100
100. காலையிலிருந்து மாலையில் விளங்கொளி மறைகிறவரையில்
வீதிகளில் இரப்பவர் கூட்டம் இருந்தவண்ணம் இருக்கிறது. ஆணும் பெண்ணும் இளையரும் முதியருமாய்
இரப்பவர் காணப்படுகின்றனர். அவர்கட்கு ஈபவர் சிலரும் மறுப்பவர் பலருமாகவே எங்கும் உள்ளனர்.
அவர்களைக் கண்டதும் அருள்கொண்டு முகமலர்ந்து இன்சொல் மொழிந்து ஒன்றை ஈகின்றவர் இல்லை.
வெறுப்புமிகுந்து முகம் சிவந்து வன்சொல் உரைத்து வெருட்டுபவரே எங்கும் காணப்படுகின்றனர். சிலர்
நாயினும் கடைப்பட்ட உயிராக எண்ணிப் புறக்கணிக்கின்றனர்; சிலர் வேண்டா வெறுப்புடன் யாதேனும்
ஈகின்றனர். தசரதன் ஆட்சியிலும் இரப்பவர் கூட்டம் கடல்போல் பெருகியிருந்ததென்றும், அதனை
அவன் ஈந்து கடந்தான் என்றும் கம்பர் கூறுகின்றார். சங்க காலத்திலும் தொல்காப்பியர் காலத்திலும்
இடைப்பட்ட நிலையில் திருவள்ளுவர் காலத்திலும் இரப்பவர் கூட்டம் இருந்ததென்றும், அவர்களை
மறுத்துப் புறக்கணிக்கும் கூட்டமும் இருந்ததென்றும் அக் கால நூல்களால் அறிகின்றோம்.
அறவோர் சிலர் ஈதல் அறம் என்றும்,
ஈவோர்க்கு மேலுலக இன்ப வாழ்வு உண்டென்றும் உரைத்தனர்; அவருட் சிலர் தாமும் இரத்தலை மேற்கொண்டனர்.
வேதியர் உயர்ந்தவர் என்றும், அவர்கட்கு இரத்தல் அறுவகைத் தொழிலில் ஒன்று என்றும் கூறினர்;
நூல்களிலும் எழுதி வைத்தனர். உயர்ந்தோராகிய வேதியர் இரப்பதுகண்டு மற்றையோரும் இரப்பது
இகழ்வன்று என எண்ணி மேற்கொண்டனர். துறவோருட் சிலர் இரத்தல் ஈவோர்க்கு நலம் பயக்குமென்று
சொல்லி இரப்பாராயினர். அதனால் இரப்போர் கூட்டம் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது
எனப் பொருணூலார் ஆராய்ந்துரைக்கின்றனர். புலவர், பாணர், கூத்தர், ஓவியர் முதலியோர் செல்வரைநாடி
இயலும் இசையும் கூத்தும் ஓவியமும் பிறவுமாகிய கலைத்துறையை வளர்த்தமையின்,
அவர்கள் சில சமயங்களில் தம்மை இரவலர் என்பராயினும்
உண்மையே நோக்கி அவர்களையும் அவர்களையொத்த கலைவாணர்களையும் இரவலர் என்னாமல் பரிசிலர்
எனக் குறித்தனர். சமுதாய வரலாறு காண்போர் மக்களினம் சமுதாயமாக உருப்பட்டு வாழத் தொடங்கிய
நாளில் இரப்போர் கூட்டம் இருந்ததில்லை; போர் முதலிய நிகழ்ச்சிகளால் ஆதரவிழந்து வாழ வழியின்றி
மெலிந்தோர்க்கும், கடல்கோள், மழையின்மை, மழைமிகுதி யாகியவற்றால் வாழ்விழந்தோர்க்கும்
பிறவியிலேயே உழைப்புக்கிடமின்றி கண் கை, கால், முதலிய உறுப்பிழந்தோர்க்கும்
வாழ்வளிக்கும் வகையில் இரத்தலும் ஈதலும் அறமாகும் என்று அறிஞர் முறை செய்தனர்; ஈத்துவக்கும்
செல்வரைப் புகழ்ந்து இசைப்பாட்டுக்களால் சிறப்பித்தனர்; அப் பெற்றியோர்க்கு இறவாப்
புகழுடம்பு நல்குதலின், இரத்தலை நூல்களில் எடுத்தோதினர், பண்டை நாளைச் சான்றோர். அரசர்களும்
செல்வர்களும் தனித்தனியாகவும் திருக்கோயில்களிலும் அறக்கூழ்ச்சாலைகள் பல அமைத்து நிவந்தங்கள்
வகுந்தனர். ஈதற் புகழை விரும்பினோர் இரப்போர் தகுதி நோக்காது ஈதல் ஒன்றையே எண்ணினர்;
அவ்வாறு ஈதலைக் கொடைமடம் என்று கூறிப் பாராட்டினவரும் உண்டு. “கொடை மடம் படுதலல்லது,
படைமடம் படான் பிறர் படை மயக்குறினே” என்று சங்கச் சான்றோர் பாடினர். கொடைவளம் என்னாமல்
மனம் என்றதே, இரப்போர் தகுதி நோக்காது கொடுத்தல் சிறப்பன்று என்று உணர்த்துகிறது. அது நோக்காது
வேந்தரும் செல்வரும் கொடைமடம் பட்டது இரப்போர் கூட்டம் பெருகுதற்கு ஊக்கிற்று.
எவ்வழியும் மடம் தீதாகலின்
கொடுப்போரது கொடைமடம், உழைத்து வாழ்க்கை நடத்தும் தகுதியுடைய சிலரை உழைப்பின்கண் செலுத்தாது,
பிறர் உயைப்பின் பயனை உண்டு வாழும் இழிநிலையைத் தோற்றுவித்தது. அத்தகைய இரவலர்களைத்
தெருட்டி நன்னெறிக்கண் செலுத்தற்குத் திருவள்ளவர் முதலியோர் “இரவச்சம்” என்ற தலைப்பில்
பல உயரிய கருத்துக்களால் அவரது மானவுணர்வைத் தூண்டி இரத்தல் கூடாதென மறுத்தனர். உழையாதே பெற்ற
உணவு, அவரது மானவுணர்வைச் சிதைத்து மக்கட்பண்பைக் கெடுத்து விலங்குணர்வைப் பயந்தது. இடிப்பினும்
கடியினும் ஏசினும் கூசாது இரந்துண்டலையே அக் கூட்டம் மேற்கொண்டுறைவதாயிற்று. நாளடைவில் இரப்போர்
கூட்டம் எண்ணிக்கை மிகுந்து எங்கும் எக்காலத்திலும் நாட்டின் எல்லா இனத்திலுமன் உளதாயிற்று.
இக் கூட்டத்தை ஒருபாலும், இவர்கட்கு
ஈவாரை ஒருபாலும் காண்கிறார் நம் வடலூர் வள்ளல். ஈவார் ஈயார் என நோக்காது யாவர் முன்னும்
சென்று எண்சாண் உடம்பும் முக்காற் சாணாய்ச் சுருங்கி நின்று, ஈவோர் இழித்தும் பழித்தும் ஏசினும்
செவியிற் கொள்ளாமல் ஏக்கற்று நிற்பதும், ஈந்தவழி யுவகை யுறுவதும், ஈயாவழி ஏங்கிச் செல்வதும்
வள்ளலார் உள்ளத்தில் பெருந்துன்பம் தருகின்றன. இரப்போரது புன்கண்மையும் ஈயாரது வன்கண்மையும்
அவர் உள்ளத்தை உருக்குகின்றன. “இரவுள்ள உள்ளம் உருகும்” என்ற திருவள்ளுவப் பயனை நினைக்கின்றார்.
நெஞ்சம் உருகிக் கண்களில் நீரைச் சொரிகிறது. இரத்தல் துன்பமே என வாய் வெருவுகின்றார்.
இரப்பவர்பால் காணப்படும் துன்பத்தை
எண்ணிய வள்ளலார் உலக வாழ்வில் பிறர் எய்தும் பிற துன்பங்களை நோக்குகிறார். ஒருபால் தோன்றிய
துன்பம் இனம்பற்றிப் பிறர்படும் துன்பத்தைக் காட்டுகிறது. உண்டி கருதியும் உடை குறித்தும்
உறைவிடம் நாடியும் மக்கள் படும் துன்பவகையும், தன்னலம் பேணியும் இனநலம் எண்ணியும் செய்வனவற்றால்
எய்தும் துன்பவகையும், அறிவு செயல்களால் ஏற்றம் பெறுவது கண்டு பொறாது தூற்றுவோராலும், இழிவு பெறுவது
கண்டு எள்ளி நகையாடுவோராலும் எய்தும் துன்பவகைகளையும் உள்ளத்தில் நிறுத்திப்
பார்க்கின்றார். இரப்போர் கூட்டம் துன்ப இருள் படிந்த தூறு போலவும், பிறர் பிறவகையால் எய்தும்
துன்பச் சூழல் நிலைகொள்ளாச் சேறு போலவும் தோன்றுகின்றன. அவரிடைத் தாமும் ஒருவராய் இயைந்து
நின்று, இத்துன்பங்கள் அனைத்தும் நீங்கினாலன்றி, நல்வாழ்வால் ஞானம் எய்தித் திருவருட்பேறு
பெறுதற்கு வழியில்லை எனக் கண்டு திருவருள் முறையீடு செய்கின்றார்.
2270. காற்றுக்கு மேல்விட்ட பஞ்சாகி
உள்ளம் கறங்கச்சென்றே
சோற்றுக்கு மேற்கதி இன்றென
வேற்றகந் தோறும்உண்போர்
தூற்றுக்கு மேல்பெருந் தூறிலை
ஆங்கென் துயரமெனும்
சேற்றுக்கு மேல்பெருஞ் சேறிலை
காண்அருட் செவ்வண்ணனே.
உரை: செம்மை நிறமுடைய பெருமானே, காற்றில்விட்ட பஞ்சு போலப் பறக்கும் உள்ளத்தோடு வீடுதோறும் சென்று இரந்துண்ணும் சோற்றைவிடப் பெறற்குரிய கதி வேறில்லை என்று உழலும் இரப்போராகிய தூற்றுக்குமேலும் மக்களினத்திற் பெருந்தூறு இல்லை; அது போல என் போன்றார் எய்தும் துன்பமாகிய நிலை கொள்ளலாகாத சேறு வேறில்லை; ஆதலால், இச் சேற்றினின்றும் கரையேற அருள் புரிக எ.று.
“சிவன் எனும் நாமம் தனக்கே யுடைய செம்மேனி யம்மான்” எனச் சான்றோர் பரவுதலால், சிவனைச் “செவ்வண்ணனே” என்று சிறப்பிக்கின்றார். காற்றிற் பறக்கவிட்ட பஞ்சு, காற்றுக்குமேல் விட்ட பஞ்சு எனப்படுகிறது. 'ஆகி' என்றவிடத்து ஆக்கம் உவமப் பொருட்டு. கறங்குதல் - சுழலுதல்; ஊர்தோறும் வீடுதோறும் உறுவோரைக் காணுந்தோறும் இரந்து உழல்தல் பற்றி “உள்ளம் கறங்கச் சென்ற” என்று இரப்போர் மன நிலையை வள்ளலார் எடுத்துக் காட்டுகின்றார். இரத்தலின் இழிவு நினையாது வீடுதோறும் சென்று இரந்துண்பதே கருதி உள்ளம் கறங்குதற்கு காரணம் இதுவல்லது இல்லை என்பாராய், “சோற்றுக்கு மேற்கதியின்று” என்ற கருத்தையே உள்ளத்தில் ஏற்றிருக்குமாறு தோன்ற, “சோற்றுக்கு மேற்கதியின்றென ஏற்று” என வுரைக்கின்றார். “தாள் தந்தது உண்ணலின் ஊங்கு இனியது இல்” (குறள் 1065) என்ற உணர்வின்றி, உழைப்பின்றி இரந்தேனும் உண்பதுவே உயர்கதி எனக் கருதும் இரவலரது இழிநிலையைச் “சோற்றுக்கு மேற்கதி இன்றென அகந்தோரும் ஏற்றுண்போர்” எனக் கூறுகின்றார். கதியின்றென ஏற்று” அகந்தோறும் ஏற்று என இரண்டிடத்தும் ஏற்றென்பதனை ஒட்டுக. ஓரறிவுயிர்களாகிய செடிகொடிக ளிடையேயுள்ள தூறுகளைப் போல மக்களிடையே இரவலர் கூட்டம் தூறாக இருத்தலின் “ஏற்றுண் போர் தூற்றுக்கு மேல் தூறு இலை” என்று சுட்டிக் கூறுகின்றார். ஆங்கு, உவமவுருபு. இருள் படிந்து கொடிய உயிர்கள் தங்குதற்குத் தூறுகள் இடமாதல் போல, இரப்போர் தூறுகளிலும் உழைப்பு விழையா இருள் படிந்து தீயநினைவும் செயலும் தங்கும் என்பது குறிப்பு. உழைப்பிலா வுள்ளம் தீய நினைவின் உறையுள் என்பது அறிஞர் அறிந்துரைக்கும் அறிவுரை; அறவுரையுமாகும். இங்கே துயரம் என்பது உழைப்பவர்க்கு உளவாகும் பலவேறு துன்பவகைகள். கால் வைத்த வழி கொள்ளாவாறு தன்னுள் ஆழ்த்தி வாழ்த்தும் கடுஞ்சேற்றைப் “பெருஞ்சேறு” என உரைக்கின்றார். பெருமை - மிகுதி. துன்பவகைகளும் தம்மையே நினைந்து தமக்குள்ளே ஆழ்த்தி உய்தி நாடாதபடி உள்ளத்தை விழுங்கிக் கொள்வது பற்றித் “துயரமெனும் சேற்றுக்குமேல் பெருஞ்சேறு இலை” என அறுதியிட்டுக் கூறி, உய்தியாவது திருவருள் அல்லது வேறு யாது மில்லை என்று வேண்டலுற்று, “அருள் செவ்வண்ணனே” என முறையிடுகின்றார்.
திருவருள் வேண்டி இனமல்லாத இரப்போர் தூற்றையும் துயரச் சேற்றையும் இணைத்துப் பூட்டி உரைப்பது metaphysical poetry என்று கொண்டு, இப் பாவலர் பாட்டுக்களில் “The most heterogeneous ideas are yoked by violence together என்று ஜான்சன் கூற, The heterogeneity of material is compelled into unity by the operation of the poet's mind and it is omnlpresent in poetry என்று டி.எஸ்.எலியட்டும் கூறுவர். (100)
|