114
114. செல்வர்பால் ஒன்று வேண்டிச் செல்வோர், அது பெறாலாகாதபோது பிறரை அடைந்து அது பெற முயல்வர்;
ஈது உலகத்து இயற்கை. பன்னாள் பல்வகையால் முயன்றும் உற்றகுறை நீங்காத விடத்து நீக்கத் தக்காரை
நாடிச் செல்வதை விடுத்து, இருந்து வருந்துவது அறிவுடையார்க்குப் பொருத்தமாகாது. அவ்வியல்பின்படி
சிவன்பால் முறையிட்ட வள்ளலார் குறை நீங்காமை கண்டு பிற தெய்வங்களை நாடலாமே என ஒரு வினா
உள்ளத்தே எழுவது காண்கின்றார். நல்லறிவு தோன்றி அவ்வினாவுணர்வை மறுக்கின்றது. சிவபரம்பொருளின்
பரமாந் தன்மையையும், ஏனைத் தெய்வங்களின் சிறுமை நிலைமையையும் நல்லறிவு கூறுகிறது. வடலூர்
வள்ளற் பெருமான் அறிவின்வழி நின்று வேறு தெய்வங்களை நாடக் கருதும் மனவுணர்வுக்கு உலகியலுரைகளைக்
காட்டித் தெளிவிக்கின்றார்.
2284. அல்லுண்ட கண்டத் தரசேநின்
சீர்த்தி அமுதமுண்டோர்
கொல்லுண்ட தேவர்தங் கோளுண்ட
சீரெனும் கூழுண்பரோ
சொல்லுண்ட வாயினர் புல்லுண்ப
ரோஇன் சுவைக்கண்டெனும்
கல்லுண்ட பேர்கருங் கல்லுண்ப
ரோஇக் கடலிடத்தே.
உரை: கரிய கண்டத்தையுடைய சிவப் பேரரசே, நின் மிக்க புகழாகிய அமுதமுண்டோர் வேறு தேவர்கள் கொண்ட சீராகிய கூழ் உண்ணார், நெற்சோறுண்ட வாயினை யுடையவர் புல்லரிசியை உண்ண மாட்டார்கள்; இனிய சுவையுடைய கற்கண்டை யுண்டவர் கருங்கல்லை உண்ண விரும்பார். எ.று.
அல்லுண்டகண்டம் - இருள்போற் கரிய கழுத்து. அல் - இருள். கடல் நஞ்சையுண்டு கறுத்த கழுத்தையுடையவனாதலால் சிவனை, அல்லுண்ட கண்டத்தை யுடையவன் என்று வள்ளலார் உரைக்கின்றார். நீலகண்டன் என்று சிவனைக் கூறுவதும் இக்கருத்தேபற்றி என அறிக. எல்லாவுலகுக்கும் சிவனே அரசன்; எனினும் சிவபுரத்தரசு எனச் சிறப்பிப்பதும் உண்டு. இரண்டும் அடங்கப் பொதுப்பட, “அரசே” எனக் கூறுகின்றார். கீர்த்தி - மிக்க புகழ். கீர்த்தி, வடசொல். சிவத்தின் மிக்க புகழை அமுதம் என்றமையின் பிற தேவர்களின் புகழ்கள் கூழ் எனப்பட்டன. கூழாவது - கேழ்வரகு, சோளம், கம்பு முதலியவற்றை இடித்துப் பொடியாக்கிச் சமைப்பது. தேவர் பலரும் அமுதுண்டும் சாகும் இயல்பினராதலால் “கொல்லுண்ட தேவர்” எனப்படுகின்றார்கள். வாழுங்காலத்தில் சில நற்செயல்களைச் செய்து புகழ் கொண்டமை புலப்படக் “கோளுண்டசீர்” எனல் வேண்டிற்று. அமுதம் பால் போல்வதாகவலின், தேவர் சீரை அதற்கொப்பக் கூழ் என்றார். நெல்லைச் சொல்லென்றல் பண்டையோர் வழக்கு. நெல்லும் புல்லினத்தைச் சேர்ந்தது; நெல்லிடத்து விளைவது போலப் புல்லினத்தும் அரிசி விளைவது இயல்பு. நெல்லரிசியைப் போலப் புல்லரிசியைச் சோறாக்கி உண்பது கிடையாது; அதுபற்றி, “சொல்லுண்ட வாயினார் புல்லுண்பரோ” எனப் புகல்கின்றார். ஓகாரம் எதிர்மறை. கண்டெனும் கல், கற்கண்டு என்ப்படும். கரும்பின் சாற்றிலிருந்து செய்யப்படுவது கற்கண்டு; அதுபற்றியே, “இன்சுவைக் கண்டு எனும் கல்” எனச் சிறப்பிக்கின்றார். கருங்கல்லை உடைத்து நெல்லரிசியளவாகப் பொடி செய்து அவ்வரிசியுடன் கலந்து இந்நாளைய அரிசி வணிகர் அனைவரும் விற்கின்றனர். சோறுண்ணுமிடத்துக் கல்லும் காணப்படுமாயினும், உண்பவர் அக்கல்லைத் துப்பி விடுவரேயன்றி உண்பதிலர். அதனாற்றான், “கருங்கல் உண்பரோ இக்கடலிடத்தே” என்று மொழிகின்றார். தேவர்களின் புகழ் கூழும், புல்லரிசியும் கருங்கல்லும் போல்வது என மூன்றுவகைகளை எடுத்துரைக்கின்றார். கூழ் ஒரு சிலரால் நீர் பெய்து கரைத்து உண்ணப்படும்; அதுபோற் சில தேவர்களின் புகழ் ஓரொருகால் மதித்து ஏற்கப்படும். நெல்லரிசி போலப் புல்லரிசி காடு மலைகளில் வாழ்பவரால் உண்ணப்படுவதுண்டு; அதுபோலவே சில தேவர்களின் புகழ் நல்லறிவு வாய்க்கப்பெறாத மக்களால் விரும்பப்படுவதுண்டு. சில தெய்வங்களை யாரும் விரும்பாமை விளங்கக் கருங்கல் எடுத்துக்காட்டப்படுகிறது.
இதனால், சிவபரம்பொருளின் மிக்க புகழையன்றிப் பிறதெய்வங்களின் புகழ் நயக்கத்தக்கதன்று என நிறுவப்பெறுகிறது. (114)
|