104
104. இங்ஙனம் சமுதாயத்திலும் தனிமக்களிடத்தும் காண நின்ற குற்றங்களை எடுத்தோதி அருண்முறையீடு
செய்து போந்த வடலூர் வள்ளல், குணமுடையார் பெறுதற்குரிய அருணலங்களைக் குற்றமுடையார் பெறுவது முறையன்று.
தீயன செய்துவிட்டு நல்லன செய்தார்க்குரிய நலங்களைக் கேட்பது அறிவுடைய மக்கள் நீர்மையுமாகாது.
அல்லது செய்தார்க்கு, நல்லது புரிவது அல்லன செய்வார்க்கு ஆதரவு செய்து உலகில் ஆகாத செயல்களும்
அல்லல் தருவனவும் பெருகுவதற்கு ஊக்குவதாக முடியும். உயிர்கள் நலமே உணர்ந்து நலமே புரிந்து நல்வாழ்வு
நடத்தி நல்லின்பமே பெற வேண்டுமென உலகைப் படைத்து வாழ்வளித்த பரம்பொருள், ஒருகாலும் இம்முறையீட்டுக்கு
இரங்காது என்றோர் எண்ணம் எழக் காண்கின்றார்.
இறைவனை நீதியின்
வடிவமாக, அறத்தின் தூய தோற்றமாக இறைமையின் திருவுருவாக நிறுத்தி எண்ணுகிறபோது, மேற்கூறிய
கருத்து உலகியற்கு ஒத்ததென்பது யாரும் சொல்லாமலே விளங்கும். இன்ன வுரு, இன்ன நிறம், இன்ன
தன்மையுடையவன் என்று வரைந்தறியப்படாத தன்னை, தான் படைத்த உலகியல் வாழ்வில் வைத்தே உயிர்களை
அறிவால் உணரச் செய்துள்ளான். வாழ்க்கையில் மக்கள், பெற்றோரும் பிள்ளைகளுமாகவும், ஆண்டவனும்
அடிமைகளுமாகவும், கணவனும் மனைவியுமாகவும், தோழர்களாகவும் அன்பால் உறவுகொண்டு தத்தமக்கு வேண்டிய
அறிவும் ஆற்றலும் ஆண்மையும் பெற்று வாழ்கிறார்கள். மக்களிலும் அறிந்தவர் அறியாதவர், காணப்பட்டார்
காணப்படாதார், உயர்ந்தவர் தாழ்ந்தவர், இளையவர் முதியவர், ஆடவர் பெண்டிர், தம்மவர் பிறர்,
யாவரிடத்தும் கலந்துறையுமிடத்து முன்னர்க் கூறிய தொடர்புகளில் ஒன்றையோ பலவற்றையோ ஏற்படுத்திக்
கொண்டு அத் தொடர்வழி நின்று வாழ்கின்றோம், வாழும் உலகின் வன்மையையும் திண்மையையும் நன்மையையும்
பெருமையையும் கண்டு பரம்பொருளின் உண்மையை உணர்பவன், உலகோடு ஒன்றாயும் அதனின் வேறாயும் உயிர்களோடு
உடனாயும் இருப்பதை எண்ணி யுணர்பவன். அவ்வாறு இருந்து உலகில் உயிர்கள் வாழ்வாங்கு வாழச் செய்யும்
அப்பரம்பொருளின் அருள்வளத்தை ஆராய்ந்தறிபவன், எவ்வகையிலேனும் தன்னை அதனோடு தொடர்புபடுத்திக்
கொள்ளமுயன்றுள்ளான், முயல்கின்றான். எத்தகைய பெரியவர்களும் பிணியும் மூப்பும் எய்தும்போது
சாதலின் அச்சத்துக்கு இரையாகின்றனர் இதற்கு ஆயிரம் சான்றுகள் உண்மை வரலாறுகளில் பல்கிக்
கிடக்கின்றன. “சாதல் அஞ்சேன்” என்று வீறுபேசிய மேலோர் பலர், சாதலை நெருங்கும்போது அச்சமுற்று,
“சாவின் பிறப்புப் பிறிதாகுமாயின் மறப்புவந்து வாழ்விற் கண்டனவும் கேட்டனவும் செய்து தெளிந்தனவும்
தெரிந்தனவும் ஆகிய அனைத்தையும் போக்கிவிடுமே; மறைத்துவிடுமே என்று அஞ்சி அவலமெய்துகின்றார்கள்.
பரம்பொருளென ஒன்று கிடையாது என்பவரும், சாவு நெருங்குகையில், “அத்தகைய பரம்பொருள் ஒன்று இல்லையானால்
குறைவில்லை; இருந்தால் அதனை நினையாமை குற்றமாகுமே” என நினைந்து, அச்சத்தால் ஆற்றல்குன்றி
அலமரும் செய்திகள், விஞ்ஞான அறிவு பெருகப்பெருக மிகுந்து வருகின்றன.
முன்பறியாத, நேரிற்
கண்டறியாத பெரியவர்கள் நல்லவருடைய பெருமைகளையும் நன்மைகளையும் கேட்டும் கண்டும் அன்பு செய்வது
மக்களுயிரின் மாண்புகளில் ஒன்று. பொய்யும் புனைவும் நிறைந்த கதைகளைப் படிக்கினும் கேட்பினும்
நாடகத்திற் காட்டக் காணினும் நல்லோர்பால் அன்பு கொள்வதும் அறிவுடை மக்கள்பால் இயல்பாக
அமைந்துளது. இதனால், இறைவனுடைய நன்மையும் பெருமையும் உணரும்போதும், அறிந்தோரால் உணர்த்தப்படும்போதும்
மக்களுயிர்க்கு இறைவன்பால் அன்புண்டாகிறது. இவ்விரண்டையும் எண்ணியே “அஞ்சியாகிலும் அன்புபட்டாகிலும்,
நெஞ்சம்! வாழி நினை” என்று திருநாவுக்கரசர் அறிவுறுத்துகிறார். “நெஞ்சமே, அஞ்சியாகிலும் அன்புபட்டாகிலும் (இறைவனை)
நினை” என்பவர், “வாழி” என வாழ்த்துவது காண்மின். அச்சம் விளைவிக்கும் கலக்கத்திலும் அன்பு
விளைவிக்கும் மயக்கத்திலும் நெஞ்சம் நினைக்கும் செயலிழந்து ஒடுங்கிவிடும்; அங்ஙனம் செயலற்றொடுங்காது
நினைக்கும் திறம் பெற்றிருக்கின்றாய்; அந்நினைவு உன்னை வாழ்விக்கும் என்று வற்புறுத்துவதற்காகவே,
“வாழி” என ஒரு சொல்லை இடையிலே பெய்து இசைக்கின்றார்.
அச்சம் அன்பு என்ற
இரண்டில் ஒன்றையோ இரண்டையுமோ காரணமாகக் கொண்டு இறைவன்பால் தொடர்பு கொள்பவர், அவனைத்
தாய் தந்தையாகவோ, தலைவனாகவோ, நண்பனாகவோ, காதலனாகவோ தொடர்புபடுத்தி இறைஞ்சி வழிபடுவர்.
தொடர்பில்லாதவற்றை நினையாத நீர்மையுடையது மக்களின் நெஞ்சம். “நெஞ்சம் நீ நினை” என்பவர்
நினைத்தற்கு நேரிதாய தொடர்பு காட்டலுற்று, ஞானசம்பந்தர் முதல் மணிவாசகர் ஈறாக நால்வரும்,
“எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்று ஏத்திச் சிந்தை” செய்தல் வேண்டும் எனச் செப்பியுள்ளனர்;
இதன்கண், “சிந்தை செய்பவர்க்கல்லால் ( திருவருள் ) சென்று கைகூடுவதன்று” எனத் திருஞான சம்பந்தர்
திட்டமாகத் தெளிவிக்கின்றார்; இப் பெருமக்களின் அருளுரைகளைச் சிந்தித்து தெளிந்த சிவஞானச்
செல்வராதலால், வடலூர் வள்ளல், அவர் பாடியவற்றையல்லாமல் பிறர் பாட்டுக்களைப் பொருளாகக்
கொள்ளவில்லை; நால்வர் வழங்கிய ஞானப் பாடல்களையே நாமும் இங்கே அடிக்கடி சிந்திக்க வேண்டியது
கடமையாகிறது.
சி்வபரம்பொருளை
எந்தை என்று சிந்திக்கலாம்; ஈசன் என்றும், எம்பெருமான் என்றும், ஏறமர் கடவுள் என்றும் சிந்திக்கலாம்
எனஞானசம்பந்தர் காட்டுகின்றார். அப்பர் பெருமானும் “அப்பன் நீ, அம்மை நீ, ஐயன் நீ” எனக்
காட்டுகின்றார். எந்தை என்பது பெற்றோர்க்கும் பிள்ளைகட்கும் உள்ள தொடர்பை உணர்த்துவது,
ஈசன் என்பது அறிவும் பொருளுமாகிய செல்வமுடையவன் எனப் பொருள் தந்து, துணைவனாய் அருள் செய்யும்
தொடர்பு காட்டுவது; எம்பெருமான் என்பது செய்யப்படும் வினைகளை “ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்துயார்
மாட்டும் தேர்ந்து” முறை செய்யும் பெருமகன் என்னும் தொடர்பு காட்டுகிறது. ஏறு என்ற சொல்
குறிக்கும் எருது பிறர்க்கென உழைக்கும் உழைப்பின் வடிவம். தனது உழைப்பால் விளையும் நென்மணியை
மக்கட் கீந்து, விளைவித்து மடிந்தழியும் வைக்கோலைத் தானுண்டு வாழ்வது எருது. இதனைப் பேரிசாத்தனார்
என்ற சங்கச்சான்றோர் மலையமானைப் பாராட்டி வாழ்த்துமிடத்து, “உழுது நோன்பகடு அழி தின்றாங்கு
நல்லமிர்தாக நீ உண்ணும் நறவே” ( புறம் ) எனவுரைப்பதால் அறியலாம். இறைவன் எருதின்மேல் தோன்றுவது,
உழைப்பாளியின் உழைப்பில் ஆண்டவன் இவர்ந்து அருள்செய்யும் இயல்பை உணர்த்துவதாகும். ஆதலால்தான்
ஏறமர் கடவுள் என ஞானசம்பந்தரும், “ஏறூர்ந்த செல்வன்” என நாவுக்கரசரும் நவின்றுள்ளனர். தொண்டர்
தலைவனாய்த் தொண்டினை ஊக்கும் தொடர்பு காட்டுவது இதன் கருத்து. இதனைச் சைவசாத்திரம்,
“சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்ரமார்க்கம் தாதமார்க்கம் என்றும், சங்கரனை அடையும்
நன்மார்க்கம் நால், அவைதாம் ஞானம் யோகம் நற்கிரிய சரியை என நவிற்றுவதும் செய்வர்”
(சித்தியார்) என்றும் கூறுகிறது.
இத் தொடர்பு வகையுள்
தம்மைத் தொண்டனாக இயைபுபடுத்தி ஏற்றருளுமாறு வடலூர் வள்ளல் வேண்ட நினைக்கின்றார். தொண்டு
மேற்கொள்வார் அதற்குரிய அறிவும் ஆற்றலும் நிறைந்தவராதல் வேண்டும்; தொண்டு புரியுமிடத்து
எத்தனையோ தடைகள் எதிர்பாராத வகையில் ஏற்படும். அவையனைத்தையும் தாங்கிச் செய்து
முடிக்கும் வினைத்திட்பம் தொண்டரின் உள்ளீடாக வேண்டும். தம்மை ஆராயுமிடத்து தம்முள் தொண்டர்க்கு
இன்றியமையாத ( மேற்கூறிய ) உள்ளீடு சிறிதும் இல்லையெனக் கருதுகிறார். தமது நிலை மலரைத் தாங்கி
உள்ளீடில்லாத ஆம்பற்குழல் போல்வது காண்கின்றார். ஆம்பல் கொய்பவர் அதன் காம்பு குழலாய்ப்
பயன்படுவதுபற்றி ஒருகால் என்று கொள்வது வழக்கு. கண்ணபிரான் ஆயர்சேரியின் ஆம்பற்குழலூதி மகளிரை
மகிழ்வித்தான் என இளங்கோ வுரைக்கின்றார். அவ்வகையில் தம்மை ஏற்குமாறு வேண்டுகிறார்.
2274. பாம்பா யினும்உணப் பால்கொடுப்
பார்வளர்ப் பார்மனைப்பால்
வேம்பாயி னும்வெட்டல் செய்யார்
வளர்த்த வெருட்சிக்கடாத்
தாம்பா யினும் ஒரு தாம்பாயி
னுங்கொடு தாம்பின்செல்வார்
தேம்பாய் மலர்க்குழற் காம்பாக
என்னையும் சேர்த்துக்கொள்ளே.
உரை: மனைக்கண் காணப்படும் பாம்பு விடத்தாற் கொடிய நல்ல பாம்பாயினும் அது தங்குமிடத்துப் பால்தந்து உண்பித்தலும் கொல்லாது விடுத்தலும் செய்வர்; அதுபோல் மனையெல்லைக்குள் நிற்கும் மரம் வேம்பாயினும் வெட்டுவதில்லை; தாம் வளர்ப்பதாகிய ஆட்டுக்கடா தம் மேற் பாய்ந்து முட்டும் வெருட்சியுடைத்தாயினும், அதனைப் பற்றிக் கட்டுதற்கு ஒரு கயிறு கொண்டு அதன்பின் செல்வார்களேயன்றி விலக்கிக்கொல்ல நினையார். யான் பயனில்லாத ஆம்பல் மலரின் குழல் காம்புபோல் வேனாயினும் என்னையும் நின்னொடு சேர்த்துக்கொள்ள வேண்டும். எ.று.
விடத்தாற் கொடுமையுடைமைபற்றிப் பாம்புகளை யாவர் எங்கே எப்போது காணினும் வெருட்டிக் கொல்வதே செய்வது உலகவர் இயல்பு. எனினும் நல்ல பாம்புக்கு மாத்திரம் விலக்களித்துப் பாலுணவு தந்து வளர்க்கின்றனர்; இத்தனைக்கும் அதன் விடந்தான் ஏனைப் பாம்புவகைப் பலவற்றின் நஞ்சினும் கொடுமை மிக்கது. அக் கொடுமையைக் கருதாமல் பால் தந்து வளர்ப்பது காட்டி, “பாம்பாயினும் உண்ணப் பால் கொடுப்பார் வளர்ப்பார்” எனவுரைக்கின்றார். பால் உண்பித்துப் பின் கொல்லுவர் போலும் என நினையாமற் பொருட்டு “பால் கொடுப்பார்” என்பதையொட்டி “வளர்ப்பார்” எனக் கூறுகின்றார். மனைப்பால் என்பது பாம்புக்கும் வேம்புக்கும் இடை நின்று இரண்டொடும் சென்று இயைவது. இதனை அணியிலக்கணம் “நடுநிலை விளக்கு” எனப் பெயர் குறிக்கின்றது. நாகங்கள் நிறைந்த நாக நாட்டவர், அவற்றிற்கு அஞ்சிப் பாலுணவு தந்து வழிபட்டனர். நமது நாட்டு வரலாற்றில் நாகர் என்ற ஓரினத்தவர் ஒரு காலத்தில் மேலைக் கடற்கரையில் வாழ்ந்தனர். அவர்கள் நாகங்களைப் பாலுணவு தந்து வழிபட்டனர். அவர் கூட்டுறவால், பஞ்சாபி மக்களும் கேரள நாட்டவரும் நாக வழிபாடு மேற்கொண்டனர். இந்நாளில் பஞ்சாபி நாட்டு மகளிர் நாக நவமி விழாவில் மாவால் நாகங்கள் செய்து வழிபடுகின்றார்கள்.
கேரளர் நாகவழிபாடு செய்ததைத் கேரளோற்பத்தி கூறுகிறது. ஈழநாட்டுக் கேதீச்சுரத்தில் அங்குள்ளதொரு மரப்பொந்தில் உறையும் பாம்புக்குப் பாலுணவு நல்குவது இன்றும் நடைபெறுகிறது. வேம்பு மரத்தின்கண் தெய்வம் உறையும் என்னும் ஐதிகம் (உலகுரை) பற்றி அதனை வெட்டுவதில்லை. கடா, இங்கே ஆட்டுக் கிடாயைக் குறிக்கிறது. கிடாய் என்பது கிடா, கடா என வழங்கும். 'வளர்த்த கடா மார்பிற் பாய்ந்தாற் போல' என்பது பழமொழி. அங்ஙனம் பாயுமாயினும், அதனைக் கொல்ல நினைக்காமல் கயிறு கொண்டு கட்டிவைக்கவே விரும்புவர். தேம்பாய்மலர் - தேன்மிக்க ஆம்பற்பூ. அதன் தண்டு மூங்கில் போல உள்ளே புழையுடைமைபற்றி அதனைப் “புழற்கால் ஆம்பல்”, “தூம்புடைத்திரள் கால் ஆம்பல்” என்றெல்லாம் சான்றோர் கூறுவர். “தேம்பாய் மலர்” (குறுந்.) எனச் சான்றோர் வழங்குபவாகலின் “தேம்பாய் மலர்” என்றும் குழற்காம் மலர் ஆம்பலாதல் பற்றி, ஆம்பல் இங்கே கொள்ளப்பட்டது. “தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும் புதல் மலர்” (ஐங். 215) என்பது காண்க. ஆம்பற்றண்டாற் செய்யப்படும் ஆம்பற்குழல் வழக்கு வீழ்ந்தமையின், பிற்காலத்தார் “கஞ்சத்தால் குமுதவடிவாக அணைசு பண்ணிச்” செறித்தமை பற்றி அதுவே ஆம்பற் குழலாயிற்றென அடியார்க்கு நல்லார் தமது கால நிலைகொண்டு உரைக்கின்றார் (சிலப். மதுரை. 17, 18 - 20).
இதனால் ஆம்பற் குழலின் காம்பாக வேனும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என முறையிடுவது பயன். (104)
|