116
116. உலகிடைப் பிறந்து வாழும் மக்களுடைய மனம் முதுமை மிகுங்காறும் உடல்வயமே நின்று
பொறிபுலன்களிற் படர்ந்து அலைப்பது ஏன் எனின், உடல் உலகுகட்கு முதற்காரணமாகிய மாயையே மனத்துக்கும்
காரணமாதலின் அது மாயாகாரிய உலகுக்கும் உடம்புக்கும் இனமாதல்பற்றி எளிதில் வயமாகி அவற்றின்
ஈர்ப்புவழி நின்று பணி புரிகிறது. கணப்போதும் நிலையுதலின்றி உலகெங்கும் பரந்து உடலின் உள்ளும்
புறத்தும் நிறைந்து அறிதலும் செயல்புரிதலும் செய்து அலைகிறது. உயிர்க்கு இன்றியமையாத
கருவியாய் உளதாகிய உடம்பு பிறந்து வாழ்தல் வேண்டிய உயிர்களின் பொருட்டு வேறு உடம்புகளைத் தோற்றுவிப்பதும்
தனக்கு உரிய செயலாதலால், மனத்தைக் காம வேட்கைக்கு உள்ளாக்கிக் கலக்குகிறது.
பொறிபுலன்கள் விரும்பும் சுவையனைத்தும் ஆணுக்குப் பெண்ணுடம்பிலும் பெண்ணுக்கு ஆணிடத்தும்
ஒருங்கே கிடைப்பதால், பால் வேட்கை வலிமிக்கதாக விளங்குகிறது. உடற்குரிய கருத்தோன்றி வளர்ந்து
உருவாகி வெளிப்படுதற்குரிய நிலம் பெண்ணுடம்பு; அதனால் அப்பெண்மேனி மிக்க பொலிவும் கவினும்
கவர்ச்சியும் கொண்டு ஆண்மனத்தை ஈர்க்கும் ஆற்றல் சிறந்து நிற்கிறது. விளைநிலம் போலப்
பொறுமையும் வளமையும் பொலிவும் பெற்றிருக்கிறது பெண்ணுடம்பு; முதுமை மிகும்வரை ஆணினது கவர்ச்சிக்கும்
வேறு உடல் விளைவிக்கும் விருப்புக்கும் இடமும் பொருளும் ஆகிறது. இவற்றால் அலைக்கப்பட்டு, எளிதில்
மயங்கும் மனமும் இனிதின் மெலியும் உடலியலும் கொண்டு உலவுகிறது. பெண்ணினது மேனி வனப்பும் பிற
நலன்களும் ஆணின் மனத்தை ஈர்ப்பதில் வலிமிக்கனவாதலால் ஆடவன், காமவின்பம் பெண்ணிடமே
உளதென்றும், அதனைத் தருபவள் அவளேயென்றும் மருண்டு அவள் நலங்களைப் பாராட்டுவதும் நுகரக்கருதுவதும்
செய்கின்றான். “முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேல் உண்கண் வேய்த்தோள் அவட்கு”
என நலம்புனைதலும், “கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும், ஒண்டொடி கண்ணே யுள” என நுகர்ச்சியைச்
சிறப்பித்தலும் செய்வன். இவை குறித்தே சொல்வலை வீசுவன். வலைப்பட்ட மங்கை மான்போல்
மருண்டு விழித்து மனநிலை கரைந்து தன் தன்மையிழந்து அவன் வழியளாகின்றாள். அதனை யுணரும் நுட்பமில்லாத
ஆடவன் மனம் சுழல் காற்றிலும் அலைமோதும் நீரிலும் அகப்பட்ட இலைபோல அலமருவதும் நினைந்து
வருந்துகிறது. அது கண்டு வள்ளலார் இரக்கமிகுந்து அவன் நிலையைத் தம்மேலேற்றி உரைக்கின்றார்.
2286. வலைப்பட்ட மானென வாட்பட்ட
கண்ணியர் மையலென்னும்
புலைப்பட்ட பேய்க்கு விலைப்பட்ட
நான்மதி போய்ப்புலம்ப
விலைப்பட்ட இம்மனம் அந்தோஇவ்
வேழைக்கென் றெங்கிருந்து
தலைப்பட்ட தோஇதற் கென்செய்கு
வேன்முக்கட் சங்கரனே.
உரை: கண் மூன்றுடைய சங்கரனே, மகளிர் பயக்கும் மையல் என்னும் விலைப்பட்ட நான் மதியிழந்து புலம்புமாறு இம்மனம் ஏழையாகிய எனக்கென்று எங்கிருந்து வந்ததோ? இதற்கு என் செய்வேன். எ.று.
மகளிரை வலைப்பட்ட மானின் மருண்ட விழியையும் ஒளியுற்ற கண்களையும் உடையவர் என்று உரைக்கின்றார். காண்ப்படும் உலகை இன்பக் காட்சிப் பொருள்போலக் கருதிக் காற்றாடிபோலக் கறங்கும் இளமகளிரின் வெள்ளையுள்ளம் கருக்கொள்ளற்குரிய செவ்வி எய்தியதும் உடலிலும் உணர்விலும் பல்வகை மாற்றம் எய்துகின்றன. காணப்படும் பொருள் அனைத்தும் அவள் உண்ர்வை மருட்டுகின்றன. அம்மருட்சி அவளது ஒளி நிறைந்த கண்ணில் பலருமறிய விளங்குதல் பற்றியே வடலூர் வள்ளல் இங்ஙனம் எடுத்துரைக்கின்றார். மங்கையின் மேனியிற் கதிர்க்கும் கவின் அளவின் வழித்தாகிய கலவியுணர்வு தோற்றுவித்துக் காணும் ஆடவன் கருத்தைப் பற்றி அலைத்தல்பற்றி மையல் என்னும் புலைப்பட்ட பேய் எனக் குறிக்கின்றார். மகளிர் கண்ணில் வெளிப்பட்டு மேனியொளியைத் துணையாகக் கொண்டு உள்ளத்திற் புகுந்து அவனுடைய திண்மையையும் சால்பையும் கலக்கிச் சுழற்றுதலால் அதனைப் 'புலைப்பட்ட பேய்' எனப் புகல்கின்றார். உரமும் பெருமையும் நிலை குலைந்த ஆடவன் உள்ளம் அவளுடைய கண்ணும் மேனியுமே நினையுமாறும் அவள் பின்னே இயங்குமாறும் செய்கிறது. அதனால், ஆடவன் தன் தன்மையிழந்து “பேய்க்கு விலைப்பட்ட நான்” என்றும், “மதிபோய்ப் புலம்பு”கின்றேன் என்றும் கூறிக் கொள்ளுகிறான். தன்னை நெருங்க விடாமல் அருமை செய்து அயர்வித்தும் சேட்படையால் தளர்வித்தும் அவள் அலைப்பது கொண்டு, காற்றிலிலும் நீர்ச்சுழியிலும் பட்ட இலையோடு உவமித்து, “இலைப்பட்ட என் மனம் அந்தோ எனக்கென்று எங்கிருந்து தலைப்பட்டதோ” என வருந்துகிறான். மங்கையின் கண்ணொளியும் அவள் மேனியின் கவினும் இதுகாறும் இவன் கண்டிராத புது நோய் தந்து அறிவை அலைப்பது நினைந்து இறைவன்பால் முறையிடுகின்றான்; இச்செயல் பலவும் அவனது அருளாணை காரணமாக நிகழ்வதை வள்ளலார் நன்கறிந்தவராதலால் அவனுக்காக, “என் செய்குவேன் முக்கண் சங்கரனே” என மொழிகின்றார். அருளாணை வெல்லற்கரிய வீறுடையதாதலால் என் செய்குவேன் என்று கூறுகின்றார். கோடற்குரியவற்றை இரு கண்களாலும், விலக்கற்குரியவற்றை நெற்றிக் கண்ணாலும் நோக்கி நல்லருள் புரிபவன் என்ற குறிப்புத் தோன்ற முக்கண் சங்கரனே என்றும் புகழ்கின்றார்.
காமவிச்சை வயப்பட்டு மனம் கலங்காவாறு அருள வேண்டுமென முறையிடுவது இப் பாட்டின் பயன் என வுணர்க. (116)
|