110

       110. உயிர்கட்கு வாழ்வளித்து முடிவில் இன்பம் எய்துவிக்கும் இயல்பினால் இறைவன் உலகுயிர்கட்குத் தாயாதல் இனிது தெரிகிறது. “தாயாய் முலையைத் தருவானே, தாராதொழிந்தால் சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ” எனவும், “தாயே என்றுன் தாள் அடைந்தேன்” (திருவா. 645) எனவும் மணிவாசகர் நிறையிடுவது நெறியருளுகிறது. இங்ஙனம் எனக்குத் தாயாய் இருந்தும் யான் அழுது குறையிரந்து நிற்றலைக் கண்டும் இரக்கமின்றி யிருப்பது முறையன்று என வள்ளலார் மொழிகின்றார். அப்பெருமானது அருள்வெள்ளத்தில் மிதக்கும் இவ்வுலகில் வாழும் மக்களுயிரில் தாயர் செயலை எடுத்துக் காட்டுகின்றார். “வயிறு பசிக்கிறது; ஆற்றேன்” என்று சொல்லித் தாய் முன்நின்று அழும் சேயை அவள் கண்ணாற் பார்த்து வாளா இருக்கத் துணிய மாட்டாள்; எவர்பாலேனும் இரந்து உணவு கொணர்ந்து இட்டுப் பசி தீர்ப்பள்; பெருமானாகிய நீ யான் துன்பம் ஆற்றாது அழுவது கண்டும் இரங்காமல் இருப்பது நன்றன்று என முறையிடுகின்றார். 

2280.

     அம்மா வயிற்றெரிக் காற்றேன்
          எனநின் றழுதலறச்
     சும்மாஅச் சேய்முகந் தாய்பார்த்
          திருக்கத் துணிவள்கொலோ
     இம்மா நிலத்தமு தேற்றாயி
          னுந்தந் திடுவள்முக்கண்
     எம்மான்இங் கேழை அழுமுகம்
          பார்த்தும் இரங்கிலையே.

உரை:

     முக்கண் கொண்ட பெருமானே, வயிற்றுப் பசிக்கு ஆற்றேன் என்று சொல்லி அழும் தன் சேயின் முகத்தைத் தாய் பார்த்து சும்மா இருக்கத் துணியாளே; வேறு வீடுகட்குச் சென்று இரந்தாயினும் உணவிடுவளே; ஏழையாகிய என் அழுமுகம் பார்த்தும் நீ இரங்குகின்றாயில்லை இதற்கு என்செய்வேன். எ.று.

     வயிற்றெரி - வயிற்றுப்பசி; இதனைப்பசித்தீ என்பதும் உண்டு. சங்கச் சான்றோரும் “வயிற்றுத் தீ” என வழங்கினர். “வயிற்றிற் பசித்தீ மிகுந்து வருத்துகிறது, இனி ஆற்றேன்” என்று சொல்லித் தான் பெற்ற சேய் அழ எந்தத் தாயும் காணப் பொறாள்; இதனையே, “அம்மா வயிற்றெரிக்கு ஆற்றேன் என நின்று அழுது அலறச் சும்மா அச் சேய்முகம் தாய் பார்த்திருக்கத் துணிவள் கொலோ எனச் சொல்லுகின்றார். பசி மிக்கவழிக் குழவிகள் கிடந்து புரண்டழுவது ஒருபுறம் இருக்க, சிறிது வளர்ச்சியுற்ற குழந்தை நின்று அலறி அழுமாதலின் அந் நிலைமை புலப்பட, “நின்று அழுது அலற” என்றும், அது காணும் தாய் இரக்க மிகுதியால் மனம் உருகிக் கண்ணீர் சொரிந்து தானும் அழுவள் என்பது தோன்ற, “சும்மா அச் சேய்முகம் தாய் பார்த்திருக்கத் துணிவள் கொலோ” என்றும் வள்ளலார் விளக்குகிறார். 'சும்மா இருக்கத் துணியாள் எனின் வேறு என் செய்வள் என எழும் வினாவுக்கு விடை கூறுவாராய், “இம்மாநிலத்து அழுது ஏற்றாயினும் தந்திடுவள்” என உரைக்கின்றார். அண்மையிலுள்ள வீடுகளில் கிடைக்காதாயின் நெடுந்தூரம் நடந்து பல மனைகட்கும் சென்று உணவு இரந்து பெற்றுக் கொணரந்து தந்து பசித்தீத் தணித்து அமைவள் என்பது விளங்குதல் வேண்டியே “இம்மா நிலத்து அமுது ஏற்று” என எடுத்துரைக்கின்றார். இரண்டு கண்ணுடைய மக்களினத்துத் தாயே தன் சேயின் பொருட்டு இச்செயலைச் செய்வளெனின், மூன்று கண் பெற்றுத் தேவர்க்கெல்லாம் தெய்வத் தாயாகிய நீ நினைத்தற்கொண்ணாத அன்பும் இரக்கமும்கொண்டு அருள் செய்தல் வேண்டும். நீ அதனைச் செய்திலை என்ற கருத்துப்பட, “முக்கண் எம்மான் ஏழை அழுமுகம் பார்த்தும் இரங்கிலை” என இயம்புகின்றார்.

     இதனால், இறைவன் அருள் செய்த தாழ்ப்பது பொறாது வருந்தும் தமது நிலையைப் புலப்படுத்துகின்றார்.

     (110)