101
101.வடலூர் வள்ளல் தம்மையும் தமது நெஞ்சினையும் வேறாக நிறுத்தி, அதனைத் தமது தெளிவுக்காட்சியிற்
காண்கின்றார்; ஓரிடத்தும் ஒரு நொடிப்போதும் நில்லாமல் இங்குமங்கும் நெஞ்சம் அலமருகிறது.
அதன் சுழற்சி அவர்க்கு வியப்பைத் தருகிறது. மேனோக்கி உயர்வதும், கீழ் நோக்கி வருவதும், நாற்றிசையிலும்
பரந்து திரிவதும், அலையலையாய் எண்ணங்களை எழுப்பி அவற்றின்மேல் மிதப்பதும், தனக்குள் சுழன்று
ஆழ்ந்து செல்வதும் காணக்காண, அவரது திருவுள்ளம் அருள் நிறைந்து உலகிற்குணர்த்த விரைகின்றது.
அவ்விரைவு ஒரு பாட்டுருக் கொண்டு வெளிவருகிறது.
2271. அந்தோ துயரில் சுழன்றாடும்
ஏழை அவலநெஞ்சம்
சிந்தோத நீரில் சுழியோ
இளையவர் செங்கை தொட்ட
பந்தோ சிறுவர்தம் பம்பர
மோகொட்டும் பஞ்சுகொலோ
வந்தோ டுழலும் துரும்போஎன்
சொல்வதெம் மாமணியே.
உரை: எங்கள் மாமணியாகிய சிவமே, துயரால் சுழன்றாடும் நெஞ்சம் நீரில் தோன்றும் சுழியோ, இளமகளிரின் செங்கையிற்பட்ட பந்தோ, இளஞ்சிறுவர் கயிறுசுற்றி ஆடும் பம்பரமோ, இலவம்பஞ்சோ, சிறுதுரும்போ, இன்னதென்று உவமம் சொல்லலாகாமல் உளது; என்னென்பது. அடியேற்குக் காட்டியருள்க எ.று.
மாமணியெனப் பொதுப்படக் கூறினாராயினும் சிவந்த மாணிக்க மணியென்று கொள்ளவேண்டும். சிவனை ஞானகுரவர்கள் “சிவன் எனும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி அம்மான்” என்று காட்டியுள்ளனர். தனிநிலையில் நெஞ்சம் மென்மையுடையது; அதனால் “அவல நெஞ்சம்” என்றும், உயிரறிவின் திருமுன்னர்ச் செயல்படாத ஏழைமைபற்றி, “ஏழை அவல நெஞ்சம்” என்றும் பரிந்துரைக்கின்றார். அறிவில் உளதாகும் சிறுமை ஏழைமை எனப்படும்; செல்வம் குறைந்து வற்றியநிலை வறுமையாகும். அம் மரபுபற்றியே சான்ற்றோர் நிறைந்த செல்வமுடையவன், அறிவு சுருங்கியவனாயின், அவனை “ஏழை” என்கின்றார்கள் “எனது எனது என்று இருக்கும் ஏழை” என்று சயினமுனிவரும் கூறுவது காண்க (நாலடியார்). அவலம் - வலியின்மை. மக்கள் உடல் வலியையும் அறிவு வன்மையையும் குறைத்து மெலியச்செய்வது துயரம். துயருற்று மெலிதாய நெஞ்சம் பஞ்சினும் மென்மையுற்றுத் துரும்பினும் தனிமையுற்று அலைவது கண்ட வள்ளலார், “துயரில் சுழன்றாடும் நெஞ்சம் கொட்டும் பஞ்சு கொலோ வந்தோடுழலும் துரும்போ” எனச் சொல்லுகின்றார். பஞ்சிடைக் கலந்துறையும் கொட்டைகளையும் தூசு துரும்பு முதலிய மாசுகளையும் நீக்கும் செய்கையைக் 'கொட்டுதல்' என்றும், 'நூலாக்கும் செய்கையை நூற்றல்' என்றும் வழங்கும் மரபுபற்றி, “கொட்டும் பஞ்சுகொலோ” என்று உரைக்கின்றார். வந்து ஓடி உழலும் துரும்போ என்ன வேண்டியதை “வந்து ஓடு உழலும் துரும்போ” எனக் குறிக்கின்றார் வந்து என்றாற் போல ஓடு என்பது வினையெச்ச வாய்பாட்டில் இல்லை; முதனிலை (பகுதி) வடிவிள் உளது; அது சொற்களோடு தொடர்புறும்போது “வரிப்புனை பந்து” என்றாற் போலத் தொடர்நிலைக் கேற்ப, வினையெச்சமாகவும் பெயரெச்சமாகவும் இயையும். வரி என்ற முதனிலை, வரிந்தென்று வினையெச்சமாகவும், புனையென்ற முதனிலை புனைந்த எனப் பெயரெச்ச மாகவும் நிற்பது காணலாம். அவ்வியல்புபற்றி, இங்கே 'ஓடு' என்ற முதனிலை ஓடி எனப் பொருள்பட்டு உழலுமென்பதுடன் இயைபுறுகின்றது. காற்றலையில் அகப்பட்டு மிதக்கும் துரும்பு முன்னும் பின்னும் அசைந்து பறப்பதுபோல நெஞ்சின் பரப்பு இருப்பது விளங்க “வந்தோடுழலும் துரும்போ” என மொழிகின்றார். இதுபோன்ற நுண்ணிய இலக்கண மரபுகள் செறிய நிற்கும் சைவத் திருமுறைத் திருப்பாட்டுக்களின் பயிற்சிப் பிழிவாக வடலூர் வள்ளலின் அருட்பா அமைந்திருப்பது கண்டு வியந்து மகிழும் மேலோர், உவகை மீதூர்கின்றனர்.
நினைவுகளின் நுண்மை காணும் முயற்சியில் சுழிந்து ஆழ்ந்து செல்வது நெஞ்சிற் கியல்பு. விஞ்ஞானத் துறையிலும் பிற துறையிலும் அறிவாராய்ச்சி செய்வோர் நெஞ்சம் இவ்வாறு சுழிவது அனுபவ வாயிலாகக் காண்பது; இந்நாளில் பலரும் அறிந்தது. நீர்ச்சுழிகளில், ஆற்றுநீர்ச் சுழியினும் கடனீர்ச்சுழிகள் வன்மை மிக்கவையாதலால் அவற்றைச் “சிந்தோத நீரின் சுழி” எனக் காட்டுகின்றார். சிந்து - கடல். ஓத நீர் - தட்பமும் முழக்கமும் பெருக்கமும் உடைய நீர்.
விளையாட்டுப் பொருள்களில் ஒன்று பந்து; பந்தாடும் விளையாட்டு சங்க காலத்துக்கு முன்பிருந்தே நம் தமிழகத்தில் இருந்து வருவது இலக்கியங்களால் விளங்கும் உண்மை. பந்தாடுவது மகளிர்க்கே உரியதெனத் தமிழர் குறித்தனர். மேனாட்டவருள்ளும் பூப்பந்து மகளிர் விளையாட்டு என்பவர் பலர்; ஆனால் அஃது ஆடவர்க்கு விலக்கன்று. ஒரு காலத்தில், ஒரு கையில் பன்னூறு பந்துகளை எறிந்து இளமகளிர் ஆடுவர் எனக் கொங்குவேளிர் எடுத்துரைக்கின்றார். மகளிராடிய பந்துகள், “கிடையும் பூனையும் இடைவரியுலண்டும் கொண்டு திரட்டி, பீலியும் மயிரும் வாலிதின் வலந்து, நூலினும் கயிற்றினும் நுண்ணிதிற் சுற்றி, பாம்பின்தோலும் பீலிக்கண்ணும், பூம்புனல் நுரையும் புரையக் குத்திப், பற்றிய நொய்ம்மையின் பல்வினைப் பந்துகள்” என்பர். ஒருமுறைக்கு ஏழு கொண்டு இருகையும் செலுத்தி ஆடும் இப்பந்துகள், “வெண்மையும் செம்மையும் கருமையும் உடையன; தண்வளி எறியினும் தாம் எழுந்தாடுவ; கண்கவர் அழகொடு நெஞ்சகலாதன” எனச் சிறப்பிக்கின்றனர். பந்து ஏந்தி ஆடும் இளமகளின் ஆடலை,
காந்தள் முகிழ் நனிகவற்றும் மெல்விரலின் ஏந்தினள் எடுத்திட்டு எறிவுழி முன்கையில் பாய்ந்தவை நிலத்தினும் விசும்பினும் ஓங்கிச் சூறை வளியிடைச் சுழல் இலைபோல மாறுமா றெழுந்து மறிய மறுகி ஏறுப இழிப ஆகாய நிற்பன வேறுபடு வனப்பின் மும்மைய வானவை ஏர்ப்பொலி வளைக்கை யிரண்டே யாயினும் தேர்க்கால் ஆழியின் சுழன்றவை தொழில் கொள
அப்பந்துகளை,
“அங்கையின் ஏற்றும் புறங்கையின் ஓட்டியும் தங்குற வளைத்துத் தான்புரிந் தடித்தும் இடையிடை யிருகால் தெரிதர மடித்தும் அடிமுதல் முடிவரை இழைபல திருத்தியும் பந்துவரல் நோக்கியும் பாணிவர நொடித்தும் சிம்புளித் தனித்தும் கம்பிதம் பாடியும் ஆழியென உருட்டியும் தோழியோடு பேசியும் சாரிபல ஒட்டியும் வாழி என வாழ்த்தியும்
விளையாடுவர். ஆடல் காண்பவர்,
ஐயபந் தெழவெழ அதனுடன் எழுதலின் கையும் காலும் மெய்யும் காணார் மண்ணினள் விண்ணினள் என்றறி யாமை ஒண்ணுதல் மாதரை யுள்ளுழி யுணரும் தன்மையும் அரிதெனத் தனித்தனி மயங்கி மாயம் கொல் இது மற்றொன்று இல் என”
மருளுவர். இங்ஙனம் பந்து உடல் முழுதும் சூழ்ந்து மேலும் கீழும் பக்கம் அனைத்தும் உருண்டு திரிவதுபோல, நெஞ்சும் உருண்டும் திரிந்தும் ஓடியும் அலைவதுபற்றி, “இளையவர் செங்கை தொட்ட பந்தோ” எனத் தெரிவிக்கின்றார்.
இதனால், நிலையின்றி அலைந்தவண்ணம் சுழன்று நிலவும் நெஞ்சின் அலமரும் இயல்பு கூறுவது பயன் என்க. (101)
|