112
112. சிவத்தின் பெருமையையும் சீவனாகிய தமது அறிவின் சிறுமையையும் எண்ணுகிறார் வடலூர் அடிகள்.
சிவபரம்பொருளை நாம் அறிவால் நன்கு அறியலாம் என எண்ணுவது தவறு எனக் கருதுகிறார். கடல் நீர்
மிகப் பெரிது; அதனைச் சிறு முகவையால் அளப்பது போல்வது உயிர்கள் தம் சிற்றறிவால் சிவத்தை
அறிய முயல்வது என்பது தெரிகிறது. “ஆழ அமுக்கி முக்க்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி”
என்ற பெரியோர் உரையும் நினைவில் தோன்றுகிறது; என்றாலும் உயிர்கள் சிவத்தைக் காணலாம்
எனச் சிந்திக்கின்றனர், தெரிவிக்கின்றனர். இதனை மணிவாசகரும் நினைக்கின்றார். இளமகளிர்
உரையாடலில் வைத்து “மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம்போல் அறிவோம் என்றுள்ள
பொக்கங்களே பேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடை திறவாய்” என்ற பாவைப் பாட்டில்
பாடுகின்றார். “மாலும் நான்முகனும் காணாத பரம்பரனை நாம் அறிகுவோம் போலும்” என்று எண்ணி
இயம்புவது பொக்கம் எனப்புகல்கின்றார் வடலூர் வள்ளல். உயிர்ப் பொருள் அறிவுடையதொன்று; சிவத்தை
நோக்க அதன் அறிவு சிறுமையுடையதே. சிறுமையை உணரும் திறம் அவ்வுயிர்க்கும் உண்டு. அதனை உணர்ந்தும்
சிவத்தின் பெருமை முற்றும் அறிந்து தன் அறிவெல்லைக்குள் அடக்கிக்கொள்ளலாம் எனக் கருதுவது
குற்றம். அறிவுருவாகிய அதனைத் தன் அறிவுக்குத்தக்க அறிந்து மகிழ்வதை விடுத்து, முழுதும் அறிதல்
வேண்டுமென அவாவுவது நல்லுயிர்க்கு நாணம் தருகிறது. நாணாது நினையும் தன்னைப் பொறுத்தருளல் வேண்டுமென
முறையிடுகின்றார்.
2282. மாலறி யான்மல ரோன்அறி
யான்மக வான்அறியான்
காலறி யான்மற்றை வானோர்
கனவினுங் கண்டறியார்
சேலறி யாவிழி மங்கைபங்
காநின் திறத்தைமறை
நாலறி யாஎனில் நானறி
வேன்எனல் நாணுடைத்தே.
உரை: மங்கை பங்கனே, திருமாலும் பிரமனும் இந்திரனும் வாயுவும் ஏனைத் தேவர்களும் கனவிலும் நின் பெருமையைக் காண மாட்டாராவர்; ஞானநூலின் எல்லையாகக்
கூறப்படும் நால்வகை வேதங்களும் அறிய மாட்டா எனின், நான் அறிவேன் என எண்ணுவது எத்துணை நாணத் தகுவது? எ.று.
மால் - திருமால்; பெருமை யென்னும் பொருள்பட நிற்கும் மால் என்பதை வடமொழியாளர் விஷ்ணு என்பர். மாவிஷ்ணுவாலும் அறிய முடியாதவன் என்பதற்கு “மால் அறியான்” என்றார். பிரமம் - பெரியது; பிரமன் என்பது பெரிய அறிவுடையவன்; அறிவின் பெருமையால் பேருலகனைத்தையும் படைத்தவன். பிரமன் படைப்பது உயிரில் பொருள்களான பேருலகமே; உலகில் வாழும் உயிர்கள் பிரமனால் படைக்கப் படுவனவல்ல என்பது சிவநெறி. இப் பிரமன் இருந்தாங்கிருந்தே நாற்றிசை நிகழ்ச்சிகளையும் நன்கு அறிபவன்; அதனால் அவனை நான்முகன் என்பர். இந்திரனுக்கு பகவான் என்பது பெயர்; மண்ணக வேந்தருள் நூறு யாகங்கள் செய்து தேவனாய் உயர்ந்தோன் எய்தும் பயன் இந்திரபதம்; அப்பதவியைப் பெற்றவன் இந்திரன். இவ்வாறே நாராயண பதமும், பிரமபதமும் சிற்றுயிர்களால் எய்தப்படுவன எனத் திருநாவுகரசர் உரைக்கின்றார்.
“நூறுகோடி பிரமர்கள் நுங்கினார் ஆறுகோடி நாராயணர் அங்ஙனே ஏறுகங்கை மணல் எண்ணில் இந்திரர் ஈறிலாதவன் ஈசன் ஒருவனே. . .”
(ஆதிபுராணம் 3) என்பது அவரது அறிவுரை. நாராயணன் முதல் இந்திரன் ஈறாக ஒருவரும் அறியார் எனவே வானவரும் வாயு வருணன் முதலிய தேவர்களும் அறியார் என்பது பெறப்படும். இது பற்றியே அவர்கள் “கனவிலும் கண்டறியார்” என் வுரைக்கின்றார்.
இனி, ஞான நூல்களின் தலையாய எல்லையாக வேதங்கள் உள்ளன என்பர். இவை மக்களில் உயர்ந்தோரான முனிவரால் செய்யப்பட்டன என்பவரும், இவை இறைவனால் செய்யப்பட்டன என்பாரும் உளர். வேதங்கட்கும் இறைவனை அறியமாட்டாத ஞானக்குறைபாடு உண்டாதலின், இவை மக்களால் செய்யப்படாது இறைவனால் உரைக்கப்பட்டவை எனல் பொருந்தாது என மறுப்பவர் பலர். நல்வினைகளையே உரைத்தற்குரிய வேதங்கள் தீவினையையும் கூறுதலால் அவற்றைச் சிறப்புடைய எனல் பொருந்தாது என்பவரும் உண்டு. சைவர்கள், வேத நெறி உலகியற்குரியது; மெய்ந்நெறிக்கு குரியதன்று எனக்கொண்டு வேதங்களைப் போற்றுகின்றனர். இவ்வாறு வேதங்களைப் பற்றிச் சான்றோர் கூறுதலால் வேதங்களாலும் சிவத்தின் பெருமை உணரப்படாது என்று தெரியக் காண்கின்ற வடலூர் வள்ளல், “நின் திறத்தை மறை நாலும் அறியா” என்கிறார். நாலும் என வருதற்குரிய முற்றும்மை தொக்கது.
இங்ஙனம் அறிபவரும் அறிகருவியாகிய வேதமும் சிவத்தைக் காணமாட்டாதனவாக யான் அறிவேன் என எண்ணுவது குற்றம் என்பாராய், “நான் அறிவேன் எனல் நாணுடைத்தே” என மொழிந்து, அடியேன் நின் சிவமாம் தன்மையைக் கண்டு மகிழக் காட்டியருள்க என இத் திருப்பாட்டால் உரைக்கின்றார். (112)
|