113
113. மதம் என்றும் செருக்கு என்றும் வழங்கும் இக் குற்றத்துக்கு
அடிப்படை யாது? அடிப்படையை அறிந்து அகழ்ந்து எறியாவிடில் அது மேன்மேலும் கிளைத்துக் கொண்டே
இருக்கும். திருவள்ளுவனார், “இளைதாக முள்மரம் கொல்க” என அறிவுறுத்துகின்றார். குற்றத்துக்கெல்லாம்
ஆணிவேராக இருப்பது ஆணவம்; இதனை அகந்தை என்றும் கூறுவர். நல்வினைக்குரிய ஆண்மையைத் தீநெறிக்கட்
செல்லும் தீயபண்பு ஆணவம் எனப்படுகிறது; ஆண்மையை அவம் செய்வது ஆணவம். இதனை வடசொல்லின் திரிபாகக்
கொண்டு, விரிந்து ஓங்கிப் பரந்து விளங்கும் ஆன்ம அறிவைச் சுருக்கி ஒடுக்கி அணுத்தன்மைய தாக்குவது
ஆணவம்; இதனைச் செம்பின்கட் களிம்புபோல, எத்துணையும் இடையறவின்றி ஆன்மப் பொருளின்கண்
அனாதியே கலந்து செறிந்து இருள்செய்து கொண்டிருக்கும் மலம் என்பதும் உண்டு. இதனால் ஆண்மையின்
செயல் அவமாதலால் இம் மலம் ஆணவம் எனப்படுகிறது என்று அறிஞர் கூறுகின்றனர். திருவள்ளுவர் இம்
மலமாகிய ஆணவத்தை “இருள்” எனப் பல குறட்பாக்களில் குறித்துரைக்கின்றார். சிவாகமங்கள்,
“அனாதி நிபிடமகத்” என்றும், “ததேகம் சர்வ பூதானாம்
அனாதி நிபிடம் மகத்” என்றும் கூறுகின்றன.
உமாபதி சிவனார் “இருளானதன்றி இலது எவையும் ஏகப்பொருளாகி நிற்கும் பொருள்” என விளக்குவர்.
பொருள் மிகுதியுணர்ச்சியும் இன்பமிகுதி யுணர்ச்சியும் உள்ளத்தில் நிறைந்தவழி மலம் காரணமாகக்
களிப்புத் தோன்றி அறிவை மயக்குதலால் மதமும் பிற குற்றங்களும் தோன்றுகின்றன. கள் முதலிய
மயக்கம் தருவனவற்றை உண்டவன் நினைவும் சொல்லும் செயலும் தடுமாறுவது போல, மத முதலிய குற்றங்களின்
வயப்பட்டவன் தடுமாறுகின்றான். அவன் மனத்தில் ஆணவ நினைவுகள் தோன்றி அல்லல் உறுவிக்கின்றன.
அவன் செய்கையால் அவன் குடிக்கேயன்றி அவனை உறுப்பாகக் கொண்ட மக்கட் சமுதாயத்துக்கும் இழிவு
உண்டாகிறது.
இதனைப் போக்குதற்கு வழி யாது? எனின்,
இல்லையென இரங்குதல் வேண்டா, குற்றங்களால் வரும் துன்பத்தையும் கேடுகளையும் உணர்கின்ற நெஞ்சம்,
அந் நிலையில் தோன்றுகிற தெளிவு நிலைகுலையாவாறு அமைதல் வேண்டும்; அதற்குப் பற்றுக்கோடாவது
சிவன் கோயில் திருத்தொண்டும் வழிபாடும் எனத் திருநாவுக்கரசர் தெரிவிக்கின்றார். “நிலைபெறுமாறு
எண்ணுதியேல் நெஞ்சே, நீ நித்தலும் எம்பிரான் கோயில் புக்கு, அலகிடல், மெழுகிடல், பூமாலை
புனைந்தேத்தல், புகழ்ந்துபாடல், கும்பிடல், கூத்தாடல் முதலியன செய்து சங்கார சயபோற்றி, எம்
ஆதி என்றெல்லாம் சொல்லி அரற்றுக” எனும் அவரது உரை, உடலுக்கும் உள்ளத்துக்கும் வாய்க்கும் தொழில்
தந்து ஆணவத்தின் சேட்டைக்கு இரையாகாத நெறிகூறுவதை வள்ளலார் சிந்திக்கின்றார். திருமுறைத்
திருப்பாட்டுக்களுக்கு விளக்கம் தருவதும் வடலூர் வள்ளலின் திருவுள்ளமாதலால், குற்றங்கட் கடிப்படையான
ஆணவ இருள் கெடுக்கும் இக் கருத்தை உரைக்கின்றார்.
2283. ஆறிட்ட வேணியும் ஆட்டிட்ட
பாதமும் அம்மைஒரு
கூறிட்ட பாகமும் கோத்திட்ட
கொன்றையும் கோலமிக்க
நீறிட்ட மேனியும் நான்காணும்
நாள்என் னிலைத்தலைமேல்
ஏறிட்ட கைகள்கண் டாணவப்
பேய்கள் இறங்கிடுமே.
உரை: பெருமானே, நின் சடையையும், பாதத்தையும், உமையமரும் பாகத்தையும், கொன்றை மாலையையும், நீறணிந்த மேனியையும் நான் காணும்போது கருத்து நெகிழ்ந்து கைகள் என் தலைமேல் ஏறுவது கண்டதும், என்னைப் பற்றியிருக்கும் ஆணவப் பேய்கள் இறங்கியோடிவிடும். எ.று.
வலிமிகுதியால் செருக்குற்று வந்த கங்கையை அடக்கிய சிறப்புடையதாதலால், சடையைக் கண்டதும் செருக்காகிய பேய் இறங்கி நீங்கும் என்ற குறிப்புத் தோன்ற, “ஆறிட்ட வேணி” என்று கூறுகிறார். ஆடுகின்ற திருவடி உலகனைத்தையும் ஒடுக்கவும் எடுக்கவும் வல்லதாதல் கண்டதும் சினமாகிய பேய் நீங்கும் என்ற கருத்தால் “ஆட்டிட்ட பாதம்” என உரைக்கின்றார். உமையம்மை கூறிட்ட பாகம் கூறியது, காமமாகிய குற்றத்தைச் செய்யும் பேய் நீங்கும் என்றற்கு, பொன்னிறம் பூத்துப் பொலியும் கொன்றையைக் கண்டதும் பொன்மேல் ஆசையை விளைவிக்கும் உலோபம் என்ற கடும்பற்றாகிய பேய் விலகியோடும் என்ற குறிப்புத்தோன்ற “கோத்திட்ட கொன்றை” என்று கூறுகின்றார். வேறுபட்டுப் பகையுணர்வு தோற்றுவிக்கும் மாற்சரியமென்னும் குற்றமாகிய பேய் சிவன் திருமேனியிற் கிடக்கும் நீறு கண்டதும் நீங்கும் என்றற்குக் “கோலம் மிக்க நீறிட்ட மேனி” என விளம்புகின்றார். மாற்சரிய முற்றித் திரிந்த திரிபுர அசுரர் வெந்து நீறுபட்டது புராண வரலாறு. மாறுபடும் நெஞ்சினை நோக்கிய மணிவாசகப் பெருமான் “சிவனவன் திரள்தோள் மேல் நீறுநின்றது கண்டனையாயினும் நெக்கிலை” (சதக. 33) என்பது இங்கு நினைக்கற் பாலதாகும்.
கைகள் தலைமேல் நின்று குவிவது கண்டதும், நெஞ்சில் நெகிழ்வும் அறிவில் தெளிவும் பிறத்தலால், மயக்கத்தைப் புரியும் மோகமாகிய பேய் நீங்குவது ஒருதலை; ஆதலால் “என் நிலைத் தலைமேல் ஏறிட்ட கைகள் கண்டு ஆணவப் பேய்கள் இறங்கிடுமே” எனப் பாடுகின்றார். உயிருணர்வு தெளிவுடன் நிலைபெறுதற்குரிய உறுப்பாதலால் தலையை “நிலைத் தலை” எனச் சிறப்பிக்கின்றார். உணர்வு நிலைபெறுங்காறும் நிமிர்ந்து நிற்றலும், அது கீழ்நோக்கிச் சென்றவழித் தாழ்தலும் பற்றித் தலை இவ்வாறு குறிக்கப்படுகிறது. ஆணவத்தால் அறுவகைக் குற்றங்களும் தோன்றல் பற்றி, “ஆணவப் பேய்கள்” என்று அறிவிக்கின்றார். “தூய நினைவைத் தூ மொழியைத் தூய்செயலைத் தோற்றாது தீய நினைவைத் தீமொழியைத் தீயசெயலைத் தவத்தோற்றும், ஆய ஆணவப் பகை” (தணிகைபு. நந்தி) எனக் கச்சியப்ப முனிவர் கூறுவது காண்க. வேணி - சடை. (113)
|