103

       103. வாழ்வில் செல்வமிகுதியும், உடலில் வளமும், உலகியற் கல்வி மிகுதியும் பெற்றவிடத்து, மக்களிற் சிலருக்குச் செருக்கு மிகுந்து அறிவு மழுங்குவதுண்டு. அதனால், பிறர்க்குத் தீங்கு செய்யச் செருக்கு முற்படுகிறது; உடல் வளம் செருக்குக்குக் துணையாய்த் தீயொழுக்கத்துக்கு முதலாய் விடுகிறது; உலகியற் கல்விச்செருக்குத் தன் குற்றத்தைக் காணவிடாது பிறர் குற்றம் கண்டு பேசிப் பலரது பகைமைக்கு இரையாக்குகிறது. 
 

      ஒருவர்க்கு அறிவும் மனமும் மென்மையுடைய வாயின், செல்வம் கல்வி முதலியவற்றின் மிகுதி, களிப்பினை யுண்டுபண்ணிப் பெரியோர் பெருமையையும் நண்பரது நட்பினையும் அன்பரது அன்பையும் காணாவாறு அறிவுக் கண்ணை மறைத்துவிடுகிறது. விதி விலக்குகளுக்கு அடங்கி நடத்தலும், தந்தை தாய்ச் சுற்றத்தார் யாவரையும் மதித்தலும் இன்றி, மனம்போன நெறியில் செலுத்துகிறது. சொல்லிலும் செயலிலும் குற்றங்கள் மலிகின்றன. “அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்” என்னும் அறவுரை செவியுட் புகாது தடைப்படுகிறது. இச்செருக்கை வடமொழியாளர் “மதம்” என மொழிவர். இம்மதமாகிய குற்றம், இனம் சூழவாழும் மக்கட் சமுதாயத்தின் இனிய பண்பாட்டைக் கெடுத்துப் புலி சிங்கம் முதலிய கொடிய விலங்குகளின் குணத்தைத் தோற்றுவிக்கிறது. இக் குணம் செயல்களால் அவ்விலங்குகளின் இனம் தேய்ந்து அருகிவிட்டது; அதுபோலவே. இம்மதமாகிய குற்றமுடையோரால் மக்கட் சமுதாயம் காலமுறையில் குன்றிச் சீர்குலையும் என உணர்ந்தே ஆன்றோர் இக்குற்றங்களைப் போக்குதல் வேண்டுமென வற்புறுத்தியுள்ளனர்.
 

      திருவள்ளுவர் இக் குற்றங்கள் “அற்றம் தரூஉம் பகை” என அறிவித்தார். ஞானசம்பந்தர், “அறுபகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞானம் புகலுடையோர் தம் உள்ளப் புண்டரிகத்துள்ளுறையும் புராணர்” என மொழிந்தருளி, உள்ளம் சிவன் உறையும் திருக்கோயிலாக வேண்டின் இக் குற்றவகை ஆறும் ஒழிதல் வேண்டுமென அறிவுறுத்தருளுகிறார்.
 

      இக்குற்றங்களை எண்ணின் வடலூர் வள்ளல் அவை மிகப்பலவாகத் தோன்றுவது காண்கின்றார். தம்மை நினைக்கும்போது மக்களினம் அனைத்தையும் தாமாகக் கருதி நினைப்பவராதலினால், குற்றத்தின் அளவு மிகவும் பெருகித் தோன்றக் கண்டு அஞ்சுகிறார். அதேநிலையில், குற்றம் மிகுந்து குணமாவன இல்லாதார் தமக்கும் இறைவன் அருளைப் பெறுதற்கு இடமுண்டு என்ற கருத்து விளங்கக் “குற்றம் கூடிக் குணம் பல செய்யாதீர், மற்றும் தீவினை செய்தன மாய்க்கலாம்; புற்றராவினன் பூவனூர் ஈசன்பேர், கற்று வாழ்த்தும், கவதன் முன்னமேழி” (பூவ. குறுந். 3) எனத் திருநாவுக்கரசர் சொல்வதற்கு ஒப்பத் தமக்கு அப்பெருமானை நினைக்கவும் அவன் திருப்பெயரை ஓதவும் வாய்த்த திருவருளை எண்ணி வியக்கின்றார்.

2273.

     நானடங் காதொரு நாட்செயும்
          குற்ற நடக்கைஎல்லாம்
     வானடங் காதிந்த மண்ணடங்
          காது மதிக்குமண்டம்
     தானடங் காதெங்குந் தானடங்
          காதெனத் தான்றிந்தும்
     மானடங் காட்டு மணிஎனை
          ஆண்டது மாவியப்பே.

உரை:

     நான் அடங்காமையாற் செய்யப்படும் குற்றச் செய்கைகளை எண்ணலுற்றால், வானமும் மண்ணும் அண்டமும் அடங்காது; எங்கும் அடங்காத அத்தனை மிகுதியானவை என அறிந்தும் நடம்புரியும் மணியாகிய நீ என்னை ஆட்கொண்டது எனக்கு வியப்பையே தோற்றுவிக்கிறது, எ.று.

     உலகியல் வாழவுக்கு இன்றியமையாத நான் எனது என்னும் இரு வகை முனைப்பால் என்பால் உண்டாகும் குற்ற நடக்கைகளை எண்ணினால் அவை எண்ணுக்கு அடங்கா; அளவு கூறுமிடத்து அவற்றுக்கு இம்மண் அடங்காது, விண்ண்டங்காது. இவற்றைத் தனக்குள் அடங்கியுள்ள அண்டம் அடங்காது; அதற்கு அப்பாலுமுள்ள எங்கும் அடங்காது என உரைக்கின்றார். பலவாகிய குற்றங்களைச் செய்தவன் நானாதலால், எனக்கு அவற்றின் மிகுதி இங்ஙனம் தோன்றுகிறதெனின், என் சிற்றறிவினும் பேரறிவுடைய பெருமானாகிய நீ என் குற்றமிகுதியை எடுத்துரைப்பதாயின் மண்விண் அண்டம் ஆகிய இவற்றின் வேறாய் மக்களின் சிற்றறிவு காணாததாய் அளவை யொன்றைப் படைத்துத்தான் உரைக்க வேண்டிவரும். பேரறிவுப் பிழம்பாகிய உனக்குச் சிற்றறிவுடைய யான் செய்த குற்றமிகுதியை அறிவது அருமையன்று; அறிந்துவைத்தும், அவற்றைப் பொருளாக நினையாது, உன்னையன்றி வேறு பற்றாவது இல்லையென்று உணர்ந்து உன்னருளையே வேண்டி முறையிடுமாறு என்னை ஆண்டுகொண்ட பெருந்தனைமையை நினைக்கும்போது, பெரியதோர் மருட்கையும் வியப்பும் எய்துகின்றேன் என்ற கருத்துத் தோன்ற, “அறிந்தும் ஆண்டது மாவியப்பே” என மகிழ்ந்துரைக்கின்றார். அறிந்தும் என்றதன் ஈற்றும்மை, என் குற்றத்தின் மிகுதி நின்பேர் அறிவின்கண் தோன்றிப் பெரியதோர் வெறுப்பை நின் திருவுள்ளத்தில் உண்டாக்கியிருத்தல் வேண்டும்; அதனையும் உள்ளத்திற் கொள்ளாது என்னை எள்ளுதலும் செய்யாது ஆண்டருளியது “வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தற்று” (புறம்) எனப் பொருள் விரிந்து காட்டும் பொற்புடையது.

     இங்ஙனம் பெருகி நிற்கும் குற்றங்கள் என்பால் உண்டானதற்குக் காரணம், அளவோடு அடங்கி நின்று உலகியற் பொருளின்பங்கட்கு உறுதுணையாகும் நான் என்னும் தன்முனைப்பு அடங்காமல் அளவிறந்தமையாகும் எனவுரைக்கின்றார் வடலூர் அடிகள்.

     இதனை எடுத்து மொழியால் “நான் அடங்காது ஒரு நாள் செய் குற்ற நடக்கை” என மொழிகின்றார். நான் என்ற அகமுனைப்பைக் கூறினராயினும், இனம்தழூஉம் இலக்கண மரபால் எனது என்னும் புறமுனைப்பும் கொள்ளப்படும்; அகமுனைப்பில்வழிப் புறமுனைப்புப் பயன்படாது; அதனால் “நான் அடங்காது” என்று கூறுகின்றார்.

     அகமுனைப்பால் உளதாகும் குற்றமிகுதியைத் தாமே தம் மனக்கண்ணிற் கண்டு மருட்கையுற்ற வடலூர் அடிகள், அவற்றைப் பொறுத்தாண்ட இறைவன் திருவருளை நினைந்து வியந்து பாராட்டுவது இப்பாட்டின் கருத்தாம் என்று காணலாம்.

     (103)