120

       120. வள்ளல்கள் பலரை உலகில் கண்டுள்ளோம்; வள்ளன்மையுடையாரும் சிலர் இன்றும் காணப்படுகின்றனர். வள்ளல்களின் சிறப்பியல்புகளைக் காணுங்கால் அவர்கள்பால் வீறு கொண்டு விளங்குவது அருளாட்சி. அருளைச் செல்வம் என்றே உரைக்கின்றார் திருவள்ளுவர். “அருட் செல்வம் செல்வத்துட் செல்வம்” என்பது அவரது திருக்குறள். செல்வம் எனப்படுவதாயின், செல்வமுடையார்க்கு அது துன்பமும் செய்கிறது; அதுபோல் அருளும் துன்பம் தருவதாமோ எனின், “அல்லல் அருளாள்வார்க் கில்லை” என்று திருவள்ளுவர் கூறுகிறார். ஆனால் உலகில் பொருளுடையார் சிலர் தகவிலர்பால் அருள் கொண்டு பொருளுதவி செய்து துன்பத்துக்குள்ளாகின்றார்கள். அவர்போல் அருளுடையாரும் தகவிலார்க்கு அருள் செய்து துன்புறுவது ஓரொருகால் காணப்படுவதுண்டு. அது கொடைமடம் என்று கூறப்படும். இரப்பவர் இன்முகம் காணும்வரை இரக்கப்படுதல் ஈவார்க்குத் துன்பம் பயக்கும் எனத் திருவள்ளுவரும் கண்டு உரைக்கின்றார். எனினும் அருளுடைய வள்ளல்கள் தகவிலார் துன்பம் கண்டு அது நீக்க முயன்று துன்புறுவது உலகில் பலகாலும் பலவிடத்தும் காணப்படுகிறது. இது முறையன்றே எனின், பிறர்க்கெய்தும் துன்பத்தைத் தாம் ஏற்றுக்கொண்டு அவர்க்கு வேண்டும் அருளைச் செய்வதுதான் வள்ளன்மைக்கு இயல்பு என அறிஞர் நினைக்கின்றார்கள்; உரைத்தலும் செய்கின்றார்கள்; இதனை எண்ணி மகிழ்ந்த வடலூர் வள்ளல் சிவன்பால் முறையிடுகின்றார். இத்தகைய வள்ளன்மை உலகிற்கு வேண்டுவதேயாகும்; ஆனால் உலகில் வேறெங்கும் பிறர் துன்பத்தைத் தான் ஏற்று அவர்கட்கு அருள் செய்யும் வள்ளல்களை நான் கண்டதில்லை; நீயொருவன்தான் சான்றாகின்றாய், உனது அருட்பண்பை விளக்கும் கழுத்தே சான்று; அது கண்டு பெருமகிழ்ச்சி கொண்டேன் என மொழிகின்றார்.

2290.

     ஆட்சிகண் டார்க்குற்ற துன்பத்தைத்
          தான்கொண் டருளளிக்கும்
     மாட்சிகண் டாய்எந்தை வள்ளற்
          குணமென்பர் மற்றதற்குக்
     காட்சிகண் டேனிலை ஆயினும்
          உன்னருட் கண்டத்திலோர்
     சாட்சிகண் டேன்களி கொண்டேன்
          கருணைத் தடங்கடலே.

உரை:

     கருணையாகிய பெரிய கடலே, நின் மாண்புகண்ட சான்றோர்கள் அருளாட்சி கொண்ட நன்மக்கட்கு எய்தும் துன்பத்தைத் தான் ஏற்றுக்கொண்டு அவர்கட்கு அருள்செய்யும் மாண்பு எம்தந்தையாகிய சிவனது வள்ளன்மைக் குணம் எனவுரைக்கின்றார்கள்; அவர் அவ்வாறு செய்த செயலை எங்கும் நான் கண்டதில்லை; ஆயினும் அப் பெருமானது அருளுடைமைக் குறியாக அவரது திருக்கழுத்தில் சாட்சி விளங்கக் கண்டு களிகொண்டேன் எ.று.

     அளப்பரிய கடல்போல் அருளுருவாகியவன் என்பதற்குச் சிவனைக் “கருணைத் தடங்கடலே” என்று இயம்புகின்றார். கருணை - அருள். தட - பெருமை. தடங்கடல்; உரிச் சொற்றொடர், ஆட்சி கண்டார் - அருளாளர். அருள்புரியும் நற்செயலை அருளாட்சி யென்பது வழக்கு. அருளாளர்க்குத் துன்பம் எய்துமாயின் அதனைத் தான் ஏற்றுக்கொண்டு அவர்கட்கு அருள்செய்து இன்பம் உறுவிக்கும் மாண்பு வள்ளன்மையுடையார்க்கு உண்டு; அருள் பெற்றார் அதனை எடுத்துரைத்து மகிழ்வர். அதுதோன்ற, “ஆட்சிகண்டார்க் குற்ற துன்பத்தைத் தான்கொண்டு அருள் அளிக்கும் மாட்சி கண்டாய் எந்தை வள்ளற் குணம் என்பர்” என உரைக்கின்றார். இவ் வள்ளன்மையைச் சிவன்பால் எங்குக் கண்டாய் எனின், இவ்வுலகில் யான் கண்டதில்லை என்பாராய், “மற்று அதற்குக் காட்சி கண்டேனில்லை” எனக் கூறுகின்றார். இக் கூற்றை எங்ஙனம் ஏற்பது எனச் சிவபெருமானே வினவுவதாகக் கற்பித்துக் கொள்கின்றார் வள்ளலார். அடியேன் கண்களாற் கண்டதில்லை யாயினும் உனது திருக்கழுத்திலே ஒரு சாட்சி கண்டேன் என்பாராய், “உன் அருட் கண்டத்தில் ஓர் சாட்சி கண்டேன்” என வுரைக்கின்றார். தேவர்பால் கொண்ட அருளால் நஞ்சுண்டு கறுத்தமை பற்றி அதனை “அருட்கண்டம்” எனப் புகழ்கின்றார். தேவர்கள் மக்கட்கு எய்தும் துன்பம் கண்டு அருள்புரிந்து நீக்கும் இயல்பினர் என்றற்கு அவர்களை “ஆட்சி கண்டார்” என்ற தொடரும், கடல்விடம் எழுந்து துன்புறுத்த வரக்கண்ட சிவன் அதனைத் தான் ஏற்றதை “உற்ற துன்பத்தைத் தான் கொண்டு” என்ற தொடரும், பின்பு தேவர்கட்கு அமுதளித்த அருட்பெருஞ் செயலை “அருளளிக்கும் மாட்சி எந்தை வள்ளற் குணம்” என்ற தொடரும் விளக்கம் செய்கின்றன. சிவன் உண்ட நஞ்சு ஆற்றலிழந்து கெடினும் நிறம் கெடாது நின்று நிலைபெறுவது குறித்து, “கண்டத்தில் ஓர் சாட்சி கண்டேன்” என வுரைத்து, அதனால் தமக்கு எய்திய மகிழ்ச்சியைக் “களிக்கொண்டேன்” என வெளியிட்டு விம்மிதம் எய்துகிறார் வள்ளற்பெருமான்.

     இதனால், அருட் பண்புடையார்க்கு எய்தும் துன்பங்களை இறைவன் ஏன்றுகொண்டு அவர்கட்கு இன்பமே எய்துவிப்பன் என்ற உண்மையைச் சிவன் திருக்கழுத்தின் சிறப்பைக் காட்டி வற்புறுத்தியதோடு, “அல்லல் அருளாள்வார்க்கில்லை” என்ற திருவள்ளுவர் உரைத்தருளிய உண்மையை இத் திருப்பாட்டால் சான்று காட்டி வற்புறுத்திய நலத்தை அறிகின்றோம்.

     (120)