106

      106. நான் என்னும் தன்முனைப்புத் தடித்தவழிப் பிறக்கும் மதத்தால் பிறருடைய நட்புறவும் சுற்றத்தின் தொடர்பும் வலியழிகின்றன. காண்பார் பலரும் வெறுப்புற்று விலகுவதையே கருதி நீங்குகின்றனர். மக்களிடையே வாழ்வு நிகழினும் அவரது தொடர்பு அற்றொழிதலால் ஒரு தனிப் பனைமரம் போலக் காணவேண்டியவனாகின்றான் மதமெனும் களிப்புமிக்கவன்; ஆனால் அவன் அதனையும் காணும் திறமின்றிக் கண்மூடி கிடக்கின்றான். அறிவும் சொல்லும் செயலும் அவனைப் பெரிய வீழ்ச்சிக்கே செலுத்துகின்றன. வாழ்வாங்கு வாழ்ந்து இன்பத் தெய்வ வாழ்வு பெற்றுத் திகழவேண்டியவன், மதமெனும் குற்றத்தால் நினைவு மழுங்கி நிலை குலைவது வடலூர் அடிகளாரின் அருள் உள்ளத்தை அலைக்கின்றது. மன்னுயிரைத் தன்னுயிராக எண்ணி அதற்குற்றது தனக்குற்றதாகக் கருதும் கருத்தினராதலால் கண் கலங்கி வருந்துகிறார். மதமென்ற இக்களிப்பு உடற்குள் எங்கே உளதென நாடி, அது நெஞ்சின்கண் தங்கி அறிவொளியை இருட்படுத்தி அலைப்பதை நோக்குகிறார். அக்களிப்பினின்றும் நெஞ்சினை நீக்கலாமோ எனின் இரண்டும் பிரிப்பறக் கலந்து பேதைமையால் ஒன்றியிருப்பது தெரிகிறது; நெஞ்சினைப் பெரிய இடர்க்குட் படுத்தி வருந்தினாலன்றி அது தூய்மை எய்த வழியில்லை என எண்ணுகிறார். அக் களிப்பிடைச் சிறிது இடைவெளி தோன்றின் அதற்குள் திருவருளின் ஒளி நுழைந்துவிடும்; அதன் வாயிலாக நெஞ்சு இறைவனை நினைக்கும்; களிப்பு நீங்கும் என வள்ளலார் திருவுள்ளம் நினைக்கின்றது. இத்தகைய இடைவெளி தோன்றற்கு அழுக்கேறிய உடையை காரமிக்க உவர்மண்ணில் தோய்த்துக் கல்மேல் புடைத்துக் கசக்குவது போல மதமேறிய நெஞ்சினை யானையின் காலிலிட்டு நசுக்கினும், நெருப்பிலிட்டுப் பொசுக்கினும் கருவி கொண்டு துண்டு துண்டாக வெட்டினும் நன்றேயாம் என்கிறார். கொலை முதலிய கொடுமையே செய்பவரை எவ்வுயிர்க்கும் அருள் புரியும் அரசன் ஒறுப்பது “பைங்கூழ் களைகட்டது” போலும் நல்லறம் என்று திருவள்ளுவர் தெளியவுரைப்பது வள்ளலார்க்கு அரண் செய்கிறது.

2276.

     எம்மத மாட்டு மரியோய்என்
          பாவி இடும்பைநெஞ்சை
     மும்மத யானையின் காலிட்
          டிடறினும் மொய்அனற்கண்
     விம்மத மாக்கினும் வெட்டினும்
          நன்றுன்னை விட்டஅதன்
     வெம்மத நீங்கலென் சம்மதங்
          காண்எவ் விதத்தினுமே.

உரை:

     அரியவனே, என் பாவி நெஞ்சை மதயானையின் காலில் இட்டு இடறினும், நெருப்பிற் பெய்து சுடினும், துண்டு துண்டாக வெட்டினும் உன்னை நினையாது கைவிடுதற்குக் காரணமான மதமாகிய களிப்பு நீங்கும் பொருட்டுச் செய்வது நன்றேயாம்; அச் செயல் எனக்குச் சம்மதமே. எ.று.

     உலகில் மதங்கள் பலவானதற்குக் காரணம் ஒன்றாலும் பரம் பொருளுண்மை தெளிய வுணரப்படாமை யாகும். அதனால், எந்த மதத்தினராலும் காண்டற்கு அருமையானவன் என்ற கருத்துப்பட, “எம்மத மாட்டும் அரியோய்” என உரைக்கின்றார். மதம் என்னும் சொல் கொள்கை என்ற பொருளுடையது; ஒருவரால் ஒரு கொள்கை வற்புறுத்தப்படுமிடத்து, வற்புறுத்துவோர் சொல்லிலும் செயலிலும் வன்மைமிகும் போது அது மதமாகிறது. மதம் என்பது, மத என்னும் உரிச் சொல்லடியாக பிறந்த பெயர்ச் சொல். வலிமிக்க தலைவரை, “மதவலி” என்பது சங்கச் சான்றோர் வழக்கு. நல்லறிவை மறைக்கும் செருக்கைக் குறிக்கும் மதம் என்பது வடசொல். “சொற்றொறும் இற்று இதன் பெற்றி” எனத் தெரிந்துரைக்கும் புலமை இடைக் காலத்தே நிகண்டுகளின் தோற்றத்தால் சீர்குலைந்தது; அந் நிகண்டுகளைப் பயின்றோர்களால் இப் பொருட்கு இது சொல் எனத் தெளிந்து வழங்கும் வழக்காறு வீழ்ந்து போயிற்று. இன்று, ஆங்கில மொழியாளர், பொருளியல்பு நோக்கி அதற்குரிய சொல்லைத் தேர்ந்து வழங்குவது கண்டு, நாம் அவ்வாறு செய்யமுடியவில்லையே என்று வருந்துகிறோம். இப்போது நிகண்டுகளைப் பயில்வோர் இலராய்விட்டனர். அகராதிகள் தோன்றி நிகண்டுகளை வேண்டாதவையாக்கிவிட்டன. மதக்களிப்பால் பாவநினைப்புக்கள் நிறைவது பற்றி நெஞ்சை, “பாவி நெஞ்சு” எனக் குறிக்கின்றார். பாவத்தால் விளைவது துன்பம்; அதனால், “என் பாவி இடும்பை நெஞ்சு” எனக் காரணகாரிய முறையில் மொழிகின்றார். குற்றம் செய்தாரை யானைக்காலில் மிதிப்புண்ணவிடுவது பழங்கால முறை. மேலை நாட்டுக் கிரேக்கர், சிங்கம் முதலிய கொடிய விலங்குகட்கு இரையாக விடுத்தது வரலாறு கூறும் உண்மை. மதம்படாதபோது யானை ஒருகால் தன் காலிற்படுவோரை மிதியாது ஒழிதலுமுண்டு; அதனால்தான் வள்ளலார் “மும்மத யானையின் காலிட்டு இடறினும்” எனவுரைக்கின்றார். மொய் அனல் - திரண்டெரியும் நெருப்பு. நெருப்பிற்பட்ட பொருள் வெம்மை மிகுதியால் வீங்கி வெடிப்பது பற்றி “விம்மதமாக்கினும்” என்று கூறுகின்றார். விம்மிதம் - வீங்குதல்; விம்மதம் - வீங்கி வெடித்தல். யானையின் காலிலிடல் தீயிலிடல் வெட்டுதல் ஆகியவை தீய செயலாயினும், நன்மை விளைவிப்பது, ஆதலின் “நன்று” என நவில்கின்றார். நன்று என்பதைக் காலிலிடல் நன்று, விம்மதமாக்குதல் நன்று, வெட்டு தல்நன்று எனக் கூட்டுக. இவற்றைச் செய்தலால், நெஞ்சின்கண் படிந்து இறைவனாகிய நின்னை நினையாது ஒழியும் குற்றத்தைச் செய்விக் கும்மதம் என்ற கொடிய குற்றம் நீங்குவது பயனாம் என்பது விளங்க, “உன்னைவிட்ட அதன் வெம்மதம் நீங்கல்” என்றும், இவ்வாறு ஒறுப்பது எனக்கு எவ்வகையாலும் உடன்பாடே என்பாராய், “என் சம்மதம் காண் எவ்விதத்தினுமே” என உரைத்தருளுகின்றார்.

     இதனால் எத்தகைய துன்பத்துக்கு உட்படுத்தியேனும், என் நெஞ்சினை மதம் என்ற குற்றத்தின் நீங்கி நின்னை நினைக்கும் அருள்புரிக என உரைப்பது காணலாம்.

     (106)