமுகில் திரண்டு மின்னியிடித்து வானத்தே பரவி இருள் செய்வது கண்டு
மழைவரும் என்பதும் இதுபற்றியே யாகும். நிகழ இருக்கும் பல நிகழ்ச்சிகள் அறிவுக்குப் புலப்படாமல்
மறைந்தே உள்ளன; அவற்றை அறியாவாறு அறிவு மறைக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம். இவ்வாறே
முன்பு நிகழ்ந்தனவும் அவற்றிற்குரிய காரணங்களும் நம்மால் மறக்கப்படுகின்றன; அவையும் நினைவினுள்
மறைந்து விடுகின்றன என்னலாம். எனவே உலக வாழ்வில் நமது அறிவு மறைப்புண்டு, இருளிலே இயங்குவதைக்
காணலாம். இதனை உணரும்போது நாம் எங்கே செல்கிறோம்; எங்ஙனம் செல்கின்றோம் என்ற ஏக்கம்
நெஞ்சில் தோன்றுகிறது. இவ்விருளைக் கிழித்துக்கொண்டு மேற்செல்லுதற்கு ஒளிவேண்டுமே; அதனைப்
பெறல் வேண்டுமே என அவாவுகின்றோம். காரண காரியங்களைக் கண்டறிந்த பயிற்சியால் இந்த
இருட் சூழலுக்குள் எவ்வாறு வந்தோம் என எண்ணுகின்றோம்; இதனை நன்கு எண்ணச் செய்கின்றார்
வடலூர் வள்ளல். இந்த இருளுலகில் புகுத்தியது திருவருள்; இருட்சூழலில் நம் அறிவை ஒளிதந்து இயக்குவது
திருவருள். அஃது இவ்விருளில் மறைந்திருக்கிறது. வளம் சுருங்கிய கானகத்தில் தாயில்லாத மான்
இளங்கன்று போல நாம் இருக்கும் நிலையைக் காட்டி அருளின் உண்மை நிலையை உணர்ந்து நாடச் செய்கின்றார்.
அவருடைய பாட்டு இது:
2269. வளங்கன்று மாவனத் தீன்றதன்
தாயின்றி வாடுகின்ற
இளங்கன்று போல்சிறு வாழ்க்கையில்
நின்அருள் இன்றிஅந்தோ
உளங்கன்று நான்செய்வ தென்னே
கருணை உதவுகண்டாய்
களங்கன்று பேரருட் காரென்று
கூறும் களத்தவனே.
உரை: பேரருட்கார் என்று கூறும் களத்தையுடையவனே, பெரிய வனத்தின்கண் ஈனப்பட்டுத் தாய் இல்லையாகிய இளங்கன்று வாடுவது போல உலகவாழ்வில் திருவருளாகிய தாயின்றி உள்ளம் கன்றி வருந்துகின்றேன்; இனி நான் செய்வது என்னே? கருணை புரிவாயாக எ.று.
களங்கு அன்று பேர் அருட்கார் என்று கூறும் களத்தவன் - களங்கமன்று, பெரிய அருளாகிய மழையை நிறைத்திருக்கும் கார்முகிலின் நிறம் என்று சான்றோர் புகழ்ந்துரைக்கும் கழுத்தையுடையவன். களங்கம் என்ற சொல், ஈறு குறைந்து களங்கு என வந்தது. செல்வம் செல்வு எனவும், இன்பம் இன்பு எனவும் வழங்குதல்போல. விடம் உண்டமையால் கரிதாகிய கழுத்தை உடையனாயது பற்றிச் சிவபெருமானை நீலகண்டன் என்றும், கறைக்கண்டன் என்றும் அன்பர் கூறுவதுண்டு. அப் பெருமானைத் திருவருள் வேண்டி முறையிடுகின்றாராதலால், வடலூர் வள்ளல் கறைக்கண்டன் என்பது பொருந்தாது; கறை என்னும் சொல் களங்கம் என்று பொருள்பட்டுவிடும்; களங்கமில்லாததைக் களங்க முடையதெனக் கூறலாகாது; “களங்கு அன்று” என மறுத்து, உயிர்கட்குப் பேரருளை மழைபோல் வழங்குபவனாதலால், கார் மழையின் நிறம் என்று அறிஞர் கூறுவர் என்றற்குப் “பேர் அருட்கார் என்று கூறும் களத்தவன்” என்று மொழிகின்றார். மாவனம் - பெரிய காடு; கொடிய விலங்குகள் உலாவும் காடு என்றுமாம். ஈன்ற தாய் மறைந்தமையின் இளங்கன்று வாடுவது இயற்கை. இளங்கன்றின் வாழ்வுக்குத் தாயன்றிப் பற்றுக் கோடு வேறில்லாமையால்; தாயில்லாத இளங்கன்று வாடுகிறது. தாய்ப் பாலையன்றி வேறு புல்பூண்டுகளை மேய்ந்துண்ணும் கன்றும் இளங்கன்றெனப்படும்; ஒருகால் தாய்ப்பாலையும் ஒருகால் இளம்புல்லையும் உண்ணும் இளங்கன்றெனக் கொள்ளின், இதற்குத் தாயும் இல்லை, இருக்கும் வனத்தில் இளம்புல்லும் இல்லை என்றற்கு, “வளம் கன்றும் மாவனத்து ஈன்றதன் தாயின்றி வாடுகின்ற இளங்கன்று” என்று இயம்புகின்றார். வளம் கன்றுதல் - வளம் வாடுதல். வள்ளலார் வாழ்ந்த நாளில் வடலூர்ப்பகுதி வடக்கில் கெடில ஆற்றின் கரைவரையில் வளங்கன்று மாவனமாகவே இருந்தது. வளம் கன்றும் மாவனம்போல அருள் வளம் இல்லாதது தமது வாழ்க்கை என்று உரைத்தற்குச் “சிறு வாழ்க்கை” என்று குறிக்கின்றார். சிறுமை - அருட்பேற்றுக்கு வாய்ப்பில்லாமை. இளங்கன்றை ஈன்ற தாய் உடனில்லாதது மறைந்ததுபோலத் திருவருளின் ஒளியில்லாமையும், அதனால் அக் கன்று வாடுவதுபோலத் தமது உள்ளம் அருள்ஞானப் பேறின்றி வாடுகிறது என்பாராய், “நின் அருள் இன்றி அந்தோ உளம் கன்றும்” என்று உரைக்கின்றார். இருட் சூழலின் இடைப்பட்டோர் ஒளித்துணையின்றி ஓர் அடியும் இயங்க முடியாத வாறுபோல, நின் அருளின்றி ஒன்றும் செய்யகில்லேன் எனப் புலம்புவது விளங்க, “நான் செய்வது என்னே” என்று புகல்கின்றார். அருள் ஒளி நல்குக என வேண்டுவாராய், “கருணை உதவு கண்டாய்” என்று முறையிடுகின்றார். அருளைக் கருணை என்பது வடநூல் வழக்கு, எனினும், அருள் என்னும் தமிழ்ச் சொல்லின் பொருளாழம் கருணை என்னும் வட சொல்லுக்கு இல்லாமையை ஓர்ந்து கொள்க.
இதனால் உலகியல் வாழ்வு அருட்பேற்றுக்கு வாய்ப்பில்லாத சிறுமை யுடையதென்று கூறி அருட்டுணை புரிக என வேண்டுவது பயனாதல் காண்க. (99)
|