102
102. நிலையின்றி அலையும் மனத்தை நோக்குகின்ற வள்ளற் பெருமான் தன் பக்கல் நிறுத்தித்
தன் வசமே நின்று இயக்க முயல்கின்றார்; அது நில்லாது சுழல்கிறது. சுழல்கின்ற ஒன்று யாதானுமொன்றைப்
பற்றுமாயின் சுழற்சி குன்றி நிற்கும். அவ்வகையில் நெஞ்சம் உலகையோ உயிரையோ இறைவனையோ
பற்றுமாயின் தன் சுழற்சி குறைந்து ஒன்றி நிற்கும். உலகில் உடம்பொடுகூடித் தோன்றி விட்டமையின்,
அது பற்றுதற்கு நிலப்பொருள் உளது. அழகிய உரு நலம் வாய்ந்த மகளிர் உள்ளனர்; பொன்
இருக்கிறது; தான் நிலவும் இடமாகிய என் உடம்பிருக்கிறது. உடம்பொடு கூட்டி உலகில் வாழச்செய்யும்
ஊழ் இருக்கிறது. தாழ்ந்த பொருள் வேண்டுமாயின் என் உயிரோடு அனாதி தொடர்புற்றிருக்கும் மலம்
இருக்கிறது. இவற்றுள் எதனைப் பற்றியும் இயங்கலாம். இன்னது உறுதியெனத் தேர்ந்து பற்றாது அலைந்தவண்ணம்
உளது. அதன் நிலை யாதாயினும், ஒன்று உண்மை; அஃது என் வசம் இல்லை. எத்துணையோ முயன்று நிற்கச்
செய்யினும் என் வசம் நெஞ்சம் நிற்கின்றதில்லை. யான் மாத்திரம் அந்நெஞ்சின் வசம் நில்லாது
நின் வசமாயினேன்; என்னை ஏன்று அருளல் வேண்டும் என வள்ளற் பெருமான் முறையிடுகின்றார்.
2272. பொன்வச மோபெண்க ளின்வச
மோகடற் பூவசமோ
மின்வச மோஎனும் மெய்வச
மோஎன் விதிவசமோ
தன்வச மோமலந் தன்வச
மோஎன் சவலைநெஞ்சம்
என்வச மோஇல்லை நின்வசம்
நான்எனை ஏன்றுகொள்ளே.
உரை: பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை கொண்டோ, உடல்மேல் ஆசை வைத்தோ என் வலியில்லாத நெஞ்சம் அலைந்த வண்ணம் இருக்கிறது; தனக்கென ஒரு பற்றுக்கோடு இல்லாமையால் பழைய வினைவாசம் நிற்கிறதோ, என்னுயிரைப் பிணித்திருக்கும் மலத்தின் வசம்பட்டதோ தெரியவில்லை. அது தன் இச்சைவயமாகி இங்ஙனம் திரிகிறதோ என்னவோ, அறியேன். ஆனால் அதனோடு கூடியுறையும் யான், எனினும் அஃது என் வசம் இருப்பதில்லை; நின் வசமே யான் எப்போதும் உள்ளேன்; அருள் செய்து என்னை ஏற்றுக்கொள்க. எ.று.
ஊணுறக்கம் இன்றி நாளும் பொன்பெறுவதையே நினைந்து உயர்வு தாழ்வு கருதாது எச் செயலையும் செய்து திரிபவர் நெஞ்சம் பொன்வசம் நிற்பதாகும். பெண்ணாசை கொண்டோர் மனம், பெண் கூட்டத்தையே விரும்பி அவட்கு அடிமையாய் அவள் ஏவினவே செய்து அடிவருடி அவளை மகிழ்வித்துத் திரியும். கடற்பூ - கடல் சூழ்ந்த மண் பரப்பு. நிலத்தின் விளைவுமேல் ஆசை மிகுந்து, பக்கத்தார்க்கும் அயலார்க்கும் அல்லல் விளைத்து, வஞ்சனையும் சூழ்ச்சியும் மேற்கொண்டுழல்வோர் நெஞ்சினை மண்ணாசைப் பிடித்தது என உலகவர் கூறுவர். சிலர் தருவனவுண்டு தக்கவாறு நீராடி, உயர்ந்தனவுடுத்துப் பொன்னாலும் மணியாலும் ஆன பூணாரங்களால் உடலைப் புனைந்து, வாசனைப் பொருள்களால் அணி செய்து, உடல் வருந்த உழைப்பதை எண்ணாது இயலுவர்; அவர் நெஞ்சம் உடல் வசம் நிற்பதாகும்.
நாம் ஒன்றை நினைக்கின் வேறாக ஒன்று விளைவதும், நினையாத ஒன்று தோன்றி இன்பமோ துன்பமோ செய்வதும், நல்லது நினைந்து நன் முறையிற் செய்யுங்கால் தீயதுதோன்றி வருத்துவதும், தீது நினைந்து வேண்டுமென்றே பிழைசெய்யினும் அதனால் நன்மை விளைவதும் உண்டு. அதனை, ஊழ்வினை என்றும், பழவினை எனவும் அறிவர் கூறுவர். செய்த வினையின் பயன் செய்தவற்கே உரியது; அதனை அவனே நுகர்தல் வேண்டும் என்பது விதி; பழவினைப்பயன் அடையும் இயல்பு பற்றி அதனை விதியென்றும் தலையெழுத்து என்றும் உலகவர் சொல்லுவர். நற்செய் கையிடையே தீது புகுதலால் துன்புறுங்கால் மனம் விதிவசமாகப் போய்விட்டது எனத் தேறித்தெளிவது அறிஞர் மரபு; தெளியாது புலம்புவது சிறியவர் செய்கை. ஒரு நெறிப்படாது பல் பொருள்களிலும் செயல்களிலும் தலையிட்டு வருந்துவோருண்டு. செயலின் பெருமை சிறுமை நினையாமல் எதனையும் மேற்கொண்டு செய்து திரிபவரை மனம் போனபடி போகும் மாண்பிலார் என்பர்; என் இச்சைவழி நில்லாமல் எங்கும் ஓடி மனம் இடர்ப்படுகிறது; இதனால் என் மனம் தன் போக்கில் திரிகிறது என்பாராய் “தன் வசமோ” என வுரைக்கின்றார் அடிகளார்.
ஒளிக்குள் இருள்போல உணர்வு வடிவாய உயிரின்கண் ஒன்றியுளது; அதனை மலம் என்பர். பரந்து விரிந்து இயலும் பண்பினதாகிய உணர்வைச் சுருக்கி அணுவடிவினதாக்கித் தன்னலமல்லது பிறர் நலம் நினையாவாறு பிணிக்கும் பெருவலியுடையது; மறைப்பும் மறப்புமாகிய செயல்களால் உயிரறிவைக் குற்றம் செய்விப்பதும் இம் மலம்; தூய நினைவும் தூய மொழியும் தூய செயலும் தோன்றாமல், தீய நினைவும் தீமொழியும் தீயசெயலும் கொள்ளச்செய்வதும் இம் மலமே என்பர். அணுவாய்ச் சுருக்குவது பற்றி ஆணவ மலம் என்றும், அறியாமை விளைவிப்பதுபற்றி இருள் மலம் என்றும் சைவநூல்கள் உரைக்கின்றன. இவற்றைச் செய்தற்கு உடனிற்பதால் நெஞ்சம் மலத்தின் வசமாய்விட்டது போலும் என்பாராய், “மலம் தன் வசமோ” என வள்ளலார் மொழிகின்றார். தன்னளவில் வலியின்றி மெலிந்து அலைந்து துன்புறுவது தோன்றச் “சவலை நெஞ்சம்” என்று இகழ்கின்றார். உரிய வளர்ச்சியும் வலியும் தெளிவும் இல்லாத குழந்தைகளைச் சவலைக் குழந்தை என்பது உலகியல் வழக்கு.
“இந் நெஞ்சம் சவலையானதன்றி என் வசம் இருப்பதன்று; அதனால் அது செய்யும் வினைகளின் பயன் என்னைச் சார்வனவல்ல; யான் நின் வசம் இருக்கின்றேன்:” என்பாராய் “என் சவலை நெஞ்சம் என் வசமோ இல்லை; நின் வசம் நான்” என மொழிந்து, இத்தகைய என்னை உனக்கினிய அடியார்களில் ஒருவனாக ஏற்று அருள் புரிதல் வேண்டும் என்று கூறும்; வடலூர் அடிகள் “என்னை ஏன்று கொள்” என வேண்டுகிறார்.
அடியேன் நெஞ்சம் பல பொருள்களின் வசம் நின்று வருந்துவது போல் இன்றி யான் நின் வசம் நிற்கிறேன்; அஃதும் என்னுடைய நெஞ்சமாயினும் என் வசம் நிற்பதில்லையாதலால், அதுபற்றி என்னைப் புறக்கணிக்காமல் ஏற்று அருள் புரிக என்பது இப்பாட்டின் பயனாம். (102)
|