115

       115. தனித்து வாழும் இயல்பினரல்லர் மக்கள்; என்றும் எவ்விடத்தும் கூட்டமாய் இனஞ்சூழ வாழ்வது அவரது இயல்பு. உலகியல் வாழ்வில் அறிவு முதிர முதிர அவர்கட்கு வேண்டுவனவாகிய உண்டியும் உடையும் உறையுளும் பிறவும் பலவாய்ப் பெருக, ஒருவன் தானே தனித்து இவற்றைச் செய்துகொள்ளமாட்டாத நிலையை எய்திவிட்டன. ஒவ்வொரு வேளையும் உணவு கொள்ளும்போது, உண்ணும் உணவை நோக்கி, ஒரு பிடியைக் கையிற் கொண்டு சிந்திப்பானாயின், அப்பிடியுணவு அவன் கைக்கு வருதற்கு எத்தனை பேர்களின் உழைப்பு அதன் கண் சேர்ந்திருக்கின்றன என்று தெளிவாகத் தெரிந்துகொள்வான். எண்ணிறந்த மக்களின் அறிவாராய்ச்சியும் உடலுழைப்பும் ஒவ்வொரு மனிதனுக்கும் உதவியிருக்கிற நிலைமை சிந்தனையாளர்க்குத் தெளிவாகப் புலனாகா தொழியாது. இச் சிந்தனை, மனிதன் தனித்து வாழப்பிறக்காமல் தன்போலப் பிறர் துணை பெற்றும் பிறர்க்குத் துணை செய்தும் வாழவே பிறந்துள்ளான் என்று நன்கு உணரச் செய்கிறது. ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் துணையாகக் கொண்டு வாழ்வதும் இருவரும் பிற மக்களைத் துணையாகவும் சுற்றமாகவும் நட்பாகவும் சூழ்ந்து வாழ்வதும் உலகியலாக இருக்கின்றன. அதே நிலையில் துணை புரியும் ஆணும் பெண்ணும் நெடிது நாள் துணை புரியாமல் சின்னாட்களில் முதுமையுற்றும் நோய்வாய்பட்டும் எதிர்பாரா இடுக்கண் எய்தியும் இறந்துபோவது இயல்பாகிறது. நிலையான துணையாய் நெடிது நாள் உதவுபவர் ஒருவரும் இல்லாமை தெரிகிறது. இதனைச் சிந்தித்துத் தெளிபவர்க்கு, நிலைபெறும் துணையாவது இறைவன் திருவடியே என்பது புலனாகிறது. இறைவன் திருவடியே துணையெனச் சேர்ந்தவர் “நிலமிசை நீடு வாழ்வார்” எனவும், இறைவன் காட்டிய ஒழுக்க நெறியில் வாழ்வார் “நீடு வாழ்வார்” எனவும் திருவள்ளுவர் தெரிவிக்கின்றார். திருமுறையாசிரியர்களும், “நன்று நாடொறும் நம் வினை போயறும், என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்” (வேட்களம்) என அறிவுறுத்துகின்றார்கள். இவற்றைச் செவியராகக் கேட்டுச் சிந்திப்பவர்க்கு இறைவன் திருவடியல்லது துணை வேறில்லை என்ற உணர்வு உள்ளத்தில் வேரூன்றி விடுகிறது. அங்ஙனம் வேரூன்றிய மனத்தவரான வள்ளற்பெருமான், தமது நெஞ்சை நோக்கிக் கூறுவார்போல நமக்கு உரைக்கின்றார். நெஞ்சே, நீ பிறர் துணையையே நாடி வாழ்கின்றாய்; அவர் இயன்றாங்கு உதவுவர் என எண்ணுகின்றாய்; பொருள் குறையும் நுகர்வோர் தொகை மிகுதியுமாகும்போது துணைபுரியும் இயல்பு சுருங்குகிறது. அந்நிலையில் தனக்கென்ற நினைவு மிகுதலின், வடித்த கஞ்சியையும் பிறர்க்கு வழங்க மக்கள் விரும்பார். தனக்கு இல்லாது போமென அஞ்சுவர். அவரை நினைந்து துணைபெற விழைந்து செல்வதை விடுக; துணைபுரியும் அருளாளனாகிய இறைவன் திருவருளை நல்கும் சிவாய நம என்ற திருவைந்தெழுத்தை இறுகப்பற்றிச் சிந்திப்பாயாக எனத் தெருட்டுகின்றார்.

2285.

     காரே எனுமணி கண்டத்தி
          னான்பொற் கழ.லையன்றி
     யாரே துணைநமக் கேழைநெஞ்
          சேஇங் கிருந்துகழி
     நீரே எனினுந் தரற்கஞ்சு
          வாரொடு நீயுஞ்சென்று
     சேரேல் இறுகச் சிவாய
          நமஎனச் சிந்தைசெய்யே.

உரை:

     அறிவில்லாத நெஞ்சமே, கரிய மணிபோலும் கண்டத்தையுடைய சிவபெருமான் கழலையன்றி நமக்குத் துணைநின்று வேண்டுவன உதவுதற்கு வேறு ஒன்றும் ஒருவரும் இல்லை; வெறிதே இவ்வுலகின்கண் இருந்து சோறு வடிக்கக் கழியும் கஞ்சியாகிய நீரையும் பிறர்க்குத் தருதற்கு அஞ்சும் மக்களினத்தோடு நீ சென்று சேர்தலை ஒழிக; திருவருள் நிலையமாகிய சிவன் கழலைச் சேர்தற்குச் சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தை இறுகப் பற்றிச் சிந்திப்பாயாக எ.று.

     காரே எனும் மணி - கருமணி; கருமையை நீலமென்றும் வழங்குதலுண்மையின், இதனை நீலமணி என்றும் கூறுவர். கண்டம் - கழுத்து; விடமுண்டு கருமை நிறம் பெற்றமையால் இங்ஙனம் கூறினார். பொற்கழல் - அழகிய கழல். மக்கள் அனைவரையும் உளப்படுத்திக் கூறுமாறு தோன்ற, “யாரே துணை நமக்கு” எனவுரைக்கின்றார். பொருளில்லாரை வறியர் என்றும், அறிவில்லாரை ஏழை என்றும் குறிப்பது நூல் வழக்கு. அரிசி கழுவும் நீரைக் கழுநீர் என்றும், வெந்த சோற்றை வடிக்கும் நீரைக் கழிநீர் என்றும் கூறுவர். வடிக்கப்படுவது கழிநீர்; அரிசி கழுவும் கழுநீரன்று, இன்மையின் கொடுமையால் கழிநீரும் உணவாவது பற்றி, “தரற்கு அஞ்சுவார்” எனக் குறிக்கின்றார். அவர்பாற் சென்று, அவலமெய்துவதை விடுத்துச் சிவனது திருவைந்தெழுத்தை நெஞ்சிற் கொண்டு சிந்திக்கச் சொல்கின்றார். சிந்தனை திருவரிளில் தோய்வித்து இன்புறுத்தும் என்பது கருத்து.

     (115)