111

      111. தமது வழி நில்லாமல், தன் போக்கில் செல்லும் நெஞ்சின் திறம் நன்மக்கள் உள்ளத்தை வருத்துகிறது. அதனைத் தம்மின் வேறுபட நிறுத்தி, உணர்வுடையது போல மதித்து, அன்பு காட்டியும் அச்சுறுத்தியும் நெறிப்படுத்த முயல்வது அவர்கள் மரபு. இது இன்று நேற்றுத் தோன்றியதன்று; தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே தொடர்ந்து வரும் சொல் வழக்கு.

 

     “நோயும் இன்பமும் இருவகை நிலையில்

     காமம் கண்ணிய மரபுஇடை தெரிய

     எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய

     உறுப்புடை யதுபோல் உணர்வுடை யதுபோல்

     மறுத்துரைப் பதுபோல் நெஞ்சொடு”

 

புரைப்பர் என்று தொல்காப்பியர் கூறுவது காண்க. இதுபோலவே மக்களல்லாத விலங்குகளையும் புள்ளினங்களையும் மரம் செடி கொடிகளையும் மலை கடல் முதலிய உயிரில் பொருள்களையும், உணர்வுடையவராய் உரைப்பன போலவும் உரைப்பது கேட்பனபோலவும் பாடுவது உரையாடுவதும் சான்றோர் மரபு. அவ்வகையில் வடலூர் வள்ளல் நெஞ்சின் கொடுமையியற்கையை நினைந்து வருந்தி, மென்கனி போன்ற இனிய சொற்களால் அன்புகனிய மொழிவதும் வன்புதோன்ற இடித்துரைப்பதும் செய்கின்றார். இவ்வாற்றால் நில்லாத நெஞ்சினை நெறிப்படுத்த மாட்டாமைக்கு வருந்துவதும் செய்கிறார். இச் செயல்வகை ஒன்றிற்கும் அடங்காது நெஞ்சு ஓடுவது கண்டு, இந்நெஞ்சு உணர்வில்லாததாக வுளதாகலின், இதனைப் படைத்தளித்த இறைவன்பால் முறையிடுவதன்றி வேறு செயலில்லாமை தெரிந்துணர்கின்றார். இறைவனே, வாயாற் சுடுசொல் பல சொல்லி என் நெஞ்சினைத் தேற்ற முயன்றேன்; அது தெளியவில்லை. கடலிடை அன்று கடைந்த ஞான்று தோன்றிய வடவைத் தீயைவிட வெப்பமிகுதியுடையது வேறில்லை என்பர். அதுகொண்டு இந் நெஞ்சினைச் சுட்டால் என்னை எனின், அதனாலும் இந்நெஞ்சு தெளிவு பெறுவதாக இல்லை; இதற்கு என் செய்வேன் என முறையிடுகின்றார்.

2281.

     ஓயாக் கருணை முகிலே
          நுதற்கண் ஒருவநின்பால்
     தோயாக் கொடியவெந் நெஞ்சத்தை
          நான்சுடு சொல்லைச்சொல்லி
     வாயால் சுடினுந் தெரிந்தில
          தேஇனி வல்வடவைத்
     தீயால் சுடினுமென் அந்தோ
          சிறிதுந் தெரிவதன்றே.

உரை:

     இடையறவின்றி எப்போதும் அருளே பொழிகின்ற முகில் போன்றவனே, நெற்றியில் கண் கொண்ட ஒருவனே, நின் திருவடி நினைவின்கண் படிந்து நில்லாமல் புலன்களின்மேல் பற்றுவைத்து வளைந்து வளைந்து ஓடும் என் வெவ்விய நெஞ்சினை, என் வாயால் சுடுசொற்கள் பலமுறையும் சொல்லிச் சுட்டபோதும் தன் செயற்கொடுமையைத் தெரிகிறதாகத் தோன்றவில்லை. இனி, அந்த வலிய வடவைத் தீயைக் கொண்டு சுட்டாலும், அந்தோ, சிறிதும் அது தெரிந்தடங்குவதன்று காண். எ.று.

     ஒரு காலத்தில் பெய்வதும் ஒரு காலத்திற் பெய்யாதொழிவதும் உலகியலில் மேகங்களின் இயல்பாகவுளது. இடையறவுபடாது பெய்தாலும், பெய்யாதொழிந்தாலும் உலகிற்கு நலமுண்டாகாது. நீயோ எனின் அருளாகிய மழையை நொடிப்பொழுது பெய்யாயாயின் உலகனைத்தும் செயலற்று ஒழிந்தழிந்து போகும் தன்மையில் இருப்பதுகண்டு ஒழியா அருள்முகிலாய் ஓங்கி நிற்கின்றாய் என்பது விளங்க வுரைப்பாராய், “ஓயாக் கருணை முகிலே” என வுரைக்கின்றார். நுதல் - நெற்றி; ஒருவன் - ஒப்பற்றவன். “உரையுணர் விறந்த ஒருவ போற்றி” எனச் சான்றோர் பரவுதல் காண்க. தோய்தல் - உறைத்து நிற்றல்; தோய்தயிர், தோய்ந்த நெய் என்றாற்போல. தோய்தல் நன்றாதலின், தோயாமை கொடுமையாயிற்று. வெம்மை நெஞ்சத்தை வெந்நெஞ்சு என்று கூறுகிறார். தீநெறிக்கண் அலைந்து நோய்செய்து வெதுப்புதல்பற்றி இவ்வாறு கூறுகிறார். சுடுசொல் - செவியையும் உள்ளத்தையும் சுட்டு வருத்தும் சொல். “தீயினாற் சுட்டப்புண் ணுள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு” எனச் சான்றோர் சுடுசொல்லின் தீமை குறிப்பது காண்க. வாயாற் சுடினும் என்பது சுடுசொற் சொல்லிப் பயிலாத வாய் என்பது குறித்து நின்றது. சொல்லாதவர் சொல்லும் சுடுசொல் பொல்லாது என்பது கருத்து.

     வடவைத்தீ, நிலவுருண்டையின் அடியில் இருப்பது; சில காலங்களில் நிலத்தின் மேற்பரப்பை முட்டி, வெளிவர முயல்வது; அங்ஙனம் முட்டுவதால், உளவாவன எரிமலைகள், ஒரு காலத்தில் கடலடியில் தோன்றக் கண்ட நம்மவர், அதனைக் கடலில் தோன்றும் தீயெனக் கருதினர். பெருங் கருங்கற் பாறைகளையும் நீராய் உருக்கும் இயல்பிற்று வடவைத்தீ. அதுகொண்டு சுட்டாலும் தெளியாத திண்மை வாய்ந்தது என் நெஞ்சு என இகழ்வதற்காகச் “சிறிதும் தெரிவதன்றே” எனச் செப்புகின்றார். தீயாற் சுடுவது கொடுஞ் செயலாதலின் அதனை நினைத்தற்கும் அஞ்சுபவராதலால் வடலூர் வள்ளற் பெருமான் “அந்தோ” என இரங்குகின்றார்.

     இதனால் தீ நெறிக்கண் செல்லும் நெஞ்சினை நீயே நின் அருளால் திருத்தி யருளுக என முறையிடுவது இப்பாட்டின் பயன்.

     (111)