108
108. நின் அருள் காட்டும் வழியால் தரும் பொருளே பொருள் என்ற போது அருள்காட்டும் வழி யாதாம்
என்றொரு கேள்வி உள்ளத்தெழுகிறது. அதனை நன்கு எண்ணிய அடிகளார் அவ்வழியை உரைக்கின்றார். கேவலத்தில்
மலவிருளில் மூழ்கிச் செயலற்றிருந்த உயிர்க்குச் சகலத்தில் உடம்பும் உலகும் உணர்வும் தந்து
உலகியற்பொருள் வாழ்வையும், அதனின் நீங்கிச் சுத்தத்தில் சிவானாந்த அருள்வாழ்வையும் தன்
திருவருளால் வகுத்தளித்துள்ளார். ஆகவே பொருணெறியும் அருணெறியும் என அவன் காட்டுவன இரண்டாம்,
பொருணெறிபற்றி வாழ்வாங்கு வாழ்ந்து உய்திபெறுதலும், பொருணெறியை விட்டு அருணெறிபற்றி உய்திபெறுதலும்
உயிர்க்கு வாய்த்துள்ளன. உயிரின் தகுதிக்கேற்ப அத் திருவருள் நெறி காட்டும்; அந்நெறிபற்றிச்
செல்வது செவ்விது என்று அறிவுறுத்துகின்றார்.
2278. தெவ்வழி ஓடும் மனத்தேனுக்
குன்றன் திருஉளந்தான்
இவ்வழி ஏகென் றிருவழிக்
குள்விட்ட தெவ்வழியோ
அவ்வழி யேவழி செவ்வழி
பாடநின் றாடுகின்றோய்
வெவ்வழி நீர்ப்புணைக் கென்னே
செயல்இவ் வியனிலத்தே.
உரை: செவ்வழிப்பண்ணுக்கு ஒப்ப ஆடுபவனே, பகைவழியில் செல்லும் மனத்தையுடைய எனக்கு நின் திருவுள்ளம், இவ்வழியே ஏகுக என்று இருவழிக்குள் விட்டது; அது காட்டுவது எவ்வழியோ அவ்வழியோ வழி; மிதவையாகிய புணைக்கு நீர் செல்வதுதானே வழி எ.று.
செவ்வழி - பண்வகையில் ஒன்று. சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின் காரெதிர் கானம் பாடினேம்” (புறம்) தெவ்வழி - குற்றம் செய்வித்துத் துன்பம் நுகர்விக்கும் வழி. குற்றங்கள் காமம் வெகுளி மயக்கம் என்பனவாகும். அவற்றால் துன்பம் விளைவதுபற்றிப் 'பகை' என்பர். இக்குற்றங்கள் மனத்திற் கலந்து நின்று காட்டும் செயல்வகைகள் எளியவாய்த் தோன்றித் துன்பம் எய்துவிப்பது குறித்தே, “தெவ்வழி ஓடும் மனத்தேன்” என்று கூறுகின்றார். அறிவும் செறிவும் நிறையு மில்லாதபோது மனம் காமவெகுளி வயப்பட்டுத் தீ நினைவு நிறைந்து அவை காட்டும் துன்பநெறியிற் செல்லும்போது இறையருள் வாளாங்கு இருப்பதில்லை; அவ்வப்போது அறிவை நெறிப்படுத்தி நன்னெறி காட்டுவதுண்டு. மனம் வேறுணர்வு கொண்டு விலகிச் செல்லும் குற்றம் செய்ய நினைக்கும்போது அருளுணர்வு தோன்றி, இதனால் துன்பமுண்டாகும் என முன்கூட்டி அறிவுறுத்தும்; ஆயினும், குற்ற நினைவு வலிமிக்கிருக்குமாயின், உயிர் குற்றமே செய்துவிடும். குற்ற நினைவுகள் எளியவாயும் நன்னினைவு அரியவாயும் இருத்தலால் மக்களில் குற்றம் செய்து துன்புறுவோர் பலராய் இருக்கின்றனர். குற்றம் புரிவது உயிர்கட்கு இயல்பன்று; ஆயினும், அதனைச் செய்தற்குரிய வாய்ப்பும் சூழ்நிலையும் மிக்குள்ளன. அதனால்தான் குற்றமுடையவர் பலராகவுள்ளனர். பழகுதல், புணர்தல், உணர்வொத்தல் ஆகியவற்றால் உண்டாகும் நண்பருரைக்கண் பழமையும் பகைவர் உரையில் புதுமையும் காணப்படுதலால் பகையுணர்வைப் பற்றிப் பின் செல்லும் நிலை மக்களுக்கு எளிதில் உண்டாகிவிடுகிறது. பழமையில் புறக்கணிப்பும் புதுமையில் மிகுவிருப்பும் மக்கள் உடையராய் இருப்பதற்கு இதுவே காரணம். இவற்றையெல்லாம் எண்ணியே வடலூரடிகள் 'தெவ்வழி ஓடும் மனத்தேன்' என்று கூறுகிறார். மிகுவிருப்பில்வழி விரைவு பிறவாமையால் விருப்புண்மை தோன்ற, தெவ்வழிச் செல்லும் என்னாமல் ஓடும் என்று குறிக்கின்றார்.
உயிர்கள் உலகிற் பிறந்து வாழ்ந்து உய்திபெறல் வேண்டும் என்பது இறைவன் திருவுள்ளம். அதுபற்றியே உலகைப் படைத்தளித்துள்ளான்; உலகவாழ்வு “சிவன் உய்யக்கொள்கின்ற ஆறு” என்று மாணிக்கவாசகப் பெருமானும் வற்புறுத்துகின்றார். இவ் வாழ்வு நன்கமைதற்கென்றே அறம் பொருள் இன்பம் என்ற உறுதிப்பொருள்கள் உள்ளன. இவற்றுள் நடுவணதான பொருள் எய்தியவழி ஏனை அறமும் இன்பமும் இனிது வந்தெய்தும், “ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை யிரண்டும் ஒருங்கு” என்பர் திருவள்ளுவர். இதனால், உலகியல் வாழ்வுக்குப் பொருள் தலையாயதென்று தெளியலாம். அது நோக்கி இயங்கும்நெறி பொருள்நெறியாகும். பொருள் நெறி நல்கும் உலகியல் வாழ்வோடே உயிர் வாழ்வு நிற்பதன்று; உலகியலில் வாழ்வாங்கு வாழுமிடத்து உயிர், உலகியலில் இறைவன் உயிர்கள் மாட்டுள்ள பேரருளால் உயிரோடு உடனாயும் உயிரில் பொருள்களோடு ஒன்றாயும் இருந்து அருள்புரியும் திறத்தை உணர்கிறது. அருளின் இயல்பை உணருங்கால், பொருளினும் அது சிறந்து தெரிகிறது; சிறந்தது கண்டு அதன்வழி நிற்பது மேன்மேலும் சிறப்பெய்திக் குறைவிலா நிறைவு நல்கும் சிவானந்தப் பெருவாழ்வு பெறுதற்கு வாயிலாவது விளங்கும். அதனை அருள்நெறி என்பது வழக்கு. இவ்விரு நெறியும் உயிர்ப்பொருட்டு அமைக்கப்பட்டிருக்கின்றன என்றும், முதற்கட் பொருள்நெறியிற் செலுத்திப் பின் அருள்நெறிபற்றி உய்தி பெறுக என அருளியிருக்கின்றான் என்றும் காட்டலுற்ற வடலூர் வள்ளல், இறைவன் “திருவுளம்தான் இவ்வழி ஏகு என்று இருவழிக்குள் விட்டது” என்று எடுத்து மொழிகின்றார்.
உலகில் சிலர் பொருள் வழியில் செல்வதும் சிலர் அருள் வழியிற் செல்வதும் இறைவன் திருவுளப்பாங்கு; அதனை எண்ணி அவரவரும் அவ்வவ் வழிகளிற் கடைபோகல் வேண்டும் என்பதற்காக, “விட்டது எவ்வழியோ அவ்வழியோ வழி” என்று உரைக்கின்றார். எனவே, இவ்விரு வழியும் உயிர்கள் தாமே மேற்கொள்வன வல்ல; ஏனெனில் உயிர்கள் இறைவனுடைய அருள் வெள்ளத்தில் மிதப்பன; அவ்வெள்ளம் எவ்வழியிற் செலுத்துகிறதோ அவ்வழியே உயிர்கள் செல்கின்றன என்று உய்த்துணரவைத்து, அதனை ஓர் உவமையில் வைத்துக் காட்டுவராய், “வெவ்வழி நீர்ப்புணைக்கு என்னே செயல் இவ் வியன்நிலத்தே” என்று விளம்புகின்றார். “கல்பொருது இரங்கும் மல்லற் சேயாற்று நீர் வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம்” (புறம். 192) என்று சங்கச் சான்றோர் கூறுவது காண்க. பெருகியோடும் நீர் என்றற்கு “வெவ்வழி நீர்” என்றார். “கல்பொருது இரங்கும் மல்லற் பேரியாறு” எனச் சங்கச் சான்றோர் கூறுவதும் இக்கருத்துப்பற்றியதென அறிக.
இதனால் அருள்காட்டும் வழியல்லது உயிர்கட்கு வேறு வழியில்லை என்பது பயன். (108)
|