118
118. உலகருளும் அன்னையாகிய உமாதேவியைச் சிவபெருமான் தமது மேனியில் இடப்பாகத்திற் கொண்டிருப்பதை
எண்ணுகின்றார் வடலூர் வள்ளல். அப் பெருமாட்டியின் திருமேனி நீலமணி போலும் நிறமும் ஒளியும்
நிகரறக் கொண்டது. அதுகொண்டு அவரைப் “பெண்மணி” என உரைக்கின்றார். மணியைப் பாகமாகக்
கொள்வது பிறிதொரு மணியாக வேண்டுமென்றோ? அதனால் பெண்மணி பாகப் பெருமணியே எனச் சிவனைப்
பரவுகின்றார். சிவன் உலாவும் விண்ணில் நிலவும் ஞாயிறு திங்கள் முதலிய ஒளிப் பொருள்களை விண்மணி
என்பர். அவற்றுள் சிறந்து நிற்கும் ஞாயிற்றையும் திங்களையும் கண்ணின் மணியாகக் கொண்டவன்
சிவன் என்று நினைந்து மகிழ்கின்றார். சிவன் அருள்வழி நின்று உலகுயிர்கட்கு நலம் பயக்கும்
கடவுளர் பலர் உண்டெனப் புராணங்கள் கூறுகின்றன. அவர் பலரும் கடவுளினத்து நண்மணிகளாய் உயிர்களின்
துயர்போக்கி இன்பமருளுவது நினைந்து மகிழ்கின்ற வள்ளலார், கூடல் நகரத்தில் மாணிக்கம்
விற்கும் திருவிளையாடலைச் சிவபெருமான் செய்ததை நினைவிற் கொணர்ந்து இப் பாட்டிடைத் தொடுத்து
இன்புறுகின்றார்.
2288. பெண்மணி பாகப் பெருமணி
யேஅருட் பெற்றிகொண்ட
விண்மணி யான விழிமணி
யேஎன் விருப்புநல்
கண்மணி நேர்கட வுண்மணி
யேஒரு கால்மணியைத்
திண்மணிக் கூடலில் விற்றோங்கு
தெய்வ சிகாமணியே.
உரை: பெண்மணியாகிய உமாதேவியைப் பாகமாகக் கொண்ட பெருமணியே; அருளே உருவாகக் கொண்டு நோக்கும் கண்ணின் மணியே; கண்ணிடத்துத் திகழும் மணிபோல் இன்பம் செய்யும் தெய்வ மணியே; ஒரு காலத்தே, திண்ணிய மணிக்கதவு கொண்ட மதில்களையுடைய கூடல்நகர வீதியில் மாணிக்க மணியை விற்றுயர்ந்தவனாகிய தெய்வ சிகாமணியே, அருளுக எ.று.
பெண்களுக்கெல்லாம் தலைமடந்தையாகப் பிறந்கும் பெருமாட்டியாதலின் உமாதேவியைப் பெண்மணி எனப் புகழ்கின்றார். ஞானசம்பந்தர் அவளைப் “பெண்ணின் நல்லாள்” எனப் போற்றுவர். பெண்மணியைப் பாகமாகக் கொள்வது அதனினும் பெரிய மணியாதல் வேண்டும்; அதனால் சிவபெருமானைப் “பெண்மணி பாகப் பெருமணி” எனப் புகழ்கின்றார். உலகியல் மணிகள் கடைதலால் ஒளியும் மதிப்பும் பெற்று உயர்வடையும்; இறைவனாகிய பெருமணி அருளே வடிவாய் அமைந்து விண்ணவர் கண்டு வழிபட விளங்கும் உயர்மணியாம் என்றற்கு, “அருட் பெற்றிகொண்ட விண்மணியான விழிமணி” என விளக்குகின்றார். விண்ணவர் விழிமணியாற் கண்டு வழிபட விளங்குதலால் விண்மணியான விழிமணி எனக் கூறப்படுகிறார் என்பது ஒன்று.
இங்ஙனம் விண்ணவர்க்கு விழிமணியாய் விளங்கும் பரமன் மண்ணில் வாழும் என்போன்றார் மிகவும் விரும்பி வழிபடும் அரும்பொருள் என்றற்கு “என் விருப்புறும் நல் கண்மணி” என உரைக்கின்றார். நினைக்குந் தோறும் நினைவினுள் செந்தேன் பொழிந்து விருப்பம் மிகுவிக்கும் மணியாதலோடு, அறிவை மறைக்கும் அறியாமையிருளைப் போக்கி ஞானவொளி நல்குவது பற்றி, “நல் கண்மணி நேர் கடவுள்மணியே” எனப் பரவுகின்றார். கண்ணின் மணிக்கு நலமாவது ஒளியும் இன்பமும் நல்குவது. கடவுள் மணி - கடவுள் இனத்து மணி என்பது பொதுப் பொருள். ஒரு கால் - ஒரு காலம். கூடல் - மதுரைநகர். கூடல் நகரின் மதிற்பெருமை விளங்கத் “திண்மணிக் கூடல்” என்றார், மணிவாசகர். “உயர்மதிற் கூடல்” என வுரைப்பது காண்க. மதுரை நகர்க்கண் வேந்தர்க்கு முடிசெய்தற்கு மணியின்மை கண்டு வருந்தி வந்த அரசியற் சுற்றத்தார், மாணிக்க வணிகனாய் வந்த சொக்கநாதப் பெருமானை மதிலிடத்தே காண்கின்றாரதலால், அதனை நினைப்பிக்கத் “திண்மணிக் கூடல்” என வள்ளலார் சிறப்பிக்கின்றார் என்பதும் பொருந்துவதாம். தேவர்க்கும் பெறலாகாத மாணிக்க மணிகளை விற்றதுபற்றிச் சொக்கநாதனான சிவபெருமானைத் “தெய்வசிகாமணி” எனக் கூறுகின்றார்.
இதனால் சிவனைப் பெறற்கரும் பெருமை சான்ற மணியாக நினைந்து தெய்வ சிகாமணியாக வைத்து வழிபடும் திறம் புலனாமாறு காண்க. (118)
|