107
107. நன்னெறியில் நின்று நலம் பெற முயல்பவர்க்குத் தடை செய்பவை அவர்பால் உள்ள குற்றங்களாகும்.
குற்றங்களை உணர்ந்து நீக்கினாலன்றிக் குணங்களாற் பெறலாகும் நலங்களைப் பெறல் இயலாது.
மேலும், குணங்களை நாடலினும் குற்றங்களை நாடியறிதல் கற்ற கல்வியால் இனிது இயலுகிறது. அதுபற்றியே
கல்வி இன்றியமையாததாக நிலைபெறுகிறது. கல்வியறிவு பெருகபெருக ஒருவர் தன்பாலுள்ள குற்றங்களைக்
கண்டறிவது எளிதாகும். குற்றங்களைக் கண்டறிதற்குத் துணைபுரியும் கல்வியறிவு உயிர் உடம்பு என்ற
இரண்டினுள் எதன்கண் தங்குகிறது என்று எழும் வினாவுக்குத் திருவள்ளுவர் அஃது உயிரின்கண் தங்குகிறது
என உணர்த்துகிறார். ஒருவன் செய்கிற வினை அவனது உயிரின்கண் தங்கி, அஃது எடுக்கும் பிறவிதோறும்
தொடரும் என்று “எனைப்பகையுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின் சென்று அடும்” எனவும்,
“நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம், நோய் செய்யார் நோயின்மை வேண்டுபவன்” எனவும்
வரும் திருக்குறட்களால் தெரிவிக்கின்றார். கல்வியும் வினையாதலால், “ஒருமைக்கண் தான் கற்ற
கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்புடைத்து” எனத் திருவள்ளுவர் உரைக்கின்றாரென்பது தெளியப்படும்.
உணர்வு வடிவினதாகிய உயிரின்கண் கல்வியுணர்வும் கலந்து ஒன்றுவது பொருத்தமாகவும் உளது. இனி, உயிரறிவு
புந்தி வட்டத்தின் வழியாக உடற்குள்ளெழும் உணர்ச்சிகளையும், கண் காது முதலிய கருவிகளின் வழியாக
உடலின் மேனிலையையும் வேறாய உலகியற் பொருள்களையும் செயல்வகைகளையும் அறிகிறது. புறத்தே பெறும்
கல்வி கேள்விகளால் உளதாகும் அறிவும் புந்திவட்டத்தின் வழியாக உயிரை யடைகிறது. இவ்வகையில்
புந்தி நடுவிடமாகத்திகழ்வதால், யாவரும் இனிது தெரிந்து கொள்ளல் வேண்டிப் புந்தியே கல்விக்கு
இடமாக அறிஞர் கூறுகின்றனர். புந்தியை வடநூலார் புத்தி தத்துவம் என்பர். இதுபற்றியே இருவினையும்
தங்குமிடத்து புத்தி தத்துவமெனச் சிவாகமங்கள் கூறுகின்றன. ( பௌஷ்கரம் பாசபதார்த்த படலம்
) அதனால், வள்ளலார், மனமுதலிய உட்கருவிகட்கும் கண் முதலிய புறக்கருவிகட்கும் முதன்மை பெறும்
புந்தியை ஆராய்கின்றார். குற்றங்களும் வினையாதலின், அவ்விடத்தே அவற்றைக் காட்டும் கல்வியறிவை
நோக்குகிறார். விளக்கம் தரும் கல்வி காணப்படவில்லை; கல்வியாகிய வினை செய்யப்படாமை தெரிகிறது.
மனமுதலிய உட்கருவிகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் நெஞ்சினைப் பார்க்கின்றார். ஓரிடத்திலும்
ஒரு பொருளிடத்தும் நில்லாமல் அசைந்தவண்ணம் அந் நெஞ்சு அலமருவதைக் காண்கின்றார். இறைவன்
திருவடியோ ஒரு சிறு அசைவுமின்றி நிலைபெற நின்று ஒளிசெய்யும் இயல்பினதாகலின் நெஞ்சு அதனைப்பற்றி
அலைவின்றி நிற்கலாமென நினைக்கின்றார். ஆனால், நெஞ்சமோ அதனை நினைந்து நில்லாமல் திண்மையின்றிப்
புலன்கள் மேல் ஓடிய வண்ணம் உளது. இரண்டையும் விட்டு உணர்வாய் ஒளியாய்த் திகழும் உயிரறிவை
நோக்குகின்றார். மலக்கலப்பால் ஒளி குன்றியிருப்பது ஒருபாலாக, மாயையினின்று தோன்றுவிக்கப்பட்ட
உடலும் உள்ளும் புறமுமாகிய கருவிகளும் உலகியற்பொருள்களும் தாம் நல்கும் இன்பத்தையே விரும்புமாறு
உயிரறிவை மயக்கி இருள்படுத்துவதைக் காண்கின்றார். அம் மயக்கத்தின் அடியாக மதம் என்னும்
குற்றம் எழுந்து நலந் தீங்கு காணாதவாறு கெடுப்பதைக் கண்டு வள்ளலார் வருந்துகிறார்; இக் கூறுகள்
அனைத்தையும் நன்குணர்ந்தவன் சிவபெருமான். இவற்றின் மயக்கினின்றும் நீங்குதற்கு அவனது
அருளல்லது துணையில்லை என்ற உணர்வு திகழ்கிறது. அப் பெருமான்பால் முறையிடுகின்றார்.
2277. கல்லாத புந்தியும் அந்தோநின்
தாளில் கணப்பொழுதும்
நில்லாத நெஞ்சமும் பொல்லாத
மாயையும் நீண்மதமும்
கொல்லாமல் கொன்றெனைத் தின்னாமல்
தின்கின்ற கொள்கையைஇங்
கெல்லாம் அறிந்த உனக்கெளி
யேனின் றிசைப்பதென்னே.
உரை: கல்லாத புந்தியும், நில்லாத நெஞ்சமும், மாயையும், மதமும் கொல்லாமற் கொன்று தின்னாமல் தின்கின்ற கொள்கையை எல்லாம் அறிந்த உனக்கு, இன்று எளியேனாகிய யான் உரைப்பது என்னவாம். எ.று.
கற்றல் என்பது கண்ணாலும் காதாலும் வாயாலும் முறையே பார்த்தும் கேட்டும் படித்தும் அறிவன அறிவது. ஓரளவு கல்விப் பயிற்சி எய்தியதும் வாயாற் படித்து அறிவது. நின்றுவிடுவதால், கண்ணும் காதுமே கல்வி யுணர்வுக்குப் பயன்படுகின்றன. அதுபற்றியே “கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடையோர்” எனத் தொல்காப்பியர் உரைக்கின்றார். கண் முதலிய கருவிகள் கற்றலைச் செய்வது புந்தியின் இயக்கத்தாலாதலால் கற்றலாகிய தொழிலைச் செய்யாமையாகிய குற்றம் இருப்பது தோன்றக் “கல்லாத புந்தி” எனவுரைக்கின்றார். கல்லாத - கற்றலாகிய செயலைச் செய்யாத திருவடியல்லது உயிர்கட்குப் பற்றுக்கோடு வேறில்லை. அதனைப் பற்றாது விலகுவதைவிடப் பெருங்குற்றம் வேறே இல்லை. இறைவன் தாளை நினையாமையாகிய குற்றத்தால் விளைவது பெருந்துன்பமாதலால், அதனை நினைப்பதற்கே பெரியோர் அஞ்சுவர். நெஞ்சம் திருவடிக்கண் நில்லாமல் ஓடுவதற் கஞ்சுகின்றமை தோன்ற 'அந்தோ' என்றும், “நின்தாளில் கணப்போதும் நில்லாத நெஞ்சம்” என்றும் வருந்திக் கூறுகிறார். உயிர்கள் உலகில் வாழ்வாங்கு வாழ்ந்து இன்பவாழ்வு பெறல்வேண்டி இறைவன், மாயையாகிய சக்தியைக் கொண்டு உலகைப் படைத்து உடம்பையும் ஏனைப் பொருள்களையும் படைத்துள்ளான் என்பது சைவநெறி. “இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு”; இதனை நோக்காமல், “புவனியிற் போய்ப் பிறவாமையில் நாம் நாள் போக்குகின்றோம் அவமே” என்று திருமால் முதலிய தேவர்கள் அங்கலாய்க்கின்றார்கள் என மணிவாசகப்பெருமான் எடுத்துரைக்கின்றார். உலகில் வாழ்வாங்கு வாழ்வதால் உயிர்கள் அறிவிற் கலந்து நிற்கும் மலவிருள் நீங்கப் பெறுகின்றன. அந்த இருள் நீக்கத்துக்குரிய உலகு உடம்பு முதலியவற்றுக்கு முதற்காரணமாவது மாயையாயினும், தன்னாலாகிய உலக வாழ்வை நன்கு வாழ்தல் வேண்டி, உயிரறிவை மயக்குவது அதன் இயல்பு. கற்கப்படும் கல்வி அறிவுக்கு விளக்கம் தரும் இயல்பிற்றாயினும் மேன்மேலும் பயிலுதற் பொருட்டு இன்பம் தந்து மயங்குவதுபோல மாயாகாரியமான உலகவாழ்வும் மயக்குகிறது. இக்கருத்துப் புலப்படவே, மணிவாசகர், “கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்” என உரைத்தருளுகின்றார். மாயையின் மயக்கும் இயல்பை உள்ளவாறு உணர்ந்து பயன் கொள்பவர் சிலரும், மயங்கி அதற்கே இரையாகிப் பிறப்புக்களாகிய கடலில் அழுந்துகிறவர் பலருமாக உள்ளனர். பலரை மயக்குவதுபற்றிப் “பொல்லாத மாயை” என்று உரைக்கின்றார். மாயையாலான உலகவாழ்வு பொருள்வாழ்வு அருள்வாழ்வு என
இருவகைப்படும். பொருள் வாழ்வு பொருள் செய்தலும், செய்த பொருளை நுகர்தலும் ஆகிய இரு நெறிகளையுடையது; செய்பொருள் செய்தற்கு யான் என்னும் உணர்வும், நுகர்தலும் எனது என்னும் உணர்வும் இன்றியமையாதன. இரண்டும் இல்வழிப் பொருள்வாழ்வு கெட்டழியும். இப்பொருளுணர்வு மிக்க வழி மதம் என்னும் செருக்குத் தோன்றி அறிவுக்கண்ணை மறைப்பது பெரும்பான்மை. அருள் வாழ்வுக்கு யான் எனது என்னும் இருவகைச் செருக்குணர்வும் ஆகாதன. உலகியற் பொருளை நோக்காமல் அதன் நிலையாமையை நோக்கி நிலைத்த மெய்ப்பொருளை நோக்கி, ஆரா இயல்பினதாகிய அவாவறுப்பது, அவாவுக்கு நெஞ்சில் இடந்தர மறுப்பது, அருள் வாழ்வு; பொருள் வாழ்க்கைக்கு வேண்டிய உண்பொருளையும் பிற நுகரச்சியும் அருள் வாழ்வு தலைக்கொள்வோர் விலக்குதல் வேண்டும். விலக்கா வழி மயக்கமும் செருக்காகிய மதமும் பெருகி நோய் செய்யும். மயக்கத்தினும் மதம் அருள் வாழ்வில் தொடர்ந்து நின்று தீங்கு செய்தலால், “நீள்மதம்” என்று குறிக்கின்றார். கொன்றவழி யுண்டாகும் செயலின்மையும் தின்றவழி யுண்டாகும் பொருளின்மையும் காணப்படாமையால், “கொல்லாமற் கொன்று தின்னாமல் தின்கின்ற கொள்கை” என வுரைக்கின்றார். கொன்று என்பதில் கொல்லுதல் துன்புறுத்தலையும், தின்கின்ற என்பதில் தின்றல் வதைத்தலையும் சுட்டுகின்றன. அறிந்தார்க்கு உரைப்பது வெறுஞ்சொல்லிழப்பாவதால், “நான் இசைப்பது என்னே?” என முறையிடுகின்றார்.
இதனால், கல்லாமை முதல் மதம் ஈறாக உள்ள குற்றங்களைக் கூறி அருள் வேண்டி முறையிடுவது கருத்தாம். (107)
|