109

      109. மக்களிடையே உண்டாகும் குற்றங்களில் நாணாமை என்பது ஒன்று. இது பேதைமை காரணமாக உண்டாவது. “நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்” என்பர் திருவள்ளுவர். நிமிர்ந்து நிற்கும் வில்லின் இருதலையையும் பிணித்து வளைத்துச் சுருக்கும் நாண்போல ( கயிறுபோல ) செய்வினைக் கண் நிமிரும் மனத்தைப் பழிபாவம் கண்டு அச்சத்தால் வளைத்து மேல் நிமிரவிடாது சுருக்குவதுபற்றி நாணம் ஒரு நற்பண்பாகக் கொள்ளப்படுகிறது. பெண்களின் மேனிநலமும் நுதலும் கண்ணும் மார்பும் காண்பார் உள்ளத்தில் வேட்கையை விளைவிக்கும் சிறப்புப்பற்றி புறத்தார் காணாவாறு ஆடை முதலியவற்றால் மறைப்பது நாணமாயிற்று. பெண்மைக்குச் சிறப்பும் கவர்ச்சியும் நல்குவது மார்பு; அதனால் அது தோன்றும்போதே நாணம் உடன் தோன்றி மறைத்தற்கேற்ப உள்ளத்தில் சுருங்கும் செயற்பண்பை உண்டாக்குகிறது. நாணமில்லாமை பெண்ணுக்குப் பெருமை தருவதில்லை. அதனால் தொல்காப்பியர் பெண்மைக்கு ‘உயிரினும் சிறந்தன்று நாண்’ என்றார். காதற் கூட்டத்தில் நாணத்துக்கு விலகுதல் இயல்பாதலின், எக்காலத்தும் நீங்காமை ஆடவர் நாணத்துக்கு இயல்பு. மேலும் மகளிரது நாணம் மனத்தின்கண் நின்று, காதற் கூட்டத்தில் மனம் கரைந்து நெகிழுமிடத்து நாணம் துறந்துவிடுகிறது. ஆண் மக்கள் நாணம் வினைமேல் நிலைபெறுவது. வினை ஆடவர்க்கு உயிராதலின், வினையின்கண் நீங்காமை நாணத்துக்கு இயற்கையறமாயிற்று. இதனைக் குறிக்கொண்டே திருவள்ளுவர், “கருமத்தால் நாணுதல் நாணு, திருநுதல் நல்லவர் நாணுப்பிற” என உரைக்கின்றார். இதன் இன்றியமையாமையைக் காட்டவே “நாணுடைமை மாந்தர் சிறப்பு. நாண் என்னும் நன்மை, அணியன்றோ நாணுடைமை” என்று பலவகையாக வற்புறுத்துயுள்ளனர். இத்தகைய நாணமாகிய நலம் செய்வினைமேல் இருப்பது கூறியவர், வையக வாழ்வில் வினையெல்லாம் பொருளும் இன்பமும் பெறுவது கருதிச் செய்யப் படுவன. வினையால் அவற்றைப் பெறக்கருதி முயல்பவர், நாணத்தைத் தான் வேலியாகக் கொள்வார். நாணாகிய வேலி கொள்ளாமல் ஞால முழுதும் கைவருவதாயினும் மேலார் விரும்பமாட்டார் என்றற்காகவே, “நாண் வேலி கொள்ளாது மன்னோ வியன் ஞாலம் பேணலர் மேலாயவர்” என்று உரைக்கிறார். மன்னோ என்பதைப் பேணலர் மன்னோ எனப் பிரித்துக் கூட்ட வேண்டும். நாணம் செயல்மேல் நிற்பதுபோல மானம் மனத்தின்கண் நிற்பது. ஆதலால் மானப்படவரின் உயிர் துறக்கும் நல்லோர், நாணத்தின் பொருட்டும் உயிர் துறப்பர் என்பது விளங்க “நாணால் உயிரைத் துறவார்; நாணாள்பவர்” என்று திருவள்ளுவர் தெளிவிக்கின்றார்.

 

      வையகத்துப் பொருளும் இன்பமும் பெறவேண்டுவோர்க்கு நாணம் வேலி என்றதனால், மேலுலக இன்பவாழ்வு பெற முயல்வோர்க்கும் நாணம் இன்றியமையாது என உணர்தல் வேண்டும். அகன்ற உலகில் அயர்வின்றி உழைத்துப் பெறலாகும் பொருளும் இன்பமும் நிலையா இயல்பின; நில்லாப் பொருளின்பங்களைப் பெறுதற்கே நாணம் இன்றியமையாத வேலியாயின், நிலைத்த திருவருட் பேரின்பத்துக்கு அது மிகவும் வேண்டற்பாலது எனச் சொல்ல வேண்டா. நாணமின்மைக்கு வருந்திய மணிவாசகப் பெருமான் “என் நாண் இல்லா நாயினேன் என் கொண்டெழுகேன், எம்மானே” ( சதக. 84 ) என இரங்குகின்றார். பிறிதொருகால், இறைவன் திருவடிக்கு ஆட்படற்கு முன்பும் பின்பும் இருந்த தமது நிலையை எண்ணி வருந்துகிற மணிவாசகனார், “நகுவேன் பண்டு தோள் நோக்கி நாணமில்லா நாயினேன்” எனவுரைத்து, நாணுதற்கு உரியனவாய் தம்பால் இருந்த குற்றங்களைக் கருதி, “நெகும் அன்பில்லை நினைக்காண” என்று இயம்புகின்றார்; இப்போது அது நினைந்து நாணாமல், அடியார் குழுவினுள் இருந்து திருவடிப்பேறு தனக்கு உரியதே என்று விதப்புற்று அத் திருவடி நீழலிற் புகுதற்கு விரைகின்றார். “புகுவேன் எனதே நின் பாதம் போற்றும் அடியார் உள் நின்று” என்று தமது நினைவை எடுத்து மொழிகின்றார். எனவே, பண்டு நெகும் அன்பின்றித் தோள்நோக்கிச் சிரித்தது குற்றம்; அச்செயலால் நாணிழந்தேன் நாயினேன் என்று நவில்கின்றமை நன்கு காணலாம். தேன் கலந்த இத் திருவாசகத்தில் ஊன்கலந்து உயிர்கலந்து நின்ற வடலூர் வள்ளல் தம்பாலும் நாணமின்மை காண்கின்றார். சிவனது திருவருள் வாழ்வு வேண்டி வழிபடும் அடியவர், அதற்கேற்ப உணவிற் சிலவற்றையும் உடையிற் சிலவற்றையும் நெஞ்சில் எழும் எண்ணங்கள் சிலவற்றையும் மறுத்து விலக்கியுள்ளார்; ஆனால், தாம் அவர் செய்தவற்றைச் செய்யவில்லை என்றும், செய்யாமை மறைவாக இன்றி உலகவர் அனைவரும் அறியச் செய்துள்ளேன். இன்று என் உள்ளமும் உரையும் செய்கையும் அடியவர் பெறும் பேறு கருதி உலகறிய உழல்கின்றேன். இதனால், நாணவேண்டிய எனக்கு நாணமில்லை. நாணமில்லாமைபற்றி என்னைக் காணும் நல்லுலகம் நாணுகின்றது. நன்மை தருவதும் வேலியாய்க் காப்பதுமாகிய நாணம் என்னும் செயல் பண்பின்றி என் பிறப்பு அமைந்துள்ளது. இப்பிறப்பு யானே வேண்ட வந்ததன்று; நீயே இதனை நல்கி இவ்வாறு வாழச் செய்துள்ளாய்? எதனையும் கொன்னே (வீணாகச்) செய்பவன் நீயல்லன்; காரணம் உரைக்க வேண்டும் என முறையிடுகின்றார்.

2279.

     கண்ணார் நுதற்செங் கரும்பேநின்
          பொன்னருட் கான்மலரை
     எண்ணாத பாவிஇங் கேன்பிறந்
          தேன்நினை ஏத்துகின்றோர்
     உண்ணாத ஊணும் உடுக்கா
          உடையும் உணர்ச்சிசற்றும்
     நண்ணாத நெஞ்சமும் கொண்டுல
          கோர்முன்னர் நாணுறவே.

உரை:

     நுதலிற் கண்ணார் செங்கரும்பே, நின் பொன்னருட் கால் மலரை எண்ணாத பாவியாகிய யான், நின்னை ஏத்தும் அடியவர் உண்ணாத உணவும் உடுக்காத உடையும் உணர்ச்சி சிறிதும் இல்லாத நெஞ்சும் கொண்டு உலகவர் கண்டு நாணமுற ஏன் பிறந்தேன்; அருள் புரிந்து தெளிவு செய்க. எ.று.

     கணுவைக் கண்ணென்னும் மரபுபற்றி, கண்ணார் செங்கரும்பே என்று குறிக்கின்றார். கண்ணார் நுதல் - கண்பொருந்திய நெற்றி. பெறுதற்கருமை தோன்றத் திருவருளைப் பொன்னருள் எனப் புகழ்கின்றார். பொன் கால்மலர் என இயைத்துப் பொன்போன்று அழகிய திருவடியாகிய மலர் என்றும் கூறலாம். “பொன்னார் திருவடி” என்று பெரியோர் பாராட்டுவது வழக்கம். எண்ணாமைக்கு ஏதுவாகிய பாவம் உடையவன்; எண்ணாத பாவி. நோயும் காமமும் விளைவிக்கும் ஊண்வகையை “உண்ணாத ஊண்” என்றும், வழிபாட்டுக்கு ஒவ்வாத வகையில் அமைந்த ஆடை வகைகளை “உடுக்காத உடை” என்றும் உரைக்கின்றார். உணர்ச்சி - திருவருள் உணர்வு. திருவடி மலரை எண்ணாத பாவத்தால் எனக்கு இப்பிறப்பு எய்தியதாயின், எண்ணுதற்கேற்ற பிறப்புப் பெறுதற்கு அமைந்த நற்பிறப்பை அருளுக என இதனால் வள்ளலார் முறையிடுகின்றார் என்பது இத் திருப்பாட்டின் கருத்து.

     (109)