119
119. அவரவர் செய்வினைப் பயனாய் நுகரப்படவிருக்கும் ஊழ்வினையை
விதி எனவும், தலைவிதி யெனவும், தலையெழுத்தெனவும் கூறுவது உலகியல் வழக்கு. நுகர்ந்தே கழிக்கப்படுவது
பற்றி விதி என்றும், விலக்கவொண்ணாமைபற்றித் தலைவிதி என்றும், என்றேனும் நுகர்ந்தே
தீரவேண்டியிருக்குமாறு புலப்படத் தலையெழுத்து என்றும் உலகவர் கூறுவர். படைக்கும்போதே அது பிரமனால்
எழுதப்பட்டது என்றற்குத் தலையெழுத்தெனப்பட்டது என்பாரும் உண்டு. “பங்கயத்தோன் எழுதாப்
படிவருமோ சலியாதிரு என் ஏழை நெஞ்சே” என்ற பழம்பாட்டு இதற்குச் சான்றாம். இங்ஙனம்
தலையெழுத்தாய் மக்களை வருத்தும் வினையைக் கடவுள் வழிபாட்டால் இனிது வெல்லலாம் என்பதைத் திருவள்ளுவர்
“இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு” என வற்புறுத்தியுள்ளார்.
பொருள் சேர் புகழ் புரிதலாவது இறைவனது நிலையான புகழுணர்த்தும் கூறுகளை நினைந்து ஒழுகுவதாகும். நினைதற்குத்
துணை புரிவன திருவைந்தெழுத்து, அவற்றை எண்ணி ஓதி யின்புறுவது இறைவற்கு அருச்சனை புரிவதாகும். அது
செய்பவர், கிரகண காலங்களில் இராகு கேதுக்களைக் காண்பதுபோல் ஆன்மாவின்கண் சிவனைக் கண்டு
இன்புறுவர் எனச் சைவ நூல்கள் கூறுகின்றன. “அஞ்செழுத்தை விதிப்படி உச்சரிக்க மதியருக்கன்
அனையரவர்போல் தோன்றும் ஆன்மாவில் அரனே” (சிவ. சித்தி. 9 : 8) என அருணந்தி சிவனார்
அறிவிக்கின்றார். அவருடைய பெருமைக்கு இணையில்லை; அவர்கள் எங்களைப்போல்
நின்னை வழிபடுவோர் எனினும், அவர்கட்கு நாங்கள் ஒருகாலும் நிகராகோம். அவர்களோடு எங்களை
நாங்கள் சைவரெனக் கூறிக் கொள்வது ஒரு சிறிதும் ஒவ்வாது என வள்ளலார் இத்திருப்பாட்டால்
உலகியல் வழக்கு மொழி வாயிலாகச் சிறிது கற்றாரும் தெளியவுரைக்கின்றார்.
2289. அலையெழுத் துந்தெறும் ஐந்தெழுத்
தாலுன்னை அர்ச்சிக்கின்றோர்
கலையெழுத் தும்புகழ் காலெழுத்
திற்குக் கனிவிரக்கம்
இலையெழுத் தும்பிறப் பீடெழுத்
துங்கொண்ட எங்கள்புழுத்
தலையெழுத் துஞ்சரி யாமோ
நுதற்கண் தனிமுதலே.
உரை: நெற்றியிற் கண்கொண்ட தனி முதற்பொருளே, அஞ்செழுத்தால் உன்னை அர்ச்சிக்கின்ற சான்றோர் புகழ் உரைக்கும் காலெழுத்திற்கும், எங்கள் புழுத்தலை எழுத்துக்கும் ஒப்புதல் சரியாகுமா? ஆகாது காண் எ.று.
அலையெழுத்து - வாழ்க்கையிற் கிடந்து அலைப்புண்டு வருந்தச் செய்யும் ஆகூழும் போகூழுமாகிய ஊழ். ஐந்தெழுத்தால் இறைவனுக்கும் தமக்கும் உள்ள தொடர்பு கொண்டு, அத்தொடர்பு பற்றாக நின்று இறைவனை நினைந்து வழிபட்டொழுகுவோரை ஊழ் வினை பற்றும் ,திறமின்றிக் கெடும். “சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்துச் சார்தராசார்தரும் நோய்” எனத் திருவள்ளுவர் கூறுவர்; அது கருதியே, வள்ளற் பெருமான், “அலை எழுத்தும் தெறும் அஞ்செழுத்து” என உரைக்கின்றார். மெய்கண்டதேவர், “அஞ்செழுத்தால் உள்ளம் அரன் உடைமை கண்டு அரனை, அஞ்செழுத்தால் இதயத்தில் அர்ச்சித்து” (சிவ. போ. 3) என உரைக்கின்றார். கலையெழுதும் புகழ் என்பது கலையெழுத்தும் புகழ் என வந்தது. அர்ச்சிக்கின்றோர் புகழைப் பல்வகைக் கலைவல்லோர் வாயார வாழ்த்தப் புகழ்கின்றமை தோன்றக் “கலையெழுத்தும் புகழ்” என்று கூறுகின்றார். ஐந்தெழுத்தால் இறைவனை அர்ச்சிக்கின்றோர் புகழ் அளப்பரிது; அவர்கள் காற்கட்டை விரலால் கீறுகின்ற எழுத்துக்கு எங்கள் தலையில் எழுதப்பட்டிருக்கும் எழுத்து நிகராகாது என்பது விளங்க, “காலெழுத்திற்கும் எங்கள் புழுத் தலையெழுத்துச் சரியாமோ” என வினவுகின்றார். இறைவனை ஐந்தெழுத்தால் அருச்சியாதவர்க்குள்ள குறைகளை உரைக்கலுற்று, அவர்பால் உள்ளது “கனியிரக்கம் இலை யெழுத்து; பிறப்பு ஈடு எழுத்து” என்று கூறுகின்றார். உள்ளத்திற் கனிவும், பிறவுயிர்களின் துன்பம் கண்டு இரங்கும் தன்மையும் இல்லா நிலையைக் “கனிவிரக்கம் இலையெழுத்து” என்று காட்டுகின்றார். இல்லாத எழுத்து இலையெழுத்து என வந்துளது. இல் எழுத்து என வரல் வேண்டியது எதுகை நோக்கி, ஐகாரம் பெற்று 'இலையெழுத்து' என வந்தது. பிறப்பின்கண் புகுத்தும் எழுத்து என்றற்குப் “பிறப்பீடு எழுத்து” என உரைக்கின்றார். அழுக்கேறி ஈரும் பேனும் குடிகொண்டிருக்கும் தலை புழுத்தலை; புண்ணுற்று புழுமலிந்துள்ள தலை யென்றலும் உண்டு.
இதனால் திருவைந்தெழுத்தால் இறைவனுக்கு உயிர்களாகிய நாம் உடைமையென்றும் அடிமையென்றும் உணர்ந்து, அவ்வெழுதுக்களையே நறியமலராகக் கொண்டு சிவனை இதயத்தில் வைத்து கண்டு அருச்சிக்க வேண்டும் என்பதும், அவ்வாறு அருச்சிப்போர்க்குள்ள பெருமை அளப்பரிது; அவர்களது காற்கட்டை விரல் கீறும் எழுத்தின் மதிப்பளவும், நமது தலையில் எழுதப்பட்டிருக்கும் தலையெழுத்துக்கு இல்லை என்று அறிவுறுத்தியவாறு காணலாம். இத்திருவைந்தெழுத்தை யோக நெறியில் வைத்துப் பயன்கொள்ளும் திறம் சித்தாந்த நூல்களில் கூறப்படுகிறது. (119)
|