105
105. உலகில் மக்கள் அனைவரும்
பிறப்பு வகையில் ஒத்தவரே; ஒவ்வொருவரும் தத்தமக்கு ஒத்த தொழிலும் செய்கையும் உடையவர்.
ஏதேனும் தொழில் செய்தாலன்றி உலகில் வாழ்வில்லை என்பதையும் யாவரும் ஒப்ப உணர்ந்துள்ளனர்.
இளமை ஓர் அளவு உடல் வளர்ச்சியாலும் உணர்வு வளர்ச்சியாலும் வளம் பெற்றதும் தொழிலொன்றில்
ஈடுபடுகின்றனர். ஒரு தொழிலும் இன்றி வெறிதே உண்பதும் உறங்குவதும் செய்பவனைச் சமுதாயம் இகழ்ந்து
நகையாடுகிறது. தொழில் மேற்கொள்ளும் வகையில் மக்கள் ஒத்த இயல்பினரே; எனினும் தொழில் செய்யும்
வகையில், சிலர் தாம் ஏற்ற தொழிலை மிக்க திறமையுடன் செய்து சிறப்புறுகின்றார்கள்; மக்கள்
கண்டு வியக்கும் அளவில் உயர்கின்றார்கள். “பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்” என்றாலும்,
செய்தொழிலால் எய்தும் சிறப்பை எல்லோரும் பெறுவதில்லை; இது குறித்தே திருவள்ளவப் பெருமான்
“சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையால்” என்று கூறுகின்றார். மேலும், செய்தொழிலால் எய்தும்
பயன்களைச் சீர்தூக்குகிறது மக்களுலகு. செய்யப்படு பொருளின் செம்மைநோக்கிச் செய்பவனுக்குப்
பெருமை தருகிறது; செய்பொருள் பலரும் நயக்கத்தக்க அளவில் அமையாதவழிச் செய்பவனுக்குச் சிறுமை
உண்டாகிறது. “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” என்று எடுத்துரைக்கின்றார்
திருவள்ளுவர். கருமம் என்பது செய்யப்படும் பொருள்மேல் நிற்பது. தொழிலைச் செய்வதிலும், செய்யப்படு
பொருளிலும் ஒவ்வொருவரும் சிறப்படைகின்றனர். தொழிலைச் சீரும் சிறப்பும் பொருந்த ஒருவன் செய்தாலும்,
செயப்படுபொருட்குரிய முதலும் துணையுமாகிய காரணங்கள் நல்லனவாகாவிடின் செயப்படுபொருள் சிறப்பு
நல்காது; செய்பவனுக்கும் சிறப்பு நல்காதாகிறது. இத்தகைய காரணங்களால் மக்கள் அனைவருக்கும்
பிறப்புப்போலச் சிறப்பு ஒத்த நிலையில் அமைவதில்லை.
இனி, தொழிலிற்
சிறப்பெய்துகிறவன் செல்வத்தால் உயர்கிறான்; செல்வரைச் சமுதாயம் பாராட்டுகிறது; சிறப்புச்
செய்கிறது. செல்வமுடையவன் பிறர் பின்சென்று தாழ்ந்து தொழுது அவர்பால் ஒன்று பெற்று வாழ நினையான்.
அவன் தன்னைத் தொழுது பின்வருவார்க்கு வேண்டுவன உதவி மேன்மை எய்துவான். இவ்வகை மக்களிடையே
உயர்வு தாழ்வு உண்டாகின்றன. அறிவிலும் வினையாண்மையிலும் வேறுபாடு உள்ளவரையில் மக்களிடையே
உயர்வு தாழ்வுகள் இருந்தே தீரும். உயர்ந்தோர் தாழ்ந்தோர்க்கு உதவுவதும், தாழ்ந்தோர் உயர்ந்தோரைச்
சார்ந்து உதவி பெறுவதும் நிலப்பரப்பின் மேடு பள்ளம்போல இயற்கை அமைப்பாகத் தோன்றுகின்றன.
மேடு பள்ளங்களைச் சமன் செய்வதுபோல மழைநீர் பெருகிப் பாயினும், மேடு பள்ளமும் பள்ளம் மேடுமாகிச்
சமநிலை எய்தாமலே இயலுகின்றன. அதுபோல உணர்வும் செயல்நலமும் பெருகினும் மக்களிடையே தகுதியுடைமையும்
இன்மையும் நிலைநின்று வேற்றுமைக்கு ஏதுவாகின்றன.
இங்ஙனம் உயர்வு தாழ்வுகளை
இயல்பாகவுடைய மக்களிடையே கொடுப்போரும் கொள்வோரும், ஆள்வோரும் ஆளப்படுவோரும், பேணுவோரும்,
பேணப்படுவோரும், கற்பிப்போரும் கற்பிக்கப்படுவோரும், காப்போரும் காக்கப்படுவோரும் என வேற்றுமைவகை
என்றும் இருந்து வருகிறது; இருந்தே தீரவேண்டுமென்பது இயற்கைவிதி போலும். மேலும், வேற்றுமைக்
கிடமாகிய மக்களுலகில் உயர்ந்த செல்வரிடம் வேண்டிய எல்லாம் குறைவற இருப்பதில்லை. பிறரிடம்
பொருள் கொடுத்தேனும் சிலவற்றைப் பெறவேண்டியவராக இருக்கின்றனர். உண்பனவற்றால் உயர்ந்த செல்வன்,
உடுப்பன உடையாரை நாடுகின்றான்; உடைவகை நெய்துயர்ந்த உரவோன், உண்பன விளைவித்துயரும் ஒள்ளியோனை
உள்ளிச் செல்கின்றான். நிலத்திலும் மேட்டில் விளைவது பள்ளத்தில் விளைவதில்லை;
பள்ளப்பாங்கு தருவதை மேடு கொடுப்பதில்லை. ஆனால், இரண்டன் விளைவும் நிலவுலக வாழ்க்கைக்கு
இன்றியமையாதவை. ஆகவே, மக்கள் ஒருவர் ஒருவரைச் சார்ந்து வாழ்வது சால்பேயாகிறது. சார்ந்தொழுகும்
சால்பிலும் ஒரு நயம் உளது. சார்தலை எண்ணுங்கால் சார்பெல்லாம் பொருள் நோக்கியும் அறிவு நோக்கியுமே
இயலுகின்றன. ஆள்வோர் அறிஞரைச் சார்வதும், இல்லாதவர் உடையவரைச் சார்வதும் இந்த அடிப்படையில்
நிகழ்கின்றன.
இனி, சார்வோரையும்
சாரப்படுவோரையும் நோக்குங்கால், சார்வோர் தாம் வேண்டும் அறிவும் பொருளுமுடையாரையே
சார்கின்றனர். அறிவு உயிரோம்புதற்கும் பொருள் உடலோம்புதற்கும் வேண்டப்படுகின்றன. இவ்வகையில்
சார்வோர் கருத்தை நோக்குகின்றார் நம் வடலூர் வள்ளல். அவருள் பொருள்வேண்டிப் பிறரைச்
சார்வோர் பெருக்கமாக உள்ளனர். பொருள் பெற்று உடலோம்புவதன் கருத்து இவ்வுலகவாழ்வில் நெடிதுருப்பதற்கே
என்பது தெற்றெனத் தெரிகிறது. தன்னை நோக்குகின்றார். தன்னுள்ளத்தே நிறைந்திருக்கும் எண்ணங்களை
ஆராய்கின்றார். விருப்பும் வெறுப்பும் என அவை இருவகைப்படுகின்றன. உலகில் நெடிதிருப்பதற்கு
ஆவன விருப்பு வகையிலும், ஆகாதன வெறுப்புவகையிலும் அடங்குகின்றன. விரும்பத்தக்க வகையில் நெடிதிருத்தற்கு
ஒத்த எண்ணங்கள் மிக்கிருப்பக்கண்டு உலகில் நீடுவாழக் கருதுபவன் யான் என்று இறைவன்பால் தெரிவிக்கின்றார்.
சிவஞானத்தால் திருவருளைக் கண்டு அதனோடு கூடிச் சிவத்தைப் பெறுஞ் செல்வர் சிவயோகர்; அவர்கள்
உடலோம்பலைப் பொருளாகக் கருதாது உயிரறிவைப் பேணிச் சிவம் பெறும் அறிவு தருவர் என உணர்கின்றார்.
சார்வது, வேண்டும் பொருள் நாட்டமாயிருக்க, வேண்டாத சிவயோக ஞானமுடையாரைச் சார்வது பயனில்
செயல் என்று உரைக்கலுற்று இப்பாட்டைப் பாடுகின்றார்.
2275. நெருப்புக்கு முட்டையும் கூழ்க்கிட
உப்பையும் நேடிச்செல்வோர்
பருப்புக்கு நெய்யும்ஒண் பாலுக்கு
வாழைப் பழமுங்கொள்ளத்
தெருப்புக்கு வாரொடு சேர்கிலென்
னாம்இச் சிறுநடையாம்
இருப்புக்கு வேண்டிய நான்சிவ
யோகர்பின் எய்திலென்னே.
உரை: நெருப்புக்கு எருமூட்டையையும் கூழுக்கு உப்பையும் தேடிச் செல்வோரும் பருப்புச் சோற்றுக்கு நெய்யும் பாலுக்கு வாழைப் பழமும் தேடித் தெருப்புகுவோருமாகிய இவர்களொடு சேரின் என்ன பயன் கிடைக்கும்; சிறுநடை கொண்ட இவ்வுலகில் நெடிதிருப்பதை விரும்புகிற நான் சிவயோகரைச் சார்ந்து அவர்பின் சென்றால் என்ன பயன் கிடைக்கும். எ.று.
தமிழ்நாட்டில் மாடுகளின் சாணத்தைப் பிசைந்து வட்டமாகத் தட்டி அடுப்பிலிட்டு எரிப்பது மரபு; அதனைத் தொண்டைநாட்டார் எருமுட்டை என்பர்; சோழநாட்டார் முட்டை என்பர்; பாண்டிநாட்டார் எரு என்பர்; தொண்டைநாட்டுத் தென்பெண்ணைக்கும் சோழநாட்டின் வடவெல்லையாய வெள்ளாற்றுக்கும் இடைப்பட்டது நடுநாடு. அதன்கண் வாழ்பவர், சோழநாட்டுச் சார்பால் முட்டையென்றும் வழங்குவர். வள்ளலார் நடுநாட்டில் வாழ்கின்றமையின் முட்டை என்று மொழிகின்றார். கூழ் - கம்பு சோளம் கேழ்வரகு ஆகிய இவற்றை மாவாக்கிச் சமைக்கும் உணவு. இஃது ஏழைமக்கள் உணவு. பருப்பு எனப் பொதுப்படக் கூறினமையின், சிறப்புடைய துவரம்பருப்பு என்று இங்கே கொள்ள வேண்டும்; பருப்பைக் கடைந்து சோற்றிலிட்டுப் பிசைந்து நெய் பெய்யாவிடின் அச் சேற்றின்கண் நறுமணமும் இன்சுவையும் உண்டாகா. பாலுக்குத் தேன் கலந்து உண்பது பழங்கால வழக்கு. “பாலொடு தேன் கலந்தற்று” என்று திருவள்ளுவரும், “தேன்மயங்கு பாலினும் இனிய” எனக் கபிலரும் கூறுவது காண்க. இடைக்காலத்தில் தேன்வளம் குன்றனமையின் வாழைப்பழத்தைப் பாலிற் பெய்து பிசைந்துண்பது வழக்காயிற்று. “பால் வேண்டும் வாழைப்பழம்” என்று சிவப்பிரகாச அடிகள் கூறுவர். இந்நாளில் சருக்கரை எளிதாயினமையின், வாழைப்பழம் விலகிவிட்டது. ஏழைமக்கள் எருமுட்டையும் உப்பும் வேண்டி அவற்றை உடையாரை நாடுகின்றார்; செல்வமக்கள் நெய்யும் வாழைப் பழமும் உரையாரை நாடுகின்றனர். நேடுதல் - தேடுதல். கூழுணவும் நெய்யுணவும் பாலுணவும் உடலையோம்பி இவ்வுலகில் நெடிதிருத்தற் பொருட்டு இவ்விருதிறத்தாரிடையே இருத்தலால் எனக்கும் அவர்போல இவ்வுலகில் நெடிதிருப்பதற்கே விருப்பம் என்பாராய், “இச் சிறுநடையாம் இருப்புக்கு வேண்டிய நான்” என்று தெரிவிக்கின்றார். இருத்தற்கு இடமாகிய உலகியல் வாழ்வு - சமுதாய வாழ்வு - சிறுமைப் பண்புடையது. சிறியன சிந்தித்தலும் சிறுசொல் வழங்குதலும் சிறுசெயல் புரிவதும் உலக நடையாம் என்பது விளங்க “சிறுநடையாம் இருப்பு” எனவுரைக்கின்றார். சிறுமையை நான் நன்கு அறிவேன் என்று கூறுவார், இச் “சிறுநடையாம் இருப்பு” என்று குறிக்கின்றார். இதனை விலக்கிப் பெருநடையாம் ஞானவாழ்வு பெறல் வேண்டின் சிவயோகர்பின் செல்ல வேண்டும். அருள் பெறாமையின் எளியேன் உள்ளம் இச் சிறுநடை இருப்புக்குரிய விழைவு நிறைந்திருத்தலால் சிவயோகர் பின் செல்வதிற் பயனில்லை. திருவருள் ஞானம் கைவருமாயின் சிவயோகர் பின்செல்வது சிறப்பும் பயனுமாம் என்றற்குச் “சிவயோகர் பின் எய்தில் என்னே” என்று கூறுகின்றார்.
இதனால் சிவயோகமும் ஞானமும் விழைந்து சிவயோகியர் நெறிபற்றிச் செல்வதற்கு அருள்நாட்டம் நல்குக என முறையிடுவது பயனாதல் அறிக. (105)
|