117

      117. மக்கட் பிறப்பைச் சோதிட நூல்கள் மனித கணம், தேவ கணம், இராக்கத கணம் என்று மூன்றாக வகுப்பர்; அவரவர் பிறந்த நாண்மீனைக் கொண்டு இதனைக் கூறுவர். மக்களினத்தில் ஆசைவயப்பட்டு நிறைவுறாது அலவுற்று இயற்கைச் சாக்காடின்றி தற்கொலை முதலிய வேறு வகைகளால் மடிபவர் இயற்கை இறப்பு எய்துங்காறும் மண்ணுலகிற் பேயாய்த் திரிவர் என்பது உலகுரை. பேய்வடிவம் பசியின் உருவாய் காணவும் பற்றவும் பட்டாரை வருத்தும் இயல்பினதாய் இருக்கும் என்பர். மனித கணத்தவர் மனிதப்பேயராகவும் இராக்கத கணத்தவர் இராக்கதப் பேயராகவும், தேவகணத்தவர் பேயாகார் எனவும் பேயியல் அறிந்தோர் கூறுவர். சிலர் தேவரும் பேயாவர் என்பர். மனிதரினத்துள் பார்ப்பனர், அரசர், வணிகர், வேளாளர் என்ற பிரிவுபோலப் பேயினத்திலும் பார்ப்பனப்பேய் முதலாக நால்வகைப் பேயுண்டென்பர் பேய்களைப் பாடும் பரணி நூற்புலவர். தமிழகத்தில் பேயுண்டு என்னும் கொள்கை தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே வழங்கி வருகிறது.

 

      இப்பேய்களில் ஒன்று ஒருவரைத் தான் பற்றும் என்பதில்லை. பல பேய்கள் ஒருவரைப் பற்றுவதுண்டு. மேலும் இவை மனிதரையே பற்றும் என்பதில்லை. மனிதப் பிறப்புக்கு அடுத்துக் கீழ்உள்ள விலங்குகளையும் பற்றும். மேலுள்ள தேவர்களையும் பற்றும். பேய் கோட்பட்டவருள் மனிதப்பேய் பற்றினவர் ஓரிடத்தும் நில்லாமல் திரிவர். இராக்கதப் பேய் கொண்டவர் சுறுசுறுப்பின்றி மடிந்திருப்பர். தெய்வப் பேய் பற்றினவர், பயனில்லாத வேதாந்தம் பேசி வீணே பொழுது கழிப்பர்.

 

      மக்கள் மனம் நிலையின்றி அலைவது பற்றி அதனைப் புலவர் குரங்குக்கு ஒப்பாக வுரைப்பர். சிலருடைய மனம் பேய்ப்பிடியுற்ற குரங்குபோல அலைவது காண்கின்றார். வடலூர் வள்ளல். அக்குரங்கைப் பிடித்து வருத்தம் பேய் இயல்பு இது எனச் சிந்தித்து, இது ஆணவமென்னும் மனிதப் பேயும், தாமதம் செய்யும் இராக்கதப் பேயும் ஒருங்கு பற்றியது எனத் தெரிந்து பாடுகின்றார்.

2287.

     குருந்தாமென் சோக மனமான
          பிள்ளைக் குரங்குக்கிங்கே
     வருந்தா ணவமென்னு மானிடப்
          பேயொன்று மாத்திரமோ
     பொருந்தா மதமென் றிராக்கதப்
          பேயும் பிடித்ததெந்தாய்
     திருந்தா அதன்குதிப் பென்ஒரு
          வாய்கொண்டு செப்பரிதே.

உரை:

     எந்தையே, மனமாகிய பிள்ளைக் குரங்குக்கு ஆணவம் என்னும் மானிடப் பேயுடன் தாமதம் செய்யும் இராக்கதப் பேயும் பிடித்துக் கொண்டது; அதன் குதிப்பை என் ஒரு வாய் கொண்டு செப்புதல் அரிது. எ.று.

     குருத்து - குருந்து என வந்தது. சோக மனம் - துயரில் மூழ்கிக் கிடக்கும் மனம்; நினைந்தது செய்யமாட்டாமை. விழைந்தது பெற மாட்டாமை ஆகியவற்றால் ஆசை நிரம்பாது துயருறுவது இயல்பாதல் பற்றிச் “சோகமனம்” என்கின்றார். உலகியல் அனுபவம் இன்மை தோன்றக் “குருந்தாம் மனம்” எனல் வேண்டிற்று. வாழை, தெங்கு; பனை முதலியவற்றின் இளமென் குழையைக் குருத்து என்பது வழக்கு. ஆணவம் என்னும் பேய் மானிடப் பேய் எனப்படுகிறது. ஒளிக்குள் இருள்போல எல்லாவுயிரின் கண்ணும் இருந்து அதன் பரந்த பண்பைச் சுருக்கி அணுத்தன்மை எய்துவித்தல் பற்றி இருளாகிய மலம் ஆணவம் எனப்படுகிறது. நிகழ்ந்ததை மறப்பித்து நிகழவிருப்பதை மறைத்து நிகழ்வின் கண் பெரியதன் பெருமையையும் நல்லதன் நன்மையையும் உயிரின் சிறுமையையும் காணவெட்டாது மறைப்பித்துக் குற்றத்துக்காளாக்கும் இயல்புபற்றி ஆணவமலம் எனக் கூறப்படுகிறது. அது மக்கள் சொல்லிலும் செயலிலும் விளங்கித் தோன்றுதலால், அதனை “ஆணவம் என்னும் மானிடப் பேய்” என வுரைக்கின்றார். பெரிய பெருமை கண்டு மலைத்தலும் சிறியதன் சிறுமை கண்டு இகழ்ந்து செய்வன செய்யாது தூங்குதலும் இம் மனத்தின்கட் காண்ப்படுகின்றன. செய்யத் தகுவனவற்றைச் செயற்பாடறிந்து காலம் நோக்கி விரைந்து செய்யாமை இராக்கதப் பேய்ப் பண்பு. அதனால், “மானிடப் பேயொன்று மாத்திரமோ பெரும் தாமதம் என்ற இராக்கதப் பேயும் பிடித்தது” என வள்ளலார் முறையிடுகின்றார். குரங்கே குதிக்கும் இயல்பிற்று; இளங்குரங்கு மிக விரைந்து குதிப்பது; அதனை விளக்கவே,. “மனமான பிள்ளைக் குரங்கு” என வுரைக்கின்றார். இளமையிலேயே அக்குரங்கை மானிடப் பேயும் இராக்கதப் பேயும் பிடித்துக்கொண்டன வெனின் எண்ணமுடியாத தீங்குகள் உண்டாகும் என்று தெரிவித்தற்காகவே “அதன் குதிப்பு என் ஒருவாய் கொண்டு செப்பரிது” எனச் செப்புகின்றார். இளங்குரங்காயின் இளமையிலே அதன் துடிப்பை அடக்கி ஒடுக்கிச் செந்நெறியிற் செலுத்தலாமே யெனின், எவ்வகையால் திருத்தினும் திருந்தா இயல்பினது இளமனம்; அதற்குக் காரணம் இருவகைப் பேய்களின் பிடிப்புக்கு இரையாயதேயாகும்; என்னால் திருத்த இயலவில்லை என்று விண்ணப்பிப்பாராய் எந்தாய் என முறையிடுவது பயனாதல் காண்க.

     (117)